ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 29 செவ்வாய்

என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் (சங்.91:14) இவ்வருடம் முழுவதும் சத்தியவசன பிரதிநிதிகளாக பணியாற்றிய அனைத்து சகோதர, சகோதரிகளை கர்த்தர்தாமே ஆசீர்வதித்து, அவர்களுக்கு வேண்டிய பெலனையும் சத்துவத்தையும் பெருகச்செய்யவும் ஊழியத்தில் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.

பயங்கரமான நாள்!

தியானம்: 2020 டிசம்பர் 29 செவ்வாய் | வேத வாசிப்பு: ஆமோஸ் 5:14-24

கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? (ஆமோஸ் 5:18).

வருடத்தின் இறுதி நாட்களுக்குள் வந்துவிட்டோம். வருடங்கள் நாட்களாக வேகமாக கடக்கின்றன. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? இப்படியே அன்று வட ராஜ்யமான இஸ்ரவேலும் அசட்டையீனமாக தங்கள் போக்கிலே போய்க் கொண்டிருந்தார்கள். ஆமோஸ் குறிப்பிட்டபடி “கர்த்தருடைய நாள்” இஸ்ரவேலுக்கு சந்தோஷ செய்தியல்ல; அசீரியன் வந்து அழிப்பான், தேவனின் நியாயத்தீர்ப்பு வருகிறது என்பதே செய்தி.

இத்தனைக்கும் இஸ்ரவேல் செய்தது என்ன? இதைப்பார்க்கிலும், என்னதான் செய்யவில்லை என்று கேட்பதே பொருத்தமானது. பரிதானம் வாங்குவது, நீதியைப் புரட்டுவது, ஏழைகளைக் கொள்ளையடிப்பது என்பது தொடங்கி தேவனைவிட்டு அந்நிய தெய்வங்களை நாடியது வரைக்கும், தேவனுடைய கட்டளைகளை அவர்கள் மொத்தமாக மீறினார்கள். கர்த்தர் பல தடவைகள் எச்சரித்தும், பல தண்டனைகளைக் கொடுத்தும் அவர்கள் இந்த உலக இச்சையிலிருந்து வெளிவரவில்லை. கர்த்தருடைய நாள் தங்கள் எல்லாப் பிரச்சனைகளுக்கும் முடிவு கொண்டுவரும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அது மகா பயங்கரமான நியாயத்தீர்ப்பின் நாளாக இருக்கும் என்பதை உணரக்கூட முடியாத நிலையில் அவர்கள் களித்திருந்தார்கள்.

பண்டிகைகளை விரும்புகிறவர் கர்த்தர். பலி செலுத்துகின்ற முறைமைகளை ஏற்படுத்தியவரும் அவரே. ஆனால் இங்கே, பண்டிகைகளை வெறுத்து, தகனபலிகளையும் அங்கீகரிக்க மாட்டேன் என்கிறார். முக்கியமாக, “உன் பாட்டின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று. உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்” என்கிறார். இது இன்று நமக்கும் எச்சரிப்பாக இருக்கட்டும். தமது பிள்ளைகளின் பாடல்களில் மகிழ்ந்திருக்கிற தேவன், அவற்றை இரைச்சல் என்று சொல்லுமளவுக்கு இஸ்ரவேலின் இருதயம் கர்த்தருக்குத் தூரமாயிருந்தது. தங்கள் புகழுக்கு ஆராதனை செய்து, பாடல்கள் பாடி, தங்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள். இன்று நமது ஆராதனைகள் தேவனை பிரியப்படுத்துமா? வானளாவ எழும்புகின்ற ஓசை தேவனை மகிமைப் படுத்துகிறதா அல்லது வெறும் இரைச்சல்தானா? சுயத்தில் வாழ்ந்துகொண்டு, மனந்திரும்புதல் இல்லாமல் ஆராதனை செய்யலாம், ஆனால் தேவன் அதில் மகிழ்ந்திரார். அன்று சொன்னபடியே அசீரியா, இஸ்ரவேலைச் சிதறடித்து விட்டது. இனி வரப்போகிற கர்த்தருடைய நாளும் நியாயத்தீர்ப்பின் நாளாகவே இருக்கும். அது நமக்கு மகிழ்ச்சியைத் தருமா? அல்லது கொடிய வேதனையைத் தருமா?

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவாராக (1கொரி.1:8).

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, கர்த்தருடைய நாளை எதிர்கொள்ள நாங்கள் பயப்படுகிறவர்களாக இராமல் மகிழ்ச்சியோடு காத்திருக்கத்தக்கதாக எங்களுக்கு அருள் புரியும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 28 திங்கள்

அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள் (சங்.150:2) இவ்வருடம் முழுவதும் ஒலி/ஒளிப்பரப்பாகிய சத்தியவசன வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தேவைகளை கர்த்தர் சந்தித்து ஆசீர்வதித்தற்காகவும், அநேகமாயிரம் ஜனங்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பிரயோஜனமடைய தேவன் கிருபை செய்தபடியாலும் ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

கர்த்தரையே தேடுவோம்!

தியானம்: 2020 டிசம்பர் 28 திங்கள் | வேத வாசிப்பு: ஆமோஸ் 5:1-14

கர்த்தரைத் தேடுங்கள். அப்பொழுது பிழைப்பீர்கள் (ஆமோஸ் 5:6).

நம்மால் முடியாது என்று சரணடையும்போது, கிருபை நிறைந்த நமது ஆண்டவர் நமக்காக எல்லாவற்றையும் செய்து முடிக்கின்றவர். அவரது வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய நமக்கு முடியாவிட்டாலும் அதைக்கூட நாம் அவரிடம் கொண்டுசெல்லலாம். நமது பாவ எண்ணங்களை நம்மால் அழிக்க முடியாது என்று உணர்ந்து அதையும் அவரிடம் கொண்டுசெல்லலாம். அவர் நிச்சயம் உதவி செய்வார்; விடுதலை தருவார். தடைகள் நீங்கப்பெற்று, பிதாவோடு நாம் ஒப்புரவாக்கப்பட்ட படியால், எந்நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் நாம் அவரை நோக்கிக் கூப்பிடுகிற பெரிய சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். பின்னர் ஏன் நம் வாழ்வை வீணடிக்கவேண்டும்? அவர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு அவரிடமே திரும்பவேண்டும் அல்லவா!

கர்த்தர் தாம் செய்கின்ற எதையும் சொல்லாமல் செய்கிறவர் அல்ல. வேதாகமம் முழுவதுமே அதற்குச் சாட்சி பகருகின்றது. இஸ்ரவேல் என்ற வட ராஜ்யத்துக்கு, அவர்களது பாவத்தையும், மனந்திரும்பவேண்டியதன் அவசியத்தையும் கர்த்தர் உணர்த்திக்கொண்டே இருந்தார். முக்கியமாக ஆமோஸ் கி.மு.760-750ஆம் ஆண்டு வரைக்கும் வரப்போகின்ற நியாயத்தீர்ப்பைக் குறித்து இஸ்ரவேலை மிகவும் எச்சரித்தான். ஆனால், இஸ்ரவேல் கேட்கவில்லை. ஓசெயா கி.மு.732ல் ராஜாவானான். இவனே இஸ்ரவேலின் கடைசி ராஜா. “செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில் செய்தது” (2இராஜா.17:9) அவர்களுடைய பாவம் இப்படியாகத் தொடர்ந்தது. இறுதியில் கி.மு.722 அளவில் அசீரியா வந்து இஸ்ரவேலைச் சிதறடித்து சிறைப்பிடித்துச் சென்றனர் என்பது சரித்திரம்.

“என்னைத் தேடுங்கள். அப்பொழுது பிழைப்பீர்கள்” என பிழைக்கும் வழியைத் தானே கர்த்தர் கூறுகிறார். எந்தவொரு துன்மார்க்கன்கூட அழிவுக்குட்படுவது அவர் சித்தமல்ல. தமது சாயலில் படைக்கப்பட்ட மனுஷர் அத்தனைபேரும் அவரது பிள்ளைகளே. அவர் நம்மை நேசிக்கிறார். பாவத்திலிருந்து நம்மால் மீள முடியாது என்றுதானே தாமே மனுஷனாய் உலகிற்கு வந்து, இரத்தம் சிந்தி நம்மை மீட்டுக்கொண்டார். இந்தப் பெரிய கிருபையைப் பெற்றிருக்கிற நாம், இன்னமும் மனந்திரும்பாமல் இருப்பது எப்படி? “இரகசியத்தில்” அல்லது “இரகசியமாக” நாம் செய்வது என்ன? கர்த்தரிடத்தில் இன்றே திரும்புவோமா?

தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்க லாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும் (சங்.19:12,13).

ஜெபம்: அக்கினி ஜுவாலை போன்ற கண்களை உடையவரே, உமது பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை. முழுமனதோடும், சுத்த இருதயத்தோடும் கர்த்தரைத் தேட முடியாதபடி உள்ள தடைகளை அகற்றி எங்களை தூய்மையாக்கும். இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.