வழியை ஆயத்தப்படுத்து!

தியானம்: 2020 ஜனவரி 17 வெள்ளி | வேத வாசிப்பு: மத்தேயு 3:1-17

“நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன்…” (யோவான் 3:28 ).

உள்ளத்தைத் தொடும் பல கவிதைகளை வாசித்துக் காட்டியே ஒருவன் பிரபல்யமானான். அவனது திறமை எல்லா இடமும் பரவ, அவனைப் பாராட்டி ஒரு விருது கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேடைக்கு வரும்படிக்கு அழைத்தபோது, அவன் இன்னுமொருவரையும் அழைத்து வந்தவன் பேச ஆரம்பித்தான். ‘உங்கள் பாராட்டுக்கு உரியவன் நான் அல்ல; எனது நண்பனாகிய இவனே. நீங்கள் மெச்சிய அத்தனை கவிதைகளையும் எழுதியது இவனே. இவனுக்கு வாய்பேச முடியாது; ஆகையால், நான் அவன் வாயாக மாத்திரமே செயற்பட்டேன்’ என்றான்.

கிறிஸ்துவுக்காக வழியை ஆயத்தப்படுத்த முன்னோடியாக வந்த யோவான் ஸ்நானனை, ‘இவர்தான் மேசியாவோ’ என்று பலர் நினைத்தனர். ஆனால், யோவானோ, தான் வந்த நோக்கத்தை, தனது பணியை ஒருபோதும் மறந்து விடவில்லை. ‘நான் கிறிஸ்துவல்ல; அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன்’ என்பதை தெளிவாகக் கூறிவிட்டார். ‘அவருடைய பாதரட்சையின் வாரை குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல’ என்று கூறிய யோவானுக்குள் இருந்த பணிவும், தாழ்மையும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒருபோதும் அவர் தனக்கு வகுக்கப்பட்ட வரையறையினை மீறி செயற்படவேயில்லை. வனாந்தரத்தில் காட்டுத்தேனும் வெட்டுக்கிளியும் சாப்பிட்டு எளிமையாக வாழ்ந்தவர்தான் யோவான் ஸ்நானன்.

இன்று நம்முடைய பணியும் யோவானுடைய பணியைப் போன்றதே. கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக மக்களை ஆயத்தப்படுத்துகின்ற ஆத்தும ஆதாயப்பணி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நடப்பது என்ன? ஊழியம் என்ற போர்வையில் தங்கள் பெயர் புகழை பரப்புகிறவர்கள் எத்தனை! பலவிதங்களிலும் ஊழியத்தின் கருப்பொருள் மறைக்கப்பட்டு, ஊழியரின் பெயர் பிரபல்யம் பெருகிவிட்டது. ஜெபத்திற்குத் தேவன் பதில் அளித்தார் என்று சொல்லுவதற்குப் பதில், இன்னார் ஜெபித்ததாலே இது நடந்தது என்று கனம் மனிதருக்குக் கொடுப்பதையும் காண்கிறோம். இப்படி யான காரியங்கள் தேவபயமின்றி நடைபெறும் இக்காலகட்டத்தில் நமது பொறுப்பு என்ன? கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை கொண்டுவரும் பணியாளர்களாக, உண்மையான யோவான்களாக வாழ்வோமா? அல்லது நம்மை பெருமைப்படுத்தும் போலிகளுக்கு ஏமாறப்போகிறோமா?

“தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான். தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்…” (லூக்கா 14:11 ).

ஜெபம்: அதிசீக்கிரத்தில் வரப்போகும் எங்கள் ஆண்டவரே, இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டிய நாங்கள் மன உண்மையோடே ஊழியத்தை நிறைவேற்றுகிறவர்களாக காணப்பட உமது பெலன் தாரும். ஆமென்.

சத்தியவசனம்