கிறிஸ்து பரமேறினதின் முக்கியத்துவம்

எஸ்.பாபிங்டன்
(மே-ஜுன் 2014)

இயேசுவானவர் பரத்திற்கு ஏறிச்சென்றது, அவருடைய பிறப்பு, பாவமின்மை, மரணம், உயிர்த்தெழுதல், இரண்டாம் வருகை ஆகிய உண்மைகளுடன் சேர்ந்து, “நாங்கள் முழு நிச்சயமாய் நம்புகிற சங்கதிகளில்” (லூக்.1:1) ஒன்று என்று நாம் அறிய வேண்டும். ஏனெனில் இவை எல்லாம் நம்முடைய விசுவாசத்தின் அடிப்படையான சத்தியங்களாகும்.

பரமேறியது உண்மை
இக்காலத்திய தளர்ந்த உபதேசங்களையும், (Liberal teaching) நவீன கொள்கைகளையும் முன் வைக்கும் வேதபண்டிதர்கள் (புரட்டர்கள்!), இயேசுவானவர் பரமண்டலத்திற்கு ஏறிச்சென்றார் என்பது உண்மையாயிருக்க முடியாது. அது வெறுங்கதைதான் என்கிறார்கள். இவர்களுக்கு ஐயோ! இயேசுவானவர் பரமண்டலத்திற்கு ஏறியது, வரலாற்றில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கும் சம்பவம். இது ஏதோ ஒரு மனிதனின் கனவுமல்ல, மக்களின் மனக்கற்பனையும் அல்ல.

அநேக மனிதர் கண்கூடாகக் கண்டு, கருத்தை விளங்கி மிகுந்த சந்தோஷத்துடன் வீடு திரும்பினார்கள் என்று தெரியும் – ஒலிவமலையில்.

எந்த நாளில் நடந்தது என்று தெரியும் – உயிர்த்தெழுந்த நாளிற்கு 40 நாட்கள் கழித்து.

அந்த சம்பவம் நடந்தபோது அங்கிருந்து பார்த்தோர் யார் என்று தெரியும் – ஒரு கூட்டம் சீஷர்கள்.

மேலும் ஆரம்பத்திலிருந்தே திருச்சபை வருடந்தோறும் உயிர்த்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் 6ஆம் வியாழக்கிழமையை பரமேறின திருநாளாக ஆசரித்து வருகிறது. இவ்விதம் கடந்த நூற்றாண்டுகள் எல்லாம் திருச்சபை இச்சம்பவம் கதையல்ல, உண்மை என்று அறிந்து அனுசரித்து வருவதும் கவனிக்கத்தக்கது. ஆகவே, இந்த சத்தியத்தை நாம் நம்பி அதை யாரும் அலட்சியம் செய்யாதவாறு காத்துக்கொள்ள வேண்டும்.

இனி அவர் பரமேறினதின் முக்கியத்தையும் பலன்களையும் பற்றி சிந்திப்போம். இயேசுவானவர் அவருடைய இரட்சிப்பின் திட்டத்தை முடிப்பதற்கு இந்த உலகத்தை விட்டுப் போக வேண்டியது அவசியமாயிருந்தது. அவர் போனது எல்லாராலும் காணப்பட வேண் டியதும், மிக அவசியமானதுமாயிருந்தது.

அது அவசியமாயிருந்தது
உயிர்த்தெழுந்தபின் 40 நாட்கள் அவர் தம் சீஷர்களுடன் கழித்தபோது, தன்னை வெளிப்படுத்துவதும் பின் அவர்களுடைய கண்களிலிருந்து மறைந்துபோவதுமாய் இருந்தார். அவர் இஷ்டப்படி உருவமாய்த் தோன்றவும், உருவமில்லாது மறைந்து போவதுமாய் இருந்தார். தோட்டத்திலே, அறைக்குள்ளே, பாதையிலே, கடலருகிலே, அல்லது மலையின் மேலே அவர் தோன்றி, பின் மறையலானார். ஆனால், அவர் இவ்விதம் இவ்வுலகத்தில் அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு இருப்பது நிரந்தரமானதல்ல என்றும், அவருடைய மகிமைக்குத் திரும்பச்செல்வது அவசியம் என்றும், அதற்கு சரியான நேரம் வந்தது என்றும், அவருடைய சீஷர்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டியிருந்தது.

இதற்காகவே, “அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில்” “அவர்களைவிட்டுப் பிரிந்து, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்” என்றும் “அவர் போகிறபோது, அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில்” என்றும் பரமேறுதலைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இவ்விதம் எல்லா சீஷரும் நன்கு உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கையில் அவர் உயிர்த்தெழுந்த அதே வல்லமையினால் பரலோகத்திற்கு ஏறிச்சென்றார். இதன்மூலம் இது உலகத்தில் அவர் ஆற்றிய தற்காலிகமான பணி முடிந்தது என்றும், நிரந்தரமானதும் இன்னும் அதிக விசேஷமானதுமான பணிபுரிவதற்காக தன் பிதாவிடம் பரலோகத்திற்கு சென்றுவிட்டார் என்றும் விளங்கச்செய்தது.

மட்டுமல்ல, அக்காலத்து மக்களுக்கு இவ்விதம் நேர்மேலே ஏறி மேகங்களுக்குள் சென்றதுதான், ஆண்டவர் பரலோகத்திற்குச் சென்றுவிட்டார் என்ற நிச்சயத்தைக் கொடுத்தது. அவர் பரத்திற்கு ஏறி வானத்திற்கும் மேல் சென்றது பரலோகத்தின் மகிமைக்குத்தான் என்ற நிச்சயம் அவர்களை “மிகுந்த சந்தோஷத்துடன் எருசலேமுக்குத் திரும்பச் செய்தது” (லூக்.24:52) என்றால் மிகையாகாது.

இயேசுவானவரும் இவ்வுலகத்தை விட்டுத் தாம் பரலோகத்திற்குப் போக வேண்டியிருந்ததின் அவசியத்தைச் சீஷர்களிடம் இவ்விதம் விளக்கிக் கூறியுள்ளார்: “நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்” (யோவான் 16:7,8). மேலும், “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்” (அப்.1:8).

அகில இந்திய ஊழியம்
மேலும், இந்த வரலாற்றின் சம்பவம், ஆண்டவர் பாலஸ்தீனா என்ற ஒரு எல்லைக்குள்ளான பிரதேசத்தில் ஊழியம் செய்து முடிந்து, அகில உலகத்தார்க்கும் பணியாற்றுவது ஆரம்பமானது எனலாம். இது நமக்கு விசித்திரமாய்த் தெரிந்தபோதும், அவர் இவ்வுலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது, உண்மையிலேயே முழு உலகத்திற்கு கிடைப்பதற்கே! அதாவது சிலரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது அநேகருக்குத் திரும்பவும் கொடுப்பதற்கே. “நம் கண்களின்று எடுபட்டது, அவர் நம்முடைய இருதயங்களுக்குத் திரும்பவும், அங்கு அவரைக் காணவும்” என்று புனித அகஸ்டின் கூறியுள்ளது மிகவும் பொருத்தமானதாகும். அவர் நம்முடைய மாமிச கண்களுக்கு மறைந்தாலும், நம் இருதயங்களுக்கு அருகில் இருக்கிறார்.

நன்மைகள்
ஆண்டவர் இவ்வுலகத்திலிருந்து பரலோகத்திற்குப் போய்விட்டதினால் பிறந்த நன்மை, நாம் விசுவாசத்தில் வாழும்போது கிடைக்கும் மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் அனுபவிக்க வழிதிறக்கப்பட்டது என்றும் அறியலாம். ஏனெனில், “இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்ம இரட்சிப்பை அடைகிறீர்கள்” (1பேது.1:8,9) என்று பேதுரு கூறியுள்ளார். இந்த வசனம் இன்று நாம் அவரை முகமுகமாய்க் காணாமல் விசுவாசத்தில் நடக்கிறவர்கள் என்று ஞாபகப்படுத்துகிறது. நம் இரட்சகர் இவ்வுலகத்தில் சரீரப்பிரகாரமாகக் காணப்பட்டபொழுது அவருடைய சீஷர்கள் இவ்விதமான விசுவாசத்தைக் காட்ட அவசியமில்லாதிருந்தது. ஆனால் நம்மைப்போல் இப்பொழுது அவரைப் பின்பற்றுவோர் அவரைத் தரிசிக்காமலே அவர்மேல் விசுவாசம் வைப்பதால் ஆசீர்வாதங்கள் பெற்றுக்கொள்ளுகிறோம் என்று மேற்கூறிய வசனம் தெளிவாக்குகிறது.

சிங்காசனத்திற்குத் திரும்பினார்
மேலான இயேசுகிறிஸ்துவானவர் பரலோகத்திற்குத் திரும்பினதற்கு பிரதானமான நோக்கம் என்ன என்று அறிந்திருப்பீர்கள். அவர் பிதாவினுடன் நித்திய நித்தியமான சிங்காசனத்தில் வீற்றிருப்பதற்காகத்தான். “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்” (எபி.12:2) என்று எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவமே, கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதாகும், என்று ஒரு வேதபண்டிதர் கூறியுள்ளார்.

சிங்காசனத்திலிருந்து ஊழியம்
நம் ஆண்டவர் நித்திய சிங்காசனத்தில் வீற்றிருப்பதன் மகத்துவங்களைக் கவனிப்போம்.

(I) ஜெயங்கொண்டவராய் வீற்றிருக்கிறார்:
“நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்” (வெளி 3:21) என்று அவர் வாக்களித்துள்ளார்.

(II) முடிசூட்டப்பட்டவராய் வீற்றிருக்கிறார்:
“இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்” (எபி.2:9) என்று பவுலடிகள் எழுதியுள்ளார். விசுவாசிகளான நாம் இதைக் காண்கிறோம். நம்புகிறோம். இதை அவிசுவாசிகள் இவ்விதம் நம்பாவிட்டாலும், நியாயத் தீர்ப்பின் நாளில் வேதனையுடன் காண்பார்கள்.

(III) மத்தியஸ்தராய் வீற்றிருக்கிறார்:
“தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே” (1தீமோத்.2:5,6). இயேசுகிறிஸ்து இரட்சகரும் மத்தியஸ்தருமாக நிறைவேற்றிய ஊழியத்தின் அடிப்படையில்தான் நாம் ஜெபங்கள் ஏறெடுக்கிறோம் என்பதை அநேக விசுவாசிகள் விளங்காதிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து, “மனுஷனாகிய தேவன்” (God-man) ஆனதால், பரிசுத்தமான தேவனுக்கும், தவறிப்போகும் அவருடைய பிள்ளைகளுக்கும் இடையே பூரணமான மத்தியஸ்தராய் விளங்குகிறார். பாவமற்ற அவருடைய பூரணமான வாழ்க்கையினாலும் நம்முடைய பிரதிநிதியாக மரித்ததால், பரிசுத்த நியமத்தின் (Holy Law) நியாயமான தேவைகளைப் பூர்த்திச்செய்தார்.

(IV) பிரதான ஆசாரியராய் வீற்றிருக்கிறார்:
“பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலது பாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய், பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு” (எபி.8:1.2).

பழங்காலத்தில் பாவநிவாரண பலிகள் தினமும் செலுத்தப்பட்டன. பிராயச்சித்த தினத்தன்று பிரதான ஆசாரியனுக்காகவும் பலி செலுத்தவேண்டும. ஆனால், பாவமில்லாத இயேசுவானவர் நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் ஈடாக ஒரே பலியைச் செலுத்தித்தீர்த்து விட்டார். இவருடைய ஆசாரியத்துவம் நமக்கு ஏற்றதாயிருக்கிறது. நாம் தினந்தோறும், ஐயோ, ஒவ்வொரு மணிநேரமும்கூட பாவம் செய்யக் கூடிய சுபாவம் உள்ளவர்கள். ஆகையால், நாம் ஓட வழி திறந்திருக்கவேண்டும்! “.. இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதார பலி அவரே” (1 யோவா.21,2).

நம் பாவத்தை நாம் மனஸ்தாபத்துடன் அறிக்கையிட்டால், ஆண்டவர் நம்மை மன்னித்து தேவனுடன் ஒப்புரவாக்குவார் (1யோவா.1:9).

(V) நன்மை செய்கிறவராய் வீற்றிருக்கிறார்:
தாவீது சங்.68:16 இல் இதைப்பற்றி கூறியுள்ளதை பவுலடிகளும் எபேசி.4:8 இல் கொடுத்துள்ளார். “தேவரீர் உன்னதத்திற்கு ஏறி … துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்”. இந்த இடத்தில் வரங்கள் என்று குறிப்பிடும்போது, இயேசுவானவர் இன்று மனிதருக்கு அருளும் பரிசுத்த ஆவியானவர், ஆவியானவருடைய வரங்கள், பாவ மன்னிப்பு, இரட்சிப்பு, நித்திய ஜீவன், கிருபை ஊழியர்கள் மற்றும் எல்லா நல்ல ஈவுகளுமே என்று வேதாகமம் தெரிவிக்கிறது.

(VI) வாசஸ்தலம் ஆயத்தம் செய்கிறார்:
“ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்” (யோவா.14:2) என்று இயேசு தாமே கூறியுள்ளார்.

இரண்டாம் வருகை
மற்றொரு காரியத்தையும் இதைப்பற்றிக் கூறும் வேதபகுதியிலிருந்து (அப்.1:9-11) நாம் அறிகிறோம். அதென்னவென்றால், “வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இயேசுவானவர் எப்படி அவர்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனரோ, அப்படியே மறுபடியும் வருவார்” என்று இரண்டு தேவ தூதர்கள் அறிக்கை செய்ததே. இது, அவருடைய திருச்சபையை எடுத்துக்கொள்வதற்கு ஒரு நிமிஷத்திலே ஒரு இமைப்பொழுதிலே (1கொரி.15: 51-52, 1தெச.4:13-17) வரப் போகிறதையல்லாமல், எல்லோரும் காணும்படி “மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதைக்” குறிக்கும் (மத்.24:30, 26:64 வெளி.1:7).

அவர் வரும் நாளைக் கணக்கிடுவதோ, அறிய ஆத்திரப்படுவதோ மதியீனம். ஏனெனில், “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்… குமாரனும் அறியார்” (மத்.13:32) என்று இயேசுவானவரே கூறியுள்ளார். மக்கள் அந்த நாளை எதிர்பார்த்து, கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து, தயாராயிருப்பதற்குத்தான் கூறப்பட்டிருக்கிறது.

சிந்திப்போம்
“அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்” (அப்.5:31). நம் அருமை ஆண்டவர் நமக்காக மனிதனாகி, நம் பாவத்திற்காக சிலுவையில் அறையப்பட்டு, மரித்து அடக்கம்பண்ணப்பட்டு, வெற்றியோடு உயிர்த்தெழுந்து, மனிதருக்கு இரட்சிப்பை சம்பாதித்து முடித்ததால் உன்னதத்தில் உயர்த்தப்பட்டார். மகிமையின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். நமக்காக பல நன்மைகள் செய்து கொண்டிருக்கிறார் என்று பார்த்தோம். அவர் திரித்துவத்தில் ஒருவராக யெகோவா தேவனாய் உச்சிதமான மகிமையும் மாட்சிமையும் உடையவராய் இருப்பதில் சிருஷ்டிகள் பங்கெடுக்க முடியாததுதான். ஆனால் அவர் நமக்கும் தேவனுக்கும் இடையே மத்தியஸ்தராய் சிங்காசனத்தில் வீற்றிருப்பதின் மகிமையில் திருச்சபைக்கும் பங்குண்டு என்று வேதம் கூறுகிறது. ஏனெனில் நாம் அவரில் ஒன்றாயிருக்கிறோம். நாம் அவர் சரீரத்தின் அவயவங்களாயிருக்கிறோம். ஆகையால் அவர் உயர்த்தப்பட்டது நாமும் உயர்த்தப்பட்டதாக அர்த்தப்படுகிறது. நம்மையும் அவருடன் சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்வார். ஏனெனில் திருச்சபையான அவருடைய மணவாட்டி ஒப்பீரின் தங்கத்தினால் ஜோடிக்கப்பட்டு அவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருத்தலே அவர் மகிமைப்படுவதின் முழுமையாகும் என்று வேதம் அறிவிக்கிறது.

மனந்திரும்பி, மறுபிறப்படைந்த விசுவாசியே! இப்போதே மேலே நோக்கி இயேசுவைப்பார்! உன்னுடைய விசுவாசக் கண்கள், அவர் அநேக கிரீடங்கள் அணிந்திருப்பதைக் காணட்டும். ஒருநாள் நீ அவர் இருக்கிற வண்ணமாகவே அவரைத் தரிசிக்கும்போது அவருக்கு ஒப்பாயிருப்பாய் என்று ஞாபகத்தில் வைத்துக்கொள். உனக்கும் கிரீடம் இருக்கும். நீ அவரைப்போல் அவ்வளவு மேன்மையுடையவனாய் இருக்கமாட்டாய், அவ்வளவு தெய்வீகம் நிறைந்தவனாய் இருக்கமாட்டாய். இருந்தபோதிலும் ஓரளவு அவருக்கு உள்ள அதே மரியாதைகளில் நீ பங்குகொள்வாய். அவருக்கு இருக்கும் அதே மகிழ்ச்சியிலும் அதே கனத்திலும் நீயும் ஓரளவு பங்குகொள்வாய்.

சிறிதுகாலம் ஒருவரும் உன்னை அறியாதவனாய், ஏழ்மையின் சோர்வுகளையும், அல்லது உபத்திரவங்களின் வேதனைகளையும் சகிக்க வேண்டியதிருந்தாலும் சகித்து வாழ்வதில் திருப்தியோடு இரு. நாட்கள் கடந்து செல்ல செல்ல ஒரு நாள் நீயும் இயேசுவானவருடன் அரசாட்சி செய்வாய். ஏனெனில் “அவர் தான் தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினவர்” (வெளி 1:6).

தேவபிள்ளைகளுக்குத்தான் எத்தனை அரிய மகிழ்ச்சியின் நம்பிக்கை! இன்று பரலோகத்தின் மன்றத்தில் கிறிஸ்து நம்முடைய மகிமையின் பிரதிநிதியாக வீற்றிருக்கிறார். சீக்கிரத்தில் அவருடன் சேர்ந்து அங்கு நித்தியமாய் அவருடைய மகிமையைத் தரிசிப்பதிலும் அவர் சந்தோஷத்தில் பங்குபெறவும் நம்மைக் கூட்டிச்செல்ல வருவார். அல்லேலூயா. நீ ஒரு தேவபிள்ளையா?

சத்தியவசனம்