ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 27 ஞாயிறு

கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? (2சாமு.7:18) இவ்வருடத்தின் ஒவ்வொரு நாட்களிலும் கர்த்தர் நமக்குச் செய்த எல்லா நன்மைகளையும் எண்ணி எண்ணி நன்றி நிறைந்த இருதயத் தோடு கர்த்தருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்து ஆராதிப்போம்.

ஆயத்தப்படு!

தியானம்: 2020 டிசம்பர் 27 ஞாயிறு | வேத வாசிப்பு: ஆமோஸ்4:6-13

உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு (ஆமோஸ் 4:12).

மனிதன் பாவத்தில் விழுந்ததிலிருந்து (ஆதி.3ஆம் அதிகாரம் முதல்) இரண்டு சொற்களை வேதாகமம் முழுவதிலும் நாம் காண்கிறோம். ஒன்று, “கீழ்ப்படிந்திரு”. அதிலும் உபாகமம் புத்தகத்தைக் கருத்தோடு படித்துப் பாருங்கள். “உன் தேவனாகிய கர்த்தர்” என்ற சொற்தொடரும், “அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திரு” என்ற சொற்தொடரும் திரும்பத்திரும்ப எழுதப்பட்டுள்ளது. எனினும், இஸ்ரவேலர் தேவனுக்குக் கீழ்ப்படிவதைக்குறித்து எந்தவித பயமுமின்றியே நடந்துகொண்டார்கள். ராஜ்யம் இரண்டாகப் பிரிந்த பிற்பாடுகூட அவர்களில் மாற்றம் ஏற்படவில்லை.

ஆக, வேதாகமத்திலே தேவன் தமது மக்களுக்குக் கொடுத்த அடுத்த அழைப்பு “மனந்திரும்புங்கள்” என்பதே. காலத்துக்குக் காலம் தேவன் தம்மிடம் மனந்திரும்பும்படிக்கு தமது மக்களை அழைத்தார். அவர்கள் மூலமாகவே தம்மை உலகுக்கு வெளிப்படுத்துகின்ற அவரது அநாதி திட்டப்படி, அவர்களை அழைத்தார். பல தீர்க்கர்களை எழுப்பினார். மனந்திரும்பாமற்போனால் வரக்கூடிய நியாயத்தீர்ப்பை வெளிப்படையாக அறிவித்தார். அந்த வகையில் வட ராஜ்யமான இஸ்ரவேலுக்கு அறைகூவல் விடும்படிக்கு அழைக்கப்பட்ட ஒருவர்தான் ஆமோஸ்.

அப்பம் குறைவு, தண்ணீரற்ற வறட்சி, வெட்டுக்கிளிகளால் பயிர் அழிப்பு, எகிப்திலே உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோய், வாலிபர் கொலை செய்யப்பட்டமை, குதிரைகள் அழிந்தமை என பலவிதங்களில் தேவன் அவர்களை எச்சரித்தார். சோதோம் கொமோராவைக் கவிழ்த்துப் போட்டதுபோல அவர்களைக் கவிழ்த்தார். இப்போ இருக்கிறவர்கள் அக்கினியிலிருந்து பறித்தெடுக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் மனந்திரும்பவில்லை. இனி அவர்கள் தங்கள் தேவனை முகமுகமாய் சந்தித்துத்தான் ஆகவேண்டும். அதாவது நியாயத்தீர்ப்பை அவர்கள் சந்தித்தே ஆகவேண்டும். அப்படியே இஸ்ரவேல் என்ற வட ராஜ்யம் இருந்த இடமே தெரியாமல் சிதறிப்போனது சரித்திரம்.

தேவன் சொல்லாமல் செய்கிறவர் அல்லவே! நமது தேசமும் நாமும் எத்தனை வேதனைகளைச் சந்தித்து விட்டோம். பஞ்சம், இனக்கலவரம், யுத்தம், சுனாமி, பயங்கரவாதத் தாக்குதல் என எத்தனை தரம் இரத்தத்தைக் கண்டும் நாம் மனந்திரும்பாமல் இருப்பது எப்படி? நாமும் தேவனை நிச்சயம் ஒருநாள் முகமுகமாய் சந்திப்போம். அந்த நாளிலே, கீழ்ப்படியாமைக்கும் மனந்திரும்பாமைக்கும் நாம் கணக்கொப்புவிக்கவேண்டும். வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து மனந்திரும்பி தேவனுக்குள் வாழ்வோமானால் தேவனைச் சந்திக்க நாம் பயப்பட வேண்டியதில்லையே.

இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன் (மத். 24:25).

ஜெபம்: எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று நீடிய பொறுமையோடு உள்ள தேவனே, இருதய கடினத்தோடு, தேவபயமின்றி வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மனந்திரும்பவும் தேவனைச் சந்திக்க ஆயத்தப்படவும் ஜெபிக்கிறோம். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 26 சனி

நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும் (லூக்.17:26). என்று இயேசு முன்னறிவித்ததுபோல தற்போதும் நடைபெற்றுவரும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், தற்கொலைகள் நாகரீகம் என்ற போர்வையில் பெருகிவரும் ஒழுக்கமற்ற செயல்கள் இவற்றினின்று கர்த்தர் ஜனங்களைப் பாதுகாக்கும்படிக்கு பாரத்துடன் ஜெபிப்போம்.

ஆ! கர்த்தாவே!

தியானம்: 2020 டிசம்பர் 26 சனி | வேத வாசிப்பு: ரோமர் 11:33-12:2

அப்படியிருக்க … இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை (ரோமர் 12:1).

அப்படியிருக்க சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, வேண்டிக்கொள்கிறேன். “அப்படியிருக்க” என்றால் ‘எப்படியிருக்க’ என்று கேட்டுப் பார்க்க வேண்டும். இஸ்ரவேலின் இரட்சிப்பைக்குறித்து எழுதிக்கொண்டிருந்த பவுல், திடீரென்று தனது எழுத்தை மாற்றுகிறார். “ஆ!” என்று ஆரம்பிக்கிற பவுல், தேவனுடைய ஞானத்தையும் மேன்மையையும் சொல்லி தேவனைத் துதித்து ஜெபிக்க ஆரம்பிக்கிறார். தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு நியாயம் சொல்லத்தக்கவன் யார்? அவருடைய வழிகளைக் கேள்விக்குறியாக்க யாருக்கு முடியும்? அவருக்கு ஆலோசனை சொல்லத்தக்க ஒரு மனிதன் உண்டோ? தேவனுடைய வழிகளும் அவரது செயல்களும் சிந்தையும் சிந்தனைகளும் மனித அறிவுக்கு எட்டாதவை. ஏனென்றால் மனிதனைப் படைத்ததே தேவன்தானே. படைத்தவருக்குப் படைக்கப் பட்டவைகள் ஆலோசனை சொல்லுவது எப்படி?

ஆனால், அதற்காக அவர் நமக்கு எட்டாதவர் அல்ல; தன்னிச்சையாகச் செயற்படுகிற சர்வாதிகாரியும் அல்ல. தாம் தமக்கென தம் மூலமாகப் படைத்த இந்த அண்டசராசரத்தை இன்று அவரே அரசாளுகிறவர்; இந்த தேவனே நமக்குள்ளும் வாசம் பண்ணி, அன்பினால் நிறைந்தவராய் பூரணமாகவே நம்மையும் ஆளுகிறார். அவரே சகல ஞானத்தினதும் வல்லமையினதும் சொந்தக்காரர். ஆகவே அவரை அண்டி, அவரில் நிலைத்திருப்பதைத் தவிர நாம் செய்யக் கூடியது எதுவுமே இல்லை.
பவுலுடைய இருதயம் களிகூர்ந்ததுபோலவே, நமது இருதயமும் தேவனுடைய மகிமையை நினைத்து களிகூரட்டும். இப்படியிருக்க, முழு இருதயத்தோடு தேவனை ஆராதிப்பதைத் தவிர நம்மால் என்ன செய்ய முடியும்? ஆனால், எப்படி ஆராதிப்பது, இதுவே கேள்வி. ஒன்றுகூடல்கள், பாடல்கள், வாத்தியங்கள், துதி ஸ்தோத்திரங்களை வெளிப்படுத்துகின்ற அழகான வார்த்தைகள் எல்லாம் நல்லது. ஆனால் இவற்றிலும் மேலாக, அன்று செலுத்தப்பட்ட பலிகள் அல்ல; நம்மையே ஜீவனுள்ள பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று பவுல் ஆலோசனை கூறுகிறார். சரீர இச்சைகளை கொன்று, நமது இருதயம் புதுப்பிக்கப்பட்டவர்களாய், கிறிஸ்துவுக்காய் வாழவும், அவரைக் கனம் பண்ணவும் நம்மை ஒப்புக்கொடுப்போம். ஏனெனில் தேவன் தமது உயர்ந்த கொடையாக தமது குமாரனையே கொடுத்தாரே! அவருக்கு நமக்கிருக்கின்ற உயர்ந்ததை, நமது வாழ்வை எல்லாவிதத்திலும் அவருக்கென்று கொடுக்க வேண்டாமோ?

என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக (நீதி.23:26).

ஜெபம்: அன்பின் இரட்சகா, உதடுகளினால் உம்மை ஆராதித்துவிட்டு இருதயத்தில் தூரமாய் நின்றிடாமல், எங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புவிக்கிறோம். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.