ஆசிரியரிடமிருந்து…

(ஜூலை-ஆகஸ்டு 2019)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

என்றென்றும் மாறாத நேசர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

2019 ஆம் ஆண்டின் பாதிவருடத்தை கடந்துவர கர்த்தர் கிருபை செய்துள்ளார். சத்திய வசன பங்காளர்கள் நேயர்கள் வாசகர்கள் யாவரது குடும்பங்களிலும் இக்கல்வியாண்டின் தேவைகளைக் கர்த்தர் சந்திக்கும்படியாக நாங்கள் ஜெபிக்கிறோம். இவ்வூழியங்களுக்கு தங்களது அன்பின் பிரயாசங்களை காண்பித்துவரும் அனைத்து ஜெபபங்காளர்களுக்காக, ஆதரவாளர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம்.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் சென்னையிலும் கடுமையாக நிலவிவரும் தண்ணீர் பஞ்சம் நீங்க கர்த்தர் ஒரு வழியை திறந்துதர மன்றாடுவோம். அதிக உஷ்ணத்தினால் பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலியாகி உள்ளதை அறிவோம். இப்படிப்பட்ட சாவுகள் இனியும் தொடராதபடியும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் விரைவில் சுகம் பெறவும், தேவனுடைய அற்புத கிரியை அங்கே விளங்கவும் உஷ்ணத்தின் கடுமை குறைவதற்கும் ஜெபிப்போம்.

கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாய் உள்ள இந்நாட்களில் பரிசுத்த வேதாகமத்தை கருத்தாய் வாசித்து கைக்கொள்வோம். தியான புத்தகத்தில் இடம்பெறும் அட்டவணையைப் பயன்படுத்தி ஒரு வருடத்திற்குள் வேதாகமத்தை அனைவரும் வாசித்து முடிப்பதற்கும் தொடர்ந்து உங்களை உற்சாகப்படுத்துகிறோம்.

இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் நமது கிறிஸ்தவ வாழ்வில் நாம் பெற்றுக் கொள்ளவேண்டிய மேன்மையான அனுபவங்களை ஜூலை மாதத்தில் தியானங்களாக எழுதியியுள்ளார்கள். ஆகஸ்டு மாதத்தில் சகோ. வர்ஷினி ஏர்னஸ்ட் அவர்கள் 23 ஆம் சங்கீதம் முழுவதையும் தியானங்களாக எழுதியுள்ளார்கள். ஒவ்வொரு நாளின் தியானங்களும் நமது வாழ்வை செப்பனிடுகிறதாகவும், கிறிஸ்துவோடு உள்ள உறவில் பெலப்படுத்துகிறதாயும், இக்கட்டு நெருக்கமான சூழ்நிலைகளில் ஆறுதலையும் திடநம்பிக்கையையும் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. நீங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாத அனுபவங்களையும் எங்களுக்கு எழுதுங்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் மறவாதீர்கள். தேவனுடைய நன்மையும் கிருபையும் உங்கள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து வர ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்