உயிர்த்தெழுதலும் ஜீவனும்

தியானம்: 2019 அக்டோபர் 18 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 11:1-14

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் (யோவா.11:25).

நம்மில் யாராலும் மரணத்தை தவிர்க்கமுடியாது. இந்த மண்ணில் பிறக்கின்ற எவரும் ஒருநாள் மரிக்கத்தான் வேண்டும். ஆனால், மரித்து, மீண்டும் உயிர் பெற்றவர்களைக் குறித்து நாம் பழைய, புதிய ஏற்பாட்டின் புத்தகங்கள் இரண்டிலும் வாசிக்கின்றோம். வேதாகம குறிப்பின்படி இப்படியாக மரித்து உயிர் பெற்றவர்களில் லாசரு என்பவனும் ஒருவன்.

லாசரு மரணத்துக்கேதுவான வியாதி கண்டபோது, அவனுடைய சகோதரிகள் இயேசுவுக்குத் தகவல் சொல்லி அனுப்பினர். ஆனால் இயேசுவோ லாசருவின் மரணம் தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாக நடந்தது என்று கூறி நான்கு நாட்கள் தாமதித்தே சென்றார். இயேசு வருகிறார் என்பதைக் கேள்விப்பட்ட மார்த்தாள் அவருக்கு எதிர்கொண்டு சென்று, “ஆண்டவரே, நீர் இங்கிருந்திருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான்” என்றாள். இயேசு அவளிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்” என்று கூறியதும் மார்த்தாள், உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளில் அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்றாள். அதற்கு இயேசு, “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்” என்று கூறி லாசருவை உயிரோடு எழுப்பிக்கொடுத்தார். இங்கு மார்த்தாள் கூறியது இறுதி நாளில் நடக்கப்போகும் உயிர்த்தெழுதல்; இது யூதமத நம்பிக்கையாயிருந்தது (தானி. 12:2). அதை மார்த்தாளும் அறிந்திருந்தாள். ஆனால், இயேசு கூறியதோ வேறு. வாழ்வின்மீதும் சாவின்மீதும் அதிகாரம் கொண்ட ஆண்டவர், தம்மை விசுவாசிக்கிறவர்களைப் பாவத்தினாலான மரணத்திலிருந்து மீட்டு புதிய வாழ்வைக் கொடுக்கிறார். அவனுக்கு இயேசுவே ஜீவனாயிருக்கிறார். இந்த உலகிலேயே அவன் நித்தியத்தின் சந்தோஷத்தைப் பெறுவான். சரீர மரணத்தின் பின்னரும் அவன் இயேசுவோடு நித்தியமாய் வாழுகின்ற கிருபையைப் பெறுகிறான். இயேசுவே உயிர்த்தெழுதலும் ஜீவனுமானவர்.

கிறிஸ்தவர்கள் என்று பெயரை உடைய நாம் இயேசுகிறிஸ்துவை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவத்திலிருந்து விடுதலையாகி, கிறிஸ்து அருளுகின்ற புதிய வாழ்வைப் பெற்றிருக்கிறோமா? உயிரோடே லாசரு எழுப்பப்பட்டான். ஆனால் அவனும் பின்னர் தன் சரீர மரணத்தைச் சந்தித்திருப்பான். ஆகவே, தேவபிள்ளைகளுக்கு சரீர மரணம் ஒரு காரியமே இல்லை; நித்தியத்தின் நிச்சயத்தைப் பெற்றிருக்கிறோமா என்பதே காரியம்.

பாவத்தின் சம்பளம் மரணம். தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன் (ரோமர் 6:23).

ஜெபம்: அன்பின் பிதாவே, பாவத்தினாலாகிய மரணத்தினின்று எங்களை மீட்டு நித்திய வாழ்வின் நிச்சயத்தை அனுபவிக்க தந்த கிருபைகளுக்காய் நன்றி. ஆமென்.