மகா பூமியதிர்ச்சிகள்

தியானம்: 2020 பிப்ரவரி 10 திங்கள் | வேத வாசிப்பு: மத்தேயு 24:3-8

“பல இடங்களில் மகாபூமியதிர்ச்சிகளும்… உண்டாகும்.” லூக்கா 21:11

திடீர் தீடீரென உண்டாகின்ற இயற்கை மாற்றங்களும், திடீர் சம்பவங்களும் நம்மைத் திடுக்கிடச்செய்கின்றன. சமீபத்தில்கூட அங்காங்கே அடுத்தடுத்து எத்தனை பூமியதிர்ச்சிகளும் அழிவுகளும் நேர்ந்தன. பல நூறு ஜனங்கள் தப்பிக் கொள்ள வழி தெரியாமல் அகப்பட்டு மரித்துவிட்டார்கள். இவை நமக்கு மெய்யாகவே பயத்தையும் வேதனையையும் தந்தாலும், இவற்றைக்குறித்து ஆண்டவர் ஏற்கனவே நம்மை எச்சரித்துவிட்டார். இப்படியெல்லாம் நடக்கும் என்று வேதாகமமும் நமக்குத் தெளிவாக எச்சரிக்கிறது. ஆகவே, இவை ஆச்சரியமான நிகழ்வுகள் அல்ல. என்றாலும் அவற்றைச் சந்திக்கும்போது நாம் அதிர்ச்சியாவதையும் மறுக்கமுடியாது.

“பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும். வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும், பெரிய அடையாளங்களும் உண்டாகும்” (லூக்கா 21:11) என்றார் இயேசு. இங்கே ‘மகா பூமியதிர்ச்சிகள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ‘மகா’ என்று சொல்லப்படுவது, பெரிய அளவிலான பூமியதிர்ச்சிகளைக் குறிக்கும். பூமியதிர்வை அளப்பதற்கு “ரிக்டர்” என்கிற அளவைப் பயன்படுத்துகிறார்கள். பூமியதிர்ச்சியானது பொதுவாக ஐந்து அல்லது ஆறு ரிக்டர் அளவுக்கு மேலாக இருக்குமானால், ‘அது பெரிய பூமியதிர்ச்சி’ எனக் கருதப்படுகிறது. கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி இந்தோனேசியாவின் சுமத்திரா தீவுக்கருகில் ஏற்பட்ட பூமியதிர்வு, நமது நாடு உட்பட பல நாடுகளை உலுப்பி, பல உயிர்களையும் உடைமைகளையும் காவுகொண்டது. அது 9 ரிக்டர் அளவான பெரிய பூமியதிர்ச்சியாகக் கணிக்கப் பட்டது. அதன்பின்னர் எத்தனையோ பூமியதிர்ச்சிகள் வந்துவிட்டது. 14ஆம் நூற்றாண் டின் நிலநடுக்கங்களின் எண்ணிக்கையை 19ஆம் நூற்றாண்டில் சம்பவித்த நிலநடுக்கங்களோடு ஒப்பிடும்போது, அது 200 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருக்கிறது என்கிறது ஒரு கணக்கீடு. இன்று நமது நாட்டையும் அவ்வப்போது சிறுசிறு நிலநடுக்கங்கள் நிலைகுலையச் செய்ய ஆரம்பித்துவிட்டது.

கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளங்கள் ஏராளமாக நிறைவேறி வருகின்றன. ஆனால் இவை முடிவு அல்ல. என்றாலும், கிறிஸ்துவின் வருகை வாசலை நெருங்கிவிட்டது என்பதுமட்டும் தெளிவு. இனியும் தாமதம் ஏன்? பகை, பொறாமை, போட்டி மனப்பான்மை யாவையும் வெறுத்து ஒதுக்கிவிட்டு, கிறிஸ்துவைத் தரித்தவர்களாய், அவரைச் சந்திக்க ஆயத்தமாகுவோமாக.

“நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார். ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” (மத்தேயு 24:44).

ஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, இயேசுகிறிஸ்து நினையாத நாழிகையில் வரும் வேளை நான் கைவிட்டு போகாதபடிக்கு அவரை சந்திக்க ஆயத்தமாக எனக்கு உதவியருளும். ஆமென்.