அழைத்தவர் உண்மையுள்ளவர்

தியானம்: 2017 நவம்பர் 1 புதன்; வேத வாசிப்பு: யோசுவா 1:1-4

நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன் (யோசுவா 1:3).

கண்களால் காணாத ஒரு தேசத்தை விசுவாசக்கண் கொண்டு பார்த்து, அதைச் சுதந்தரிப்பது என்பது இலகுவல்ல. வாக்களித்தவரின் வார்த்தைகளில் விசுவாசமும், அவருடைய வழிநடத்துதலில் நம்பிக்கையும் வைத்து ஆரம்பித்த பயணத்தைத் தொடர்ந்தால் மாத்திரமே, “கொடுத்தேன்” என்றவரின் வாக்கின் நிறைவேறுதலைக் கண்டுகொள்ளமுடியும். யோசுவா, இந்த நிறைவேறுதலைக் கண்டுகொண்டான்.

தேவபயம்; கடந்த காலத்தில் தேவன் அருளிய அற்புத விடுதலை, வழிநடத்துதல் எதையும் மறவாத மனம்; அதே தேவன் தொடர்ந்தும் வழிநடத்துவார் என்ற உறுதி; தேவன் மோசேக்கூடாகக் கொடுத்த கட்டளைகளை உத்தம இருதயத்தோடு பற்றிக் கொண்ட வாழ்க்கை; மோசேயின் தலைமைத்துவத்தின்கீழ் கீழ்ப்படிதல், மனத்தாழ்மை, உண்மை, உத்தமம் போன்ற குணாதிசயங்களோடு மோசேக்கு என்றும் பக்கபலமாகச் செயற்பட்ட செயற்திறன் என்று பல விஷயங்கள் யோசுவாவிடம் இருந்தன. இவையனைத்தின் பிரதிபலனாக மோசேயின் மரணத்தின்பின் கானானை நோக்கிய பயணத்தில் ஜனங்களை வழிநடத்த தேவன் இந்த யோசுவாவையே அழைத்தார். அழைத்தவர், தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லாமல், “உங் களுக்குக் கொடுத்தேன்” என்றார். இதுவரை வழிநடத்தி வந்த மோசே இறந்து போனாரே என்ற கலக்கமோ, பயமோ இல்லாத யோசுவா, தேவனின் அழைப்பைப் பெற்றதும், அவரது வாக்குத்தத்தத்தை விசுவாசத்தோடு பற்றிக்கொண்டு தாமதிக்காது செயற்பட்டான். வாக்குத்தத்தத்தின் நிறைவைக் கண்டுகொண்டான்.

“அழைத்தவர் உண்மையுள்ளவர்”. ஆனால், இன்று நம் வாழ்க்கையில் தேவன் தந்த வாக்குத்தத்தங்கள் ஏன் நிறைவேறவில்லை? பொறுமையின்மை, சுயமுயற்சி, கடந்தகால அற்புத வழிநடத்துதல்களை மறந்து முறுமுறுக்கும் நிலைமை, தடைகள் தாமதங்கள் ஏற்படும்போது வேதவசனத்திற்கூடாகப் பெலனடைந்து அமர்ந்திருக்காமை, தேவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாமை, தேவனைக் குற்றப்படுத்தல் அல்லது பின்வாங்கிப்போதல், அவிசுவாசம் என இவையாவுமே நமது ஆவிக்குரிய பயணத்தில் நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட வாக்குத்தத் தங்கள் நிறைவேறத் தடைக்கற்களாக இருக்கின்றன. அத்தடைகளை நீக்கி விசுவாசத்தோடு நம் பயணத்தைத் தொடர தேவாவியானவரின் துணைவேண்டி ஜெபிப்போமாக.

“பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல. மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல. அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரோ?” (எண்.23:19).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, என்ன தடை நேர்ந்தாலும், அழைத்தவர் நீர் உண்மையுள்ளவர் என்பதை நாங்கள் உறுதியாய் நம்பி தொடர்நது முன்னேறிச் செல்ல உமது கிருபை தாரும். ஆமென்.