ஐனிக்கேயாள்

மறக்க முடியாத முக்கிய சாதனை
Dr.
உட்ரோ குரோல்
ஜனவரி-பிப்ரவரி 2014 இதழின் தொடர்ச்சி
(மே-ஜுன் 2014)

அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும்
உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும்
நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன் (தீத்து. 1 : 5).

படம்-3

தெய்வ பயம் உள்ள மனைவி

மறுபடியும் தீமோத்தேயுவின் குடும்ப போட்டோ ஆல்பத்தைப் பார்ப்போம். அதில் ஒருபக்கம் முழுவதும் அவனது பெற்றோரின் படங்கள் உள்ளன.

லோவிசாள் பாட்டி இந்தப் போட்டோக்களை எடுத்திருக்கலாம். நான் இதுவரை தீமோத்தேயுவின் தகப்பனைப் பற்றி ஒன்றுமே கூறவில்லையே என்று ஆச்சரியப்படுகிறீர்களா? அதற்கு ஒரு நல்ல காரணம் உண்டு. அப்.16:1 இப்படிக் கூறுகிறது. “அங்கே தீமோத்தேயு என்னும் ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ. அவன் தகப்பன் கிரேக்கன்”. இந்த வசனம் நமக்குத் தெளிவாக ஐனிக்கேயாளின் புருஷன் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தவனல்ல. அவன் ஒரு யூதனும் அல்ல. அவன் ஒரு கிறிஸ்தவனும் அல்ல. அவன் ஒரு அவிசுவாசி. அவன் ஒரு கிரேக்கன். ஒரு புறஜாதியான்.

இதிலிருந்து தீமோத்தேயு புறஜாதியனான தகப்பனுக்கும், யூதக் கிறிஸ்தவப் பெண்மணியான ஐனிக்கேயாளுக்கும் மகனாகப் பிறந்தவன் என்று அறிகிறோம். இது யூதர்களின் கண்ணோட்டம் கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் பார்ப்போமானால் தீமோத்தேயு ஒரு அவிசுவாசியான தகப்பனுக்கும், விசுவாசியான தாய்க்கும் பிறந்தவன். ஐனிக்கேயாள் தன் கணவனைத் தெரிந்தெடுத்தாரா? அல்லது அவரது பெற்றோர் இவர்களது திருமணத்தை ஒழுங்கு செய்தார்களா? என்று தெரியவில்லை. ஆனால் ஐனிக்கேயாள், விசுவாசியல்லாத ஒரு கிரேக்கனைக் காதலித்து, விரும்பித் திருமணம் செய்திருந்தால், பழைய ஏற்பாட்டில் இருந்த ஒரு ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், தடையையும் மீறியவராவார். அதாவது யூதர்கள் எவரும் தங்களைச் சுற்றிலும் இருக்கும் யூதரல்லாத மற்றப் புறஜாதியாரைத் திருமணம் செய்யக்கூடாது. அவர் யூத மக்களுக்குள்ள தேவனுடைய சித்தத்தையும் நிறைவேற்றவில்லை. மேலும் ஐனிக்கேயாள் புதிய ஏற்பாட்டு ஒழுங்கையும் மீறியவராவார். 2கொரி.6:14,15 இவ்வாறு கூறுகிறது: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப் படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது?….. அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?” ஆனால் ஒன்று பவுல் இதை எழுதுவதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே ஐனிக்கேயாளின் திருமணம் நடந்திருந்தது. ஆனால் இந்தக் கருத்து மக்களிடமும், பாரம்பரியமாகச் சமுதாயத்திலும் இருந்துவந்த கருத்துதான் என்பதில் ஐயமில்லை. சமநிலையில்லாத நுகத்தில் ஐனிக்கேயாள் பிணைக்கப்பட்டிருந்தபடியால் இருமடங்கு சக்தியுடன் ஏரை இழுக்க வேண்டியதிருந்தது.

அவரால் என்ன செய்ய முடியும்? அவர் ஒரு கிறிஸ்தவரல்லாத புருஷனுக்கு கிறிஸ்தவ மனைவியாயிருந்தார். அவர் என்ன செய்ய வேண்டும்? ஒரு தெய்வ பக்தியுள்ள தாயாக இருந்தபடியால் அப்போஸ்தலர்கள் போதித்தபடியும், வேதம் கட்டளையிட்டபடியும் செய்தார். அவர் செய்தவை என்ன?

1. புலம்பவில்லை:
அவர் தன்னுடைய சந்தோஷமில்லாத திருமண நிலைக்காக வருந்தவில்லை. புலம்பவில்லை. அவர் கடவுளின் இடத்தில் இருந்தார். எப்படி அந்த இடத்தை அடைந்தார் என்பது காரியமில்லை. ஒரு சிறிய வாசகம் இப்படிக் கூறுகிறது. “என்னால் இன்னொருவருடைய இடத்தை நிரப்ப முடியாது. அவர் என்னுடைய இடத்தை நிரப்பவும் முடியாது. நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய திட்டத்தை பூர்த்தி செய்வதற்காகப் படைக்கப்பட்டோம்”. நம் விருப்பம் போலச் செய்வதற்கு ஐனிக்கேயாளின் காரியத்தில் அவருடைய திருமணம் தேவனுடைய சித்தமல்ல. ஆனால் வாழ்க்கையில் எதிர்மறையான சூழ்நிலையில் இருந்துகொண்டு நலமான, நேர்மறையான காரியங்களைச் செய்வது எப்படி என்று ஐனிக்கேயாள் தெரிந்துகொண்டார்.

2. விலகி, வெளியேறிவிட நினைக்கவில்லை:
ஐனிக்கேயாள் அவிசுவாசியான புருஷனுடன் திருமணம் முடிந்த போதிலும், அந்த உறவை விட்டு விலகி, வெளியேறிவிட நினைக்கவில்லை. தன் புருஷனுக்கு அவர் செய்யவேண்டிய கடமை, பொறுப்பு இவற்றைப்பற்றி பவுல் ஐனிக்கேயாளுக்குத் தனிப்பட்ட உபதேசம் கொடுத்திருக்கலாம். 1கொரி.7:12 முதல் 14 வரை உள்ள வசனங்களில் இந்த உபதேசத்தை எழுதியுள்ளார். ஐனிக்கேயாள் தன் புருஷனை விட்டு விலகிச் சென்றதாகவோ, அப்படி நினைத்ததாகவோ எந்தக் குறிப்பும் இல்லை. அவன் இரட்சிக்கப்படாதவன். அவன் அவளுடைய புருஷன். அவள் அவனுடன் வாழ்ந்து அவனைக் கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்திக்கொள்ள முயற்சிப்பாள்.

3. ஐனிக்கேயாள் ஒரு கிறிஸ்தவ முன்மாதிரி வாழ்க்கை வாழ்ந்தார்:
தன்னுடைய இரட்சிக்கப்படாத கணவருக்கு முன் ஐனிக்கேயாள் ஒரு தெய்வ பக்தியுள்ள வாழ்க்கை வாழ்ந்து காட்டினார். தன் கணவருக்காகத் தனக்கு ஒரு ஆவிக்குரிய பொறுப்பு உண்டென்று உணர்ந்தார். எனவே அவர் தன் புருஷனை நேசித்தார். அவரிடம் பிரியமாகவும், விரும்பத்தக்கவிதத்திலும் நடந்துகொண்டார். அவர் தன் தலை மயிரையும், தன் ஆடைகளையும் எவ்வளவு நேர்த்தியாகச் சீர்ப்படுத்திக்கொள்வாரோ, அதுபோலவே தன் நடத்தையையும் தன் புருஷனிடத்தில் சீர்ப்படுத்திக்கொண்டார். அவருடைய புருஷன் ஆண்டவரிடம் ஒரு போதும் வரமாட்டான் என்ற நிலை இருந்தது. அவன் மனந்திரும்ப மனமற்றிருப்பினும் ஐனிக்கேயாள் அவனுடைய இரட்சிப்புக்காக முயற்சிப்பதென்று தீர்மானித்திருந்தார். அவனுக்காக ஜெபித்தார். தன் கணவரிடம் இயேசுவைக் குறித்து சாட்சி கூறுவார். அவனை ஆண்டவரிடம் கவர்ந்து இழுக்கத்தக்க விதத்தில் அவன் முன்னால் வாழ்ந்தார்.

இன்று நீங்கள் ஐனிக்கேயாளின் சூழ்நிலையில் இருந்தால், திடன் கொள்ளுங்கள். ஐனிக்கேயாள் தன் புருஷனுக்கு ஒரு முன் மாதிரியான சாட்சி வாழ்க்கை வாழ்ந்து காட்டினார். உங்கள் சூழ்நிலையில் 1பேது.3:1 முதல் 6 வசனங்களை வாசித்துப் பாருங்கள்.

உங்கள் புருஷனுக்காக ஜெபித்துக் கொண்டேயிருங்கள். அவனுக்கு முன்பாகப் பிரியமாகவும் இனிமையாகவும் நடந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையிலிருந்து ஆண்டவருடைய தெய்வீக அன்பு வெளிப்பட்டு, புருஷன் மீது பொழியட்டும். உங்கள் உள்ளத்திலிருந்து வெளிப்படும் கிருபைக்கு நீங்கள் சரீரத்துக்கு பூசும் வாசனைத் திரவியங்கள் ஈடாவதில்லை.

படம் 4

உண்மையுள்ள தாய்

ஐனிக்கேயாள், தீமோத்தேயு இவர்களின் குடும்பப் போட்டோ ஆல்பத்தில் நான் சில தனிப்படங்களைக் காண்கிறேன். சிலப் படங்கள் தீமோத்தேயும் மிகச் சிறிய பையனாயிருக்கும் போது எடுக்கப்பட்டவை. மற்றவை அவன் வாலிபனாய் இருக்கும்போது எடுக்கப் பட்டவை. ஒரு படத்தில் ஐனிக்கேயாள் தன் மகனைக் கட்டித் தழுவி “டா-டா” சொல்லிச் செல்லப் போவதுபோல் காணப்படுகிறது.

இந்தப் படங்கள் அனைத்தும் ஐனிக்கேயாள் ஒரு உண்மையுள்ள தாய் என்பதைக் காட்டுகிறது. கடவுள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். குடும்பத் தலைவனான தகப்பன் தன் பிள்ளைகளுக்கு தேவனைப் பற்றிய காரியங்களைக் கற்றுக் கொடுக்கவேண்டும். என்னென்ன செய்ய வேண்டும் என்று விளக்கமாக உபாகமம் 6:4-9 இல் கூறப்பட்டுள்ளது. சில வேளைகளில் இது முடியாத காரியமாகி விடும். கடவுளை விசுவாசியாத, அறியாத அவிசுவாசியான தீமோத்தேயுவின் தகப்பன் தன் மகனுக்கு எப்படிக் கடவுள் காரியங்களைக் கற்றுக் கொடுக்க முடியும்?

ஆனால் இந்தப் படம் பல காரியங்களை வெளிப்படுத்துகிறது. தன் கணவனால் தேவ கட்டளைப்படித் தன் பொறுப்பை நிறைவேற்ற முடியாததால், ஐனிக்கேயாள் தன் மகனைக் கடவுளை அறியாதவனாகவோ, வேத வசனத்தை அறியாதவனாகவோ விட்டுவிடவில்லை. அவர் உடன்தானே ஆவிக்குரிய தந்தையாகவும், தாயாகவும் இருந்து செயல் படத் தீர்மானித்தார். அவர் தன் தாயின் உதவியையும் இதற்குப் பயன்படுத்திக் கொண்டார். பாட்டியும் பேரனுக்கு நல்ல புத்திமதிகள் கூறி நல்வழிப் படுத்தினார்.

புதிய ஏற்பாட்டில் உள்ள வேத வசனங்களில் எல்லோராலும் விரும்பப்படும் வசனம் 2தீமோத்.3:16இல் இருக்கிறது. “வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாய் இருக்கிறது”.

இந்த வசனத்துக்குச் சற்றுமுன் 14ஆம் வசனத்தில் பவுல் தீமோத்தேயுவிடம், “நீ கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறாய்” பவுல் தான் சீக்கிரம் இவ்வுலக வாழ்க்கையை முடிக்கக் கூடும் என்று அறிந்திருந்தான். தீமோத்தேயுவை முழு அறிவும், அனுபவமும் முதிர்ச்சியும், தேர்ச்சியும் உள்ள ஊழியக்காரனாய்த் தனக்குப்பின் வல்லமையாய் ஊழியம் செய்யத் தகுதியடையும்படி பவுல் தனது நேரத்தையும், சக்தியையும் அவனுக்காகச் செலவழித்திருந்தார். எனவே பவுல் தீமோத்தேயுவிடம் “உண்மையுள்ளவனாய் நிலைத்திரு” என்று போதிக்கிறார். ஏனெனில் பவுல் அவனுக்காகச் செலவிட்ட நேரமும் சக்தியும் வீணாகிவிடக் கூடாது.

இப்படிப் பவுல் சொல்வது போல் தோன்றுகிறது. ஆனால் அவர் கூறியதன் கருத்து அதுவல்ல. “நீ இவைகளை யாரிடமிருந்து கற்றுக்கொண்டாய் என்று அறிந்திருக்கிறபடியால்” என்று கூறும்போது, பவுல் அதைக் கற்றுக் கொடுத்தது ‘தான்தான்’ என்று குறிப்பிடவில்லை. அடுத்த வசனத்தை வாசித்துப் பாருங்கள். “கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே, உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்” (வசனம்.15).

தீமோத்தேயு சிறுவனாயிருக்கும்போது, பவுலுக்கு அவனைத் தெரியாது. எனவே அவனுக்கு வேத சத்தியங்களைப் பவுல் கற்றுக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. பின் அப்போஸ்தலனாகிய பவுல் யாரைக் குறிப்பிட்டுப் பேசுகிறார்? சந்தேகமில்லாமல் தீமோத்தேயுவின் தாயாகிய ஐனிக்கேயாளைத்தான் இருக்கும். தன் மகனுக்கு வேத சத்தியங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு, குடும்பத் தலைவனாகிய தன் புருஷனின் பொறுப்பு என்ற போதிலும், அவன் கடவுளை அறியாதவனாகவும், அந்தக் கடமையைச் செய்ய முடியாதவனாக இருந்தாலும் ஐனிக்கேயாளே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள். இவ்வாறு தீமோத்தேயுவை ஆவிக்குரிய வழியில் போதித்துத் திருத்தி வழி நடத்தும் பொறுப்பை ஐனிக்கேயாளே செய்து வந்தார்.

“தெய்வ பயமுள்ள ஒரு தாயைப் பெற்றிருக்கும் எந்த மனிதனும் ஒரு ஏழை அல்ல” என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கூறினார்.

மோசேயின் தாய் யோகபேத், சாமுவேலின் தாய் அன்னாள், யோவான் ஸ்நானனின் தாய் எலிசபெத், தீமோத்தேயுவின் தாய் ஐனிக்கேயாள். இந்த தாய்கள் அனைவரும் தெய்வ பயம் உள்ளவர்கள்.

ஸ்பெயின் தேசத்தில் உள்ள ஒரு பழைய பழமொழி மிகவும் கருத்தாழம் கொண்டது. அது, “ஒரு அவுன்ஸ் அம்மா, ஒரு டன் போதகருக்குச் சமம்”. தீமோத்தேயுவுக்கு ஒரு அவுன்ஸ் அல்ல, ஒரு டன் அம்மா இருந்தார். எனவே அவனுக்கு ஒரு போதகர் தேவைப்படவில்லை.

அன்பான தாய்மார்களே, உங்கள் புருஷன் ஏதோ காரணத்தால் தன் பிள்ளைகளுக்கு வேதத்தைப் போதிக்கும் ஆவிக்குரிய கடமையைச் செய்ய முடியவில்லையானால், உங்கள் பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய பயிற்சியளிப்பதைக் கைவிட்டு விடாதீர்கள். அந்தப் பொறுப்பை அன்புடனும், ஞானத்துடனும் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளில் ஏற்படுத்தும் தெய்வ பயமும், பக்தியும், வேத அறிவும் நீங்கள் அவர்களுக்கு விட்டுப்போகும் ஆஸ்தி, சுதந்திரம் இவற்றை விட மேலானது.

படம்-5

அமைதியான ஊழியக்காரர்

தூசு படிந்த அந்தப் பழைய போட்டோ ஆல்பத்தின் கடைசிப் பக்கத்தில் ஒரு தனிப்படம் இருந்தது. ஒருவர் அதைத் தன் மார்போடு அடிக்கடி அணைத்துப் பிடித்ததால் ஏற்பட்ட சுருக்கங்கள் ஓரத்தில் தெரிந்தன. ஒரு மூலையில் கிழிந்திருந்தது. அந்தப் படத்தின் மேல் கண்ணீர்த் துளிகள் விழுந்து உலர்ந்து போன அடையாளமும் இருந்தது. அந்தப் பக்கத்தில் இந்தப் படம் இந்த நிலையில் இருந்தது. அதில் ஏதாவது சிறப்புத் தன்மை இருக்கவேண்டும்.

உடனே நம் கண்களின் தென்படுவது படத்தில் இருக்கும் ஒரே நபர் – ஐனிக்கேயாள்.

அவர் தனியாக இருந்தார். அவருடைய தாய் லோவிசாள் இல்லை. அவருடைய புருஷன் இல்லை. அவருடைய மகனும் அங்கு இல்லை. அவர் தனியாகத் தன் வீட்டின் வாசலில் நிற்கிறார்.

ஐனிக்கேயாள் சிறுவயது முதலே தன் மகன் தீமோத்தேயுவுக்கு வேதாகமக் கதைகளையும், கடவுளைப் பற்றியும் சொல்லிக் கொடுத்திருந்தாலும் அவனை இரட்சிப்பின் பாதையில் ஆண்டவரிடம் வழிநடத்த அவரால் முடியவில்லை. இந்தப் பெருமை முதல் நற்செய்திப் பயணத்தின்போது பவுலுக்குக் கிடைத்தது. சின்ன ஆசியா வழியாகப் பவுலும், தீமோத்தேயுவும் சென்றபோது இந்த அனுபவம் அவனுக்குக் கிடைத்தது. தீமோத்தேயு விசுவாசத்தின்படி பவுலின் குமாரன். பவுலை முதல் முறையாக ஐனிக்கேயாள் கண்டபோது எவ்வளவு பரவசமடைந்திருப்பார்! தீமோத்தேயுவை இரட்சிப்புக்கு வழிநடத்தத் தேவன் பவுலைப் பயன்படுத்தினார். ஆனால் இரண்டாவது தடவை அது வித்தியாசமானதாக இருந்தது. தேவன் பவுலிடம் தீமோத்தேயுவைத் தன்னுடன் ஊழியத்துக்கு வரும்படி அழைக்கச் செய்தார்.

இரண்டாவது தடவையாகப் பவுல் தெர்பைக்கும், லீஸ்திராவுக்கும் வந்தபோது, தனது இரண்டாவது நற்செய்திப் பயணத்தில் தன்னுடன் வர இளைஞனான ஒரு ஊழியன் வேண்டும் என்று விரும்பினார். அப்போஸ்தலர் 16:2இன் படி லீஸ்திராவிலும், இக்கோனியாவிலும் இருந்த மூப்பர்கள் பவுலுடன் ஊழியத்துக்குச் செல்லப் பொருத்தமான ஊழியன் தீமோத்தேயுதான் என்று முடிவு செய்தார்கள். அவர்கள் அவனுக்கு நற்சாட்சி கொடுத்தார்கள். அவன் அங்குள்ள சபைகளில் நற்பெயர் பெற்றிருந்தான். அங்குள்ள சபைகளில் வாலிபர் குழுவின் தலைவனாக இருந்து நல்ல ஊழியம் செய்திருந்தான். ஆலய ஆராதனைகளில் ஒழுங்காகக் கலந்து கொண்டான். தன் ஆண்டவருக்கு ஒரு நல்ல சாட்சியாகவும் இருந்தான். பவுல் அவனைத் தன்னுடனே கூட கூட்டிக்கொண்டு போக விரும்பினான் என்று மூன்றாம் வசனம் கூறுகிறது. எனவே அவன் தீமோத்தேயுவைத் தன் உடன் ஊழியக்காரனாக ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தான்.

தீமோத்தேயுவை அழைத்துச் செல்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அவ்விஷயத்தில் ‘என்றால்’, ‘ஆனால்’ என்ற வார்த்தைகளுக்கே இடமில்லை. தீமோத்தேயு அந்தப் பதவிக்கு முழுத் தகுதி பெற்றிருந்தான். அவன் தன்னுடன் வரவேண்டும் என்று பவுல் அழைத்தார். சபை மூப்பர்கள் அவனை முழுமனதுடன் பரிந்துரைத்தார்கள். பின் என்ன?!

அங்கே ஐனிக்கேயாள் – தீமோத்தேயுவின் தாய் நின்றார். கணவனை இழந்தவர். ஆண்டவரை அறிந்தவர். தன்னுடைய வாழ்க்கையில் தனக்குத் துணையாக, ஆதரவாகக் கடவுளை அறிந்த ஒரு மனிதனைப் பெற்றிருந்தார். அது தான் அவருடைய ஒரே அன்பு மகன் – தீமோத்தேயு. இப்பொழுது அந்தத் தாயை விட்டுப்பிரிந்து தன்னுடன் அவன் ஊழியத்துக்கு வரவேண்டும் என்று பவுல் அழைக்கிறார். தாயை விட்டுப்பிரிந்து அந்நிய தேசத்திலும் இடங்களிலும் ஆண்டவருக்கு ஊழியம் செய்யச் செல்லவேண்டும். ஐனிக்கேயாள் என்ன செய்வார்? அவருடைய பதிலை அறிய அப்.16:1-3 வரை உள்ள வசனங்களை வாசியுங்கள்.

அங்கே அவருடைய பதிலைக் காணவில்லை. இல்லையா? ஏனென்றால் அது அங்கே இல்லை; அவர் ஆண்டவரின் அமைதியான ஊழியக்காரர். ஐனிக்கேயாள் சாலொமோன் ஞானி தன்னுடைய சங்கீதத்தில் கூறிய ஒரு கருத்தை நினைவுகூர்ந்தார். அதன் உட்கருத்தை உணர்ந்தார்.

“இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்” சங்.127:4. இதன்படி தீமோத்தேயு தனக்குரியவன் அல்ல. அவன் தேவனுக்குச் சொந்தம் என்று உணர்ந்தார். தேவன் அவனை வளர்ப்பதற்காக அவரிடம் ஒப்படைத்திருந்தார். தீமோத்தேயுவை ஐனிக்கேயாளிடம் கொடுத்து, அவனுக்கு உக்கிராணப் பொறுப்பு வகிக்கும்படி தேவன் கூறியதாக உணர்ந்தார். அதன்படி அவனைத் தேவனுடைய பிள்ளையாக வளர்த்தார். ஒருநாள் தேவன் அவனைத் தனக்கு வேண்டும் என்று கேட்பார் என்று அறிந்தார். தீமோத்தேயு அவனது வாழ்க்கை முழுவதும் தேவனுடைய பிள்ளையாக இருக்க வேண்டும் என்று ஐனிக்கேயாள் எப்போதும் ஜெபித்துக் கொண்டிருந்தார். அவன் ஆண்டவருக்கு ஒரு நல்ல ஊழியக்காரனாக ஆக வேண்டும் என்று விரும்பினார். அந்த எண்ணம் நிறைவேறும் நாள் வந்துவிட்டது என்று உணர்ந்தார்.

பவுல் தீமோத்தேயுவைத் தன்னுடன் ஊழியத்துக்கு அனுப்பவேண்டும் என்று கேட்டதற்கு ஐனிக்கேயாள் கொடுத்தது ஒரு பிரதிவினையும் அல்ல. பதிலுரையும் அல்ல. தேவன் நம்முடைய பிள்ளைகளை அழைக்கும்போது, நாம் ஒரு பாதுகாப்பு உணர்ச்சியைக் காட்டக்கூடாது. ஆனால் ஒரு பெருமை உணர்வைக் கொள்ளவேண்டும். ஐனிக்கேயாள் தன்னுடைய மகனை முழு மனதுடன் ஆண்டவருடைய ஊழியத்துக்கென்று அர்ப்பணித்து விட்டார்.

நீங்களும், நானும் அப்படித்தான் செய்ய வேண்டும். அதற்காகவே தேவன் பிள்ளைகளை நமக்குத் தந்தார். அதற்காகவே அவர் அவர்களை இரட்சித்தார். அதற்காகவே அவர் பிள்ளைகள் தேவனை நேசிக்கவும், அவரைச் சேவிக்கவும் பயிற்சியளித்து வளர்க்கும்படி அவர்களை நம்மிடம் ஒப்படைத்தார்.

உங்களை நீங்கள் தேவனுடைய ஊழியத்திற்கென்று தத்தம் செய்வதைப் பார்க்கிலும் பெரிய தியாகம் ஒன்று உண்டு. அதுதான் உங்கள் பிள்ளைகளைத் தேவனுடைய ஊழியத்திற்கென்று ஒப்புக்கொடுத்தல். உங்கள் குமாரர்களையும், குமாரத்திகளையும் ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்து அனுப்புவது, நீங்கள் போவதைவிடக் கடுமையானது. தேவ னுக்கு ஊழியம் செய்வது ஒரு தியாகம் இல்லையா? அது தாழ்மையான அர்ப்பணிப்பு. அதைத்தான் உண்மையான தாய்மார் செய்வார்கள்.

நினைவுகள்:
தனியாக இருக்கும்போது ஒருநாள் ஐனிக்கேயாளின் கண்களில் அவர்களுடைய குடும்பப்போட்டோ ஆல்பம் பட்டது. அதைத் திறந்து பார்ப்பது அவருடைய வாழ்வின் கடந்த கால நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்ப்பதாகும். அதைப் பார்த்தால் அவருடைய வாழ்வில் தேவன் நல்ல, சந்தோஷமான காலங்களையும், துக்கமான காலங்களையும் அனுமதித்திருந்ததை நினைவுகூர முடியும். அதில் இருக்கும் ஒவ்வொரு படமும் தேவன் ஐனிக்கேயாளைச் செய்யச் சொல்லும் ஒவ்வொரு காரியத்தையும் நினைவுபடுத்தும். தேவனுக்கு முன்பாக அவர் ஒரு விசுவாசமுள்ள யூதஸ்திரீ. தாய் லோவிசாளுக்கு அவர் ஒரு மகிழ்ச்சியூட்டும் மகள். தன்னுடைய கணவருக்கு முன் தெய்வ பயமுள்ள, ஒரு பக்தியான மனைவி. தன்னுடைய மகனுக்கு முன்பாக ஒரு உண்மையுள்ள தாயாகக் காணப்பட்டார். அவருடைய ஆலயத்தில் அவர் ஒரு அமைதியான ஊழியக்காரி.

எல்லாக் காலத்திலும் இருந்த பெண்களில் ஒரு சிறந்த பெண்மணிக்கு வாக்களிக்கும் (VOTE) ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், நான் ஒருவேளை இயேசுவின் தாயாகிய மரியாளுக்குப் போடலாம். அல்லது ஏமி கார்மிக்கேல் அம்மையாருக்குப் போடலாம். அல்லது அன்னை தெரஸாவுக்குப் போடலாம். அல்லது எனது சொந்த அம்மாவுக்குப் போடலாம். ஆனால் ஒரு மழைநாளில் என் வீட்டின் மேல் மாடத்தில் உள்ள ஒரு சிறு அறையில் இருக்கும்போது வாக்களிப்பதாய் இருந்தால், நான் ஐனிக்கேயாளுக்குப் போடுவேன். அவர் தேவனுடைய பார்வையில் ஒரு சிறிய மனுஷி. உங்களையும் என்னையும் போன்ற ஒரு சாதாரண நபர்.

சத்தியவசனம்