தேவனைச் சார்ந்திருத்தல்

அதிகாலை வேளையில்…
(செப்டம்பர்-அக்டோபர் 2021)
Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: சங்கீதம் 127:1-2


நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார் (சங்கீதம் 127:2).


இந்த சிறு சங்கீதமானது தேவனை விட்டு சுயபெலத்தை நம்பி செயல்படும் மனிதனின் அறியாமையை மையக் கருத்தாகக் கொண்டுள்ளது. தேவனுடைய வல்லமையைச் சார்ந்திராமல் எடுக்கப்படும் மனித முயற்சிகள் அழிவையே கொண்டுவரும்.

இது உண்மை என்பதை மனித வாழ்வின் சமுதாயம் (வசனம்1), குடிமை (வசனம் 1), வர்த்தகம் (வசனம் 2) மற்றும் குடும்பத்துக்குரியவை (வசனம் 3-5) ஆகிய நான்கு அம்சங்களில் சங்கீதக்காரன் விளக்குகிறார். இவை ஒவ்வொன்றிலும் தேவனைச் சார்ந்திருப்பதன் அவசியத்தை சந்தேகத்திற்கிடமின்றி வலியுறுத்தியுள்ளார்.

கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. ஒரு தனி மனிதனின் வசிப்பிடமோ அல்லது தேவனுடைய ஆலயமோ எதுவாயிருந்தாலும் தேவனுடைய ஆசீர்வாதத்தை நாம் தேடாவிடில் கட்டிடம் கட்டும் வேலையை ஆரம்பிப்பது உபயோகமற்றது. வீட்டைக் கட்டுவதற்கு தேவனுடைய அனுமதி தேவையென்று அவர் கூறாமல், கர்த்தரே அதைக் கட்டவேண்டும் என்று சொல்லுகிறார். நாம் தேவையான காரியங்களைக் கொடுக்கும்பொழுது சமுதாய வாழ்வில் கர்த்தர் கிரியை செய்வார் என்றும் விளக்குகிறார்.

கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா. யேகோவா தேவனே ஒவ்வொரு நகரத்துக்கும் கண்ணுக்குப் புலப்படாத காவற்காரர் என்று குடிமை வாழ்வைக் குறித்து சங்கீதக்காரன் அறிவிக்கிறார். ஒரு காவலாளி நிலையான விழிப்புடன் தனிமையாக செயல்படுவது எந்த பலனையும் தராது. ஆண்டவரும் நம்முடன் இல்லையெனில், நாம் மட்டும் பிரயாசப்படுவது சிறப்பானது அல்ல. எதிரி நெருங்கும்பொழுது அதை எச்சரிக்க காவல் இல்லையென்றால் அது எவ்வளவு மடமைத்தனமோ அதேபோல் நம்முடைய சுய பெலத்தினால் காவல் செய்வதும் மடமையாகும்.

நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.

இங்கு அதிகாலையில் எழுவதற்கு சங்கீதக்காரன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; நமது பிரச்சனைகளைப் பற்றி கவலைப்பட்டு அதிகாலையில் எழுவதும், இரவு வெகுநேரம் கண் விழிப்பதும் எதையும் சாதிக்காது என்பதையே விளக்குகிறார். இதிலும் நாம் தேவனையே முழுவதுமாக சார்ந்திருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

இறுதியாக, சங்கீதக்காரன் தனது கவனத்தை குடும்பத்தை நோக்கித் திருப்புகிறார். இவ்வுலகத்தின் தத்துவத்துக்கு நேரிடையான ஒரு கருத்தைத் தருகிறார். பிள்ளைகள் தனிப்பட்ட சுதந்தரத்துக்குத் தடையாக இருக்கின்றனர் என நினைத்து அநேக சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்படுகின்றனர். ஆனால் சங்கீதக்காரன் குழந்தைகள் தேவனால் அருளப்படும் ஈவு; அவர்களால் வீடு கட்டப்படுகிறது என்கிறார். எபிரெய மொழியில் மகன் (பென்) மற்றும் மகள் (பத்) என்ற இரு சொற்களுமே வீடு என்ற பொருளையுடைய பெத் என்ற சொல்லை அடிப்படையாகக்கொண்டது. வீட்டைக் கட்டுவது இரத்த உறவுகளுடன் தொடர்புடையது; வீடு கட்டுமானத்தைவிட குழந்தைகள் வளர்ப்பே முக்கியமானது.

இரு வாலிப பையன்களைக் கொண்ட ஒரு தம்பதியர் வீட்டுக்கு ஒரு போதகர் சென்றார். அவர் அந்த வீட்டுக்குள் நுழைந்தவுடன் அங்கு ஒரு நட்புச் சூழலை உணர்ந்தார். அந்த வரவேற்பறையில் இருந்த கம்பளம் அதிகக் கந்தலாக இருந்ததையும் அவர் கண்டார். அச்சந்திப்பு முடிந்தவுடன் அந்த வீட்டின் தாயார் அவரிடம், சில நாட்களுக்கு முன் தங்களது அண்டை வீடுகளைச் சேர்ந்த அநேக பையன்கள் தன் வீட்டின் வரவேற்பறையில் பல மணிநேரம் மகிழ்ச்சியுடன் செலவழித்தனர் என்றும் அவர்கள் சிறிது முரட்டுத்தனமாகவும் கூச்சலாகவும் இருந்ததால்தான் அவர்களை வேறு இடத்துக்குச் சென்று விளையாடக் கூறியதாகவும் பகிர்ந்துகொண்டார். ஆனால், அவர்களோ “நாங்கள் எங்கு செல்வோம்?” என்று, கேட்டனர். அங்கிருந்த ஒரு பையனிடம் “உங்கள் வீட்டுக்குச் செல்லலாமே” என்று கேட்டேன். அதற்கு அவன், “வாய்ப்பேயில்லை; எங்கள் வீட்டுக்கு பிள்ளைகளை அழைத்துவர அனுமதி இல்லை” என்று கூறினான். மற்றவர்களும் அவ்வாறே கூறினர். தனது வீடு ஒன்றே அவர்கள் தாராளமாக வந்து செல்லவும், விளையாடி மகிழவும் உகந்த இடம் என்று தான் அறிந்துகொண்டதாகவும், அன்றிலிருந்து அவர்களுக்குத் தங்களது வீடு எப்பொழுதும் திறந்திருக்கும் என்று கூறினார்.

தன்னுடைய பொருட்களை நாசமாக்க அனுமதிப்பதில்லை என்றாலும், அந்த கம்பளம் வெறும் ஒரு பொருள்; ஆனால் பிள்ளைகளோ கடவுளின் சுதந்தரம் என்றும், தனது குடும்பத்தை வளர்க்கவேண்டுமெனில் பிள்ளைகளிடம் அதிகமான அன்பைச் செலுத்த வேண்டும் என்றும், அதற்கு ஆண்டவரைச் சார்ந்திருக்கவேண்டும் என்றும் அத்தாயார் அறிந்திருந்தார்.

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி, சமுதாயம், குடிமை, வணிகம் அல்லது குடும்பம் இவற்றில் வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு தேவனைச் சார்ந்திருத்தல் அவசியமாகும். தேவனுடைய ஒத்தாசையின்றி நீங்கள் வெற்றியுள்ள ஒரு குடும்பத்தை அமைக்க முடியாது. தேவனுடைய பாதுகாப்பு இல்லாமல் உங்களது நகரத்தை காவல் செய்வது தோல்வியையே தரும். உங்களது வியாபாரத்தில் களைப்பில்லாமல் செய்வதற்கு தேவனுடைய பெலன் தேவை. தேவனுடைய ஞானம் இல்லாமல் பிள்ளைகளை அன்புடன் வளர்ப்பதும் இயலாத காரியம். வெற்றிக்கு தேவனை சார்ந்திருக்காமல் செய்யும் அனைத்து மனித உழைப்பும் வீணே. இன்றே உங்களை ஒரு வெற்றி வீரனாக மாற்ற ஆண்டவரைக் கேளுங்கள்.


அதிகாலைப்பாடல்:

தேவன் அஸ்திபாரமாக இல்லையெனில்
எக்கட்டிடமும் புயலில் நிலைநிற்காது;
மதிலாகவும் கோட்டையாகவும் இல்லையெனில்
அதன் அரணும் காவற்கோபுரமும் வீண்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை