ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

மே-ஜுன் 2014

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து நமக்காய் பரிந்துபேசுகிற அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்வருடத்தில் இம்மட்டும் நம்மை வழிநடத்தின ஆண்டவர் இனியும் நம்மை போஷித்து வழிநடத்துவார். நமது பங்காளர்கள் மற்றும் நேயர் குடும்பங்களில் அவர்கள் எழுதிய தேர்வில் தேர்ச்சியடைந்த பிள்ளைகளுக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறோம். அடுத்த கல்வியாண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறவர்களுக்காகவும், மேற்படிப்புக்கு செல்லவிருக்கிற பிள்ளைகளுக்காகவும் அவர்களுடைய பணத் தேவைகளுக்காகவும் பாரத்தோடு ஜெபிக்கிறோம். தேவன் நமது ஜெபத்தைக் கேட்டு பாராளுமன்ற தேர்தல் அமைதலோடும் சமாதானத்தோடும் நடந்துமுடிய கிருபை செய்தபடியால் அவரைத் துதிப்போம். தேசம் முழுவதும் அரசியலில் பலவிதமான மாறுதல்கள் ஏற்பட்டிருக்கிறபடியால் சுவிசேஷம் அறிவிப்பதற்கு எதிரான சூழ்நிலை ஏற்படாத வண்ணம் வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் மார்ச் 30ஆம் தேதியிலிருந்து ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை தோறும் Feba வானொலியில் மத்திய அலைவரிசை MW 1125 Khz-ல் காலை 6:15 மணிக்கு ஒலிபரப்பாகிறது என்பதை ஞாபகப்படுத்துகிறோம். இம் மாற்றத்தை வானொலி நேயர்கள் கருத்திற் கொள்ள அன்பாய் கேட்கிறோம். டாக்டர்.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய “ஆம், இயேசு உங்களை விசாரிக்கிறார்” என்ற புத்தகத்தை பங்காளர்களுக்கு அனுப்பியிருந்தோம். இப்புத்தகம் அநேகருக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளித்தது என பங்காளர்களின் கடிதம் மூலமாக அறிந்து தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.

இவ்விதழில் உயிர்த்தெழுந்த இயேசுவானவர் பரமேறி பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்ததின் முக்கியத்துவத்தைக் குறித்து திரு.பாபிங்டன் அவர்கள் எழுதிய விசேஷித்த செய்தியும், கர்த்தருடைய வீட்டைக் குறித்து சகோதரி.சாந்திபொன்னு அவர்கள் எழுதிய விசேஷித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது. ஜனவரி-பிப்ரவரி இதழில் இடம்பெற்ற “ஐனிக்கேயாள்” பற்றி டாக்டர்.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய சிறப்பு செய்தியின் தொடர்ச்சி இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வழக்கம்போல் வெளிவரும் தொடர் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இச்செய்திகள் யாவும் வாசகர்களுக்கு ஆசீர்வாதமாய் அமைய வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்