அநீதியுள்ள நியாயாதிபதி

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(மே-ஜுன் 2014)

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சீஷர்களுக்கு ஜெபம் பண்ணவேண்டிய விதத்தை மத்.6:9-13 வரையிலும் கற்றுக்கொடுத்ததை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும் என்பதைக் குறித்து லூக். 18 ஆம் அதிகாரத்தில் ஒரு உவமையினாலே சொல்லிக் கொடுத்தார். லூக்.18:1-8 வரையுள்ள வசனங்களில் இதை நாம் வாசிக்கிறோம். இந்த உவமையின் நடுமைய கருத்து ‘சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்’ என்பதேயாகும். இந்த உவமை ஒரு கதையின் ரூபத்திலே சொல்லப்பட்டுள்ளது. நமது வீடுகளிலே பிள்ளைகளுக்கு கதை சொல்லும்போது ஒரு பட்டணத்திலே ஒரு ராஜா இருந்தார் என ஆரம்பித்து சொல்வதைப்போல, ஆண்டவராகிய இயேசுவும் கூட இந்த உவமையைச் சொல்லுகிறார்:

“ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள்” (லூக்.18:2,3). இந்த உவமையை நாம் தியானிக்கலாம்.

சோர்ந்து போகாமல் ஜெபியுங்கள்!
“இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்” (லூக்.18:5). அந்த விதவைக்கு என்ன பிரச்சனை என்று திருமறையில் சொல்லப்படவில்லை. எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என முறையிடுகிறாள். அந்த நியாயாதிபதி தேவனுக்கு பயப்படுகிறவனாக இருந்திருந்தால் உண்மையாய் அந்த இடத்திலே நியாயஞ் செய்திருப்பான். அல்லது மனிதர்களை மதிக்கிறவனாக இருந்தால் அந்த காரியத்தில் விதவைக்கு உதவி செய்திருப்பான். அவனுக்கோ வெகுநாள் வரைக்கும் மனதில்லாமல் இருந்தது. அந்த விதவைக்கு செய்யவேண்டிய உதவியோ, நியாயந்தீர்ப்போ செய்யாமல் காலத்தை கடத்திக்கொண்டே இருந்தான். அந்த விதவையும் ஓயாமல் அவனை தொந்தரவுபடுத்துகிறாள். எங்கு சென்றாலும் அவனைத் தொடர்ந்து பிடிக்கிறாள். லூக்.18:4,5 இல் இவ்விதமாக வாசிக்கிறோம்:

“அப்பொழுது அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்”. அந்த நியாயாதிபதியே மனமிரங்கி இவ்விதமாக செயல்படும் வண்ணம், அவள் சோர்ந்து போகாமல் விடாப்பிடியாக தன்னுடைய நியாயத்திற்காக போராடினது போல நாம் காணப்படுகிறோமா என்பதை சிந்தித்துப் பார்ப்போம். ஜெபத்திலே சோர்ந்துவிடக் கூடாது. நாம் எதிர்பார்த்த பதில் வரவில்லையென்றால், நாம் எதிர்பார்க்கிற வேகத்தில் வரவில்லையென்றால் சோர்ந்துவிடுகிறோம். தொடர்ந்து ஜெபிப்பதை நிறுத்திவிடுகிறோம். “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” (கொலோ.4:2). தொடர்ந்து இடைவிடாமல் சோர்ந்துபோகாமல் ஜெபம் பண்ணுங்கள் என்று ஆண்டவர்தாமே உற்சாகப்படுத்துகிறார். ஆண்டவரை தொந்தரவுபடுத்துகிறவண்ணம் ஜெபிக்கவேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. ஆண்டவரிடம் விடாப்பிடியோடு நம்பிக்கையோடு உறுதியான மனப்பான்மையோடு தொடர்ந்து ஜெபம் பண்ணவேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

நிச்சயமாய் உதவி செய்வார் !
இவைகளை சொல்லியபின் இயேசு 6ஆம் வசனத்தில் அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள் என சீஷர்களுக்கு ஒரு அழைப்பைக் கொடுக்கிறார். இன்றைய நாட்களில் கீழ் நீதிமன்றத்திலே நமக்கு சரியான தீர்ப்பு வரவில்லை என்றால் மேல் நீதிமன்றத்திற்கு போய் முறையிடுகிறோம். ஆனால் அந்த விதவை இருந்த பட்டணத்தில் ஒரே ஒரு நியாயாதிபதி இருப்பதைக் காண்கிறோம். அவரைவிட்டால் வேறொரு வழி கிடையாது.

இதேபோல நமக்கும் ஒரேயொரு நியாயாதிபதி இருக்கிறார். அவர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மாத்திரமே. வானத்திலும் பூமியிலும் அவர் ஒருவரே கர்த்தர். அவர் இவ்வுலகத்திலுள்ள நியாயாதிபதியைப் போல அல்ல; அவர் நீதியாய் நியாயஞ் செய்கிற தேவன். அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதை சிந்தித்துப் பாருங்கள். இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ் செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களின் விஷயத்தில் நியாயஞ் செய்யாமலிருப்பாரோ? அநீதியுள்ள நியாயாதிபதியே அவளுடைய அலட்டுதலைச் சகிக்கக்கூடாமல் நியாயஞ் செய்தது உண்மையானால், அவரை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிற உங்களுக்கு நீதியுள்ள நியாயாதிபதி நிச்சயமாய் உதவி செய்வார். சீக்கிரத்தில் உதவி செய்வார்.

விசுவாசத்தைக் காத்துக்கொள்வது!
மூன்றாவது இந்த உவமையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், நம்முடைய விசுவாச ஜீவியத்தில் உறுதியாய் நாம் நிலைத்திருந்து அதை காத்துக்கொள்ள வேண்டும். வசனம் 8இல், “ஆகிலும் மனுஷ குமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்” என வாசிக்கிறோம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அநேகருக்குள்ள விசுவாசம் குறையும். அன்பு தணியும். அநேகருக்கு ஜெபத்தின் மீது உள்ள நம்பிக்கை குறையும். தேவன் பதிலளிப்பார், நியாயந் தீர்ப்பார் என்கிற நம்பிக்கை குறைந்துவிடும் என்பதை சூசகமாக வெளிப்படுத்துகிறார். ஆண்டவர் நியாயஞ் செய்கிறவர், ஜெபத்திற்கு பதில் தருகிறவர், விடுவிக்கிறவர், கைவிடாமல் பலப்படுத்தி தூக்கி எடுக்கிறவர். இப்படி அவரை நம்பி அவரை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிற உங்களுக்கு நிச்சயமாக சீக்கிரத்தில் பதில் தருவார். ஆனாலும் கடைசிக் காலத்திலே அநேகருக்கு விசுவாசம் குறைந்து போகும் என்று வாசிக்கிறோம். கடைசி நாட்களில் கர்த்தர்மேல் நாம் வைத்துள்ள விசுவாசம் குறைந்து போகாத வண்ணம் காக்கப்பட கர்த்தர் கிருபை தருவாராக!

இன்றைய நாட்களில் அநேக கிறிஸ்தவ விசுவாசிகளிடமும் இருக்கிற ஒரு பெலவீனம் என்னவென்றால், ஆண்டவர் என் ஜெபத்தைக் கேட்கமாட்டார், ஊழியருடைய ஜெபத்தைக் கேட்பார். என் ஜெபத்தைக் கேட்கமாட்டார், வரம் பெற்ற அந்த மனிதருடைய ஜெபத்தைக் கேட்பார், ஜெபவீரருடைய ஜெபத்தைக் கேட்பார் என்று எண்ணி விடுகின்றனர். அப்படி அல்ல; என்னுடைய, உங்களுடைய ஜெபத்தை அவர் கேட்க ஆவலாயிருக்கிறார். விசுவாசத்தோடு இடைவிடாமல் போராடி ஜெபி. அவர் நிச்சயமாய் சீக்கிரத்தில் பதிலளிப்பார்.

இந்த உவமையில் நாம் கற்றுக்கொண்ட மூன்று உண்மைகள்:

என்ன நடந்தாலும் சோர்ந்துபோகாமல் ஜெபியுங்கள்.

என்ன நடந்தாலும் நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் நிச்சயமாய் நமக்கு உதவி செய்வார்.

என்ன நடந்தாலும் விசுவாசத்தை இழந்து விடாமல் ஜெபியுங்கள்.

நம்முடைய தேசத்திற்காக ஜெபிப்போம்! நமது குடும்பத்திற்காக ஜெபிப்போம்!!

நாம் விசுவாசத்தோடு ஜெபிப்போமானால் ஆண்டவர் மகத்துவமான விடுதலையைத் தருவார்!!!

சத்தியவசனம்