ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 27 சனி

மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற் போயிற்றோ? (ஏசா.50:2) மராத்தி, கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளில் செய்யப்படும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களில் மீட்கிற தேவனுடைய கரம் ஊழியத் தேவைகளில் கூட இருந்து வழிநடத்தவும் ஆத்துமாக்கள் சந்திக்கப்பட கிருபை செய்யவும் வேண்டுதல் செய்வோம்.

நான்தான், நான் அல்ல!

தியானம்: 2021 மார்ச் 27 சனி | வேத வாசிப்பு: யோவான் 18:1-27

அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான் (யோவான் 18:25).

ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, “இதை நான்தான் செய்தேன்” என கூற ஒரு துணிச்சல் வேண்டும். அதேவேளை செய்த காரியத்தையும் அல்லது ஒரு உண்மையைக் கூட, “நான் அல்ல” என்று மறுப்பது கோழைத்தனத்தைக் காட்டும். இன்றைய தியானப் பகுதியில் அவ்விதமாக துணிந்து நின்றது யார்? கோழையாக மறுத்தது யார்? இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக யூதாஸ், போர்ச் சேவகர் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர், பரிசேயர்களின் ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு வருகிறான். இயேசு தமக்கு நேரிடப்போகிற சகலவற்றையும் அறிந்திருந்தார். அப்படியிருந்தும், “நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள்” என்று கேட்டு, “நான்தான்” என்று தம்மை அவர்களிடம் அர்ப்பணிப்பதைக் காண்கிறோம். அங்கு வந்த யூதாஸ் ஒருவேளை, அவர் தெரியாதவர்போல இருப்பார் அல்லது ஓடி ஒளிவார், தான் எப்படியாவது அவரைக் காட்டிக்கொடுத்து தன் சன்மானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் இயேசுவோ, யூதாசுக்காகவோ அல்லது தன்னைப் பிடிக்க வந்தவர்களுக்காகவோ இதைச் செய்யாமல், பிதாவின் சித்தம் தம்மில் நிறைவேறும் வேளை வந்தது என்று அறிந்தபடியினால் தன்னை ஒப்புக்கொடுத்தார். தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவர் அத்தனை உறுதியாய் இருந்தார் என்பதையே இந்தத் துணிவான செயல் நமக்குக் காண்பிக்கிறது.

அதேவேளை அவரைப் பிடித்துச் சென்றவர்களைப் பின்பற்றிப்போன பேதுருவை அங்கேயுள்ளவர்கள் அடையாளங்கண்டு, இவனும் இயேசுவோடு இருந்தவன் என்று சொன்னபோது, “ஆம்” என்று சொல்லப் பயந்து, தனக்கு ஆபத்து வருமோ என்ற கோழைத்தனத்தின் மிகுதியால், “நான் அவன் அல்ல” என்று பேதுரு மறுதலித்தான். பிரியமானவர்களே, “உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்” என்று சொன்னவனும் இதே பேதுருதான்.

அன்பானவர்களே, நாம் என்ன சொல்லுவோம்? இறுதிவரை இயேசுவுக்காய் உண்மையாயிருப்போமா? ஆனால் அவருக்காக நிற்கவேண்டிய நிலை வரும்போது, கோழைகளாகி பின்வாங்கிப் போவோமா? நாம் தேவனுக்குப் பயப்படும் பயத்தை விட்டு, மனுஷருக்குப் பயப்படுவதே இதற்குக் காரணமாகும். பிதாவின் சித்தம் செய்யத் துணிந்து நின்ற இயேசுவின் தைரியம் அவரது பிள்ளைகளாகிய நமக்குள்ளும் இருக்கவேண்டும்.

பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக, அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம் (1யோவா. 4:14).

ஜெபம்: அன்பின் பிதாவே, கிறிஸ்துவுக்காகச் சாட்சியாக நிற்க நேரிடும்போது, இப்போ காட்டுகிற வைராக்கியத்தை அப்போதும் காட்டுமளவுக்கு நான் ஆண்டவருக்காய் உறுதியாய் நிற்பதற்கு எங்களுக்குப் பலத்தையும் தைரியத்தையும் தந்தருளும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 26 வெள்ளி

தமிழகத்தில் தொழில்கள் அதிகம் நடைபெறும் கரூர் மாவட்டத்திலுள்ள சபைகள் வளருவதற்கும், சுவிசேஷத்திற்கான வாசல்கள் திறக்கப்படுவதற்கும் அங்குள்ள நகர் புற கிராமப் புற மக்கள் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்கப்படவும் ஜெபிப்போம். அந்தகார இருளிலுள்ள ஜனங்களின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு, தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் இரட்சிக்கப்பட மன்றாடுவோம்.

அறியாதோருக்கு அறிவி!

தியானம்: 2021 மார்ச் 26 வெள்ளி | வேத வாசிப்பு: அப்.15:12-21

தேவன் புற ஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக் கேட்டார்கள் (அப். 15:12).

வருடாவருடமாக லெந்து நாட்களும், பரிசுத்தவாரமும், பெரியவெள்ளியும், உயிர்த்த ஞாயிறும் வந்துபோகிறது. நமது சடங்காச்சாரங்களையும் நாம் ஒழுங்காகக் கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் இன்றும், பெரிய வெள்ளி என்பது என்ன? உயிர்த்த தினம் என்பது என்ன என்று அறியாதோர் இருக்கத்தான் செய்கின்றனர். ஒருமுறை பெரிய வெள்ளியன்று என்னைத் தெருவில் சந்தித்த ஒருவர், “இன்று நீங்கள் துக்கம் கொண்டாட வேண்டிய நாளல்லவா” என்று கேட்டபோது நான் அதிர்ந்துபோனேன்.

இங்கே பர்னபாவும், பவுலும் புற ஜாதிகள் மத்தியில் தேவன் செய்த அடையாளங்களைக் கூறி புற ஜாதியாருக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதன் முக்கியத்துவத்தைக் கூறுகின்றனர். கூடிவந்திருந்த யாவரும் தேவன் செய்தவற்றைக் கேட்டார்கள். புறஜாதியாரும் தேவனுடைய மந்தைக்குள் வரவேண்டும், அவர்களிலும், தமது நாமத்துக்காக மக்களைத் தெரிந்துகொள்ளும்படி தேவன் சித்தங்கொண்டிருக்கிறாரே!

அருமையானவர்களே, இந்த நாட்களில் நாம் நம்மைக் குறித்தே அதிகமாக சிந்திக்கிறோமா? அல்லது, நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கிறோமா? இந்த நாட்களை நாம் கழிக்கின்ற விதமானது, தேவனை அறியாத பிறர் மத்தியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாம் என்றைக்காவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? தேவனை அறியாதோர் இந்த பெரிய வெள்ளியின் கருத்தை உணர்ந்தவர்களாய் தேவனண்டை வரவேண்டும் என்ற பாரத்தோடு நாம் யாருக்காகவாவது ஜெபித்திருக்கிறோமா? இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்காகவுமே தேவன் உயிர்த்தெழுந்தார் என்ற நற்செய்தியை கிறிஸ்தவர் அல்லாத எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள். இல்லையானால், அதற்கு யார் காரணம்? ஆண்டவரை அறியாதோர் அவரை அறியும்படிக்கு இந்த விசேஷித்த நாட்களில் நாம் கொண்டிருக்கும் கரிசனை என்ன? நமது நடவடிக்கைகள் ஒரு மத சடாங்காசாரமாகப் பிறருக்குத் தெரிகிறதா? அல்லது, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்த ஆண்டவருக்குச் சாட்சியாக இருக்கிறதா?

நமது பக்தியின் வேஷத்தைக் களைந்து போடுவோமாக. சுவிசேஷ பாரத்தோடு தேவ அன்பை வெளிப்படுத்த முன்வருவோமாக. இந்த நாட்களில் மாத்திரமல்ல, நமது வாழ்வின் ஒவ்வொரு நாளுமே சுவிசேஷ பாரம் கொண்டதாய் இருக்க நம்மைத் தருவோமா?

மேலும், புற ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார் (ரோமர் 15:10).

ஜெபம்: கல்வாரி நாயகரே, இந்த லெந்து காலங்கள் ஒரு மதசடங்காசாரமாக எங்களுக்கு இருந்திடாதபடி தேவ அன்பை புற இன மக்கள் அறிந்துகொள்ளும்படியாக சாட்சியாயிருக்க எங்களை பரிசுத்தப்படுத்தும். ஆமென்.