ஆசரிப்புக்கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல்

அத்தியாயம்: 15
Dr.
தியோடர்.எச்.எஃப்
(மே-ஜுன் 2014)

தியான நேரத்திற்கு முன்மாதிரி

ஆசரிப்புக் கூடாரத்தைப் பற்றிய வேத சத்தியங்கள் இப்பொழுது நமது உள்ளத்தில் நிறைந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் இன்று நாம் தேவ சமுகத்தை நாடித் தேடி, கிட்டிச் சேருவதில் வேறுபாடு உள்ளதா? என்று சிந்திக்கவேண்டும்.

ஒவ்வொரு விசுவாசியும் தேவனோடு செலவிட வேண்டிய தியான நேரத்தைக் கருத்திற்கொண்டு இதைச் சிந்திக்க வேண்டும். ஒரு விசுவாசியின் வாழ்வில் இந்தத் தியான நேரம், உலக வாழ்வை, உலக சிந்தனைகளை ஒதுக்கி வெளியே தள்ளிவிட்டு, தனிவீட்டு அறைக்குள் அமர்ந்து கதவைப் பூட்டிக் கொண்டு, வேதாகமத்தை வாசித்துத் தியானித்து, பாடித் துதித்து, ஜெபித்து, தன் விண்ணப்பங்களைக் கடவுளின் சமுகத்தில் படைத்து விண்ணப்பிப்பதாகும்.

அநேக மக்களுக்குத் தனியாக தேவனோடு செலவிட நேரம் ஒதுக்குவது மாபெரும் பிரச்சனையாக இருக்கும். நான் உங்களுக்குச் கூறும் ஆலோசனை என்னவென்றால், உங்கள் அன்றாட அலுவல்களுக்கு முறைப்படி நேரம் ஒதுக்குங்கள். அப்போது நீங்கள் தேவனோடு செலவிட தியானநேரமும் கிடைக்கும். அந்த நேரத்தில் ஒவ்வொரு நாளும் தேவனோடு செலவிடுங்கள். தேவனைத் துதியுங்கள், பாவ அறிக்கை செய்யுங்கள், ஆசீர்வாதங்களுக்கு நன்றி கூறுங்கள். விண்ணப்பங்களைச் சமர்ப்பியுங்கள். தினமும் இது உங்கள் வாடிக்கையாகட்டும்.

நீங்கள் தனியாக உங்களுக்கு ஒரு தியான நேரம் ஒதுக்கி ஜெபிப்பது வழக்கமில்லையானால், நான் உங்களுக்குக் கூறும் ஆலோசனை ஒருநாளில் 24 மணிநேரத்தில் 1/4 மணி நேரத்தை ஆண்டவருக்கென்று ஒதுக்குங்கள். அந்த நேரத்தை தேவனுடன் செலவிடுங்கள். இந்த நேரத்தாலும், தியானத்தாலும் நன்மையும், கிருபையும், ஆசீர்வாதமும் பெறுவது நீங்களே. நீங்கள் தனியாக தேவனோடிருந்து கொஞ்சநேரம் அவரோடு செலவிட இந்தப் பதினைந்து நிமிட நேரத்தைச் செலவிடுங்கள். இந்த நேரத்தை ஒதுக்குவதற்காக உங்கள் வேலைத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது வரலாம்.

ஒருநாளில் சராசரியாக நீங்கள் செய்யும் காரியங்களைக் குறித்து வையுங்கள். முக்கியத்துவத்தின் அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்தி எண் கொடுங்கள். அதிகமான நேரத்தை உங்கள் குடும்ப, வீட்டுக் காரியங்களுக்கு ஒதுக்குங்கள். உணவு, உறக்கம் இவை இதில் அடங்கும். பட்டியலில் அடியில் உள்ள முக்கியமில்லாத சில காரியங்களை விலக்கி விட்டு, ஜெபத்தியான நேரம் ஒதுக்குங்கள். இதனால் நீங்கள் செய்யவேண்டும் என்று மற்றவர்கள் நினைக்கும் காரியங்களை நீங்கள் விட்டுவிட வேண்டியது வரும். ஆனால் இந்த மாற்றம் செய்து, தியான நேரம் ஒதுக்கிய நீங்கள் இந்த மாற்றத்தில் உறுதியாயிருக்க வேண்டும்.

ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட உண்மைகள் இந்த தியான நேரத்தில் உங்களுக்கு உதவியாயிருக்கும். உதாரணமாக, இஸ்ரவேலர் ஆசரிப்புக் கூடாரத்தின் கிழக்கு வெளிவாசலுக்குள் நுழைந்ததும் உலகத்தை மறந்துவிடுகிறார்கள். இதுபோலவே தியான நேரத்துக்குள் நுழையும் விசுவாசியும் உலகத்தையும் உலக சிந்தனைகளையும் மறந்துவிட வேண்டும். அங்கு தேவனோடு தனியாக இருப்பதாக உணர வேண்டும். பயபக்தியுடன் தொழவேண்டும். துதிக்க வேண்டும். நன்றி கூறவேண்டும். வேண்டுதல் செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் இந்தத் தியானநேரத்துக்கு வர வசதியான இடத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுது அந்த இடத்தில் தேவனோடு உறவாடும் ஐக்கிய நேரம் ஆசீர்வாதமாக இருக்கும். அது ஒரு சந்தடியில்லாத, அமைதியான இடமாக இருப்பது நல்லது.

இயேசு கூறினார்: “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்” (யோவா. 10:9). விசுவாசி தன் தியான அறைக்குள் நுழையும்போது, அந்தத் தனி இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், செல்வதே தேவன் அவனிடத்தில் எதிர்பார்ப்பதாகும்.

வெளிப்பிராகாரம்.

ஆசரிப்புக் கூடாரத்தினுள் நுழைந்ததும் முதலில் காணப்படுவது வெண்கலப் பலி பீடமாகும். அதில்தான் பாவநிவாரண பலிகள் செலுத்தப்படும். தியான நேரத்தில் விசுவாசி பாவத்துக்காக ஆண்டவர் ஒரே நித்திய பலியைச் செலுத்தியதை நினைவுகூர்ந்து நன்றி கூறவேண்டும். இயேசுவைக் குறித்து எபி.10:12 இவ்வாறு கூறுகிறது. “இவரோ பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து”…

தியான நேரத்தில், விசுவாசி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினால் தான் மீட்கப் பட்டதற்காக தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தபடியால், அவரோடு உலக காரியங்களுக்கு மரித்திருக்கிறார். ரோமர் 6ஆம் அதிகாரத்தில் இந்த சத்தியம் விளக்கப்பட்டிருக்கிறது.

“…நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்” (ரோ.6:6). அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். (6:5). பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? (6:2). எனவே அப்படியே நீங்களும் உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள் (6:11).

ஆசரிப்புக் கூடாரத்தில் நுழைந்த ஒருவர் வெண்கலப் பலிபீடத்தைத் தாண்டி பரிசுத்தஸ்தலம் நோக்கிப் போகும்போது, அவர் அடுத்தபடியாகக் காண்பது தண்ணீர்த் தொட்டி, இந்தத் தண்ணீர்த் தொட்டி சுத்தி கரிப்புக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். எனவே வெண்கலப் பலிபீடத்தண்டை இயேசு நமக்குப் பதிலாக பலியிடப்பட்டதை நினைவு கூர்ந்து ஆண்டவருக்கு நன்றி கூறிய நாம், நம்மைப் பரிசோதிக்க வேண்டும். இரட்சிப்பின் அனுபவம் அடைந்த பின்னர் நம்முடைய வாழ்வில் பாவங்களோ, மீறுதல்களோ ஏற்பட்டதுண்டா என்று பார்த்து அவற்றை அறிக்கையிட வேண்டும். தண்ணீர்த் தொட்டியில் ஆசாரியன் தன் கைகால்களைக் கழுவித் தன்னைச் சுத்திகரித்துக் கொள்வதுபோல், விசுவாசியும் ஆண்டவருடைய சமுகத்தில் செல்லும்முன் தன் குற்றங்குறைகளை அறிக்கையிட்டு மன்னிப்புப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பரிசுத்த ஆவியானவர் வேத வசனங்களின் மூலம் விசுவாசிகள் பாவ அறிக்கை செய்து தங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறார்.

கிறிஸ்துவின் வார்த்தை நமக்கு சுத்தி கரிப்பைத் தருகிறது. யோவா.15:3 “நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்” விசுவாசிகள் கூடி உண்டாக்கப்படும் திருச்சபை “தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,” எபே.5:26. இது சபை பரிசுத்தமாகுதல் குறித்த வசனம். மேலும் சங்.119:9,11 வசனங்களில், “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே” “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்”.

தேவனுடைய வார்த்தை நமக்குத் தருகிற வாக்குத்தத்தம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1யோவா.1:9). நம் நினைவுக்கு வருகிற பாவங்களை நாம் அறிக்கையிட்டபின், ஆண்டவர் நமக்கருளியிருக்கிற பாவ மன்னிப்பின் நிச்சயத்துக்காக நாம் நன்றி கூறவேண்டும். சிலர் தங்கள் பாவங்களைக் கடமைக்கென்று அறிக்கை செய்துவிட்டு, தேவன் அருளும் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளாமலே சென்று விடுகிறார்கள்.

நாம் பாவமன்னிப்புக்குத் தகுதி உள்ளவர்களல்ல. ஆனால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மீட்பின் பணியின் மூலம் நாம் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுகிறோம். இந்த மன்னிப்பு நம்மில் பெறப்பட்டதல்ல. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்காகச் செய்ததன் பலனே இது. எனவே இந்தத் தண்ணீர்த் தொட்டியைக் கண்டதும், நம்முடைய ஜெப வேளையில் ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிடும்போது நம்முடைய பாவத்தை மன்னித்து நம்மைச் சுத்திகரிப்பதற்காக நாம் நன்றி கூறுகிறோம்.

பரிசுத்த ஸ்தலம்

ஆசரிப்புக் கூடாரத்தில், ஆசாரியன் தண்ணீர்த் தொட்டியில் தன்னைச் சுத்திகரித்துக் கொண்டபின் பரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசிக்கிறான். அங்கே அவன் ஆண்டவருடைய சந்நிதியில் அடைக்கப்பட்டிருக்கிறான். அதுபோலவே நம்முடைய ஜெப வேளையில் நாம் ஆண்டவருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருக்கிறோம். நாம் ஆண்டவர் இயேசுவின் மூலம் நம்மை மீட்டுக் கொண்டதற்காக நன்றி கூறினோம். நாம் செய்திருக்கும் அன்றாட பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்புப் பெற்றோம். ஆசரிப்புக் கூடாரத்தினுள் பிரவேசிக்கும் வெளிப்பிராகார கிழக்கு வாசலில் நுழையும் போதே உலகத்தைப் பின்னால் தள்ளி அடைத்துவிட்டோம். இப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியன் தேவனுக்கு முன்பாக அடைக்கப்பட்டிருப்பது போல இந்த இரண்டு அம்சங்களும் இன்றும் பொருத்தமானவை.

நாம் ஜெப அறைக்குள் நுழையுமுன் உலகத்தைப் பின்னால் தள்ளி அடைத்து விடுகிறோம். தேவனோடு தனிமையில் அமைதியாக நேரத்தைக் கழிக்க வந்துள்ளோம். இப்பொழுது நாம் தேவனோடு தனித்திருக்கும்படி அடைத்து வைக்கப்பட்டுள்ளோம். உலகத்தை மறந்து, தேவனோடு தனித்திருந்து தேவனை ஆராதிப்பதில் இருக்கும் ஆனந்தத்தை, இந்த இன்ப அனுபவத்தை வேறு எங்கும், எதிலும் பெற முடியாது.

மொழியாக்கம்: Mr.G.வில்சன்

சத்தியவசனம்