அவர் ஒரு போதகர்

தியானம்: 2019 அக்டோபர் 4 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 3:1-21

…ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம்… என்றான் (யோ. 3:2).

ஆண்டவர் இவ்வுலகில் வாழ்ந்தபோது, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைத் தெளிவாகப் போதித்துவந்தார். ஆனால், இயேசுவின் போதகத்தை பரிசேயர், சதுசேயர், ஆசாரியர்கள்கூட ஏற்க மறுத்தனர்; குற்றம் பிடிக்கமுயன்றனர். ஆனால் இவர்களோ, மக்கள் தங்களை, ‘ரபீ, ரபீ’ என்று அழைப்பதையே விரும்பினர். “ரபீ” என்றால் ‘போதகர்’ என்று அர்த்தமாம். ஆனால், இயேசுவோ, “கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்” (மத்தேயு 23:8) என்றார். இங்கே, யூதருக்கு அதிகாரியும் பரிசேயனுமான நிக்கொதேமு, இயேசுவை, ‘ரபீ’ என்று அழைப்பதை யோவான் முக்கியப்படுத்தி எழுதியுள்ளதைக் காண்கிறோம்.

பரிசேயர் பொதுவாகவே சமய கோட்பாடுகளில் வைராக்கியம் கொண்டவர்களாக நியாயப்பிரமாணத்தைக் குறித்தும், மரணத்தின் பின்பு உயிர்த்தெழுதல் உண்டு என்ற நம்பிக்கையுள்ளவர்களாய் அவற்றைக் குறித்தும் போதிக்கிறவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்கள், தாங்கள் போதித்தவற்றை தாமே கடைபிடிக்காது வஞ்சனையுள்ளவர்களாயும், மனந்திரும்பாதவர்களாயும் காணப்பட்டார்கள். நிக்கொதேமுவும் இந்தப் பரிசேய கூட்டத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவன். அவன் இயேசுவைச் சந்திக்க விரும்பினான். ஆனால், பரிசேயனான தன்னைப் பிறர் காண்பதை விரும்பாத அவன், இரவு நேரமாகப் பார்த்து இயேசுவிடம் வந்து, அவன் சொன்னது: “நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிகிறோம்” என்பதேயாகும். ஆக, அவன் ஏற்கனவே இயேசுவின் போதகத்தை ஏற்றுக்கொண்டான் என்பதையே இது காண்பிக்கின்றது. ஆனால், இயேசு அவனோடு பகிர்ந்துகொண்ட “மறுபிறப்பின்” உண்மைகளை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் ஒருபோதகனாய் இருந்தும், அந்தப் போதனைகளின் சத்தியத்தை அவன் உணர்ந்திருக்கவில்லை.

இன்றும் நம் மத்தியில் ஏராளமான போதகர்கள் இருக்கிறார்கள். பலர் தேவவார்த்தையை நன்கு பகுத்து அழகாக உபதேசிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், வாயினால் போதிக்கப்படுகின்ற அந்த சத்தியம், வாழ்வில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதே கேள்வி. சத்தியத்தைப் புரிந்துகொள்ளவும், அதன்படி நடக்கவும் செய்யவேண்டியது ஒன்றே. நாம் தேவனிடத்திலிருந்து வந்த போதகரான ஆண்டவர் பாதத்தில் அமர்ந்திருக்கவேண்டும். இதில் தவறினால் போதனைகள் தவறாகிவிடும். ஆகவே, இயேசுவிடம் திரும்புவோம்.

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக்காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் (சங். 32:8).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, சத்தியத்தை மற்றவர்களுக்கு போதிக்கும் முன் நல்ல போதகராகிய உம்முடைய பாதத்தில் அமர்ந்து காத்திருக்கிறவர்களாக எங்களை மாற்றும். ஆமென்.