Daily Archives: October 1, 2020

வாக்குத்தத்தம்: 2020 அக்டோபர் 1 வியாழன்

அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (சங்.106:1).


நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன். (ஆதி.15:1)
ஏசாயா 35-37; எபேசியர் 3

ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 1 வியாழன்

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள் (மாற்.11:24).


இந்த புதிய மாதத்திற்குள் நாம் பிரவேசிப்பதற்கு கிருபை செய்த தேவனை ஸ்தோத்தரிப்போம், நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் (ஆதி.15:1) என்ற வாக்கின்படி இம்மாதம் முழுவதும் தேவன் நமக்கு கேடகமும், மகப்பெரிய பலனுமாய் இருக்கவும், நமது கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்து வழிநடத்தவும் வேண்டுதல் செய்வோம்.

மேலான வழிகள்!

தியானம்: 2020 அக்டோபர் 1 வியாழன் | வேத வாசிப்பு: சங்கீதம் 37:4-6

பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும்….. உயர்ந்திருக்கிறது (ஏசாயா 55:9).

‘படிப்பை முடித்துவிட்டு, பிரியமான வேலை தேடி விண்ணப்பம் செய்தேன். நேர்முகப் பரீட்சைகளும் நடந்தன. வேலையோ கிடைக்கவில்லை. அதிர்ஷ்டமில்லாதவன், லாயக்கில்லாதவன்; இவைதான் எனக்குக் கிடைத்த பெயர்கள். நண்பர்கள் எல்லோருக்கும் நல்ல வேலைகள் கிடைத்துவிட்டன. மிகவும் சோர்வுற்ற நான், தேவனை நோக்கித் திரும்பி, என் வாழ்வு மாறவேண்டுமென்று கதறினேன். தேவன் என் வாழ்வில் இடைப்பட்டார். எனது வழிகளையும் நினைவுகளையும் தேவசித்தத்திற்கு ஒப்படைத்து, அவரைச் சார்ந்துநின்று என்னை ஒப்புக்கொடுத்தேன். நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண் போகாது (நீதி.23:18) என்ற வாக்குத்தத்தத்தை பற்றிக்கொண்டு வாழ்ந்தேன். தேவன் மனமிரங்கி, ஒரு வங்கியிலே நல்லதொரு வேலையை அற்புதமாகக் கொடுத்து என்னை ஆசீர்வதித்தார். தேவாதி தேவனுக்கே நன்றி!’ இது தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு சகோதரனின் சாட்சி. ஆம், தேவனை நம்பும்போது பரலோகத்தின் தேவனானவர் … காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார் (நெகே. 2:20).

ஆபிரகாம் தன் இஷ்டப்படி வாழவுமில்லை, தன்னிச்சையாக தெரிவுகளைச் செய்யவுமில்லை. மாறாக, தேவனுடைய வழிகளையும் நினைவுகளையும் சார்ந்தே வாழ்ந்தார். தன் சொந்த இடத்தைவிட்டு, தேவன் காண்பித்த இடத்திற்குப் போனார். இடத்தைத் தெரிந்தெடுப்பதிலும் லோத்துவிற்கே முதலிடத்தைக் கொடுத்தார். ஒரே மகனைப் பலியிடும்படி தேவன் கேட்டுக்கொண்டபோதும், கேள்விகளின்றி, மறுபேச்சின்றி மேலான வழிகளையும் நினைவுகளையும் கொண்ட கர்த்தர் வழி நடத்துவார் என்ற விசுவாசத்துடன் மோரியா மலைக்குப் போனார். அங்கே, தேவமகிமையைக் கண்டார். விசுவாச மார்க்கத்தாரின் தந்தை என்ற பெயரையும் பெற்றார்.

அன்பானவர்களே, நம் காரியங்களை நாமே திட்டமிட்டு வாழ முயற்சிக்கிறோம். அவை தலைகீழாக மாறும்போது, ஏமாற்றத்தில் முறுமுறுக்கவும் தொடங்கிவிடுகிறோம். தேவன் தம்மை நேசிக்கின்ற தமது பிள்ளைகளுக்கு சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக நடப்பிக்கின்றார். இதனை நன்கு அறிந்த நாம் அதனை மறந்து வாழுவது தகாது. நாம் சுயத்தில் திட்டமிடும் காரியங்கள் பின்பாக ஆபத்தையும் பாதிப்புகளையும் கொண்டுவரக்கூடும். அதினால் நமது நினைவுகளையும் வழிகளையும் ஒதுக்கிவிட்டு தேவசமுகத்தை நாடி நிற்போமானால், தேவன் தம்முடைய மேலான நினைவுகளையும் வழிகளையும் நம் வாழ்வில் செயல்படுத்தி நம்மை ஆசீர்வதிப்பார். அது ஒருபோதும் மாறாது. நாமும் அசைக்கப்படமாட்டோம்.

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் (சங்.37:5).

ஜெபம்: அன்பின் பிதாவே, என் மாம்ச எண்ணப்படி வாழும் வாழ்வை விட்டு, உமது மேலான வழிகளுக்கும் நினைவுகளுக்கும் என்னை ஒப்புவிக்கிறேன். ஆமென்.

சத்தியவசனம்