அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜனவரி-பிப்ரவரி 2018)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(6) புதிய மொழிபெயர்ப்பு

மோனஹன் குழுவினரது மொழிபெயர்ப்புப்பணி காரணமாக 1942-ல் புதிய ஏற்பாடு வெளிவந்தது. இது நெஸ்லே என்பவர் தயாரித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. இப் பிரதியில், ஆரம்பத்தில் அப்போஸ்தலர்கள் எழுதியவை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதேசமயம் லார்சன், பெப்ரீஷியஸ் ஹென்றி பவர் என்போருடைய தமிழ் மொழிபெயர்ப்புகளையும், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டுப்பார்த்து மோனஹன் குழுவினர் தமது பணியைச் செய்தனர். இவர்கள் தமது மொழி பெயர்ப்பு சாதாரண கிராமவாசிக்கும் விளங்கக்கூடிய வண்ணம் இலகுவான மொழியில் இருக்கவேண்டும் என்பதிலும், கிறிஸ்தவர்கள் அதுவரை காலமும் உபயோகித்துப் பழகிய வார்த்தைகளை மாற்றக்கூடாது என்பதிலும் அதிக அக்கறையுடையவர்களாக இருந்தனர்.

அதேசமயம், முழுமுதற் கடவுளுக்குத் தேவன் எனும் பதத்தைவிட கடவுள் என்ற பதமே சரியானது என்பதனால், அதையே மோனஹன் குழுவினர் உபயோகித்தனர். மொழிபெயர்ப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போது அதற்கெதிராகச் சிலர் தமது கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இதனால், இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் இக்குழுவினர் இருந்தனர். புதிய மொழிபெயர்ப்புக்கெதிராகச் சொல்லப்பட்ட கருத்துக்களும், அதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் அளித்த பதில்களும் இந்தியக் கிறிஸ்தவ தேசாபிமானி எனும் பெயர் கொண்ட ஆங்கிலப் பத்திரிகையில் வெளியிடப்பட்டன. புதிய மொழிபெயர்ப்பு, 1611ஆம் ஆண்டில் வெளி வந்த ஜேம்ஸ் அரசனது பதிப்பு வேதாகமம் உபயோகித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிராதமையினால், அது சரியான மொழிபெயர்ப்பல்ல என்பதே இம்மொழிபெயர்ப்புக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டாகும். மொழிபெயர்ப்புக் குழுவினர், அக்கிரேக்கப் பிரதியைவிட அதற்கும் முன்பிருந்த கிரேக்கப் பிரதிகளே நம்பகமானவை என்பதைச் சுட்டிக்காட்டி வந்தனர்.

1949 இல், மோனஹன் குழுவினரது பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வெளி வந்தது. 1954 இல் புதிய ஏற்பாடு திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது. லார்சன் மொழிபெயர்ப்புக்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பு மோனஹன் மொழிபெயர்ப்புக்கு ஏற்படாத போதிலும், மக்கள் தொடர்ந்தும் ஹென்றி பவரின் திருத்தப்பட்ட ஐக்கிய பதிப்பையே உபயோகித்து வந்தனர். மொழிபெயர்ப்புகளுக்கிடையே இருக்கும் வித்தியாசங்கள் குறைவாகவே இருக்கின்றபோதிலும், மக்கள் தாம் உபயோகித்துப் பழகிய மொழிபெயர்ப்பிலேயே திருப்தியடைந்து விட்டனர். அவர்கள் மூலமொழியின் சரியான அர்த்தத்தைத் தரும் ஒரு மொழி பெயர்ப்பு அவசியம் என்பதை உணரவில்லை. மோனஹன் குழுவினர் அதிக கவனத்துடன் தமது மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்தபோதிலும், அவர்களுடைய வேதாகமத்தில் ஆங்காங்கே சில அச்சுப்பிழைகளும், வேறுவகையான பிழைகளும் இருந்தன. எனவே, அவற்றைத் திருத்துவதற்கு 1961இல் ராஜரீகம் என்பவரது தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடும் சங்கீதங்களும் 1979இல் வெளிவந்தன. இது இலக்கணப் பிழைகள் அற்றதாகவும், எவரும் எளிதில் புரிந்துகொள்ளும் சிறிய வசனங்களைக் கொண்டதாகவும் இருந்தது. மேலும், வடமொழிச் சொற்கள் நீக்கப்பட்டு தனித் தமிழில் இம்மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது. இதுவும் பெரும்பாலான கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆரம்பகால ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் ஒருசில வேதப் பகுதிகளை மட்டுமே தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். 1857ஆம் ஆண்டே ரோமன் கத்தோலிக்கச் சபையினரால் மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பாண்டிச்சேரியில் வெளிவந்தது. இது, வெளிநாட்டு மிஷன்களுக்கான பாரீஸ் சங்கத்தைச் சேர்ந்த மிஷனரிகளினால் மொழிபெயர்க்கப்பட்டது. 1890இல், இயேசு சங்கத்தைச் சேர்ந்த ஜே.பி.டிரின்சல் என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு வெளிவந்தது. 1904ஆம் ஆண்டு பாண்டிச்சேரியிலிருந்த ரோமன் கத்தோலிக்க மிஷன் அச்சகத்தில் பழைய ஏற்பாடு தமிழில் பிரசுரிக்கப்பட்டது. 1960 இல், முழு வேதாகமமும் ஒன்றாக வெளியிடப்பட்டது. 1970 இல், இக்கால மொழி நடைக்கு ஏற்றவிதமாக ரோமன் கத்தோலிக்கச் சபையினர் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

1974இல், இந்திய வேதாகமச் சங்கம், ரோம சபையுடன் இணைந்து பழைய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணியை ஆரம்பித்தது. 1977இல் இந்திய சுவிசேஷ ஊழிய நூல் நிலையத்தினர் “ஜீவனுள்ள மீட்பின் செய்தி – ஒரு தெளிவுரை” எனும் தலைப்பில் புதிய ஏற்பாட்டின் இலகு மொழிநடையிலான மொழிபெயர்ப்பை வெளியிட்டனர். இது, ஆங்கிலத்தில் வெளிவந்த லிவிங் பைபிள் எனும் வேதாகமத்தின் தமிழாக்கமாகும். இம்மொழிபெயர்ப்பு இலங்கைத் தமிழர்க்கு ஏற்றதல்ல எனக்கருதிய இலங்கையிலுள்ள லிவிங் பைபிள் ஸ்தாபனத்தினர் லிவிங் பைபிளை மறுபடியுமாக மொழிபெயர்த்து 1981இல் ‘வாழும் இறைவாக்கு’ எனும் பெயரில் வெளியிட்டுள்ளனர்.

இக்காலத் தமிழ் நடையில் வேதாகமம் இருந்தாலேயே மக்களால் தேவனுடைய வார்த்தையை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும் எனும் எண்ணத்தில் புதிய மொழி பெயர்ப்புகள் வெளிவந்தாலும், பெரும்பாலான தமிழ்க் கிறிஸ்தவர்கள் ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பையே இன்றுவரை உபயோகித்து வருகின்றனர்.

(முற்றிற்று)

சத்தியவசனம்