அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (செப்டம்பர்-அக்டோபர் 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(6) புதிய மொழிபெயர்ப்பு

ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பு வெளிவந்து 50 வருடங்களாவதற்குள் அதை மறுபடியும் திருத்தி மொழிபெயர்க்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்படத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம், அதுவரை காலமும் மூலப்பிரதியாக உபயோகிக்கப்பட்டுவந்த வேதப்பிரதிகளைவிட பழைமையானதும் நம்பகமானதுமான இரு வேதப்பிரதிகள் கண்டுபடிக்கப்பட்டமையேயாகும். கி.பி.4ஆம் நூற்றாண்டில் வல்கேட் என அழைக்கப்படும் ஜெரோமின் லத்தீன் மொழிபெயர்ப்பு வேதாகமம் வெளிவந்தபின், அதையே ரோம சபை உபயோகித்து வந்தது. கி.பி. 1453இல் கான்ஸ்டன்டிநோபிள் எனும் நகரைத் துரக்கியர்கள் கைப்பற்றியபோது, கிரேக்க மொழியை அறிந்திருந்த பல பண்டிதர்கள் ஐரோப்பாவில் குடியேறத் தொடங்கினர்.

இதனால் 15 ஆம் நூற்றாண்டில் ஐரோப் பாவில் கிரேக்க மொழியறிவு அதிகரித்தபோது, லத்தீன் வேதாகமம் மொழி பெயர்க்கப்படுவதற்குமுன் உபயோகத்தில் இருந்த பல கிரேக்க புதிய ஏற்பாட்டுப் பிரதிகளையும் மக்கள் உபயோகிக்கத் தொடங்கினர். எனினும், இவற்றில் பல வித்தியாசமான வாக்கிய அமைப்புகள் இருந்தமையினால், இரஸ்மஸ் என்பவர், தனக்கு கிடைத்த 20 கிரேக்க வேதப்பிரதிகளை அடிப்படையாய்க் கொண்டு ஒரு புதிய கிரேக்க வேதப்பிரதியைத் தயாரித்தார். இதுவே, அதன்பின் அங்கீகரிக்கப்பட்ட மூலப்பிரதியாக எல்லா மொழி பெயர்ப்பாளர்களினாலும் கருதப்பட்டது. இதிலிருந்தே 250 வருடங்களாக ஆங்கில உலகை ஆக்கிரமித்திருந்த ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பு இவ்வாங்கில மொழிபெயர்ப்பைத் தழுவிய மொழி பெயர்ப்பாகவே இருந்தது.

ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பு வெளிவந்தபின், வேதாகமத்தின் இரு முக்கியமான கிரேக்க மூலப்பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் ஒன்று 1859இல் சீனாய் மலையிலுள்ள புனித கத்தரின் துறவுமடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவடியாகும். அதேசமயம் வத்திக்கான் நூலகத்திலிருந்த வேதச்சுவடியும் கி.பி. நான்காம் நூற்றாண்டில் பிரதி பண்ணப்பட்டதாகும். இச்சுவடி 15ஆம் நூற்றாண்டிலிருந்தே அறியப்பட்டிருந்தாலும், 1843 இலேயே இதை உபயோகிப்பதற்கு ரோம சபை அனுமதியளித்தது. இவ்விரு வேதச் சுவடிகளையும் ஆராய்ச்சி செய்த பண்டிதர்கள், அதுவரை காலமும் மூலப்பிரதியாக உபயோகிக்கப்பட்டு வந்த அங்கீகரிக்கப்பட்ட வேதப்பிரதியைவிட, இவையிரண்டும் சிறப்பானதாகவும் நம்பகமானதாகவும் இருப்பதைக் கண்டுகொண்டனர்.

இதன்பின்னர், 16 ஆம் நூற்றாண்டில் இரஸ்மஸ் தயாரித்த மூலப்பிரதியை ஆராய்ச்சியாளர்கள் நம்பகமானதாகக் கருதவில்லை. இதிலிருந்து, அதுவரை காலமும் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமங்கள் எல்லாம் பிழையானவை என நாம் எண்ணலாகாது. கிரேக்க மொழி கையெழுத்துப் பிரதிகளில் சில வித்தியாசமான வாக்கிய அமைப்புகள் ஏற்பட்டிருந்தன. இது பிரதிபண்ணியவர்களினால் ஏற்பட்ட தவறாகும். எனவே, கிடைக்கக்கூடிய எல்லா பிரதிகளையும் ஆராய்ந்து பார்த்து எது நம்பகமானது என்பதைக் கண்டுகொள்ள வேண்டும்.

19 ஆம் நூற்றாண்டில், சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகளே நம்பகமானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதற்கும் முன்னர் அங்கீகரிக்கப்பட்டிருந்த கிரேக்க பிரதியை அடிப்படையாய்க்கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமங்கள் திருத்தப்படவேண்டியது அவசியமாகிறது. ஹென்றி பவரின் திருத்தப்பட்ட வேதாகமம் வெளிவந்த காலத்தில், 1611 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமம் ஆங்கில உலகில் தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. இதனால் அதை அடிப்படையாய்க்கொண்டு மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் வேதாகமம் திருத்தப் பட வேண்டும் எனும் கருத்து உருவானது.

ஹென்றி பவரின் மொழிபெயர்ப்பில் சில பிழைகள் இருப்பதனால் அது திருத்தப்படவேண்டும் என சென்னைக் கிறிஸ்தவப் பிரதிநிதிச் சங்கம் 1915இல் தெரிவித்தது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட கிரேக்க வேதப் பிரதியை 50 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்த வேதப்பண்டிதர்கள், அதைவிட சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகளே நம்பகமானவை என்பதை அறியத்தந்தமையினால், தற்சமயம் பல கையெழுத்துப் பிரதிகளை ஆராய்ந்த நெஸ்லே என்பவர் தயாரித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டதாக தமிழ் மொழி பெயர்ப்பு இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. அத்தோடு, வேதாகமத்தில் பவுல் போன்றவர்களை அவன் என்று மரியாதைக் குறைவாக அழைக்கக்கூடாது என்றும் இச்சங்கம் தெரிவித்தது. இக்கருத்துக்கள் அனைத்தும் இச்சங்கத்தினால் சென்னை வேதாகமச் சங்கத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

கிறிஸ்தவப் பிரதிநிதிச்சங்கத்தின் கருத்துக்களை ஆராய்ந்த சென்னை வேதாகமச் சங்கம், லூத்தரன் சபை ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ளாதமையினால், அவர்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வேதாகமத்தைத் திருத்த வேண்டுமென 1917இல் தீர்மானித்து அதற்கென ஒரு குழுவை நியமித்தது. 1920இல், புதிய ஏற்பாட்டில் திருத்தப்படவேண்டிய பகுதிகள் எவை என்பதை இக்குழு வேதாகமச்சங்கத்திற்கு எடுத்துக்காட்டியது. எல்.பி.லார்சன் என்பவர் இக்குழுவுக்குத் தலைவராக இருந்தார். டென்மார்க் தேசத்தைச் சேர்ந்த இவர், 1889ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து, மாணவர்கள் மத்தியில் ஊழியம் செய்துவந்தார். 1910இல் பெங்களூரில் புதிதாக ஒரு இறையியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது லார்சன் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழ் மொழியில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்த இவர், 1924இல் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்தார். 1925ஆம் ஆண்டு மத்தேயு சுவிசேஷமும் பின்னர் மாற்கு, யோவான் சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் வெளியிடப்பட்டன. திருத்தப்பட்ட இப்பதிப்பு சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இம்மொழிபெயர்ப்பில் தேவன் என்பதற்குப் பதிலாகக் கடவுள் எனும் வார்த்தையை லார்சன் உபயோகித்திருந்தார். லூத்தரன் சபை தேவன் எனும் பதத்தை விரும்பாதமையினால் கடவுள் எனும் பதம் அவர்களைத் திருப்திப்படுத்தும் என வேதாகமச் சங்கம் எண்ணியது. அதேசமயம், தேவன் என்ற சொல் மூலப்பதத்தின் சரியான மொழிபெயர்ப்பல்ல என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. 1927ஆம் ஆண்டு, லார்சன் குழுவினரால் திருத்தப்பட்ட புதிய ஏற்பாடு வெளிவந்தது.

(தொடரும்)

சத்தியவசனம்