சகோதரி.சாந்தி பொன்னு
(மே-ஜுன் 2014)

“அந்த வீடு (தேவனுடைய வீடு) ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது” (1தீமோத். 3:15).

‘பார்வைக்கு ஆச்சரியம் அற்புதம்;
உள்ளேயோ வெறுமையும் குளிர்மையும்,
வல்லமையும் அக்கினியும் அவிந்துபோய்விட்டது;
செத்துப்போன நிலாவைப்போல இன்னும் ஒளிருகிறது’

இன்றைய திருச்சபையைக் குறித்து சமகால ஆங்கிலேய கவிஞர் ஒருவர் எழுதிய ஆங்கில கவிதை இது. இன்று பலருக்கு திருச்சபை என்பது ஒரு சமய சம்பந்தமான ஒருவித ஸ்தாபனமாகிவிட்டது. அல்லது, உறவினரைச் சந்திப்பது, பெண் பார்ப்பது, பதவி வகிப்பது, திறமைகளை வெளிப்படுத்துவது என்று பலவித நிகழ்வுகளுக்காக இன்று சபை கூடுதல் பிரபல்யமாகிவிட்டது.

இன்னொரு பக்கத்தில் பல வெளிநாடுகளில் ஆலயங்கள் சினிமாக் கொட்டகைகளாகவும் விருந்துபசார மண்டபங்களாகவும் மாறிவருகிறதை எல்லோரும் அறிவார்கள். இன்னொரு பக்கத்தில் தங்களது வைராக்கியத்தைக் காட்டுகிற, காதல் செய்கின்ற, ஆண் பெண் உறவுகள் துளிர்விடுகின்ற இடமாகவும், துணிகரமாக எதையும் நடப்பிக்கக்கூடிய இடமாகவும் இன்றைய ஆலயங்களும் சபை கூடிவருதலும் கறைபட்டு வருகிறது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. சபை வளர்ச்சியைக் காட்டி மூப்பர்கள் பணியாளர்கள் கூடுகையில் பதவி பண மோசடிகளும், தர்க்கங்கள் சண்டைகளும் திருச்சபைகளில் இடம் பெறுவது ஏன்? கிறிஸ்துவையே மையமாக வைத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு சபைகள் தமக்குள் போட்டி பொறாமைகளை வளர்ப்பது எப்படி?

இதுவா தேவனுடைய வீடு? இதுவா திருச்சபை?
“அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்” (1 தீமோ.3:16).

முழு சுவிசேஷத்தையும் உள்ளடக்கிய ஒரு அழகிய சுவிசேஷப் பாடல் இது. சுவிசேஷத்தின் இருதயம் என்று சொல்லக்கூடிய ‘மனித அறிவுக்கெட்டாத தெய்வத்துவத்தின் பரம இரகசியம்’ இது. இந்த சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாயிருப்பதே திருச்சபை.

சபை என்பது வெறும் கட்டடம் அல்ல; கூட்டம் கூடுகிற இடமும் அல்ல. சபை என்பது மக்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பரிசுத்தாவியானவராலே மறுபடியும் பிறந்து, கடவுளைப் பிதாவாகவும் மற்ற யாவரையும் சகோதரராகவும் கொண்டு, தேவனோடே ஒரு புதிய உறவுக்குள் பிரவேசித்த பிள்ளைகள் ஒன்று கூடுகின்ற இடம்தான் ‘சபை’. “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்” (அப்.2:47). இதுவே தேவனுடைய வீடு. இந்த மக்கள் ஒன்றுகூடுகையில் தம்மோடு பேசுகின்ற, தமது ஜெபத்தைக் கேட்கின்ற, தாம் ஏறெடுக்கும் ஆராதனையில் மகிழ்ந்திருக்கின்ற தேவ பிரசன்னத்தை அவர்கள் உணருகிறார்கள். ஆகவே, சபை என்பது தேவனுக்குச் சொந்தமானது.

அநேகர் நினைக்கிறபடி சபை என்பது ஏதோ ஒரு மக்கள் கூட்டமோ, பாரம்பரியமான விஷயமோ, தற்கால அமைப்புக்கு ஒவ்வாத ஒன்றோ அல்ல. கறைபடிந்த இந்த உலகிற்கு சத்தியத்தை அறிமுகப்படுத்தவும், ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தவும், இயேசுவே ஆண்டவர் என்று பறைசாற்றவும் ‘சத்தியத்திற்குத் தூணாகவும் ஆதாரமாகவும்’ உலகிலே ஸ்தாபிக்கப்பட்டதுதான் ‘சபை’.

ஆதித் திருச்சபை இரட்சிக்கப்பட்டவர்களுடன்தான் ஆரம்பித்தது. அங்கே உறுதியான ஜெபம், தெய்வ பயம், ஒருமனம், ஐக்கியம் எல்லாவற்றுடனும் ‘மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும்’ போஜனம் பண்ணி, தேவனைத் துதித்து ஜனங்கள் எல்லாரிடத்திலும் தயவும் பெற்றிருந்தனர் (அப்.2:42-47). எண்ணிக்கை கூடினால் பிரச்சனைகளும் அதிகரிக்கும் என்று நாம் சாதாரணமாகச் சொல்லுவதுண்டு. ஆனால், அன்று மூவாயிரம் பேருக்கும் அதிகமாக இருந்தபோதே இந்த ஐக்கியம் தேவமக்கள் மத்தியில் உண்டாயிருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும்.

திருச்சபையின் உருவாக்கம்
‘கிறிஸ்துவின் சரீரமாகிய சபை’ (எபே.4:12) என்று பவுல் குறிப்பிடுவதை நாம் கவனிக்க வேண்டும். ஆக, சபை என்றாலே அது கிறிஸ்துவுடன் சம்பந்தப்பட்டது. அவரே சபையைக் குறித்து முன் அறிவித்தவர். பழைய ஏற்பாட்டிலே பழைய உடன்படிக்கையின் மக்களும், அந்த உடன்படிக்கைக்கென்று தெரிந்துகொள்ளப்பட்டவர்களுமாகிய இஸ்ரவேலர் ‘சபை’ என்று அழைக்கப்பட்டனர். ஆனால், புதிய உடன்படிக்கையில், கிறிஸ்துவின் இரத்தத்தாலே கழுவப்பட்டு மீட்கப்பட்ட மக்கள் கூட்டம் ‘சபை’ என்றானது. இச் சபை உருவாகும் முன்னரே இயேசு இதனை முன்னறிவித்தார். மத்.16:18இல் ‘நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்’ என்றார் இயேசு. ‘நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்’ என்ற பேதுருவின் அறிக்கை இங்கே முக்கியத்துவம் பெற்றது. அடுத்தது, மத்.18:17இல் குற்றம் செய்த சகோதரனின் நிமித்தம் இயேசு சொன்ன போது, அவன் யாருக்கும் செவிகொடாது போனால் ‘அதைச் சபைக்குத் தெரியப்படுத்து’ என்று சபையைக் குறித்து இயேசு குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

இத் திருச்சபை உருவாவதற்கு மூலைக் கல்லானவர் இயேசுகிறிஸ்துவே. இன்று ஸ்தாபனங்கள் உருவாவதுபோல இயேசு சபையை உருவாக்கவில்லை. அநாதி திட்டத்தின்படி, பரலோக ராஜ்யத்தைப் பூலோகில் ஸ்தாபிக்கும்படிக்கு அதற்குச் சாட்சியாக சபையை ஸ்தாபிக்க தேவனாகிய கிறிஸ்து மனிதனாக வேண்டியதிருந்தது. அடிக்கப்பட்டு வெறுக்கப்பட்டு பல பாடுகள்பட்டு, பாளயத்துக்குப் புறம்பே அவர் தள்ளப்படவேண்டியிருந்தது. இழிவான தண்டனையை ஏற்றுக்கொண்டு, முழு உலகத்தின் பாவத்தையும் தாமே சுமந்து, தன் பிதாவின் திருமுகம் மறைக்கப்பட்ட நிலையில் சிலுவையில் தொங்கி மரிக்க வேண்டியிருந்தது. மரித்தோர் ஸ்தானத்திற்கு இறங்கி ஒரு மனிதன் எதையெல்லாம் கடக்கவேண்டுமோ சகல பாதைகளையும் கடக்கவேண்டியதிருந்தது. மூன்றாம் நாள் உயிரோடெழுந்து, 40 நாட்கள் பலருக்குத் தரிசனமாகி, நாற்பதாம் நாள் பரத்துக்கு ஏறவேண்டியிருந்தது. இத்தனைக்கும் இயேசு யார்? வெறும் மனிதனா? அவர் தேவாதி தேவன்.

இயேசு பரத்துக்கு ஏறியதால்தான் பரிசுத்தாவியானவர் உலகிற்குக் கொடுக்கப்பட்டார். சீஷர்கள் பரிசுத்தாவியால் நிரம்பினர் (அப்.2:1-4). பரிசுத்தாவியானவர் கொடுக்கப்பட்ட அன்றுதான் உலகிலே திருச்சபை ஆரம்பமானது. ஆக, சபை உருவாக கிறிஸ்து மரித்து, உயிர்த்து, பரலோகம் செல்லவேண்டியிருந்தது (எபே.1:15-23). இங்கேதான் சபை உருவானது. கிறிஸ்துவின் இரத்தம் விலைக் கிரயமாகக் கொடுக்கப்படுமளவும் சபை என்று ஒன்று இல்லை.

இப்படியாக கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டு உருவான திருச்சபையை இன்று சபை மக்கள் துச்சமாக எண்ணுவது எப்படி? கேட்டால், நாம் அப்படியா நடக்கிறோம் என்று தர்க்கம்தான் எழும்பும். ஆனால் சபையைக் குறித்த தேவனுடைய வார்த்தை, அவருடைய சித்தம், திட்டம் என்பவற்றை ஆராய்ந்தால் இன்று நாம் எங்கே நிற்கிறோம் என்பது விளங்கும். அதற்கும் இடமளிக்காதபடிக்கு சத்துருவானவன் கிறிஸ்தவப் பணிகளை ஏராளமாக முடுக்கிவிட்டு, சபை தேவனோடு ஐக்கியம் கொள்ள நேரமற்றுப்போகின்ற ஒரு தந்திரோபாயத்தை விரித்துவிட்டிருக்கிறான்.

திருச்சபையின் ஒரே நோக்கம்:
அன்று ஆதாமுக்கு ஏற்ற துணையைப் பெற்றுக்கொடுப்பதற்கு தேவனாகிய கர்த்தர் அவனுடைய விலா எலும்பையும் சதையையும் எடுத்தே ஏவாளைப் படைத்தார். மனித வாழ்விலே அவர் நமக்குமுன் வைத்திருக்கின்ற ஒவ்வொரு காட்சியிலும் செயலிலும் உறவிலும் மனிதனுக்குத் தமது அன்பை உறவை வெளிப்படுத்துகிறதை நாம் எவ்வளவுதூரம் உணருகிறோம்? சிலுவையில் தொங்கிய இயேசு மரித்துவிட்டாரா என்று பார்ப்பதற்காக ஒரு போர்வீரன் ஒரு ஈட்டியினாலே அவரது விலாவிலே குத்தினான் என்றும் அதிலிருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது என்றும் வாசிக்கிறோம் (யோவா.19:34). அவர் மரித்துவிட்டார் என்று அதனால் அறியப்பட்டது. இயேசுவின் குத்தப்பட்ட விலா எலும்பிலிருந்துதான் சபைக்கு அஸ்திபாரமும் இடப்பட்டது.

ஆக, சபை என்பது உலகில் கூடுகிற வெறும் கூடுகையோ, நாளை மாறிப் போகிற ஸ்தாபனமோ, தலைமைப் பதவி பறிபோகின்ற உலக நியதிக்கு உட்பட்ட ஒன்றோ அல்ல. கிறிஸ்தவ வாழ்வு என்பது தனிப்பட்டதும் அல்ல. அது ஒரு ஐக்கிய அல்லது கூட்டு வாழ்க்கை. அந்த வகையில் சபை நமக்கு எடுத்துக்காட்டுவது என்ன? மணவாளனாகிய இயேசுவுக்கு (யோவான் 3:29) ஒப்புவிக்கப்படப் போகும் மணவாட்டிதான் திருச்சபை (வெளி. 21:2). ‘ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்காக’ (வெளி.19:7) முழு பிரபஞ்சமுமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

பரிசுத்தாவியானவர் அந்த மணவாட்டி திருச்சபையை இப்பூவுலகில் ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார். ‘…விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது’ (வெளி. 19:9). கிறிஸ்து தமது இரத்தத்தையே சிந்தி ஏற்படுத்திய இந்த அற்புதமான தெய்வீக உறவை வெளிப்படுத்தவேண்டிய திருச்சபையாகிய நாம் இன்று என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

திருச்சபையின் பொறுப்பு:
உலகில் சபை ஸ்தாபிக்கப்படுமுன்னர் இயேசு பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதிருந்தது. அதற்கு முன்னர் சபையின் பொறுப்பு என்ன, அது நிறைவேற்றவேண்டிய பணி என்ன என்பதை சீஷருக்கு விளக்கமாகக் கூறின பின் இயேசு பரத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்” (அப்.1:8). இன்னும், “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்… என்றார்” என்று மத்தேயு எழுதுகிறார் (மத்.28: 19-20). இந்தக் கட்டளையைக் கொடுக்கும் முன்னர் இயேசு கூறிய காரியம் மிக முக்கியமானது. “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்பதே அது.

“ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” (மத்.24:14) என்று இயேசு முன்கூறியதும் இதுதான். அறிவிக்கப்படவேண்டிய சுவி சேஷத்திற்காக இயேசு காயப்பட்டார்; உபத்திரவப்பட்டார், ஜீவனையே கொடுத்தார். இந்த இயேசுவைப் பிரதிபலிக்கவேண்டிய திருச்சபையில் இன்று இந்தக் காயங்கள் காணப்படுகிறதா? ஆதி அப்போஸ்தலர்கள் இந்த சுவிசேஷத்திற்காகவே உபத்திரவப்படுத்தப்பட்டனர், கொல்லப்பட்டனர். பல சீஷர்கள் இரத்த சாட்சிகளாக மரித்தனர். வேதாகம காலத்தின் பின்னரும் அநேகர் விசேஷமாக மிஷனரிமார், பிரசங்கிகள் என்று ஏராளமானவர்கள் சுவிசேஷத்தினிமித்தம் தங்கள் ஜீவனையே இழந்தனர். பலர் தங்கள் விசுவாசத்தினிமித்தம் பல உபத்திரவங்களுக்கு உள்ளானார்கள். இன்று சபை மக்கள் நாம் என்ன செய்கிறோம்?

இன்றைய திருச்சபை
ஆண்டவருடைய இந்த வீட்டில், திருச்சபையில் இன்று இயேசு வெளிப்படுகிறாரா? சுவிசேஷம் சாட்சியாக அறிவிக்கப்படுகிறதா? சபையின் மூலைக்கல்லாகிய இயேசு எங்கே? ஏன் சண்டைகளும், பிரிவினைகளும், வழக்கு வாதங்களும்? சபை கிறிஸ்துவின் சரீரம் என்று முழங்குகின்ற நாமே அந்த சரீரத்தைத் துண்டாடுவது ஏன்? நாம் எல்லாரும் அந்த சரீரத்தின் அவயவங்கள் என்று சொல்லுகின்ற நாம் ஒரு சபை தத்தளிக்கும்போது, காயப்பட்டு நோய் வாய்ப்பட்டு தான் போகும் பாதை தெரியாமல் தேவவார்த்தையைவிட்டு விலகி நிற்கும் போது, சகோதர திருச்சபைகள் புதினம் பார்த்து நகைப்பது ஏன்? ஒரு விரல் நோவெடுத்தால் முழுச் சரீரமும் நோவெடுக்கும் என்று வாய்க்கு வாய் பிரசங்கிக்கிறவர்களும் பிரசங்கத்தைக் கேட்கிறவர்களுமாகிய நாம் உண்மையாகவே அந்த உணர்வோடுதான் நடக்கிறோமா?.

கெத்சமெனேயிலே முகங்குப்புற விழுந்து பிதாவின் சித்தத்தைச் செய்யத் தம்மை ஒப்புக்கொடுத்து ஜெபித்த இயேசுவின் ஜெப ஆவியைக் கொண்டிராத திருச்சபை எப்படி கிறிஸ்துவை வெளிப்படுத்த முடியும்? கிறிஸ்துவின் காயங்களைக் கொண்டிராத திருச்சபை, கிறிஸ்துவை அஸ்திபாரமாகக் கொண்டிருப்பது எப்படி? கிறிஸ்துவை மாத்திரமே சாட்சியாக அறிவிக்காத, அவருக்கென்று வாழாத திருச்சபை ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்திலே பங்குபெறுவது எப்படி? அந்த நோக்கத்தை விட்டு விலகும்போது நாம் சபையாக எந்த நற்காரியத்தைச் செய்தாலும், என்னென்ன பணிகளை நிறைவேற்றினாலும் பலன் என்ன? கடவுளுடைய பார்வையிலே மிகவும் பெறுமதிப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த திருச்சபை ஜீவனற்றுப்போக விடலாமா?

பிதாவின் வீட்டைக் கள்வர் குகையாக்கி விட்டதாக அன்று இயேசு சவுக்கு எடுத்தார்? இன்று தேவனுடைய வீட்டின் நிலை என்ன? நாளொன்று வரும். அன்று சவுக்கு வராது. தேவகோபாக்கினை பற்றி எரியும். அன்று நாம் எங்கிருப்போம் என்பதை இன்று சிந்தித்து, தனியாட்களாக திருச்சபையாக மனந்திரும்பு வோமாக. ஆமென்.