பழிவாங்குதல்

அதிகாலை வேளையில்… (ஜூலை-ஆகஸ்ட் 2020)
– Dr.உட்ரோ குரோல்

அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை (1 சாமு. 25:36).


வேதாகமத்தில் காணப்படும் மிக மோசமான மனிதர்களில் ஒருவன் நாபால். அவன் ஒரு பெரிய செல்வந்தனான மேய்ப்பன். அவனுக்கு அநேகம் ஆடுகளும் வேலைக்காரர்களும் இருந்தனர். ஒரு சமயத்தில் தாவீதும் அவனுடைய மனிதர்களும் நாபாலின் வேலைக்காரர்களுக்கு அதிக நன்மை செய்து பாதுகாப்பும் கொடுத்ததாக நாம் அறிகிறோம். தாவீதின் மனிதர்களுக்கு உணவு தேவை ஏற்பட்டபொழுது அவன் சில வாலிபர்களை நாபாலிடத்தில் உதவி கேட்டு அனுப்பினான்.

தாவீதின் மனிதர்கள் கர்மேலில் இருந்த நாபாலினிடத்துக்கு சென்ற பொழுது அவன் அவர்களைப் பரியாசம் பண்ணி உதவ மறுத்து விரட்டிவிட்டான். நாபால் ஒரு முரடன் எனவும், தீமை செய்கிறவன் எனவும் வேத புத்தகம் வர்ணிக்கிறது. அதாவது அவனுடன் பழகுவதும் பேசுவதும் மிகக் கடினமானதொன்று என்று பொருள்படும். தேவனுடைய அபிஷேகம் தாவீதின் மேல் இருப்பதை உணராத நாபால் “தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்?” என்று கேட்டான். அவன் தாவீதை தன்னிச்சையாக செயல்படும் மனிதர்களில் ஒருவனாக எண்ணிவிட்டான். தாவீதின் மனிதர்களை நாபால் வெறும் கையுடன் அனுப்பிவிட்டான். இவர்கள் தாவீதிடம் திரும்பிவந்து நாபால் எவ்வாறு நடந்துகொண்டான் என்றும் அவன் கூறிய வார்த்தைகளையும் கூறியபொழுது தாவீதின் கோபம் உச்சநிலையை அடைந்தது.

நட்பற்ற மனப்பான்மை கொண்ட நாபாலுக்கு எதிராக தாவீதின் போர்ச் சேவகர்களில் நானூறு பேர் பட்டயத்துடன் சென்றனர். கொடுங்கோலன் நாபாலுக்கு விரோதமாய் எழுந்த தாவீதின் சினத்தின் விளைவை, நாபாலின் மனைவி அபிகாயிலின் சமயோசித செயலால் தேவன் அவனைத் தடுத்தார். கோபமாயிருந்த தாவீதுக்கு தேவையான பொருட்களைக் காணிக்கையாகக் கொண்டு வந்து தனது கணவனுக்கு விரோதமாய் செயல்பட வேண்டாம் என்று அவள் ஞானமாய்ப் பேசினாள். தேவமனிதனான தாவீதுக்கு தேவன் அனுப்பிய தூதனாக அவள் காணப்பட்டாள். “உன்னை இன்றைய தினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக. நான் இரத்தம் சிந்தவராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றைய தினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக என்று தாவீது கூறினான். நாபாலின் மனப்பான்மை மன்னிக்க முடியாதது. அதற்கு தாவீதின் செயலும் மன்னிக்க முடியாததே ஆகும். ஆனால் அவன் அபிகாயிலின் விண்ணப்பத்துக்கு செவிகொடுத்தான். பவுல் ரோம் விசுவாசிகளுக்கு “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற் செய்வேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள் (ரோ.12:19) என்ற ஆலோசனையைப் பின்பற்றினார்.

அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை. அதிகாலையில் நாபாலின் வெறி தெளிந்த பொழுது அவனது உயிரைக் காப்பாற்ற தான் செய்தனவற்றையும் தாவீதின் நற்பண்பையும் தெரிவித்தாள். முரடனான நாபால் இதைக் கேட்டபொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப் போலானான். கர்த்தர் நாபாலை வாதித்ததினால், ஏறக்குறையப் பத்து நாளுக்குப் பின்பு, அவன் செத்தான். அபிகாயிலின் அறிவாற்றல் நாபாலின் துன்மார்க்கத்தை அவன் தலையின் மேல் விழும்படி தேவன் அனுமதித்தார். தாவீது மதியீனமான செயலைச் செய்யாதபடி அவர் தடுத்தார்.

இராபர்ட் ஈ லீ என்னும் தளபதியிடம் நேசக்கூட்டணியைச் சார்ந்த அவருடைய உடன் தளபதிகளில் ஒருவரைப் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. இந்த தலைவர் தளபதி லீயைப் பற்றி அநேகக் கேவலமான குறிப்புகளைக் கூறியிருந்தார். ஆனால் லீ அவர் ஒரு நல்ல வீரர் என்றும் சிறந்த அலுவலர் என்றும் குறிப்பிட்டார். உடனே ஒருவர், “தலைவரே அவர் உங்களைப் பற்றிக் கூறிய மோசமான காரியங்களை அறியீர்களா?” என்று வினவினார். அதற்கு லீ “அது எனக்குத் தெரியும். ஆனால் அவரைப் பற்றிய எனது கருத்துக்களைதான் கேட்டீர்களே தவிர, என்னைப்பற்றிய அவரது கருத்துக்கள் அல்ல” என்று பதிலளித்தார்.

ஆம். மற்றவர்கள் நம்மைப் பற்றி அவதூறு மொழிகளையோ பழிச்சொற்களையோ கூறினாலும் நாம் அவ்வாறு செய்யக்கூடாது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பையே நாம் அவர்களிடம் காட்டவேண்டும். இன்று உங்களுடைய எதிரிகள் அநேக தவறான காரியங்களைப் பரவச்செய்தாலும் அவர்களுக்கு எதிராக நீங்கள் எவ்விதமான பழிவாங்கும் செயல்களிலும் இறங்கக்கூடாது. அப்பகைவனிடம் அன்பாய்ப் பேசி தேவனுடைய கோபம் அவர்கள் மேல் இறங்க இடங்கொடுங்கள். அப்பொழுதுதான் கடினமான சூழல்கள் தேவனுடைய நாமத்துக்கு மகிமையைக் கொண்டுவரும்.


அதிகாலைப் பாடல்:

நீர் எனக்கு வைத்திருப்பதை நான் அறிய உதவும்;
என்னை விடுதலை செய்யும்; அற்புத சாவியை என்னிடம் தாரும்.
அமைதியாய் ஆயத்தமாய்க் காத்திருக்கிறேன்.
உம் சித்தம் செய்ய என் கண்களைத் திறந்தருளும்.
தேவ ஆவியானவரே என்னை ஒளிரச்செய்யும்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை