திருமதி ஹேமா ஹென்றி
(ஜனவரி-பிப்ரவரி 2015)

அவ்வப்பொழுது குறுக்குச் சாலைகளில் நின்று எந்த வழியாகப் போவது எனும் தீர்மானத்தை எடுப்பதற்குத் திகைக்கிறோமல்லவா? சிறு தீர்மானங்கள், பெரும் தீர்மானங்கள், நொடிப்பொழுதுத் தீர்மானங்கள்: இவற்றின் கூட்டல்தான் வாழ்க்கை. கைதேர்ந்தவர்கள் சிலர், இதைக்குறித்து அலசி ஆராய்ந்து, சரியான தீர்மானங்கள் எடுப்பதற்கான ஆலோசனைகளை நமக்கு எழுதி வைத்துள்ளனர். சரித்திரத்தையும் நித்தியத்தையும் பாதித்த அல்லது தாக்கத்தை ஏற்படுத்திய மிக முக்கியமான தீர்மானத்தை – தன் வாழ்க்கையிலே எடுத்த பக்தி விநயமுள்ள மனிதனான யோசேப்பின் ஆச்சரியமான ஞானத்தையும் புத்திக் கூர்மையையும் மத்தேயு முதலாம் அத்தியாயம் எடுத்துரைக்கிறது. தீர்மானங்கள் எடுப்பதைக் குறித்த நவீன புத்தகங்களின் பயிற்சி அவருக்குக் கிடையாது.

தனக்கு முன்பாக இருந்த பல தெரிந்தெடுப்புகளை எடைபோட்டு படிப்படியாக சரியான தீர்மானத்திற்கு வந்துசேர்ந்த விவரங்களை மத்.1:18-25இல் வாசிக்கலாம். சரியான தீர்மானம் எடுக்கும் அம்சங்களை அடுத்தடுத்து வரும் “மனம்” (வச.19), “சிந்தனை” (வச. 20), “செயல்” (வச.24) என்னும் செயல்பாட்டு வினைகளை அறியத் தருகின்றன. பின்வரும் காரணங்களால் அவரது இறுதித் தீர்மானம் சாலச்சிறந்ததாயிருந்தது:

1. மனம்

“.. யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்” (வச.19). இந்த வாலிபன், தான் அனுபவித்த நியாயமான கோபத்தையும் ஏமாற்றத்தின் விரக்தியையும் நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். கசப்பு அவரைக் கலக்கமடையச் செய்திருக்கலாம். ஆயினும் இவை எதுவுமே கோபாக்கினையை வெளிப்படுத்துவதற்கு அவர் இடமளிக்கவேயில்லை. நம்மில் பலரும், நல்ல கிறிஸ்தவர்களாக பிறரைப் புண்படுத்தும் நோக்கம் அற்றவர்கள்தான். ஆனால் நமது விருப்பங்கள் பாதிக்கப்படுமானால், சுயம் அடி வாங்குமானால் நடப்பதே வேறுதான்! அங்கு மிங்கும் அலைந்து நியாயத்தைத் தேடுகிறோம், நமக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை, கூரை மேலிருந்து கூவுகிறோம்.

தனக்குக் கிடைத்த சான்றுகள் மூலம் தான் ஏமாற்றப் பட்டதை உறுதிபடுத்திக்கொண்ட இந்த வாலிபனுக்குப் பழிவாங்கும் நோக்கம் கொஞ்சமும் இல்லை. இவ்வாறான தெய்வ பக்தியுள்ள அவனது இதயம், அன்பின் இதயம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ‘அன்போ சகல பாவங்களையும் மூடும்’ (நீதி.10:12). உண்மை அன்பின் இந்த உள்ளான மனப்பான்மையே அவரது தீர்மானத்தின் அடிப்படை.

நாம் சரியான தீர்மானமெடுக்க வேண்டுமானால், நமக்குள் சரியான நோக்கமிருக்க வேண்டும். தேவனைக் கனப்படுத்துவதும், அன்பு செலுத்துவதும் அடிப்படை நோக்கமாயிருக்குமானால், பிறரது உணர்வுகளை மதித்து அவர்களை மரியாதையோடு நடத்த விரும்புவோமானால் சரியான தீர்மானமெடுப்பதில் பாதி தூரம் வந்துவிட்டோம்.

2. சிந்தனை

தீர்மானமெடுப்பதில் அடுத்த முக்கியமான படி சிந்திக்க நேரமெடுத்தல்: “அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில்,…” (வச.20). யோசேப்பின் உடனடி எதிர்ச்செயல் மரியாளை ஊராருக்குத் தெரியாமல் தள்ளிவிடவேண்டுமென்பதுதான். இது தேவபக்தியுள்ள முடிவாயிருந்தாலும், அவர் எடுத்த தீர்மானம், தேவன் விரும்பிய தீர்மானமல்ல. இந்தக் காரியத்தை அசைபோட்டுக்கொண்டே அவர் நித்திரையிலிருந்தபோதுதான் தேவதூதன் தோன்றினான்!

அன்றைய சாயங்காலமே விவாகரத்துக்கான முயற்சிகளில் தீவிரமாக முனைந்திருப்பாரேயாகில் எத்தனை சிக்கல் ஏற்பட்டிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நேர்மையான நோக்கம் இருந்தால் மட்டும் போதாது. அதைத் தொடர்ந்து சிந்திக்க நேரமெடுக்க வேண்டும். கிடைத்த விவரங்களை அலசிப் பார்த்து தேவனுடைய வழிநடத்துதலுக்காகவும் இடைபடுதலுக்காகவும் ஜெபித்து அவருடைய நடத்துதலையும் வழிகாட்டுதலையும் நாம் உணர்ந்துகொள்ள நேரமெடுக்க வேண்டும். எத்தனைமுறை அவசரத் தீர்மானமெடுத்த சந்தர்ப்பங்களுக்காக அங்கலாய்த்திருக்கின்றோம். இது முக்கியமாகத் திருமணத் தீர்மானங்களில், அதுவும் பழமையான நமது கலாச்சாரத்தில் நடக்கிறது.

ஒரு மாப்பிள்ளை பெண்பார்க்கச் சென்றதும், அக்குடும்பத்தினர் அனைவரும் உடனடி பதிலை எதிர்பார்க்கின்றனர். மாப்பிள்ளை வீட்டாரோ, “நாங்கள் யோசித்து பின்னர் தொடர்புகொள்ளுகிறோம்” என்று சொல்லி விட்டால் போதும் உடனேயே, “சரிதான், விருப்பம் இல்லைப் போலும்” என்று ஊகித்துவிடுகிறோம். மாறாக, அவர்கள் உடனடியாக முடிக்க ஆயத்தமாயிருந்தாலும், “பரவாயில்லை, நீங்கள் சாவகாசமாக யோசித்து முடிவைத் தெரிவிக்கலாம்” என்று தளர்த்திக்கொடுப்பது நல்லது. ஆவலோடு காத்திருக்கும் குடும்பத்தைத் திருப்தி செய்வதற்காக மாப்பிள்ளையோ அல்லது பெண்ணோ “சரி” என தலையசைத்து விடலாம். இதனால் பல இடர்பாடுகள் தொடரும்.

எனவே யோசேப்பு காட்டிய முன்மாதிரியைப் போல, காரியத்தைக் குறித்து சிந்திக்க நேரமெடுப்பதால் எத்தனையோ சிக்கல்களை சுலபமாகத் தவிர்த்துக் கொள்ளலாம்.

3. செயல்பாடு

“…கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;” (வச.24). தெய்வீக வெளிப்பாட்டினாலே யோசேப்பின் திட்டம் சரிசெய்யப்பட வேண்டியதாயிருந்தது. அவருக்கு இதில் எவ்விதப் பிரச்சனையுமில்லை. சொல்லப்போனால் அவர் கண்விழித்த மறுகணமே அதைச் செய்தார். இந்த செயற்பாடு அவரது சிந்தனைக்குப் பின்னர்; உடனடி செயற்பாடானது. சரியான தீர்மானம் சரியான முடிவில் நம்மைக்கொண்டுபோய் நிறுத்திவிடக் கூடியது. இந்நிலையில் யோசேப்பு உறுதியாக நின்றார். சுற்றத்தாரின் குழப்பமான, மாறுபாடான சத்தங்களுக்குச் செவியடைத்து தனது திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரமாக இறங்கினார்.

தீர்மானமெடுக்கவேண்டிய ஒரு சூழ்நிலையில் விழுந்து கிடந்து ஜெபிக்கின்றோம், வேதத்தில் தேடித்தேடி வாசிக்கின்றோம். ஆனால் ஒரே உள்நோக்கோடு நமது மனதில் நாம் ஏற்கெனவே தீர்மானித்ததற்குப் பரலோகம் ஒப்புதல் அளிக்க வேண்டும், நாம் செய்ய ஆசைப்படுவதற்கு ஆண்டவர், “ஆமென்” சொல்ல வேண்டுமென்று தவியாய்த் தவிக்கிறோம்…! இதுதான் யோசேப்புக்கும் நமக்குமுள்ள வேறுபாடு. தனது சிந்தனைகளின் அடிப்படையில் யோசேப்பு ஒரு திட்டத்தைத் தீட்டியிருந்தாலும் அதை முற்றிலும் மாற்றி அமைப்பதற்கு ஆண்டவரிடம் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தார். எனக்குத் தெரிந்த ஒரு சகோதரியின் மகளுக்குத் திருமணப் பருவத்தில் வரன்கள் வரும்போது, ஒரு குறிப்பிட்ட வரனைப் பிடிக்காவிட்டால், “ஜெபித்துச் சொல்லுகிறேன்” என்பாள். இதனை நாளடைவில் சுற்றத்தார், “ஜெபித்துச் சொல்கிறேன்” என்றால் “குப்பைத் தொட்டியில் போடுங்கள்” என்பதை நாகரீகமாக (நடையில்) கூறுகின்றாள் என்று புரிந்துகொண்டனர்.

ஜெபத்தோடு நாம் எடுக்கும் தீர்மானம், நாம் பெற்ற வழிநடத்துதலின்படி எடுக்கப்பட்ட தீர்மானமாக செயல்படுத்தப்பட்டால்தான் அது தேவ வழிநடத்துதலாக அமையும். வாகனங்கள் ஆபத்தின்றி ஒன்றையொன்று கடந்துசெல்லும் சாலைச் சந்திப்புகளில் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை விளக்குகள் மாறி மாறி ஒளிரும். இங்கே நமது பாதுகாப்பு நாம் எடுக்கும் தீர்மானத்தில்தான் தங்கியிருக்கின்றது. வாழ்க்கைப் பாதையில் எப்பக்கம் திரும்பவேண்டுமென்று தீர்மானிக்கும் வேளையில் யோசேப்பின் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளை நினைத்துக் கொள்ளுங்கள்.

நில், நில்
உங்கள் நோக்கத்தைச்
சரிபாருங்கள்.

கவனி
திறந்த மனதுடனே கிடைத்த விவரங்களை
அலசி நிதானித்துப் பாருங்கள்.

செல்
கொடுக்கப்பட்ட வழிநடத்துதலின்படி
உறுதியாய் முன்செல்லுங்கள்.

நம் வாழ்வில் ஒருநாளும் இந்த விளக்குகளைக் கவனியாமல் செல்லாதிருப்போமாக!