ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 31 வியாழன்

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே (சங்.103:2) ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு கணப்பொழுதிலும் நம்மேல் கண்வைத்து நம்மைப் போதித்து அவருடைய வழிகளில் நம்மை நிலை நிறுத்திய கர்த்தருடைய கிருபைகளுக்காக நன்றி செலுத்தி, புதிய ஆண்டிற்குள் சமாதானத்தோடே பிரவேசிக்கச் செய்வதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.

தைரியமாய் முன்செல்லுவோம்!

தியானம்: 2020 டிசம்பர் 31 வியாழன் | வேத வாசிப்பு: உபா.32:1-12

உன்னை ஆட்கொண்ட பிதா அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா? (உபா.32:6).

இந்த வருடம் இன்றுடன் முடிந்துவிடும். இன்னும் எத்தனை வருடங்களை நாம் காணுவோமோ என்னவோ! காரியம் அதுவல்ல; வாழுகின்ற இன்றைய தினத்தில் நமக்கும் நமது தேவனுக்குமுள்ள உறவு, அவரில் நாம் கொண்டிருக்கிற பிரியம், வார்த்தைக்கு கீழ்ப்படியும் வைராக்கியம் இவற்றில் நாம் எங்கிருக்கிறோம் என்பதை இக்கடைசி நாளில் சிந்தித்து, நம்மை சரிப்படுத்திக்கொள்வது ஞானமான காரியம்.

தேவகிருபையால் ஒரு புதிய ஆண்டுக்குள் கால் வைக்கவிருக்கின்ற நாம் ஒருவிசை தேவனது மக்களை நினைவுகூருவோம். ஒரு புதிய, வாழ்வுக்குள் கடந்துசெல்லும்படி கானானை நெருங்கிவிட்ட இஸ்ரவேலுக்கு, அவர்களது நிலைமையை உணர்த்தி மோசே ஒரு பாடலைப் பாடுகிறார். கர்த்தர் இஸ்ரவேலை எங்கே கண்டுபிடித்தார்? ராஜ அரண்மனையிலா? இல்லை. பாழான நிலத்திலும் அவாந்தர வெளியிலுமே அவனை கண்டுபிடித்தார். அவனை உணர்த்தி, கண்ணின் மணியைப்போல நடத்தி, ஒரு கழுகு தன் குஞ்சுகளை ஏந்தி, சுமந்து செல்லுவதுபோல, கர்த்தரே இஸ்ரவேலை சுமந்து வந்தார் என்று பாடுகிறார் மோசே. கர்த்தரே இஸ்ரவேலின் ஒரே பலம், பாதுகாப்பு, பாதை, எல்லாமும் அவரே. மொத்தத்தில், இஸ்ரவேலை ஆட்கொண்டிருக்கிற பிதா கர்த்தர்தான்.

சற்று நம்மைக் குறித்துச் சிந்திப்போம். நாம் எங்கிருந்தோம், எப்படியிருந் தோம்? தேவன் நம்மைக் கண்டுகொண்டபோது நாம் என்ன செய்து கொண்டிருந்தோம்? அவர் நம்மைத் தமது பிள்ளையாக்கும்படி சிந்திய இரத்தத்தாலான மீட்பை விசுவாசிக்கும்படிக்கு அவர் நமக்குள் அந்த விசுவாசத்தை ஆரம்பித்து வைக்குமளவுக்கு நம்மில் என்னதான் விசேஷம் இருந்தது? பாவசேற்றில் கிடந்தோம். வெளிவர மனதின்றி உழன்றோம். ஆனால் ஆண்டவரோ, தமது கரத்தால் நம்மைத் தூக்கியெடுத்தாரே! அந்த நாட்களை சற்று நினைவுபடுத்திப் பார்ப்போமா?

“நம்மை ஆட்கொண்ட பிதா அவரல்லவா”. உலகம் ஆயிரம் சொல்லும். ஏன், இன்றைய நவீன போதனைகள் ஏராளம் சொல்லும். ஆனால் என் தேவன் என்னை மீட்டெடுத்த கிருபையை நானும் அவரும்தான் அறிவோம். ஆகவே தைரியமாய் முன்செல்வோம். நம்மை ஆட்கொண்டவர், நாம் விழுந்தாலும் எழுந்திருக்கப் பெலன் தந்து, வழிவிலகினாலும் சிட்சித்தாலும், யோர்தான் போன்ற பெருந்தடையிலும் நடத்தி, நம்மை தம்மண்டை நிச்சயம் கொண்டு சேர்ப்பார். நாம் பிரவேசிக்கப்போகிற பாதை, புதிய வருடம் எப்படிப்பட்டது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நமக்கு ஒன்று தெரியும்.

கர்த்தரை நம்பியிருக்கிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கிற சீயோன் பர்வதத்தைப்போல இருப்பார்கள் (சங்.125:1).

ஜெபம்: ஜெயங்கொடுக்கும் தேவனே, நீரே எங்கள்; முன் செல்லுகிறீர், நாங்களும் தெளிந்த மனதுடனும் துதி ஸ்தோத்திரத்துடனும் எங்கள் காலடிகளை முன் வைக்கிறோம்;. இயேசு வின் நாமத்தில் பிதாவே. ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 30 புதன்

அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், … உபவாசத்தைக் கூறினேன் (எஸ்றா 8:21) வருடத்தின் இறுதி நாட்களில் சபைகள்தோறும் நடைபெறும் உபவாச கூடுகைகளுக்காகவும், நமக்காகவும் நமது பிள்ளைகளுக்காகவும், உபவாசத்தோடு நாமும் கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்தி ஜெபிப்போம்.

ஜாக்கிரதையாய் முன்செல்லுவோம்!

தியானம்: 2020 டிசம்பர் 30 புதன் | வேத வாசிப்பு: பிலி.1:7-21

நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன் (பிலி.1:11).

வருட ஆரம்பத்தில் கற்பனைகூட செய்திராத பல துயர சம்பவங்களை இவ்வருடத்தில் நாம் அனுபவித்துவிட்டோம். பலரை இழந்துவிட்டோம். பயம், அங்கலாய்ப்பு, துயரம், யாரையும் நம்பமுடியாத சங்கடம் என்றும் பல சூழ்நிலைகளுக் கூடாக கடந்து இறுதி நாளுக்குள் வந்துவிட்டோம். பல விதங்களில் கிறிஸ்துவுக்குள் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டவர்கள் அவரோடு நிச்சயம் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நமது நம்பிக்கை. உயிரோடிருக்கின்ற நாம் நம்மைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அதிக அவசியமாகிவிட்டது.

சிறை வைக்கப்பட்டிருந்த பவுல் கர்த்தருடைய நாளைக்குறித்து பிலிப்பியரை எச்சரிக்கிறார். பவுலுடைய வாஞ்சையும் ஜெபமும் உயர்ந்தது. அவர் தனது சிறைவாசத்தை பற்றியோ, தனக்கு நேரவிருக்கிற சிரைச்சேதத்தை பற்றியோ கவலைப்படவில்லை. “கிறிஸ்துவின் நாள்”, அதைக்குறித்த கவலையே பவுலுக்குள் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த நாளில் தேவபிள்ளைகள் துப்புரவானவர்களும் குற்றப்படுத்தப்படாதவர்களுமாக இருக்கவேண்டும் என்பதே பவுலின் வாஞ்சையாயிருந்தது. அதற்கான ஆலோசனையையும் கொடுக்கிறார். ஒன்று, நன்மை எது, தீமை எது என்று பகுத்தறியத்தக்க அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையானால் இந்த உலகம் நம்மை வஞ்சித்துவிடும். அடுத்தது, தேவனோடு நெருக்கமான உறவில் நாம் இருக்கவேண்டும். இல்லையானால் இயேசுவினால் வருகின்ற நீதியின் கனிகள் நம்மில் வெளிப்பட வாய்ப்பே கிடையாது. இவற்றிற்கு நாம் செய்யவேண்டியது ஒன்றுதான். பரிசுத்த ஆவியானவருடன் நாம் ஒருமித்திருக்கிறோமா என்பதை ஒவ்வொரு விநாடியும் நாம் சரிபார்த்து, அவருடைய உறவில் நிலைத்திருப்போமாக.

பிரியமானவர்களே, வருடங்கள் வரும், போகும். நாமும் நம் சரீரத்தில் பல மாற்றங்களுக்கு உட்படலாம். பெலவீனப்படலாம், முதிர்வயதாகலாம். இவை யாவும் இயல்பானவை. வருகின்ற புதிய வருடமும் நமக்குமுன் என்ன வைத்திருக்கிறது என்று நாம் அறியோம். அதேசமயம் கர்த்தரின் வருகையோ, நமது மரணமோ எப்போ நிகழும் என்பதும் நமக்கு தெரியாது. ஆகவே நாம் செய்யக்கூடியது ஒன்றுதான். ஆண்டவருடன் நெருங்கி ஜீவிக்கவும், அவரில் மாத்திரமே நிலைத்திருக்கவும், நம்மை இந்த நாளிலே தேவபாதத்தில் அர்ப்பணித்து விடுவோமாக. வருகிற ஆண்டு நமக்கு நன்மையாக அல்லது தீமையாகக்கூட இருந்தாலும், நாம் பயப்படவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் தேவன் நம்மோடிருக்கிறார்.

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் (சங்.46:11).

ஜெபம்: எங்கள் உயர்ந்த அடைக்கலமானவரே, இவ்வாண்டின் வேதனை, துயரங்களைக் களைந்துவிட்டு, தேவ பெலத்துடன் புதிய ஆண்டுக்குள் புதிய தரிசனத்துடன் கடந்து செல்ல தேவகிருபைக்காய் ஜெபிக்கிறோம். ஆமென்.