சகோ.எம்.எஸ்.வசந்தகுமார்
(மே-ஜுன் 2015)

ஆனந்தமான வாழ்வுக்கு அவசியமான வழிகளைப் பற்றி முதலாம் சங்கீதம் நமக்கு அறியத்தருகிறது. இதற்கு எதிரானதும், நாம் செல்லக்கூடாததுமான “இனிமையற்ற இவ்வுலகின் வழியைப்” பற்றியும் இச்சங்கீதம் கூறுகிறது. நாம் இவ்வழியில் சென்றால் மெய்யான சந்தோஷத்தை அறியாதவர்களாகவே இருப்போம்.

முதலாம் சங்கீதம் மட்டுமல்ல, முழு வேதாகமமும் இவ்விரு வழிகளைப் பற்றியும் அறியத்தருகின்றது (உபா.30:19, எரே.21:28, மத்.7:13-14). உண்மையில், இவ்விரு வழிகளும் ஒன்றுக்கொன்று முரணான தன்மையையும், திசையையும், இலக்கையும் கொண்டுள்ளன. இதனால் மனிதர்களாகிய நாம் எந்தப் பாதையைத் தெரிவுசெய்து எவ்வழியில் செல்லவேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியமானதாக உள்ளது. நாம் சரியான வழியைத் தெரிந்தெடுத்து அதில் செல்லும்போது மட்டுமே இவ்வுலக வாழ்வு ஆனந்தமாகவும், முடிவு பரலோகமாகவும் இருக்கும். ஆனால் தவறான வழியில் செல்லும் மக்கள் இவ்வுலக வாழ்வில் மெய்யான சந்தோஷத்தை அறியாதவர்களாக இருப்பதோடு, முடிவில் நித்திய அழிவையே சந்திக்கின்றனர். இதனால், இவ்விரு வழிகளில் நாம் எவ்வழியில் செல்கின்றோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்கும்படி முதலாம் சங்கீதம் கூறுகிறது.

தற்காலத்தில் கிறிஸ்தவர்கள்கூட தாங்கள் எவ்வழியில் சென்றாலும் பரவாயில்லை, தேவன் தங்களை ஆசீர்வதிக்கிறவராக இருக்கின்றார் என்று எண்ணுகின்றனர். ஆனால் இது தவறான ஒரு கருத்தாகும். தேவ ஆசீர்வாதத்தைப் பெற்று இவ்வுலகில் நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு குறிப்பிட்டவிதமான ஒரு வழியை அவர் வைத்துள்ளார். இதனால்தான் வேதாகமமும், நாம் செல்ல வேண்டிய வழியையும், செல்லக்கூடாத வழியையும் சுட்டிக்காட்டுகிறது. இவற்றில், நாம் செல்லக்கூடாத இனிமையற்ற இவ்வுலகின் வழியைப்பற்றி முதலாம் சங்கீதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,” (சங்.1:1).

இனிமையற்ற இவ்வுலக வழியைப்பற்றிய மூன்று காரியங்கள் இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை நாம் செய்யக்கூடாத காரியங்களாக உள்ளன. எனினும், மூன்று விதமான பாவிகளைப்பற்றி இவ்வசனம் கூறவில்லை. அதாவது, “துன்மார்க்கர்”, “பாவிகள்”, “பரியாசக்காரர்” என்று மூன்றுவிதமான பாவிகள் இருப்பதாக நாம் கருதலாகாது. சங்கீதங்கள் கவிதை நடையில் எழுதப்பட்டுள்ளமையால், எபிரெயக் கவிதைகளில் காணப்படும் சிறப்பம்சமான “சமத்தன்மையின்படி” ஒரு விஷயமே இங்கு மூன்றுவிதமாக விளக்கப்பட்டுள்ளது.

எனவே, தேவனை அறியாத மக்களே இங்கு துன்மார்க்கராகவும், பாவிகளாகவும், பரியாசக்காரராகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். உண்மையில், நாம் செல்லக்கூடாத இனிமையற்ற இவ்வுலகின் வழி எத்தகையது என்பதை நமக்குக் காண்பிப்பதற்காக தேவனை அறியாத மக்களும் அவர்களுடைய வாழ்க்கை முறையும் மூன்றுவிதமாக இவ்வசனத்தில் விளக்கப்பட்டுள்ளது. இவ்வத்தியாயத்தில், இம்மூன்று காரியங்களும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

(அ). துன்மார்க்கருடைய ஆலோசனை

இவ்வுலக வாழ்வில் சந்தோஷமாக வாழ்வதற்கு நாம் “துன்மார்க்கருடைய ஆலோசனையின்படி நடக்கக்கூடாது” என்று முதலாம் வசனத்தின் முதல் வாக்கியம் கூறுகிறது. துன்மார்க்கர் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள எபிரெயச் சொல், “தவறு செய்தல்” “பிழையாக இருத்தல்” என்னும் அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அக்கால நீதிமன்றத்தோடு தொடர்புடைய இச்சொல், “குற்றவாளியாக இருத்தல்” என்னும் அர்த்தமுடையது. புதிய தமிழ் வேதாகமத்தில் இச்சொல், “பொல்லாதவன்” அல்லது “தீயவன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், சமுதாயத்தில் குற்றமாகக் கருதப்படும் காரியங்களைச் செய்கிறவர்களே பழைய ஏற்பாட்டில் துன்மார்க்கர் என்னும் பெயரைப் பெற்றுள்ளனர். இவர்கள் நேர்மையற்றவர்களாகவும், பிழையான வழிகளில், அதாவது நாட்டு சட்டத்தின்படி குற்றமாகக் கருதப்படும் வழிகளில் பணம் சம்பாதிக்கவும் முன்னேற்றமடையவும் முற்படுகிறவர்களாகவும், மற்றவர்களை ஒடுக்குகிறவர்களாகவும் (சங்.11:5,17:9,119:110), மனிதரையும் அரசாங்கத்தையும் ஏமாற்றுகிறவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தேவனைத் தேடாதவர்களாகவும் (சங்.10:4), அவரை அசட்டை பண்ணுகிறவர்களாகவும் (சங்.10:13) இருக்கின்றனர். இதனால், இத்தகைய மனிதருடைய ஆலோசனைகளைக் கேட்க வேண்டாம் என்று வேதாகமம் கூறுகிறது.

துன்மார்க்கர் நன்றாகப் படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருக்கலாம். அவர்கள் அதிகம் சம்பாதிக்கும் செல்வந்தர்களாகவும் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய ஆலோசனைகள் தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும் எதிரானவைகளாகவே இருக்கும். துன்மார்க்கர், “தேவன் வெறுப்பவைகளை விரும்புகிறவர்களாக இருப்பதனால் நாம் இவர்களுடைய ஆலோசனையின்படி நடக்கக்கூடாது”. தற்காலத்தில் தேவனை அறியாதவர்களினால் உருவாக்கப்படும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புத்தகங்கள், பத்திரிக்கைகள், பாடல்கள் போன்றவற்றின் மூலமும் துன்மார்க்கரின் ஆலோசனைகள் மனிதருக்கு கொடுக்கப்படுகின்றன. இதனால் இவற்றின் செல்வாக்கிற்கு உட்படுவதை நாம் தவிர்த்துக்கொள்ளவேண்டும். கிறிஸ்தவர்களாகிய நாம், தேவனையும் அவருடைய வார்த்தையான வேதாகமத்தையும் நன்றாக அறிந்துள்ள மனிதர்களிடமும், தேவனுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்கள் சஞ்சிகைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றிலுமே நம்முடைய வாழ்க்கைக்கான ஆலோசனைகளைப் பெறவேண்டும். தற்காலத்தில் கிறிஸ்தவத்தின் பெயரால் வெளியிடப்படும் சில புத்தகங்கள், சஞ்சிகைகள், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், தேவனுடைய வார்த்தைக்கு முரணான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கொண்டுள்ளன. இதனால், நாம் இவற்றின் தீமையான செல்வாக்கைக் குறித்தும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வேதாகமம், துன்மார்க்கருடைய ஆலோசனைகளைக் கேட்கக்கூடாது என்று கூறுகிறதே தவிர, நமக்கு எவருடைய ஆலோசனையும் தேவையில்லை என்று தெரிவிக்கவில்லை. கிறிஸ்தவ வாழ்வுக்கு மற்றவர்களுடைய ஆலோசனைகள் அவசியம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனியாக இருந்து யோசிக்கும்போது, ஒரு காரியத்தை எப்படிச் செய்வது என்று குழப்பமடைவது மனித மனதின் இயல்பு. சில சந்தர்ப்பங்களில் சுயயோசனையின்படியான தீர்மானங்கள் தவறான வழியில் நம்மைக் கொண்டுபோய்விடும். இதனால் நமக்கு மற்றவர்களுடைய ஆலோசனைகள் அவசியமானவைகளாக உள்ளன. வேதாகமமும் மற்றவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் அவசியத்தைப் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளது (நீதி.15:22, 11:14, 24:6). உண்மையில், மற்றவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்கிறவனே ஞானவானாக இருக்கின்றான் (நீதி.13:10, நீதி.12:15). இதனால், “உன் அந்நியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்”(நீதி.19:20) என்று நாம் அறிவுறுத்தப்பட்டுள்ளோம். தேவனே அரசனை வழி நடத்துவதாகவும் (நீதி.21:1), நமக்கு ஆலோசனைகளைத் தருவதாகவும் (சங்.32:8) வேதாகமம் தெரிவித்தாலும், நமக்கு மற்ற மனிதரின் ஆலோசனைகளும் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. உண்மையில், “துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள்” (நீதி.12:5). எனவே நாம் எல்லோருடைய ஆலோசனைகளையும் அல்ல, துன்மார்க்கருடைய ஆலோசனையையே கேட்கக்கூடாது.

நம்முடைய பெற்றோர் கிறிஸ்தவர்களாக இருந்தால் அவர்களுடைய ஆலோசனைகளுக்கு நாம் முதலிடம் கொடுக்கவேண்டும் (நீதி.1:8, 4:1, 6:20). உண்மையில், பெற்றோருடைய ஆலோசனைகளை அலட்சியம் பண்ணுவது அறிவீனமான செயலாகவே உள்ளது (நீதி.13:1, 15:5). இரண்டாவதாக, நாம் தேவனை ஆராதிப்பதற்காகக் கூடிவரும் நம்முடைய சபையின் போதகர் (குருவானவர் அல்லது பாஸ்டர்) நமக்கு நல்ல ஆலோசகராக அமையலாம் (எபி.13:7, 13:17). சில நேரங்களில், நாம் நன்றாக அறிந்துள்ள கிறிஸ்தவ நண்பர்கள் அல்லது ஊழியர்கள் நமது ஆலோசகர்களாக இருக்கலாம். எனினும், இவ்வாறு பெற்றோரிடமும், தேவபக்தியுள்ள மனிதர்களிடமும் ஆலோசனை பெறும்போது நாம் ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது, இவர்களுடைய ஆலோசனைகள் எவ்விதத்திலும் தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தை முரண்படுத்தாதவைகளாக இருப்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் நமக்கு கொடுக்கப்படும் சகல ஆலோசனைகளையும் நாம் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்த்த பின்பே, அவற்றைக் கைக்கொள்வதைப் பற்றி தீர்மானிக்கவேண்டும்.

கிறிஸ்தவ ஊழியர்கள் கொடுக்கும் சகல ஆலோசனைகளையும் நாம் தேவனுடைய வார்த்தையான வேதாகமத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது அவசியம். ஏனெனில், ஊழியர்கள்கூட தேவனுடைய வார்த்தைக்கு முரணான ஆலோசனைகளைக் கொடுத்து விடுகின்றனர். ஊழியர்கள் எப்பொழுதும் சரியான ஆலோசனையையேக் கொடுப்பார்கள் என்று எண்ணுவது தவறாகும். இதற்கு நாத்தான் என்னும் தீர்க்கதரிசி தாவீதுக்கு கொடுத்த ஆலோசனை சிறந்த உதாரணமாக உள்ளது. இஸ்ரவேல் நாட்டில் தன்னுடைய ஆட்சியை உறுதிப்படுத்திய பின்னர், தேவனுக்கு ஒரு ஆலயம் கட்டவேண்டும் என்று தாவீது விரும்பினான் (2சாமு.7:1-2). அவன் அக்காலத்தில் இருந்த நாத்தான் என்னும் தீர்க்கதரிசியிடம் தன்னுடைய உள்ளத்தின் விருப்பத்தைத் தெரிவித்தபோது அவன், “நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான்” (2சாமு.7:3). ஆனால், தேவனுடைய பார்வையில் இது சரியான ஒரு ஆலோசனையாக இருக்கவில்லை. இதனால், ஆலயத்தைக் கட்டுவது தாவீதின் வேலை அல்ல என்பதை அன்றிரவு தேவன் நாத்தானுக்குத் தெளிவுபடுத்தினார் (2சாமு.7:4-16).

அதன்பின்பே நாத்தான் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்றவிதத்தில், அதேசமயம் தான் ஏற்கனவே கொடுத்த ஆலோசனையை முரண்படுத்தும் விதத்தில் தாவீதுக்குத் தேவ சித்தத்தை அறிவித்தான் (2சாமு.7:17). நாத்தான் ஆரம்பத்தில் தாவீதுக்கு கொடுத்த ஆலோசனையை முரண்படுத்தும்விதத்தில் தேவனுடைய அறிவுறுத்தல் இருப்பதனால், நாத்தான் முதலில் தந்த ஆலோசனை கர்த்தரிடத்தில் விசாரியாமல், தாவீதைத் திருப்திப் படுத்துவதற்காகச் சுயமாகக் கொடுக்கப்பட்ட செய்தியாகவே உள்ளது.

நாத்தான் தீர்க்கதரிசியினுடைய ஆரம்ப ஆலோசனை தவறானதாக இருந்ததினால், அவன் தேவனுடைய தீர்க்கதரிசி அல்ல என்று நாம் கருதலாகாது. தேவனுடைய தீர்க்கதரிசிகளும் ஊழியர்களும் தவறான ஆலோசனைகளைக் கொடுக்கக்கூடியவர்கள் என்பதையே இச்சம்பவம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. இதைப்போல ஆகாப் என்னும் அரசனுக்கு யுத்தத்தில் வெற்றி கிடைக்கும் என்று 400 தீர்க்கதரிசிகள் கொடுத்த ஆலோசனையும் தவறானதாக இருப்பதை 1இராஜா. 22ஆம் அதிகாரம் அறியத்தருகின்றது. இத்தீர்க்கதரிசிகள், ஆகாபினுடைய அரசினால் உதவிபெற்று அரசுக்கு சார்பாக தீர்க்கதரிசனமுரைப்பவர்களாக இருந்தனர். இதனால், தாங்கள் சரியென நினைப்பதை அல்லது தங்களுக்கு எதற்காகப் பணம் கொடுக்கப்படுகிறதோ அதற்காகத் தீர்க்கதரிசனம் சொல்பவர்களாக இத்தீர்க்கதரிசிகள் இருந்தனர். உண்மையில், மக்கள் விரும்புகிற காரியத்தைச் சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துவதே இத்தீர்க்கதரிசிகளின் வேலையாக இருந்தது. ராமோத் என்னும் பட்டணத்தைக் கைப்பற்றுவதே ஆகாபின் நோக்கமாக இருந்ததினால், இவர்கள் இதற்கேற்றவிதத்தில் தீர்க்கதரிசனம் சொன்னார்கள் (1இராஜா.22:6). இவர்களில் ஒருவன் இரும்பு கொம்புகளை உருவாக்கி அடையாளச் செயல்மூலம் தீர்க்கதரிசனமுரைத்தான் (1இராஜா.22:11). எனினும், இவர்கள் சொன்னவிதமாக ஆகாபுக்கு யுத்தத்தில் வெற்றி கிடைக்கவில்லை (1இராஜா.22:34-38). ஏனெனில் இவர்கள் தேவனுடைய ஆவியினால் ஏவப் பட்டவர்களாக அல்ல, பொய்யின் ஆவியினாலேயே தீர்க்கதரிசனமுரைத்தனர் (1இராஜா. 22:19-23). இத்தீர்க்கதரிசிகளைப் போலவே தற்காலத்திலும், மனிதர்கள் கேட்க விரும்புகிறதை மாத்திரம் பேசும் ஊழியர்களும், தங்களுக்குப் பணமும் புகழும் கிடைப்பதற்காகப் பிரசங்கிப்பவர்களும், பொய்யின் ஆவியினால் தீர்க்கதரிசனம் உரைப்பவர்களும் கிறிஸ்தவ உலகில் உள்ளனர். இவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கருத்திற்கொள்ளாமலும், வேதாகமத்தை முரண்படுத்தும் விதத்திலும் போதித்தும் ஆலோசனைகளைக் கொடுத்தும் வருகின்றனர். இதனால், கிறிஸ்தவ ஊழியர்களிடம் ஆலோசனைகளைக் கேட்கும்போதும் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

பிசாசினால் ஏவப்பட்டு பொய்சொல்லும் ஊழியர்கள் மட்டுமல்ல (1தீமோ.4:1), துணிகரமாகப் பொய் சொல்லும் தீர்க்கதரிசிகளும் காலத்திற்குக் காலம் மக்களை வஞ்சித்து வருகின்றனர். வேதாகம காலத்தில் தன்னுடைய சுயநல நோக்கத்திற்காகத் “தூதனால் அறிவிக்கப்பட்ட கர்த்தருடைய வார்த்தை” என்னும் அறிமுகத்துடன் துணிகரமாகப் பொய் சொன்ன ஒரு தீர்க்கதரிசியைப்பற்றி 1இராஜா. 13ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கலாம் (1இராஜா.13:18). இத்தீர்க்கதரிசி சொன்ன பொய்யைத் தேவனுடைய அறிவுறுத்தல் என்று நம்பி செயல்பட்ட மனிதன், அன்றைய தினமே தேவ தண்டனை காரணமாக மரித்தான் (1இராஜா.13:20-24). யூதேயாவிலிருந்து இம்மனிதனை ஒரு குறிப்பிட்ட பணிக்காகப் பெத்தேலுக்கு அனுப்பிய தேவன், அவன் எவ்வாறு செயற்படவேண்டும் என்பதைப்பற்றி தெளிவாக அவனுக்கு அறிவித்திருந்தார். ஆரம்பத்தில் தேவனுடைய அறிவுறுத்தலுக்கு கீழ்ப்படிந்து நடந்த இம்மனிதன், “கர்த்தருடைய வார்த்தை” என்னும் அறிமுகத்துடன் பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசி கூறியவற்றைக் கேட்டுத் தேவன் தனக்கு கொடுத்திருந்த அறிவுறுத்தலை மீறி நடந்தான். இதனால் தேவ தண்டனை அவன்மீது வந்தது (1இராஜா.13:1-30). தேவனுடைய தெளிவான வார்த்தையான வேதாகமம் நம்மிடத்தில் இருக்கும்போது, அல்லது தேவனுடைய சித்தம் என்ன என்பதை நாம் அறிந்திருக்கும்போது, அதை முரண்படுத்தும் விதத்தில் சொல்லப்படுகின்ற ஆலோசனைகளை நாம் ஏற்றுக்கொண்டு அவற்றின்படி நடந்தால், இம் மனிதனைப் போலவே நாமும் தேவனுடைய சித்தத்திற்கு எதிரான வழியில் செல்கிறவர்களாகவே இருப்போம்.

தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தை முரண்படுத்தும் விதத்தில் எவர் எதைக் கூறினாலும் அது உண்மை என்று நாம் நம்பிவிடக்கூடாது. அதேபோல, “கர்த்தர் பேசுகிறார்” என்னும் அறிமுகத்துடன் சொல்லப்படும் காரியங்களைக் குறித்து நாம் மிகவும் கவனமாயிருக்கவேண்டும். தீர்க்கதரிசிகளாகிய எரேமியா, எசேக்கியேல் என்போரின் காலத்தில் பலருடைய வாய்களில் “கர்த்தர் உரைக்கிறார்” என்னும் வார்த்தை எப்பொழுதும் இருந்தது. ஆனால் அவர்கள் ஆவியினால் ஏவப்பட்டவர்களாக அல்ல, சுயத்தினால் ஏவப்பட்டவர்களாகவே பேசினார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களையும், எண்ணங்களையும் தேவனுடைய செய்தியாக அறிவித்தார்கள் (எரே.23:16, 28:15, 29:8-9, 29:21). இவர்கள் பொய்த் தீர்க்கதரிசிகள் என்பதைத் தேவனே சுட்டிக்காட்டியுள்ளார் (எரே.14:14, 23:25, 23:32, 27:10, 27:14-16, எசே.13:2-3, 13:6-9). இதைப்போலவே தற்காலத்திலும் வேதத்தை அறியாத கிறிஸ்தவர்களைப் பிசாசு பலவிதமான பொய்யான தீர்க்கதரிசிகள், ஊழியர்கள் மூலமாக வஞ்சித்து வருகின்றான் (1தீமோ.4:1, 1கொரி.12:2).

தேவ ஊழியர்கள் கொடுக்கும் ஆலோசனையை எவ்வித கேள்வியும் இல்லாமல் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சில கிறிஸ்தவர்கள் எண்ணுகின்றனர். ஆனால் இது தவறான ஒரு கருத்தாகும். கள்ளத் தீர்க்கதரிசிகளும், தேவனுடைய வார்த்தையை அலட்சியப்படுத்தும் ஊழியர்களும் நம் மத்தியில் இருப்பதனால், நாம் சகல ஆலோசனைகளையும் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்த்த பின்பே அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது கர்த்தருடைய வார்த்தையான வேதாகமம் நமக்குக் கொடுத்துள்ள கட்டளையாகும். “உலகத்தில் அநேகங் கள்ளத் தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்” (1யோவான் 4:1) என்றும், சொல்லப் படுகின்ற தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் “நிதானிக்கக்கடவர்கள்” (1கொரி.14:29) என்றும் வேதாகமம் கூறுகிறது. 1கொரி.14:29இல், “நிதானித்தல்” என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சொல் மூலமொழியில் “ஆராய்தல்” என்னும் அர்த்தமுடையது. 1கொரி.12:10இல் இச்சொல் “பகுத்தறிதல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம், “தேவனுடைய ஆவிக்கு இசைவானதாக இருக்கின்றதா என்பதை ஆராய்ந்துபார்க்கும்படி இவ்வசனம் கூறுகிறது”.

இதனால்தான், “தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்” என்று கூறும் வேதாகமம், அடுத்த வசனத்தில், “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள். பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்” (1தெச.5:20-22) என்று அறிவுறுத்துகிறது. இவ்வசனத்தில் “சோதித்துப் பார்த்தல்” என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல், “கவனமாகப் பரிசோதித்தல்” என்னும் அர்த்தமுடையது. அக்காலத்தில் நாணயங்கள் மற்றும் நகைகள் சுத்தமான உலோகத்தினால் செய்யப்பட்டவைகளா என்பதை சோதிப்பதற்கு இச்சொல்லே உபயோகிக்கப்பட்டது.

எனவே, நாணயத்தையும் நகையையும் சோதித்துப் பார்ப்பதுபோல நாம் தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளையும் ஊழியர்களுடைய ஆலோசனைகளையும் கவனமாக ஆராய்ந்து பார்க்கும்படியே வேதாகமம் கூறுகிறது.

உண்மையில், ஊழியர்கள் சொல்லும் காரியங்களை வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்ப்பவர்களே சிறந்த கிறிஸ்தவர்களாக உள்ளனர். உதாரணத்திற்கு முதலாம் நூற்றாண்டில் “பெரோயா” என்னும் பட்டணத்தில் இருந்தவர்கள், பவுலும் சீலாவும் பிரசங்கித்தபோது, “மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்” (அப்.17:10-11). இவர்கள் வேதத்தை ஆராய்ந்துபார்த்த பின்பே பவுலும் சீலாவும் பிரசங்கித்தவைகளை ஏற்றுக்கொண்டனர். இதனாலேயே இவர்கள் சிறந்த கிறிஸ்தவர் களாக இருந்தனர்.

இவ்விதமாக நாமும் ஊழியர்களினால் கொடுக்கப்படும் சகல ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்துபார்த்து, வேதாகமத்திற்கு இசைவாக இருக்கின்றவைகளை மட்டுமே ஏற்றுக் கொள்ளவேண்டும். வேதாகமத்தை முரண்படுத்தும் உபதேசங்களையும் ஆலோசனைகளையும் நாம் ஏற்கத் தேவையில்லை. வேதத்தை முரண்படுத்தும் ஆலோசனைகளைக் கொடுப்பவர் எவ்வளவு பெரிய ஊழியராக இருந்தாலும், அவற்றை நிராகரிப்பதற்கு நாம் தயங்கக்கூடாது.

இதனால்தான், “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” (கலா.1:8-9) என்று பவுல் கலாத்திய சபைகளை எச்சரித்தார். வேதாகமத்தை அறியாதவர்களின் அறிவுரைகளும், வேதாகமத்தை முரண் படுத்தும் கிறிஸ்தவர்களின் போதனைகளும் துன்மார்க்கருடைய ஆலோசனைகளாகவே உள்ளன. இவற்றின்படி நாம் நடக்கக்கூடாது என்று முதலாம் சங்கீதம் கூறுகிறது.

(தொடரும்)