கிறிஸ்துவே வாசல்

தியானம்: 2019 அக்டோபர் 12 சனி | வேத வாசிப்பு: யோவான் 10:1-10

நானே வாசல். என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்…(யோவா.10:9).

பிரமாண்டமான ஒரு மாளிகை. அந்த மாளிகையைச் சுற்றிலும் பல வாசல்கள் இருந்தன. ஆனால், இந்த வாசல்கள் யாவும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரேயொரு வாசல் மாத்திரமே மாளிகைக்குள் பிரவேசிக்கும் வாசலாகத் திறக்கப்பட்டிருந்தது. அந்த வாசலுக்குள்ளே எவரும் தாம் நினைத்தபடி பிரவேசிக்க முடியாது. அந்த வாசலுக்கான வழியில் அவர்கள் வந்தாக வேண்டும்; மாத்திரமல்ல, அதற்குள் பிரவேசிப்பதற்கு ஏற்ற ஆடைகளை அணிந்திருக்க வேண்டும், அத்துடன் சில காரியங்களை அவர்கள் நிறைவேற்றியே ஆகவேண்டும். இதனால் அந்த மாளிகையைப் பார்வையிடச்சென்ற நம்மில் பலரால் அதற்குள் போகமுடியவில்லை. இதைக் கவனித்தபோது, “நானே வாசல்” என்று இயேசு தம்மைத்தாமே குறிப்பிட்டுக் கூறிய விஷயம் நம்மைச் சிந்திக்க வைத்தது. மற்ற சுவிசேஷங்களில் இல்லாதபடி யோவான் இதனைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

இயேசு, “நானே வாசல்” என்று கூறிய இந்த இடத்தில், ஒரு மேய்ப்பன், அவனுடைய மந்தை என்பவற்றுடன் சம்பந்தப்படுத்தி இயேசு கூறியிருப்பதால், அது ஒரு மந்தையின் தொழுவத்தின் உருவமைப்பை எடுத்துக்காட்டுகின்றது. ஒரு மந்தையின் தொழுவத்திற்கு ஒரே ஒருவாசல்தான் உண்டு. ஆடுகளின் மேய்ப்பனே அத்தொழுவத்தின் வாசலில் நின்று தன் ஆடுகளை தொழுவத்திற்குள் செல்ல அனுமதிப்பான். ஆடுகள் அந்த வாசலாலேயன்றி வேறு எந்த வாசலாலும் தொழுவத்தினுள் நுழைய முடியாது. இதைப்போன்றதுதான், நித்திய ராஜ்யமாகிய பரலோக ராஜ்யத்திற்குள்ளும் இயேசுவினூடாக அல்லாமல் யாராலும் உள்ளே பிரவேசிக்க முடியாது. அன்று தாமே ஜனத்தை நடத்துகிறவர்கள் என்று சொன்ன பரிசேயரோ, கரிசனையற்ற மேய்ப்பர்களாய், நியாயப்பிரமாணத்தைத் தமக்கேற்றபடி திருப்பி, தங்கள் மந்தையை தாங்களே பட்சித்து வந்தனர். மனதுருக்கமுள்ள இயேசு,”நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். ஏனெனில், அவரே சிதறடிக்கப்பட்ட மந்தையை மீட்டு, தமது தொழுவத்துக்குள் கொண்டுவருவதற்காக வந்த இரட்சகர் (லூக்கா 2:11)

மோட்சம் செல்ல பலர் பல வாசல்களை நாடுகின்றனர். எனினும், அவை நல்வழிகள் அல்ல. இயேசுவே ஒரே வாசல். இந்த வாசல் வழியாய் நாம்மாத்திரம் சென்றால் போதுமா? இயேசுவின் நற்செய்தியைப் பிறருக்கும் கூறி அறிவிப்போமா?

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை (அப். 4:12).

ஜெபம்: அன்பின் பிதாவே, இயேசுவே வாசல் என்பதை அறிந்துகொண்ட நான் மற்றவர்களுக்கும் அந்த வாசலைக் காண்பிக்க எனக்கு உதவியருளும். ஆமென்.

சத்தியவசனம்