தேற்றும் நல்ல தேவன்

சகோ.எம்.எஸ்.வசந்தகுமார்
(மே-ஜுன் 2014)

எகிப்தில் நானூறு வருஷங்கள் அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் மக்களை நாற்பது வருஷங்களாக வனாந்தரத்தில் வழிநடத்திச் சென்ற மோசே மரித்த பின்னர் நடைபெறும் சம்பவங்களில் இருந்து யோசுவாவின் புத்தக சரித்திரம் ஆரம்பமாகின்றது. இதனால்தான், “கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு” என்று இப்புத்தகம் ஆரம்பமாகின்றது (யோசு. 1:1). மூலமொழியில் இவ்வாக்கியம், வேதாகமத்தில் இதற்கும் முன் உள்ள உபாகமத்துடன் இப்புத்தகத்தைத் தொடர்புபடுத்தும் விதத்தில் உள்ளது. ஏனெனில், உபாகமப் புத்தகத்தின் தொடர்ச்சியான சரித்திரமாகவே யோசுவாவின் புத்தகம் உள்ளது. உபாகம புத்தகம் மோசேயின் மரணத்தோடு நிறைவு பெறுகிறது (உபா.34:5-8). யோசுவாவின் புத்தகம், மோசேயின் மரணத்தின் பின் நடை பெறும் சம்பவங்களை அறியத்தருகின்றது. இதனால், தேவன் மோசேயின் மூலம் செய்ய ஆரம்பித்த செயலை யோசுவாவின் மூலம் செய்து முடிப்பதை இப்புத்தகத்தில் நாம் பார்க்கலாம். “தேவனுடைய ஊழியர்கள் மரித்தாலும் அவருடைய ஊழியம் தொடர்ந்திடும்” என்பதை இதிலிருந்து அறிந்துகொள்கின்றோம். தேவன் யோசுவாவோடு பேசத் தொடங்கும்போது அவர் 80 வயதுடையவராக இருந்தார். எனவே, தேவன் மனிதர்களுடன் இடைபடுவதற்கு வயது எவ்விதத்திலும் தடையாய் இருப்பதில்லை. அதுமாத்திரமல்ல, 80 வயதுவரை பொறுமையுடன் மோசேக்கு கீழாக இருந்து யோசுவா பணிபுரிந்துள்ளார். இதைப்போலவே, தேவன் நம்மை உயர்த்தும் வரை, அவர் நம்மை எவ்விடத்தில் எத்தகைய ஊழியத்தில் வைத்துள்ளாரோ, அவ்விடத்தில் பொறுமையுடனும் நமக்கு மேலாக இருப்பவர்களுக்குக் கீழ்ப் படிதலுடனும் பணிபுரியவேண்டியதன் அவசியத்தையும் யோசுவாவின் வாழ்வு நமக்கு சுட்டிக் காட்டுகிறது (1பேதுரு 5:5-6).

மோசேயின் மரணத்தின் பின்னர் தேவன் யோசுவாவோடு நேரடியாகப் பேசத் தொடங்குகிறார். “கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி” (யோசு.1:1) என்னும் இவ்வதிகாரத்தின் ஆரம்ப வாக்கியம் இதை அறியத்தருகின்றது. யோசுவா மோசேயின் உதவியாளனாக இருந்ததினாலேயே அவர் “மோசேயின் ஊழியக்காரன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளார். புத்தகத்தின் இறுதியில் மோசேயைப்போலவே யோசுவாவும் “கர்த்தருடைய ஊழியக்காரன்” என்று கனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் (யோசு. 24:29), இதற்கு முன்னுள்ள புத்தகங்களிலும் இவர் மோசேயின் ஊழியக்காரன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளார் (யாத்.24:13, 33:11, எண்.11:28). யோசுவாவின் புத்தகத்தில் இவ்விதமாக அவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதற்கான காரணம், இதற்கு முன் உள்ள புத்தகங்களில் வரும் யோசுவாவே இப்புத்தகத்தில் வருபவர் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கேயாகும்.

எனினும், யோசுவா 1:1இல் “ஊழியக்காரன்” என்னும் சொல் “வேலைக்காரன்” என்னும் அர்த்தத்தில் அல்ல, “உத்தியோகபூர்வமான உதவியாளன்” என்னும் அர்த்தத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. அதாவது, மோசேயோடு இருந்து பணிபுரிந்தவர் என்பதை இச்சொற்பிரயோகம் அறியத்தருகிறது. இதைப் போலவே, எலிசாவைப்பற்றி வேதாகமம் கூறும் போதும் அவரை “எலியாவின் ஊழியக்காரன்” என்று குறிப்பிட்டுள்ளது (1இராஜா.19:21). நாமும் ஒரு ஊழியராக வருவதற்கு முன்பு தேவனுடைய ஊழியர்களாக இருப்பவர்களின் கீழிருந்து பணிபுரிய வேண்டியதன் அவசியத்தை இதிலிருந்து அறிந்துகொள்கின்றோம்.

தேவன் யோசுவாவுடன் நேரடியாகப் பேசத் தொடங்குவதற்கு முன்னர் மோசேயின் மூலமாகவே மக்களோடு பேசி வந்தார். ஆனால் இப்பொழுது மோசே மரணமடைந்துவிட்டதினால், அவருக்குப் பின் இஸ்ரவேல் மக்களின் தலைவனாக நியமிக்கப்பட்டிருந்த (எண். 27: 15-23, உபா.31:1-8) யோசுவாவோடு தேவன் பேசத் தொடங்குகிறார். தேவனுடைய வார்த்தை எழுத்துவடிவம் பெறும்வரை தேவன் இவ்விதமாகத் தாம் தெரிந்துகொண்ட தாசர்கள் மூலம் மக்களோடு பேசி வந்தார் (எபி. 1:1). ஆனால் தேவனுடைய வார்த்தை எழுத்து வடிவம் பெற்று பரிசுத்த வேதாகமமாக உருவாகிய பின்னர், வேதாகமத்தின் மூலமாக மக்களோடு பேசுவதே அவருடைய வழக்கமாய் உள்ளது. தற்காலத்தில் சில சந்தர்ப்பங்களில் தேவன் தீர்க்கதரிசிகள் மூலமாகப் பேசுகின்ற போதிலும் (1கொரி.12:10, 14:3), இவ் விஷயத்தில் நாம் மிகவும் கவனமாயிருக்க வேண்டும். ஏனெனில், தேவன் முன்னறிவித்தபடியே தற்காலத்தில் அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் (மத்.7:15), தேவன் சொல்லாததையெல்லாம் அவர் சொல்வதாகக் கூறுகிறவர்களும் (எரே.14:14, 23:16), பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட வேதப்புரட்டர்களும் இருக்கின்றனர் (1தீமோ.4:1). எனவே, “தேவனுடைய செய்தி” அல்லது “கர்த்தர் பேசுகிறார்” என்னும் அறிமுகத்துடன் அறிவிக்கப்படுகின்ற சகல காரியங்களையும், எழுத்து வடிவம் பெற்றுள்ள தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்த்து (அப்.17:11), வேதாகம சத்தியத்தை முரண்படுத்தாத செய்திகளை மாத்திரமே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனையவற்றை நிராகரித்து விடும்படி வேதாகமம் அறிவுறுத்துகிறது (1தெச.5:20-22). “தேவனுடைய வார்த்தை எது என்பதை அறியத்தரும் வழிகாட்டியாக வேதாகமமே உள்ளது. இதனால், தேவனுடைய ஏனைய வழிநடத்துதல்கள் அனைத்தும் வேதாகமத்தின் வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கவேண்டும்”.அதாவது, வேதாகம சத்தியத்தை முரண்படுத்துகிற எந்தவொரு வழிநடத்துதலையும் நாம் தேவனுடைய வழிநடத்துதலாகக் கருத முடியாது. இதனால்தான், “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” (கலா.1:8) என்று பவுல் குறிப்பிட்டுள்ளார்.

யோசுவாவோடு பேசத் தொடங்கும் தேவன் அவரைத் தேற்றுகிறவராகவும், பெலப்படுத்துகிறவராகவும் இருந்தார். வாக்குத்தத்த தேசத்தை யுத்தத்தின் மூலமே இஸ்ரவேல் மக்கள் சுதந்தரிக்கப் போவதனால், அவர்களுக்குத் தலைமை தாங்கும் யோசுவாவைத் தேவன் பெலப்படுத்த வேண்டியதாய் இருந்தது. இதனால்தான், “பலங்கொண்டு திட மனதாயிரு” என்று தேவன் மூன்று தடவைகள் யோசுவாவுக்குத் தெரிவித்துள்ளார் (யோசு. 1:6, 1:7, 1:9). உண்மையில், யோசுவாவுக்கு அச்சமயம் எத்தகைய ஆறுதலும் தைரியமும் அவசியமாயிருந்ததோ அத்தகைய ஆறுதலையும் தைரியத்தையும் அளிப்பவராகத் தேவன் அவரோடு பேசினார். இதற்கு முன்பும் தேவன் இவ்விதமாக யோசுவாவோடு பேசியிருந்தார் (உபா.31:23). தேவன் மாத்திரமல்ல மோசேயும் அவரைப் பலங்கொண்டு திடமனதாயிருக்கும்படி உற்சாகப்படுத்தியிருந்தார் (உபா.31:7). யோசுவா இஸ்ரவேல் மக்களின் தலைவனாகச் செயற்பட தொடங்கும்போது மக்களும் இதேவிதமாக அவரை தைரியப்படுத்தினார்கள் (யோசு.1:18). யோசுவாவைப் பொறுத்தவரை இத்தகைய தைரியப்படுத்துதலும் உற்சாகமளித்தலும் அவருக்கு அடிக்கடி தேவைப்படுபவைகளாக இருந்துள்ளன. இதனால்தான் தேவனும் மூன்று தடவைகள் அவரைப் பலங்கொண்டு திடமனதாயிருக்கும்படி கூறுகின்றார். உண்மையில், நாம் சோர்வடைந்து அதைரியமடையும் நேரங்களிலெல்லாம் தேவன் இவ்விதமாக நம்மையும் உற்சாகப்படுத்தி தைரியப்படுத்தி தேற்றுகிறவராக இருக்கின்றார். இதை அனுபவரீதியாக அறிந்திருந்த அப்போஸ்தலனாகிய பவுல், “…எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” (2கொரி.1:4) என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையில், “வாழ்வின் போராட்டங்களையும் சவால்களையும் சந்திப்பதற்கு நமக்கு உற்சாகப் படுத்துதலும் தைரியமளித்தலுமே அவசியமாயுள்ளன”. தேவன் இதை செய்பவராக இருக்கின்றார். யோசுவாவைத் தேற்றி உற்சாகப்படுத்தும் தேவன் அவருக்கு மூன்று முக்கிய காரியங்களைச் சுட்டிக் காட்டுகின்றார்.

(அ). மோசேக்கு ஏற்பட்ட மரணத்தைச் சுட்டிக் காட்டுகிறார்
யோசுவாவைத் தேற்றும் தேவன் முதலில் அவருக்கு மோசேக்கு ஏற்பட்ட மரணத்தைச் சுட்டிக்காட்டுகிறார். இதனால்தான், “என் தாசனாகிய மோசே மரித்துப் போனான்” (யோசு.1:2) என்று அவர் கூறுகின்றார். உண்மையில், யோசுவாவோடு தேவன் பேசிய முதல் வாக்கியம் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில், மோசே மரித்துப்போன விஷயம் யோசுவா அறியாததொன்றல்ல. யோசுவா உட்பட இஸ்ரவேல் மக்கள் அனைவரும் முப்பது நாட்களாக மோசேயின் மரணத்துக்காகத் துக்கம் அனுஷ்டித்திருந்தனர் (உபா.34:8). எனவே, மோசே மரித்துவிட்டதை யோசுவா நன்றாக அறிந்திருந்தார். அப்படியிருந்தும், யோசுவா அறிந்திருந்த விஷயத்தையே தேவன் முதலில் அவருக்குச் சுட்டிக் காட்டுகிறார். இதைப் போலவே, தேவன் சில சந்தர்ப்பங்களில் நாம் அறிந்திருக்கும் விஷயத்தையே நமக்கு சுட்டிக்காட்ட வேண்டியதாய் உள்ளது.

இவ்விதமாக நாம் அறிந்திருக்கும் விஷயத்தை தேவன் சுட்டிக்காட்டும்போது, அதன்மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டிய அநேக காரியங்களைத் தேவன் அறியத்தருவது வழக்கம். எனவே, தேவன் நம்மோடு பேசும்போது, நமக்குத் தெரிந்த விஷயத்தைத் தானே அவர் சொல்கின்றார் என்று, நாம் அவர் சொல்வதைக் கேட்காமல் இருந்துவிடக்கூடாது. நமக்கு தெரிந்த விஷயங்களிலும் நாம் அறியாத அநேக உண்மைகள் இருப்பதைத் தேவன் பேசும்போது நாம் அறிந்து கொள்ளுவோம்.

மோசேக்கு ஏற்பட்ட மரணத்தை யோசுவா நன்கு அறிந்திருந்தாலும், தேவன் அதைப் பற்றி யோசுவாவிடம் கூறும்போது, யோசுவா சில உண்மைகளை அறிந்திடக்கூடியவராக இருந்தார். உண்மையில், மோசேயின் மரணம் மானிட வாழ்வின் யதார்த்தத்தை யோசுவாவுக்குச் சுட்டிக்காட்டும்விதத்தில் தேவன் அவரோடு பேசினார். அதாவது, மனிதராகிய நாம் அனைவரும் மரணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதையும் (ஆதி.3:19, பிர.3: 19-20,எபி.9:27), மரித்தோர் மறுபடியும் இவ்வுலகத்திற்கு வருவதில்லை என்பதையும் (2சாமு.12: 15-23, லூக்.16:23-26) தேவன் இதன் மூலம் யோசுவாவுக்குச் சுட்டிக்காட்டுபவராக இருந்தார்.

நாற்பது வருஷங்களாக மோசேயே இஸ்ரவேல் மக்களை வழிநடத்தி வந்தார். இதனால், நீண்டகாலமாக மோசேயின் தலைமைத்துவத்தின் கீழிருந்து செயற்பட்ட யோசுவாவுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும், மோசேயின் மறைவு தங்களுடைய பிரயாணத்தின் முடிவாகவே தென்பட்டது. இதனால்தான், அவர்கள் மோசேயின் மரணத்தோடு எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது என்னும் எண்ணத்தில் முப்பது நாட்களாக அவருடைய மரணத்திற்காக அழுது புலம்பிக் கொண்டிருந்தனர் (உபா.34:8).

மோசேயின் சரீரம் எங்கிருக்கின்றது என்பதை எவரும் அறியாதிருந்ததினால் (உபா. 34:6, யூதா.9), மரித்த மோசேயைத் தேவன் மறுபடியும் கொண்டுவந்து தங்களை வழிநடத்தலாம் என்னும் எண்ணம் சிலருக்கு இருந்தி ருக்கலாம். இதனால்தான் மோசே மரித்து விட்டார், அவர் மறுபடியும் வரமாட்டார் என்பதைத் தேவன் யோசுவாவுக்குச் சுட்டிக் காட்டுகிறார். இதைப்போலவே தற்காலத்திலும் சிலர், மரித்துப்போன தங்களுடைய ஊழியர் அல்லது வேதாகம கால பரிசுத்தவான்கள் மறுபடியும் வந்து தங்களை வழிநடத்துவார்கள் என்னும் நம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால் இவ்விதமான செயல்முறை நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை வேதாகமம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

“மோசேயின் மகிமையான காலம் முடிவடைந் துவிட்டதினால், அதன்பின்னர் இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய உதவியோடு யோசுவாவின் தலைமையில் முன்னோக்கிச் செல்லவேண்டியவர்களாய் இருந்தனர்”. எனவே, மரித்தோர் மறுபடியும் வந்து நம்மை வழிநடத்துவார்கள் என்னும் எண்ணத்துடன் நாம் மரித்தோரை எதிர்பார்த்துக் காத்திருக்காமல், தேவனுடைய வார்த்தை அறிவுறுத்துகின்ற விதத்தில் நமது பணிகளை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும். மோசேயின் மரணத்தைத் தேவன் யோசுவாவுக்குச் சுட்டிக்காட்டும்போது, வாக்குத்தத்த தேசத்திற்குள் செல்வதற்கான காலம் வந்துவிட்டது என்பதையும் அறிவிப்பவராக இருந்தார். உண்மையில், “மோசேயின் மரணத்தோடு இஸ்ரவேல் மக்களுடைய சரித்திரத்தில் ஒரு யுகம் முடிவடைந்து புதியதோர் அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது”. இதனால்தான், மோசே மரித்தபின்பு இஸ்ரவேல் மக்களை வாக்குத்தத்த தேசத்திற்குள் அழைத்துச் செல்லும்படி தேவன் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார்.

மோசேயின் மரணத்திற்கும் முன்பே இப் பணியைச் செய்வதற்காக யோசுவா நியமிக்கப்பட்டிருந்தாலும் (உபா.31:23), மோசே மரிக்கும்வரை இப்பணியைச் செய்வதற்கான காலம் வரவில்லை. இதனால், மோசே மரிக்கும்வரை யோசுவா தன்னுடைய பணியைச் செய்வதற்காகக் காத்திருக்க வேண்டியதாய் இருந்தது. மோசே ஒரு சந்தர்ப்பத்தில் தேவனுடைய அறிவுறுத்தலின் படி செயற்படாமல் போனதினால், அவரால் வாக்குத்தத்த தேசத்திற்குள் செல்ல முடியாது என்றும், அவருடைய மரணத்தின் பின் யோசுவாவே இஸ்ரவேல் மக்களை வாக்குத்தத்த தேசத்திற்குள் அழைத்துச் செல்வார் என்றும் தேவன் அறிவித்திருந்தார் (எண்.20:6-12, உபா.1:37-38, 3:26-28). இதனால், மோசேயின் மரணத்தின் பின்பே இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்த தேசத்திற்குள் செல்லக்கூடி யவர்களாக இருந்தனர்.

ஆனால், மோசேயின் மரணத்தின் பின்பும் யோசுவா இஸ்ரவேல் மக்களை வாக்குத்தத்த தேசத்திற்குள் வழிநடத்திச் செல்லாமல் இருந்ததினால், அவர் இப்பணியைச் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத் தேவன் மோசேயின் மரணத்தைப் பற்றி அவரிடம் கூறுகின்றார். அதுமாத்திரமல்ல, தேவனுடைய வார்த்தையின்படி செயற்படாவிட்டால் ஏற்படும் பாதிப்பையும் மோசேயின் மரணத்தைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தேவன் யோசுவாவுக்கு அறிவிப்பவராக இருந்தார்.

உண்மையில், மோசே தேவனுடைய வார்த்தையின்படி செயற்பட்டிருந்தால் அவரால் வாக்குத்தத்த தேசத்திற்குள் சென்றிருக்க முடியும். ஆனால் அவர் ஒரு சந்தர்ப்பத்தில் அவிசுவாசமுள்ளவராகச் செயற்பட்டதினால் அவரால் வாக்குத்தத்த தேசத்திற்குள் செல்ல முடியாமற் போய்விட்டது (எண்.20:6-12). இதைப்போலவே நாமும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவிசுவாசத்துடன் செய்யும் செயல்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதைத் தடுத்து விடுகின்றன. இதனால் நாம் எப்பொழுதும் தேவனை விசுவாசிப்பவர்களாகவும், அவருடைய வார்த்தைக்கு முழுமையாகக் கீழ்ப்படிபவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம் (சங்.119:1-2).

யோசுவா நன்கு அறிந்திருந்த மோசேயின் மரணத்தைத் தேவன் அவருக்குச் சுட்டிக்காட்டும் போது, தேவன், யோசுவாவின் நிலைமையையும் அவருக்குச் சுட்டிக் காட்டுபவராக இருந்தார். ஏனெனில், மோசேயின் மரணத்தின் பின்னர் இஸ்ரவேல் மக்களை வாக்குத்தத்த தேசத்திற்குள் வழி நடத்திச் செல்லவேண்டியவராக இருந்த யோசுவா அவ்விதமாகச் செய்யாமல், மோசேயின் மரணத்தோடு எல்லாமே முடிந்துவிட்டது என்னும் மனநிலையில் எதுவும் செய்யாமல் பேசாமல் இருந்துவிட்டார். இதனால் அவர் செய்யவேண்டிய பணியைச் சுட்டிக்காட்டுவதற்காகத் தேவன் மோசே மரித்துவிட்டதை அவருக்கு நினைவுபடுத்தினார்:

“என் தாசனாகிய மோசே மரித்துப் போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்” (யோசுவா 1:2).

மோசே மரித்த பின்னர் யோசுவா இஸ்ரவேல் மக்களை வாக்குத்தத்த தேசத்திற்குள் அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஏனெனில், தான் உயிரோடிருக்கும் காலத்திலேயே தேவனுடைய ஆலோசனையின்படி யோசுவாவைத் தனக்குப் பின்னர் இஸ்ரவேல் மக்களின் தலைவனாக இருக்கும்படி நியமித்திருந்த மோசே, தன்னுடைய மரணத்தின் பின்னர் இஸ்ரவேல் மக்களை வாக்குத்தத்த தேசத்திற்குள் அழைத்துச்செல்லும் பொறுப்பு அவருடையது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார் (எண். 27:15-23, உபா.31:1-8). இதனால், மோசே மரித்த பின்னர் யோசுவா இஸ்ரவேல் மக்களை வாக்குத்தத்த தேசத்திற்குள் அழைத்து சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்விதம் செய்யாமல் பேசாமல் இருந்துவிட்டார்.

உண்மையில், இஸ்ரவேல் மக்களுக்குத் தலைமை தாங்கி அவர்களை வாக்குத்தத்த தேசத்திற்குள் அழைத்துச் செல்வதற்குச் சகல தகுதியும் உடையவராகவே யோசுவா இருந்தார். நீண்டகாலமாக மோசேயின் உதவியாளராக இருந்த அவர் (யாத்.24:13, 33;11, எண்.11:28) மோசே எவ்விதமாக செயற்பட்டு வந்தார் என்பதை நன்கு அறிந்திருந்தார். அதுமாத்திரமல்ல, ஒரு சிறந்த யுத்த வீரனாக இருந்த அவர், ஏற்கனவே இஸ்ரவேல் மக்களை யுத்தத்தில் வழிநடத்திச் சென்ற அனுபவம் உடையவராகவும் இருந்தார் (யாத்.17:8-16). மேலும், 38 வருஷங்களாக வாக்குத்தத்த தேசத்தைக் கைப்பற்றலாம் என்னும் நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. ஏனெனில், 38 வருஷங்களுக்கு முன்பு வாக்குத்தத்த தேசத்திற்கு அருகில் வந்த மோசே, அத்தேசத்தைக் கைப்பற்றுவதற்கான யுத்தத் திட்டங்களை வகுப்பதற்காக அனுப்பிய 12 வேவுகாரரில், தேசத்தை இலகுவாகச் சுதந்தரிக்கலாம் என்னும் நம்பிக்கையுடன் நல்ல செய்தி கொண்டுவந்த இருவரில் யோசுவாவும் ஒருவராக இருந்தார் (எண்.13:1-16).

அதன்பின்னர் மோசேயுடன் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த யோசுவா 38 வருஷங்களாக இத்தகைய நம்பிக்கையுடனேயே இருந்தார். அப்படியிருந்தும், மோசே மரித்தபின்னர் யோசுவா தான் செய்ய வேண்டிய பணியைச் செய்யாமல் பேசாமல் இருந்துவிட்டார். இதனால் மோசேயின் மரணத்தைச் சுட்டிக் காட்டும் தேவன் இஸ்ரவேல் மக்களை அழைத்துக்கொண்டு வாக்குத்தத்த தேசத்திற்குள் செல்லும்படி கூறுகிறார்.

உண்மையில், மோசேயின் மரணம் யோசுவாவை அதிகமாகப் பாதித்திருந்தது. இதனால்தான் அவர், தான் செய்யவேண்டிய பணியைச் செய்யாமல் பேசாமல் இருந்துள்ளார். இதைப் போலவே நம்முடைய வாழ்விலும் நம்மை அதிகமாகப் பாதிக்கும் காரியங்கள் நடக்கும்போது, நாம் செய்யவேண்டிய காரியங்களைச் செய்யாமல் இருந்துவிடுகின்றோம். சில நேரங்களில் நம்முடைய ஊழிய அழைப்பையும் கூட மறந்துவிடுகின்றோம். இத்தகைய சந்தர்ப்பங்களில், நாம் தொடர்ந்து செயல்படுவதற்கான பெலத்தையும் தைரியத்தையும் உற்சாகத்தையும் தருபவராக தேவன் இருக்கின்றார் என்பதை, அவர் யோசுவாவோடு பேசும் வார்த்தைகள் அறியத்தருகின்றன.

கடந்த காலத்தில் நம்மை அதிகமாகப் பாதித்த காரியங்களையே நாம் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்மால் முன்னோக்கி செல்ல முடியாமல் போய்விடும். மோசேயின் மரணம் யோசுவாவையும் இஸ்ரவேல் மக்களையும் அதிகமாகப் பாதித்ததினால் அவர்கள் முப்பது நாட்களாக மோசேக்காக துக்கம் அனுஷ்டித்தனர். இதனால், இந்த நீண்டகால துக்கத்தில் அவர்கள் மூழ்கிப் போய் முன்னோக்கிச் செல்லாமல் முடங்கிக் கிடக்கக்கூடாது என்பதற்காகவே அவர்கள் செய்யவேண்டிய காரியத்தை அவர்களுக்குச் சுட்டிக்காட்டும் விதத்தில் தேவன் யோசுவாவோடு பேசினார். இதைப்போலவே இன்றும் நம்மைத் தேற்றும் விதத்தில் தேவன் நம்மோடும் பேசுகிறவராக இருக்கின்றார்.

சத்தியவசனம்