முறித்துப்போடும் மூன்றாம் தலையீடு

தியானம்: 2018 மார்ச் 7 புதன்; வேத வாசிப்பு: ஆதியாகமம் 39:1-20

“…நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்” (ஆதியாகமம் 39:9).

என் பேனாஇயக்கியில் (Pendrive) சேகரித்து வைத்திருந்த எல்லாமே அழிந்துவிட்டது. “வைரஸ்” என்றார்கள். எங்கிருந்து வந்தது? அன்று வேறொரு கணினியில் இதனை மாட்டி ஒரு வேலை செய்தது நினைவுக்கு வந்தது. இப்படித்தான் உறவுகளுக்குள் மூன்றாம் நபர் நுழைந்தால் என்னவாகும் என்று நினைத்துக்கொண்டேன். (என் கணினியில் இதே பேனாஇயக்கியை மாட்டியபோதும், என் கணினி வைரஸ் பாதுகாப்பு இருந்ததால், கணினி தப்பிக் கொண்டது.)

உறவுகள் காப்பாற்றப்பட வேண்டுமானால் தலையீடுகளுக்கு இடமளிக்கக்கூடாது. தலையீடுகள் வராமல் கவனமாக இருக்கவேண்டியது நமது பொறுப்பு. அதேசமயம், தலையீடு செய்கிறவர்களும் அது தவறு என்று உணர வேண்டியது மிக மிக முக்கியம். இதைத்தான் அன்று யோசேப்பு செய்தார். போர்த்திபாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான யோசேப்பு என்னவும் செய்திருக்கலாம். அதிலும் வீட்டு மனிதர் யாரும் இல்லாத நேரத்தில்தான் அவனுடைய மதிப்பிற்குரிய எஜமானனின் மனைவி அவனைப் பாவத்துக்கு இழுத்தாள். வாலிபன் யோசேப்பு உணர்ச்சியற்ற ஜடமா? ஆனால், அவன் இணங்கவில்லை. அவளுக்கு மறுப்பதால் தனக்கு என்ன தீங்கு நேரிட்டாலும் அதற்கு முகங் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்த யோசேப்பு, தவறான உறவு தேவனுக்குமுன் மிக அருவருப்பானது, ஒரு கணவன் மனைவி உறவு கறைப்படுவதற்குத் தான் காரணமாயிருக்கக்கூடாது, அது தேவனுக்கு விரோதமான பாவம் என்பதில் வைராக்கியமாயிருந்தான். அவனுடைய உண்மைத்துவத்துக்குக் கிடைத்த பரிசு  சிறைவாசம். ஆனாலும், கர்த்தர் யோசேப்பை, அவனுடைய மனதை, மனதின் எண்ணங்களை அறிந்திருந்தார். ”கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன் மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்” (ஆதியாகமம் 39:21).

அநேக உறவுகள் நொறுங்கிப் போவதற்கு மூன்றாம் தலையீடுகள் முக்கிய பங்காற்றுகின்றன. “ஒரு குடும்பப் பெண்ணின் கண்ணீருக்கும் வேதனைக்கும் காரணமாயிருந்த என்னை நானே அருவருக்கிறேன்” என ஒரு பெண் சொன்னாள். அவள் மனந்திரும்பி, அதே குடும்பத்துக்கு இன்று ஆறுதலின் பாத்திரமாக இருக்கிறாள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அநியாயமாகக் குற்றப்படுத்தப்பட்டாலும்கூட யோசேப்பைப்போல பாவத்திற்கு விலகி ஓடுவோமாக. எவருடைய உறவுகளும் சிதைந்துபோக நாம் எவ்விதத்திலும் காரணமாக இருக்கக்கூடாது.

“…உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் (கர்த்தர்) கேடகமாயிருக்கிறார்” (நீதிமொழிகள் 2:7).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, உறவுகளைக் கட்டியெழுப்பி, உமக்குப் பிரியமாய் வாழ என்னைத் தேவகரத்தில் அர்ப்பணிக்கிறேன். ஆமென்.