யோவான் கண்ட மகிமை

தியானம்: 2018 மே 20 ஞாயிறு; வேத வாசிப்பு: வெளி 1:8-20

“நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்” (வெளிப்படுத்தல் 1:17).

இயேசுகிறிஸ்து உலகில் வாழ்ந்த காலத்தில் இயேசுவின் சீஷன் யோவான், அவருடைய அன்பான சீஷன் என அழைக்கப்பட்டவர். இயேசு தமது சீஷர்களின் கால்களைக் கழுவியபின் அவருடைய மார்பிலே சாய்ந்து கொண்டு தனது அன்பைக் காட்டியவர் இவர் (யோவான் 13:23). இப்பொழுது, வயது சென்றவராக, தனிமையில் பத்மூ தீவிலே இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியின் நிமித்தம் சிறைப்பட்டிருந்தபோது கிறிஸ்துவின் மகிமையைக் கண்டார். இயேசுவுடன் ஒன்றாகவே வாழ்ந்த யோவான் இந்த தீவில் கண்டது என்ன?

“நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்” என்று தன்னுடைய உணர்வை எழுதுகிறார் யோவான். தேவனுடைய மகிமைக்கு முன்னே யோவானால் நிற்கமுடியவில்லை. தான் உரிமையோடே மார்பிலே சாய்ந்திருந்த அந்த இயேசுதானே என்று அவரால் அலட்சியப்படுத்த முடியவில்லை. உலகில் இயேசுவோடு ஒன்றாகவே வாழக் கிடைத்த யோவானுக்கு, சர்வ மகிமையுடன் வெண்வஸ்திரம் தரித்து, அக்கினி ஜுவாலை போல ஒளிவீசும் கண்களுடன் தமது வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களையும் ஏந்திக்கொண்டு சூரியனைப்போல பிரகாசமாய் வெளிப்பட்ட கிறிஸ்துவைக் கண்டபோது அவரால் நிற்கவே முடியவில்லை; முகங்குப்புற விழுந்தார். இன்று நாம் இயேசுவைக்குறித்து என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம்?

தேவாதி தேவனுடைய மகிமைக்கு ஒப்பானதொன்று உண்டோ? அவர் சர்வ வல்லமையுள்ளவர். ஆனால் நாமோ, அவரை மாட்டுக்கொட்டிலில் பிறந்த சிறு பாலகனாகவும், சீஷர்களுடைய கால்களைக் கழுவிய சேவகராகவும், சிலுவையில் அறையப்பட்ட அடிமையாகவும், இன்னும் நினைத்துக்கொண்டிருப்பது என்ன? அவருடைய மகிமைக்கு முன்பாக நிலைநிற்கத்தக்கவன் யார்? இதனை நாம் உணராதிருப்பது எப்படி? அவருடைய சீஷனாயிருந்த யோவானே அந்த மகிமையைக் கண்டு பயந்து, அவரது பாதத்தில் விழுந்தாரென்றால், நமது காரியம் என்ன?

ஆனால் ஆண்டவரோ யோவானைப் பார்த்து, “பயப்படாதே. நான் முந்தினவரும் பிந்தினவரும் உயிருள்ளவருமாயிருக்கிறேன்” என்றார். நம்முடைய பாவங்களுக்காக மரித்த அவரே, நமது தேவாதி தேவன் என்பதை உணர்ந்து பயத்துடனே அவரைச் சேவிப்போம். நடுக்கத்துடனே அவர் பாதம் முத்தம் செய்வோமாக (சங்கீதம் 2:11-12).

“வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” (சங். 19:1).

ஜெபம்: மனுஷரில்  ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிற  எங்கள் தேவனே, நாங்கள் எம்மாத்திரம்? உமது மகிமைக்கு முன்னே பயத்தோடும் நடுக்கத் தோடும் உம்மை சேவிக்கிறவர்களாக காணப்பட எங்களுக்கு கிருபை செய்யும். ஆமென்.