ஒரே வழி!

தியானம்: 2018 மே 7 திங்கள்; வேத வாசிப்பு: லூக்கா 4:1-13

“…உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக” (லூக்கா 4:12).

கர்த்தருடைய உண்மைகளைச் சந்தேகப்படவும், அதைப் பொய் என்று சொல்லவும் நமக்குச் சோதனைகள் வரலாம். இது தொடர்ந்து பலவித சோதனைகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. கர்த்தர் அருளிய உண்மைகளை சற்றேனும் சந்தேகப்பட்டால் வழிதவறிவிடுவோம். சந்தேகமானது பிசாசு உபயோகிக்கும் ஆயுதம். இதற்கு நாம் தப்பவேண்டுமானால், கர்த்தருடைய வார்த்தைகளின்மீது முழு விசுவாசம் வைப்பது ஒன்றேதான் வழி. இந்த விசுவாசம், சந்தேகத்திற்கும் சோதனைகளுக்கும், பிசாசின் தந்திரத்திற்கும் நம்மை விலக்கிக் காக்கும். தேவ வார்த்தைகளை உதாசீனப்படுத்துகிற மக்கள் மத்தியிலேயே தேவன் நம்மை வைத்திருக்கின்றார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இது நமக்கும் சோதனைதான். “கர்த்தருடைய வார்த்தைகளை விசுவாசிப்பவன் பிழைப்பான்” என்பதே அந்தச் சோதனையில் தேவன் நமக்குத் தரும் தேவ பெலனாக இருக்கிறது.

இத்தகைய சோதனைக்கு விலகி, தம்மில் விசுவாசம் வைத்து நடப்பதையே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். இந்த இடத்தில் முதல் மனிதரான ஆதாம் ஏவாள் விழுந்துபோனார்கள். தேவனுடைய வார்த்தையில் சாத்தான் கொண்டுவந்த சந்தேகத்தில் அகப்பட்டு பாவத்திற்குட்பட்டார்கள். இரண்டாவது ஆதாமான நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவோ எல்லா விதமான சோதனைகளுக்கும் விலகி நடந்ததோடு, எதற்கும் இடமளிக்காமல், சோதிக்கப்பட்டும் பாவத்திற்குட்படாமல் சாத்தானை வென்றார். அந்த வெற்றி வேந்தனை நாம் பின்பற்றும்போது அவர் நம்மோடு கூடவேயிருந்து நமக்கும் உதவி செய்கிறார் என்பது எத்தனை பாக்கியமான காரியமாக இருக்கின்றது.

தேவன் நம்மிடம் பெரிதாக எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை. தாம் கற்பித்த உண்மைகளுக்குக் கீழ்ப்படிகின்ற ஒன்றையே அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார். ஆர்வக்கோளாறுக்கும், சந்தேக ஆவிக்கும், சோதனைகளுக்கும் நாம் இடமளித்தால் பாவத்துக்குள் நாம் இலகுவாக விழுந்துவிடுவோம். மாறாக, தேவனையே சார்ந்து வாழ்வது மட்டும்தான் நம் வாழ்க்கைக்கு நிறைவான சந்தோஷத்தைத் தருகின்ற காரியமாக இருக்கிறது. தேவன் பொய் சொல்லி நம்மை வஞ்சிக்கிறவர் அல்ல. ஆகவே, அவருடைய வார்த்தையை நம்புவோம். சோதனைகள் வரும்; அதற்காக நாம் பயந்து ஓடிவிட முடியாது. தேவனுடைய வார்த்தையைக்கொண்டே நாம் எதிர்த்து நின்று ஜெயம் எடுக்கலாமே! சத்துரு கொண்டுவருகிற எல்லாவித சோதனைகளையும் ஜெயிக்கிறவர்களாகவும், கர்த்தரைப் பரீட்சைப் பாராதவர்களாகவும் நடக்க இன்றே தீர்மானிப்போமாக.

“…எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும் என்று சொல்லுங்கள் என்றார்” (லூக்கா 11:4).

ஜெபம்: ஆண்டவரே, எங்களுக்கு நேரிடும் சோதனைகளில் வேதவசனங்களினால் பிசாசை ஜெயித்த வெற்றிவேந்தனாம் உம்மையே நாங்களும் பின்பற்றுவோம் என்று தீர்மானிக்கிறோம். எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.

சத்தியவசனம்