ஜனத்துக்கு விரோதமாய் ஜனம்

தியானம்: 2020 பிப்ரவரி 15 சனி | வேத வாசிப்பு: லூக்கா 21:8-10

“…ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்திற்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்” (லூக்கா 21:10).

கிறிஸ்துவின் வருகையைக் குறித்து வேதாகமத்தில் குறிப்பிட்டுள்ள அடையாளங்களில் 99 சதவீதம் நிறைவேறிவிட்டதாக ஒருவர் சொன்னார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த அடுத்தவர், இந்த 99 சதவீதத்தைவிட எஞ்சியிருக்கிற ஒரு சதவீதம் மிகக் கடுமையாக இருக்கும் என்றார். இடிக்கப்பட்டுள்ள எருசலேம் தேவாலயம் கட்டப்படுவதற்கான சகல ஒழுங்குகளும் பூர்த்தியாகியுள்ளதாகவும் இன்றைய தகவல்கள் சில கூறுகின்றன.

தமது வருகைக்குரிய காலங்களில் அரசியலிலும் அடையாளங்கள் ஏற்படும் என்று ஆண்டவரே எச்சரித்துள்ளார். “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும் என்றார்” (லூக்கா 21:10). இதை வைத்து அநேகர் மூன்றாவது உலகப்போர் ஒன்று வெடிக்கலாம் என்று கருதுகிறார்கள். ஆனால், மொழி, இனம், கலாச்சாரம் என்று சொல்லி மக்கள் பலவிதங்களில் பிரிந்திருக்கிறார்கள். இதைத்தான் கோத்திரங்கள், ஜாதிகள், பன்மொழி பேசும் மக்கள் என வேதத்தில் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் தங்களுக்கு ராஜ்யங்களையும் அமைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் கூட்டங்கள் ஒன்றுக்கு விரோதமாய் ஒன்று எழும்பும் என்று ஆண்டவர் முன் எச்சரிப்பு தந்திருக்கிறார்.

இன்றைக்கு உலகிலே தீவிரவாதம் என்பது சாதாரணமாகிவிட்டது. இதைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், “இன்று தீவிரவாதம் மக்களின் வாழ்க்கை முறையாகிவிட்டது. மதம், இனம், மொழி, கலாச்சாரம் என்று மக்கள் பிரிவினைகளை ஏற்படுத்தி, தமக்கிடையில் தடுப்புச்சுவர்களை எழுப்பிக்கொண்டு வாழ்வதினாலும், அவர்களின் பாதுகாப்புணர்வு பாதிக்கப்படுவதாலும் பகை ஏற்பட்டு, தீவிரவாதம் உருவாகுகிறது” என்கிறார்கள். இதை இன்று நாம் அனுபவித்தும் இருக்கிறோம். நாடுகளுக்கிடையே யுத்தங்கள் என்றால், இன்று நாட்டுக்குள்ளேயே யுத்தங்கள் அதிகரித்துவிட்டது.

அருமையானவர்களே, ஆண்டவர் கூறிவைத்த அடையாளங்கள் நமது கண்களுக்கு முன்பாகவே நிறைவேறிவரும்போது, நாம் அஜாக்கிரதையாக இருப்பது எப்படி? இன்னும் நமக்கு எச்சரிப்புகள் தேவைப்படுவது ஏன்? அடையாளங்கள் நிறைவேறுதலுக்கு சாத்தான் தங்களையே கருவிகளாகப் பயன் படுத்துகிறானோ என்று சிந்திக்கவே தெரியாத மக்களுக்கு உலகத்தின் முடிவைக் குறித்தும், கிறிஸ்துவின் வருகையைக் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது நமது பொறுப்பல்லவா!

“எல்லாவற்றுக்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்” (1பேது.4:7).

ஜெபம்: அன்பின் தேவனே, உமது வருகைக்கு நாங்கள் ஆயத்தமாவதோடு மற்ற ஜனங்களுக்கும் உமது வருகையைக் குறித்த செய்தியை அறிவிக்கவும் அவர்களையும் ஆயத்தப்படுத்தவும் எங்களுக்கு கிருபை தாரும். ஆமென்.

சத்தியவசனம்