Daily Archives: January 15, 2021

ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 15 வெள்ளி

உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக் கொள்ளக்கடவது (நீதி.4:4) இப்புதிய வருட சத்திய வசன காலண்டர், சத்தியவசன சஞ்சிகை, தியான புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளும் பங்காளர்களும் சந்தாதாரர்களும் சத்திய வார்த்தைகளை தங்கள் இருதயத்தில் காத்துக்கொள்கிறவர்களாகக் காணப்படுவதற்கு தேவகிருபைக்காய் வேண்டுதல் செய்வோம்.

மறுபடியும் அழைக்கிறார்!

தியானம்: 2021 ஜனவரி 15 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 21:1-17

இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். (யோவான் 21:17).

திடமான அர்ப்பணிப்பு, உற்சாகமான ஆரம்பம். ஆனால், நாட்கள் செல்ல திடமற்ற நிலைகளும், சோர்வின் நிழல்களும் முன்வைத்த கால்களைப் பின்தள்ளவும் செய்கின்றன. அப்படியே பின்வாங்கிப் போவோரும் பலர். இவர்களில் பேதுருவும் ஒருவன். இயேசு அழைத்த பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன். மீன் பிடிப்பதையே தன் தொழிலாகக் கொண்டிருந்த பேதுரு, இயேசுவின் அழைப்பை ஏற்று, எல்லாவற்றையும் விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தான். ஒருகட்டத்தில் “நீ பேதுருவாயிருக்கிறாய். இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்” (மத். 16:18) என்று இயேசு கூறியிருந்தார். மேலும், “நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன்” (மத்.26:35) என்றவனும் இந்தப் பேதுருதான். ஆனால்,தக்க சமயத்தில் அவன் மறுதலித்துவிட்டதை நாம் அறிவோம்.

பின்னர், இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை நன்கு அறிந்திருந்தும், நம்பிக்கை அற்றவனாய் தன் மீன்பிடி தொழிலுக்குத் திரும்பிச் சென்றுவிட்டான். ஆனால், கர்த்தர் அவனை விடவில்லை. இயேசு அவனுக்குத் தரிசனமாகி, மூன்று தரமாகத் தம்மை மறுதலித்த அவனிடம், மூன்று தரமாக “நீ என்னில் அன்பாயிருக்கிறாயா? என்னை நேசிக்கிறாயா?” என்று கேட்டார். அது பேதுருவின் உள்ளத்தை உடைத்தது. கர்த்தர் அவனுடைய அழைப்பை அவனுக்கு உணர்த்தி, தன் பணியை அவனிடம் ஒப்படைத்தார். “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்றார். அதன் பின்னர் பேதுரு, தன் தலைகீழான சிலுவை மரணம் வரைக்கும் இயேசுவை விட்டு விலகவேயில்லை.

இன்று, பேதுருவைப்போல அல்லாமல், கர்த்தருக்காய் முன்வைத்த கால்களைப் பின்வைக்க நமக்கு வேறு பல காரணங்கள் இருக்கலாம். இந்த சமயங்களில், நாம் எச்சரிக்கையாயிருப்போம். நாம் எதிர்கொள்ளும் காரணங்களையல்ல, நம்மை அழைத்தவரை நோக்குவோமாக. நமக்காக அவர் பட்ட காயங்களை நோக்குவோமாக. கிறிஸ்துவோடு ஐக்கியமாயிருக்க, தம் பணியைச் செய்ய நம்மை அழைத்த அவர் உண்மையுள்ளவர். நமது சூழ்நிலைகள், சோர்வுகளை அவர் அறிவார். பின்வாங்கிப்போன நம்மை அவர் இன்று திரும்பவுமாக அழைக்கிறார். அவர் சத்தம் நம் காதுகளில் கேட்கிறதா? அவர் பணி தொடர திரும்பி, முன்செல்லுவோமாக.

“என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்தரிக்கிறேன்” (1தீமோ. 1:12).

ஜெபம்: என்னை அழைத்த தேவனே, உமது அழைப்பை விட்டுப் பின்வாங்கக் காரணமான யாவற்றையும் இன்று உம்மிடத்தில் அறிக்கையிடுகிறேன். என்னை மன்னியும். ஆமென்.

சத்தியவசனம்