நல்ல மேய்ப்பன்

தியானம்: 2019 அக்டோபர் 13 ஞாயிறு | வேத வாசிப்பு: யோவான் 10:11-19

நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவா.10:11).

வேதாகமத்தில், மேய்ப்பர்களுக்கும் ஆடுகளுக்குமுள்ள உறவை, தேவனுக்கும் தமது பிள்ளைகளுக்குமுள்ள உறவுடன் ஒப்பிட்டு அநேக காரியங்கள் கூறப்பட்டுள்ளது. இதன் தாற்பரியத்தை அறிந்துகொள்ளவேண்டுமென்றால், முதலாவது மேய்ப்பனைக் குறித்து நாம் தெளிவாக அறிந்துகொள்வது நல்லது.

முதலாவது, ஆட்டு மந்தையை உடையவனே மேய்ப்பன் எனப்படுவான். அடுத்தது, மேய்ச்சல் தொழில் என்பது, சுயநலமற்ற ஒரு தொழில்; அதாவது, மேய்ப்பனுக்கும் ஆடுகளுக்கும் ஒரு உறவு எப்போதும் காணப்படும். அவன் தன் ஆடுகளை ஒவ்வொன்றாக அறிந்திருக்கிறான்; பெயர் வைத்தும் கூப்பிடுவான். இதனால். மேய்ப்பன் சுயநலவாதியாக அதிகார தோரணை உள்ளவனாக இருக்கமாட்டான். மாறாக, ஒரு உத்தம மேய்ப்பன், தன் ஆடுகளுக்காக தன் ஜீவனையும் கொடுக்கத் தயங்கமாட்டான். அந்தளவுக்கு அவன் அன்பும் கருணையும் நிறைந்தவனாகவே இருப்பான். ஒரு ஆட்டுக்குட்டியைக் கூட மிருகங்களுக்கு இரையாக அவன் விடமாட்டான்.

மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளை தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார் (ஏசா.40:11) என்று ஏசாயா மூலம் அறிவிக்கப்பட்ட மேய்ப்பரைத் தான் யோவான் தனது சுவிசேஷத்தில் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதனையே இயேசு, “நானே நல்ல மேய்பப்பன்; நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுப்பார்” என்று தாம் பின்னர் செய்யப்போவதை முன்கூட்டியே அறிவித்தார். இதனை பரிசேயர் உணரவில்லை. ஆனால், இயேசுவோ, இவ்வுலக மேய்ப்பர்களைப்போல் இல்லாமல், பூரண அன்போடும், அர்ப்பணிப்போடும், தன்னலமற்றவராய், தம் ஆடுகளாகிய இவ்வுலக மக்கள் அனைவருக்காகவும் தம் ஜீவனைக் கொடுத்து மரித்து, உயிர்த்தெழுந்து இன்றும் நல்ல மேய்ப்பனாகவே ஜீவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த மெய்யான மேய்ப்பனை நமது மேய்ப்பனாகக் கொண்டிருக்கும் நாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நமக்குப் பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கின்ற மந்தையை, அது குடும்பமோ, ஒரு சபையோ, அல்லது வேலையிடங்களோ, எதுவானாலும் இயேசுவின் வழிநின்று பராமரிக்கிறோமா? நமது மேய்ப்பனை மெய்யாகவே அறிந்திருந்தால் அவர் வழி நடப்போமல்லவா!

நான் என்னுடையவைகளை அறிந்தும், என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன் (யோவா. 10:15).

ஜெபம்: எங்கள் நல்ல மேய்ப்பரே, நீர் எங்கள் பொறுப்பில் கொடுத்திருக்கிற மந்தையை உம்முடைய வழிகளில் நின்று பராமரிக்க எங்களுக்கு கிருபை ஈந்தருளும். ஆமென்.

சத்தியவசனம்