பழிவாங்குதல் உறவைக் கெடுக்கும்!

தியானம்: 2018 மார்ச் 8 வியாழன்;
வேத வாசிப்பு: ஆதியாகமம் 42:24, 43:29-31, 45:1-2

“அவன் சத்தமிட்டு அழுதான். அதை எகிப்தியர் கேட்டார்கள். பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்” (ஆதியாகமம் 45:2).

கிறிஸ்துவின் அன்பையும் மன்னிப்பையும் பெற்று அனுபவிக்கின்ற நாம், நம்மை வெறுக்கிறவர்கள், நமக்குத் தீங்கு செய்கிறவர்கள் விஷயத்தில் என்ன செய்கிறோம்? “என்னை ஒதுக்கிவைத்த என் சகோதரனுடைய திருமண நாளிலே, ‘நான் உங்களை நேசிக்கிறேன்’ என்று எழுதி, வாழ்த்துச் செய்தி அனுப்பி வைத்தேன். சில ஆண்டுகள் கடந்த பின்பு அவரிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்தது. ஒரு வரி, “என்னை மன்னித்துவிடு” என்று அதில் எழுதப்பட்டிருந்தது” இப்படியாக ஒருவர் பகிர்ந்துகொண்டார்.

யோசேப்புக்கும் சகோதரருக்கும் இடையில் பெரிய பிளவு; சகோதரர்கள் யோசேப்புக்குச் செய்த தீங்கு சொல்லி முடியாதது. ஆண்டுகள் செல்ல செல்ல அவர்கள் யோசேப்பை நினைப்பதையே மறந்திருக்கலாம். ஆனால் இப்போது, எகிப்தின் அதிபதியாய் கெம்பீரமாய் அவன் உட்கார்ந்திருப்பான் என்று கனவு கூடக் கண்டிருக்க மாட்டார்கள். முன்னர் சிறுவனாய் பார்த்த யோசேப்பை இப்போது அடையாளங்காண முடியவில்லை. ஆனால் யோசேப்பு அவர்களைக் கண்டறிந்தான். நாம் யோசேப்பின் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்? “பழிக்குப் பழி” இச்சொல்லை கிறிஸ்தவர்கள் நாம் சொல்லத் தயங்கினாலும், பகையுணர்வை வெளிக்காட்டாதிருப்போமா? ஆகக்குறைந்தது ஒரு கேள்வியாவது கேட்காமல் விட்டிருப்போமா? யோசேப்பின் நடவடிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாய் இருந்தாலும், அவன் அவர்களைச் சோதித்துப் பார்த்தான் என்பதுதான் உண்மை. ஒவ்வொரு தடவையும் யோசேப்பு இரகசியமாக அழுதான் என்று வாசிக்கிறோம். இறுதியில் அடக்கமுடியாமல் சத்தமிட்டு அழுதுவிட்டான். தனக்குத் தீங்கு செய்தவர்களுக்குப் பதில் தீங்குசெய்ய நினைத்திருந்தால் இந்த அழுகை வந்திருக்குமா? யோசேப்பு அவர்களைச் சந்திக்குமுன்னரே அவர்களை மன்னித்துவிட்டான் என்பதுதான் உண்மை.

தீமைக்குத் தீமை செய்வது வெகு இலகு. ஆனால், மனதார மன்னித்து பதில் நன்மை செய்யும்போது, தீமை நினைக்கிறவனைக்கூட அது நிச்சயம் சிந்திக்க வைக்கும். விழுந்திருந்த பகை என்ற திரையை அது கிழித்துப்போடும். தீங்கு செய்தவனை உணரவைக்கும்; கிறிஸ்துவின் அன்பு வெளிப்பட அதுவே தருணமாகும். மாறாக, தீமைக்குத் தீமை செய்யும்போது, அவனும் சிந்திக்க வாய்ப்பு ஏற்படாது. நமக்கும் மனச்சமாதானம் கிட்டாது. உறவுகள் மீண்டும் கட்டப்படுவதும், சமாதானம் நிலைவரப்படுவதும் நமது கைகளில்தான் இருக்கிறது.

“…பழி வாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்” (ரோமர் 12:19).

ஜெபம்: ஆண்டவரே, தீமைக்குத் தீமை அல்லது தீமை செய்தவனை விலக்குதல் இதுபோன்ற பழிவாங்குகிற எண்ணங்கள் நீங்கவும் தீமைக்கு நன்மை செய்கிறவர்களாய் நாங்கள் மாறவும் எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.