கடினப் பாதை

தியானம்: 2018 ஆகஸ்டு 16 வியாழன்;
வேத வாசிப்பு: யாத்திரகாமம் 13:17-21

சிவந்த சமுத்திரத்தின் வனாந்தரவழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத் திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள் (யாத.; 13:18).

நமது வாழ்வைக் குறித்து பல திட்டங்கள் போடுவோம். அப்படித்தான் நடக்கும் என்று நம்பிக்கையோடு கனவும் காணுவோம். ஆனால், திடீரென அதற்கு மாறாக காரியங்கள் நடக்கும்போது, நாம் திகைத்து திண்டாடிப் போவதுண்டு. ஏன் என்று கேள்விகள் கேட்பதுண்டு. குழப்பத்துக்குள் தள்ளப்படுவதுண்டு. தீர்மானம் எடுக்க முடியாமல் திணறுவதுண்டு.

எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர் சீக்கிரமாகக் கானான் போய்ச் சேரக்கூடிய பாதையொன்று இருந்தது. ஆனால், அதில் சென்றால் அவர்கள் யுத்தத்தைக் கண்டு பயந்து மீண்டும் எகிப்துக்குப் போக நினைப்பார்கள் என்று எண்ணிய தேவன், சமீபமான அந்தப் பாதையை தவிர்த்து, சிவந்த சமுத்திரத்தின் வனாந்தரப் பாதையூடாக அவர்களை சுற்றிப்போக பண்ணினதைக் காண்கிறோம். இது கடினமற்ற ஆபத்தற்ற சுற்றிப்போகும் நீண்ட பயணமாகும். ஆனால், இதுதான் தேவ வழிநடத்துதலாய் இருந்தது. வனாந்தரப் பாதையில் இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் தாம் யார், தம்மை எப்படி ஆராதிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தம்முடைய ஜனங்களாக வழிநடத்தினார். கீழ்ப்படிந்தவர்கள் போக, கீழ்ப்படியாமல் பாவம் செய்தவர்கள் வனாந்தரத்திலேயே அழிந்து போனார்கள். தேவ வழிநடத்துதலில் பக்குவப்பட்ட இருவரான யோசுவாவும், காலேபும் தேவனுக்காய் உறுதியாய் நின்றார்கள். மோசேக்குப் பின்பதாக யோசுவா இஸ்ரவேலரை வழிநடத்தி கானானுக்குள் கொண்டுசேர்த்தான். நாம் எப்போதுமே இலகுவான பாதையில் சீக்கிரமாய்ச் செல்லவே விரும்புவோம். ஆனால், தேவன் தெரிந்ததோ வனாந்தர சுற்றுப் பாதையாகும்.

நாம் தெரிந்துகொள்ளும் இலகுவான பாதை சொகுசான இதமான வாழ்வாக இருக்கலாம், அதில் நாம் தேவனையே மறந்துபோய் உலகத்துக்குள் ஈர்க்கப்பட்டும் போகலாம். ஆனால், தேவன் தெரிந்துகொள்ளும் கடினமான, கரடு முரடான பாதையோ நமக்குக் கடினமாக இருந்தாலுங்கூட நம்மை வனைந்து, அவருக்கே உரிய பிரகாசமுள்ள பாத்திரங்களாய் உருவாக்கக்கூடும். அந்தப் பாதையில் நாம் தேவனோடு நடக்கவும், அவருக்காய் பணியாற்றவும் கூடும். அந்தப் பாதையில் நடக்கும் நம்மை அது சேரவேண்டிய இடத்தில் நிச்சயம் கொண்டுசேர்க்கும். நாம் எப்படியான வழியில் செல்ல ஆசிக்கிறோம். தேவனோடு நடக்கும் வழியா? அல்லது, அவரை விட்டுத் தூரம் செல்லும் சொகுசான வழியா?

அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம் யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள் (யோ.6:60).

ஜெபம்: அன்பின் தேவனே, கடினமாயிருந்தாலும் உம்மோடு நடக்கும் வழியிலே நான் மன ரம்மியத்துடன் பயணிக்க கிருபை தாரும். ஆமென்.