எம்.எஸ்.வசந்தகுமார்
(மே-ஜுன் 2016)
(சென்ற இதழ் தொடர்ச்சி)

ஆண்டவரின் இன்பமான வழி

2. வேதத்தில் தியானமாயிருத்தல்

வேதாகமத்தில் ஒரு அதிகாரத்தை, அல்லது ஒரு வசனம் இடம்பெறும் பகுதியை முழுமையாக வாசித்து தியானிக்கும்போது, அந்த வேதப்பகுதி பழைய ஏற்பாட்டிலா? அல்லது புதிய ஏற்பாட்டிலா? எங்கு இருக்கின்றது என்பதையும் நாம் கருத்திற்கொள்ளவேண்டியது அவசியம். நாம் ஏற்கனவே பார்த்தபடி, தற்காலத்தில் பலர் தாங்கள் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இருக்கின்றோம் என்பதைக் கருத்திற்கொள்ளாமல் வேதாகமத்தை வியாக்கியானம் செய்வதனால் பல தவறான உபதேசங்கள் உருவாகியுள்ளன. மேலும், வேதாகமத்தில் உள்ள 66 புத்தகங்களும் ஒரேவிதமான மொழிநடையில் எழுதப்படாமல், சரித்திரம், தீர்க்கதரிசனங்கள், பாடல்கள், கடிதங்கள், கட்டளைகள் என்று வித்தியாசமான தன்மைகளையுடைய புத்தகங்களாக உள்ளன. இதனால், நாம் எத்தகைய தன்மையுடைய புத்தகத்தைத் தியானிக்கிறோம் என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் சரித்திர சம்பவங்களைக் கட்டளைகளாகவும், தீர்க்கதரிசனங்களைச் சரித்திரமாகவும் தவறாகப் புரிந்து கொள்வோம்.

வேதாகமத்தைத் தியானிக்கும்போது, ஆரம்பத்தில் புதிய ஏற்பாட்டில் சுவிசேஷப் புத்தகங்களையும், பழைய ஏற்பாட்டில் சங்கீதம் நீதிமொழிகள் என்னும் புத்தகங்களையும் வாசிப்பது நல்லது. அதன் பின்னர், புதிய ஏற்பாட்டிலுள்ள நிருபங்களையும், பழைய ஏற்பாட்டின் சரித்திரப் புத்தகங்களையும் வாசிக்கலாம். இவற்றையெல்லாம் வாசித்து தியானித்த பின்னர் தீர்க்கதரிசனப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்குவது நல்லது. மேலும், சங்கீதக்காரனைப்போல, “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும்” (சங்.119:18) என்னும் ஜெபத்துடனும், நாம் வாசிக்கும் வேதப்பகுதியினூடாகத் தேவன் நம்முடன் பேசுகின்றார் என்னும் உணர்வுடனும் நாம் தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தைத் தியானிக்கவேண்டும்.

3. தியானத்தில் தொடர்ந்திருத்தல்

கர்த்தருடைய வேதத்தை “இரவும் பகலும்” தியானிக்க வேண்டுமென்றும் முதலாம் சங்கீதத்தின் இரண்டாம் வசனம் கூறுகிறது. சிலர் இதைத் தவறாக விளங்கிக்கொண்டு, இது அக்காலத்தில் இருந்த வேதபாரகர்களுக்கான கட்டளை என்று கருதுகின்றனர். வேதபாரகர்களின் தொழிலே வேதாகமத்தைப் போதிப்பதாக இருந்ததினால், அவர்களால் மட்டுமே இரவும் பகலும் வேதத்தைத் தியானிக்க முடியும் என்று இவர்கள் எண்ணுகின்றனர். இதேவிதமாக தற்காலத்திலும் வேதத்தைப் படிப்பது முழுநேர ஊழியர்களின் வேலை என்றே கிறிஸ்தவர்கள் எண்ணுகின்றனர். ஆனால், இது தவறான ஒரு கருத்தாகும்.

கிறிஸ்தவர்கள் அனைவரும் வேதத்தைக் கருத்துடன் படிக்கிறவர்களாக இருக்க வேண்டும். பழைய ஏற்பாட்டுக் காலத்தில், மக்கள் அனைவரும் தேவனுடைய வார்த்தையைத் தங்களுடைய இருதயத்தில் பதித்து வைத்து, அதைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு கற்பிக்கும்படி தேவன் கட்டளையிட்டிருந்தார் (உபா.6:6-9, சங். 78:3-8). இதைப்போலவே புதிய ஏற்பாட்டிலும் வேதாகமத்தின் சகல உபதேசங்களும் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் போதிக்கப்பட வேண்டும் என்றே இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் (மத். 28:20). எனவே, ஒவ்வொரு கிறிஸ்தவனும் கர்த்தருடைய வேதத்தை ஆராய்ந்து படிக்கிறவனாக இருக்கவேண்டும் (யோவா.5:39).

கிறிஸ்தவர்களை “சாதாரண கிறிஸ்தவர்கள்” என்றும் “சீஷர்கள்” என்றும் இரு குழுக்களாகப் பிரிப்பது தவறாகும். கிறிஸ்தவர்களை இவ்வாறு பிரிப்பவர்கள், சீஷர்களாயிருப்பவர்களுக்கே வேதாகமத்தின் உபதேசங்கள் போதிக்கப்படவேண்டும் என்றும், சாதாரண கிறிஸ்தவர்களுக்கு இத்தகைய போதனைகள் அவசியமில்லை என்றும் கருதுகின்றனர்.

இத்தவறான எண்ணம் காரணமாகவே, “சீஷத்துவ வகுப்புகளில்” சபையிலுள்ள குறிப்பிட்ட சிலருக்குமட்டுமே வேதப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால், சபையில் உள்ள சகலருக்கும் வேதாகமத்தின் சத்தியங்கள் அனைத்தும் போதிக்கப்படவேண்டும். இயேசு கிறிஸ்துவின் அறிவுறுத்தலின்படியே பவுல் தனிப்பட்ட ரீதியாக சபையிலுள்ள “ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும்” கொடுத்தார் (1தெச.2:12). மேலும், கிறிஸ்தவ போதனைகளை சபையிலுள்ள சகலரும் அறிந்துகொள்ளும் விதத்தில், சபைகளுக்கு எழுதப்பட்ட நிருபங்கள் பகிரங்க வழிபாடுகளில் வாசிக்கப்பட்டன (1தெச.5:27, கொலோ. 4:16).

உண்மையில், சீஷர்கள் என்னும் தனியான ஒரு சிறப்புக்குழுவினர் கிறிஸ்தவத்தில் இல்லை. ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் அனைவருமே சீஷர்கள் என்றே அழைக்கப்பட்டனர் (அப்.6:1, 9:25, 9:38, 13:52, 14:20, 18:27, 19:30,20:7). பிற்காலத்திலேயே இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு “கிறிஸ்தவர்கள்” என்னும் பெயர் கொடுக்கப்பட்டது (அப்.11: 26). இயேசுகிறிஸ்துவின் பன்னிரு சீஷர்களும் சுவிசேஷப் புத்தகங்களில் “சீஷர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், ஆதிசபையில் இவர்கள் “அப்போஸ்தலர்கள்” என்றே அழைக்கப்பட்டனர். இயேசுகிறிஸ்துவுக்குப் பன்னிருவர் மாத்திரம் அல்ல, அநேக சீஷர்கள் இருந்தனர் (லூக்.10:1, 10:17, யோவா.6:61, 6:66). இவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிச் சென்றவர்கள்.

இயேசுகிறிஸ்து இவர்களில் பன்னிருவரைத் தெரிவுசெய்து அவர்களுக்கு “அப்போஸ்தலர்” என்று பெயரிட்டார் (லூக். 6:13). எனவே, சீஷர்கள் சிறப்பாகத் தெரிவு செய்யப்பட்ட குழுவினர் என்று கருதுவது தவறாகும். “சகல ஜாதிகளிலும் மக்களை சீஷராக்குங்கள்” (மத்.28:19) என்னும் இயேசு கிறிஸ்துவின் கட்டளையானது, மக்களைக் கிறிஸ்தவர்களாக்குவதைப் பற்றிய அறிவுறுத்தலாகவே உள்ளது. எனவே, சீஷர்கள் என்னும் ஒரு குழுவினருக்கு மட்டுமல்ல, சகல கிறிஸ்தவர்களுக்கும் தேவனுடைய வார்த்தை ஒழுங்கான முறையில் கற்பிக்கப்படவேண்டும்.

முதலாம் சங்கீதத்தின் இரண்டாம் வசனத்திலுள்ள “இரவும் பகலும்” என்னும் சொற் பிரயோகம், தொடர்ச்சியாகப் படிப்பதைக் குறிக்கும் விவரணமாக உள்ளது. சிலர் இதைச் சொல்லர்த்தமாக எடுத்து, இரவில் நித்திரை கொள்ளமுடியாமல் இருக்கும் வயோதிபர்களையே இரவில் வேதத்தைப் படிக்கும்படி முதலாம் சங்கீதம் கூறுவதாகக் கருதுகின்றனர்.

ஆனால், இது முற்றிலும் தவறான ஒரு கருத்தாகும். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒரு நாள் வேதத்தைப் படித்துவிட்டு மறுநாள் வேதத்தியானத்தைக் கைவிடுகிறவர்களாகவோ அல்லது நாம் விரும்புகிற நேரங்களில் அல்லது வசதிப்படும்போது, அல்லது நெருக்கடியான ஒரு சூழ்நிலையில் மாத்திரம் வேதத்தைப் படிக்கிறவர்களாக இராமல், ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாகவும் கிரமமான முறையிலும் வேதத்தைத் தியானிக்கவேண்டும் என்பதையே இரவும் பகலும் என்னும் சொற் பிரயோகம் அறியத் தருகின்றது.

நமது வாழ்வின் நிலைமை எப்படிப்பட்ட தாக இருந்தாலும், இன்பமான சூழ்நிலையானாலும், துன்பமான வேளையானாலும், உயர்வானாலும் தாழ்வானாலும், நாம் ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய வேதத்தில் மகிழ்ச்சியாயிருந்து, அதை ஒழுங்கான முறையில் தியானித்து, அதன் வெளிச்சத்தில் வாழ வேண்டும். இதுவே இவ்வுலகில் ஆனந்தமான வாழ்வுக்கு அவசியமான வழியாகும்.

(தொடரும்)