உள்ளார்ந்த கோபம்

சகோ.அஜித் ஃபெர்னாண்டோ
(செப்டம்பர்-அக்டோபர் 2016)

சிலநாட்களுக்கு முன்னதாக, “களிகூருங்கள்”, “களிகூர்ந்தனர்”, “களிப்பு” மற்றும் “சந்தோஷம்” போன்றதான பதங்கள் பிலிப்பியர் நிருபத்திலே பதினாறு தடவைகள் வருகின்றன என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

ஏ.ரீ.ராபர்ட்சன் எனப்படும் பெரும் வேத அறிஞர் சிறப்புமிக்க அவரது பிலிப்பியர் வியாக்கியானத்தை, ‘கிறிஸ்துவிலே பவுலின் களிப்பு’ எனப் பொருத்தமாகத்தான் பெயரிட்டுள்ளார். இந்த நிருபம் சிறையில் இருந்து எழுதப்பெற்றதாகும். சுவிசேஷத்துக்காகத் தான் செய்ய விரும்பியவைகளைப் பெரும் திட்டமிட்டு நிறைவேற்றும் செயல்வீரனாகப் பவுல் திகழ்ந்தவர். ஆனால், கணிசமான காலத்துக்கு இப்போது அவர் சிறைக்குள் முடக்கப்பட்டுள்ள நிலைமையில், தொடர்ந்தும் களிப்பாக இருந்தார்.

பிலிப்பியரிலே “களிப்பு” என்பதிலே இடப்படும் வலியுறுத்தலானது, களிப்பு என்பது கிறிஸ்தவனின் தனித்தன்மை எனக் கூறிய சீ.எஸ்.லூயிஸ் போன்றதான எழுத்தாளர்கள் விடுக்கும் கோரிக்கைக்கு நம்பகத் தன்மை சேர்ப்பதாக உள்ளது. சிறையில் இருந்து பவுல் எழுதுகிறார்: “கர்த்தருக்குள் எப்பொழுதும் களிப்பாய் (சந்தோஷமாய்) இருங்கள். மறுபடியும் சொல்லுகிறேன், களிப்பாயிருங்கள்” (பிலி.4:4).

அப்படியாயின் ஏன் பல கிறிஸ்தவர்கள் சந்தோஷமற்றவர்களாய் உள்ளனர்? இதற்குப் பல காரணங்கள் உள்ளதென நான் நினைக்கிறேன். அவற்றுள் ஒன்றுதான்; நான் “தொக்கி நிற்கும் கோபம்” என அழைக்கும் அதனை அவர்கள் அங்கே பாதுகாத்து வைத்திருப்பதாகும். கூடாத சம்பவங்கள் அவர்களுக்கு நடந்திருக்கும். அவர்கள் அதுபற்றியக் கோபத்தை முற்றிலுமாக மேற்கொள்ளவில்லை. தேவன் கூறுகிறார்: “… நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்” (எரே. 31:34); ஆனால் அவர்களோ அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாவங்களைத் தொடர்ந்தும் ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பார்கள். சந்தோஷம் தராத சம்பவங்களின் நினைவுகளை நமது  மனங்களைவிட்டு முழுமையாக மூட்டை கட்டி எறிந்திடும் அசாத்திய ஆற்றல் எப்போதும் நமக்கு இருக்கும் என நான் கூற வரவில்லை. ஆனாலுங்கூட, அவைகள் நம்மீது மேலும் பாரமான விளைவுகளை இனிமேலும் கொண்டிராததுபோல நாம் வாழலாம். “..தீங்கு நினையாது” (1கொரி.13:5 வேறு மொழி பெயர்ப்புகளிலே, தீங்கானவைகளைப் பற்றிய பதிவுகளைப் பேணாது) எனும் கூற்றிலே பவுல் இதைத்தான் கருதினார்.

இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க பதம், லொஜிஸோமாய் (logizomai) என்பதாகும். இதனை நாம் “கணக்கிடுதல்” அல்லது “எண்ணுதல்” எனப் பொதுவாக மொழி பெயர்ப்பதுண்டு. கணக்குப் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளில் கணக்கெழுத்தாளர்கள் பின்னொரு நாள் திருப்பிப் பார்ப்பதற்கென நிதி பரிமாற்றங்களைப் பதிந்துவைப்பது உண்டு. நாம் மன்னிக்கும்போது, நமக்கெதிராக  இழைக்கப்பட்ட தீமையை கணக்குப்பதிய நாம் மறுக்கிறோம். அதாவது, நம்மீது ஏதோ கணிசமான தாக்கத்தை அது ஏற்படுத்தினாற்போல, அதனைத் திரும்பத்திரும்ப நினைவுகூர மறுக்கிறோம். “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி…” (2கொரி. 5:19) என்பதிலே “எண்ணாமல்” என்பதற்கு அதே சொல்லையே பவுல் பயன்படுத்தியுள்ளார்! தேவன் எப்படியாக நமது பாவங்களை நமக்கெதிராக எண்ணாதிருக்கிறாரோ, அதேபோல மக்களால் நமக்கெதிராக நடத்தப்பெற்ற பாவங்களையும் நாம் எண்ணக்கூடாது.

நமக்கு எதிராக இழைக்கப்பட்டவைகளை எண்ணாதிருப்பதற்கு நல்ல காரணம் நமக்கு உண்டு. பவுல் கூறுகிறார்: “… தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோம.8:28). கோபத்தை உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கக் காரணமேதுமில்லை. ஏனெனில், நமக்குச் செய்யப்பட்டதைத் தேவன் நன்மையாக மாற்றப்போகிறார். இந்தக் காரியங்களையிட்டதான மனக்கசப்பிலே நாம் தொடர்ந்தோமேயானால், நமது வாழ்விலே தேவனை விடவும் நமக்கெதிராகத் தீமை செய்த நபரே அதிக வல்லமை படைத்தவர் என நாம் தேவனை அவமானப்படுத்தும் ஒரு கூற்றை விடுவிக்கிறவர்களாவோம். அந்த நபர் அப்படியான கனத்துக்கு உகந்தவரல்ல. வேதாகமம் நம்மைக் களிப்பாயிருங்கள் எனக் கட்டளையிடும்போது, அது உண்மையிலேயே தேவனில் நம்பிக்கைகொள்ளும்படியாகவே நமக்குக் கட்டளையிடுகிறது.

நமக்கு எது நடந்திருந்தாலுமென்ன, களிப்பாய் இருப்பதற்கு தேவனிலே நாம் கொள்ளும் நம்பிக்கையே காரணமாய் இருக்கிறது. இது ரோமர் 15:13இல் நன்கு புலப்படுத்தப்பட்டுள்ளது: “பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக”.

தேவன் நம்முடன் இருக்கிறார். நமக்காக இருக்கிறார், எல்லாவற்றையும் நன்மையாக மாற்றிப்போடுவார் என்று நாம் நம்பும்போது, நாம் “சந்தோஷத்துக்கும் சமாதானத்துக்குமான” கதவைத் திறக்கிறோம். மாத்திரமன்றி, நாம் தேவனிலே நம்பிக்கை கொள்ளும்போது, “நம்பிக்கையிலே பெருகுகிறோம்”. ஆம், கெட்ட காரியங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் நாம் தேவனிலே நம்பிக்கை கொள்வதனால், இந்த கெட்ட காரியங்களுங்கூட நன்மையாக மாற்றப்படும் என நாம் எதிர்பார்க்கலாம். அப்படியான எதிர்பார்ப்புடன், எப்போதுமே நாம் களிப்புடன் இருக்கலாம்.

ஒரு ராஜா ஒருமுறை தனது ராஜ்யத்திலுள்ள தனது எதிரிகள் அனைவரினதும் பெயரைப் பட்டியலிட்டான். அந்தப் பட்டியலின் பக்கத்திலே ஒரு சிலுவை அடையாளத்தையும் இட்டான். அந்த எதிரிகளுக்கு எதிராகப் பழிவாங்கும் எண்ணத்துடன்தான் ராஜா அதனை செய்தாரென மக்கள் நினைத்தனர். ஆனால் அவனோ, கிறிஸ்து சிலுவையிலே செய்ததுபோலவே தானும் அவர்களை மன்னிக்கவேண்டும் என்பதை ஞாபகமூட்டும்படியாக அவ்வாறு தான் அடையாளம் போட்டதாக விளக்கிக் கூறினான். மன்னிக்கும்படிக்கான அழைப்புக்குக் கீழ்ப்படியும் ஒரு தீர்மானத்தை அவன் எடுத்தான்.

பிரித்தானிய மெதடிஸ்த பிரசங்கியான வில்லியம் ஈ ஸங்ஸ்டர் (William E Sangster) என்பவர் “மன்னிப்பதற்கான ஞாபகப்படுத்தல்” என அவர் விபரிக்கும் ஒரு தத்துவத்தைத்தானே கடைப்பிடித்து அதனைப் பிரசங்கிக்கவும் செய்தார். பலவிதக் கண்டனங்களுக்கு அவர் உள்ளாகினாலும்கூட, தனக்கு எதிராக இழைக்கப்பட்ட தப்பிதங்களை “மன்னிப்பதற்காக ஞாபகப்படுத்தி” அதற்குப் பதிலாக அவர் தேவனைச் சேவிப்பதிலே கவனத்தைச் செலுத்தினார். ஒருமுறை ஒரு கிறிஸ்துமஸ் வாழ்த்துமடலிலே அவர் ஒரு பெயரை எழுதிக் கொண்டிருந்தபோது, அதனைப் பார்த்த அவரது மனைவி, அதிர்ச்சியடைந்தாள். நம்ப முடியாமல், “நிச்சயமாக நீர் இந்த வாழ்த்து மடலை அவருக்கு அனுப்பப்போவதில்லை, இல்லையா?” எனக் கேட்டாள். 18 மாதங்களுக்கு முன்பாக அந்த மனிதன் அவருக்குச் செய்திருந்த தீமையை அவள் ஞாபகமூட்டினாள். உண்மையிலேயே ஸங்ஸ்டர் அந்த சம்பவத்தை மறந்து போயிருந்தார்! உண்மையிலேயே அவர் மறப்பதற்காக ஞாபகப்படுத்தியிருந்தார்!

தாம் பெற்றுக்கொண்ட மனோ காயத்தை மக்கள் பிடித்துக்கொண்டிருப்பதற்கான ஒரு காரணம், அது அவர்களுக்குக் கோபம் கொள்வதற்கும், இரக்கமின்றி நடப்பதற்குமான ஒரு சாக்குப்போக்காக அமைவதனாலாகும். அவர் களது கோபம் பிறரைக் காயப்படுத்துவதிலே விளையும். காயப்படுத்தும் காரியங்களை அவர்கள் கூறுவார்கள். பிறரைப் பற்றி அதீதமான கண்டனப்போக்கைக் கொண்டிருப்பார்கள். மக்களிலே பிழை கண்டுபிடிப்பது – மக்கள் தப்பான காரியங்களைச் செய்வார்கள் எனும் அவர்களது நம்பிக்கைக்கு முட்டுக்கொடுக்கும். தொடரும் அவர்களது கோபத்துக்கு இதுவும் ஒரு காரணமாகிவிடும். யாராவது ஒருவர் தவறுசெய்யும்போது. “பார்த்தாயா, இந்த மக்கள் எவ்வளவு நேர்மையற்றவர்களாய் நடந்து கொள்கின்றனர்” என்று சீறி விழுவார்கள். பவுல் கூறுகிறார்: அன்பு சகலத்தையும் நம்பும், விசுவாசிக்கும் (1கொரி.13:7). அதாவது மக்கள் நல்லவர்களாக இருப்பதை, நன்றாகச் செய்வதைக் காணும்படிக்கு அது ஏங்கும். மக்களைப் பற்றிய திறமானவைகளையே நம்ப அது விரும்பும். மக்களின் வாழ்வுகளிலே கிருபை செயற்படும் சாத்தியப்பாடுகளைக் காணவே அது விரும்பும். ஆனால் இந்தக் கோபக்காரர்களோ மக்களின் செயற்பாடுகளுக்கு மோசமான வியாக்கியான விளக்கம் கொடுத்து பெரும் சிதைவை ஏற்படுத்தி விடுகின்றனர்.

தப்பான சாட்சியம் கொடுக்கும் பாவத்தை வேதாகமம் எவ்வளவு மோசமாகக் கண்டிக்கிறது என்பதை மறந்தவர்களாக அவர்கள் தமது தப்பான விளக்கங்களின் அடிப்படையில் பல தப்பான கதைகளைப் பரப்புவார்கள். பிறரையிட்ட தப்பான சாட்சியம் வழங்காதிருக்கும்படியான கட்டளையே, இன்றைய சுவிசேஷகர்கள் மத்தியிலே மிகவும் அதிகமாகப் புறக்கணிக்கப்படும் கட்டளையாக இருக்கிறது. இப்படியான சந்தோஷமற்ற கிறிஸ்தவர்களுள் பலர் தமது நல்ல கொள்கைகளின் நிமித்தமாகப் பாடுபட்ட தலைவர்களாக இருக்கிறார்கள். பிறரை அன்பற்று நடத்தி, அவர்களைக் காயப்படுத்தும் அவர்கள் “நீதியான” மக்கள்! இந்தப் பிரச்சனைக்குப் பதில் என்ன? தேவன் உங்களை நேசிக்க விடுங்கள்! அவரது ஆச்சரியமிக்கதான அன்பைப் பற்றியும், நமது காயங்களைக் குணப்படுத்தும் தனது ஆற்றலைப் பற்றியும், நமது துயர நிகழ்வுகளை வெற்றிகளாக மாற்றிப்போடும் அவரது செயலைப் பற்றியும் அவர் கூறுவதை நம்புங்கள்.

அப்போதுதான் கோபத்தின் பாரத்தால் தடுத்தாட்கொள்ளப்படாமல், நீங்கள் மக்களை நேசிக்கவும், கடினமான மக்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் நேரிய கண்ணோட்டத்துடன் முகங்கொடுக்கவும் விடுவிக்கப்பட்டவர்களாய் இருப்பீர்கள். ஒரு சில நாட்களுக்கு முன்பதாக, நான் எனது மனைவியிடம், நம் ஒவ்வொரு வரது பலவீனங்களையுமிட்டு நாம் உண்மையிலே சினமுற்றிருந்திருப்போமேயானால். நமது வீடு ஒரு யுத்த களமாகிவிட்டிருக்கும் எனக் கூறினேன்.

நாம் முதிர்வயதடையும்போது, மறத்தல் போன்றதான நமது சில பெலவீனங்கள் மோசமடைந்து போகிறது! நமது வீடுகளிலே நாமோ அல்லது நமது சாதனைகளோ அல்ல, தேவனே முக்கியமான காரணி என்பதை அறிவது எவ்வளவோ நலமானதாக இருக்கிறது. அவர் வலிமையானவரும் நல்லவருமாய் இருக்கிறார். அவரது வல்லமையாலும் நன்மையினாலும் தாங்கப்பட்டவர்களாக, நாமும் மக்களுக்கு தியாக அன்பைப் புலப்படுத்தவும் அவர்களுடன் பொறுமையாக இருப்பதற்கும் நமக்குப் பெலமுண்டு.

இருபதாம் நூற்றாண்டின் முக்கிய பிரசங்கி யான எஃப்.பீ.மெயர் (F.B.Meyer) ஒருமுறை புகையிரத வண்டியிலே பயணம் செய்தபோது, துயர முகத்துடன் ஒரு பெண்மணி அவருக்கருகே அமர்ந்திருந்தாள். அவளுடன் பேச்சுக் கொடுத்ததிலே அவளது கணவனும் அவளது ஒரேயொரு மகளும் மரித்துப்போயிருந்ததை அறியவந்தார். மெயரிடம் தான் எப்படியாக அந்த நோய்வாய்ப்பட்ட மகளைப் பராமரிப்பதிலே மகிழ்வடைந்திருந்தாள் என்பதை அவள் விபரித்துக் கூறினாள். இப்போது அந்த மகள் மரித்துப் போனதால் தனது வீட்டுக்குப் போக மனதே தனக்கில்லை  என்று சொன்னாள்.

அந்தப் பெண்மணியிடம் மெயர் இவ்விதமாகக் கூறி வைத்தார்: “ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து, முன் கதவைத் திறப்பதற்காக சாவி துவாரத்திலே சாவியை வைக்கும்போது, “இயேசுவே, நீர் இங்கே இருக்கிறீர் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறு. வீட்டிலே அடுப்பைப் பற்ற வைக்கும்போது, அந்த நாளிலே என்னென்ன நடந்தது என்பதை, உங்களது மகளிடம் எப்படிக் கூறுவீர்களோ அப்படியே தேவனிடமும் கூறு.

நித்திரைக்குப் போவதற்காக விளக்கை அணைக்கும்போது, இருட்டிலே கையைத் துழாவி, “இயேசுவே, நீர் இங்கே இருக்கிறீர் என்பது எனக்குத் தெரியும் என்று கூறு” என்றார்.

சில மாதங்களுக்குப் பின்பதாக, மெயர் பிரசங்கித்த கூட்டமொன்றுக்கு அந்தப் பெண்மணியும் வந்திருந்தாள். முன்பு துயரத்தை அப்பட்டமாகப் பறைசாற்றிய அவளது முகம் இப்போது பிரகாசமாகத் துலங்கியது. அந்தப் பெண்மணி மெயரிடம் வந்து அவர் கூறியபடியே தான் செய்ததாகவும், அது அவளது வாழ்விலே பெரியதோர் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டதெனவும் கூறினாள்.

இயேசு எவ்வளவு அற்புதமானவர் என்பதை நாம் ஞாபகப்படுத்திக் கொண்டோமேயானால், தொடர்ந்திடும் நமது கீழ்ப்படியாமைக்கும் மாறாக நமக்கான அவரது அன்பு எவ்வளவு அற்புதமானது என்பதையும் நினைத்துப்பார்ப்பது எத்தனை நலமானது! அப்போது நாம் நமது இதயங்களிலே கோபத்தை அடைகாக்க மாட்டோம்.

ஆம், நாம் தாக்கப்பட்டால், உடனடியாகவே கோபத்துடன்தான் நாம் முதலிலே பதிலீடு கொடுப்போம். அது ஏனென்றால், நம்மிலே தேவனால் தரப்பட்டதான ஒருவித நீதியுணர்வு இருப்பதனாலும், மற்றும் நாம் காயத்தை உணர்வதாலுமே. அது இயல்பானதே. தவறு நேரும்போது நாம் எரிச்சலடைவது சரியானதே. ஆனால் பொருத்தமான காலத்துக்கு நாம் துயரப்பட்டு, வேதனையால் முனகியபின்பு, விசுவாசம் மேலோங்கி நாம் பெற்றுக்கொண்ட மனோ காயத்தைவிடவும் தேவனுடைய வல்லமையும் அன்பும் மகா பெரியது என்பதை உறுதிப்படுத்தும். பின்பு, மனோ காயம் அங்கே மீந்திருந்தாலும்கூட, இயேசுவின் வல்லமையையும் அழகையும் பற்றியதான தரிசனம் நமக்குள் உள்ள மனச்சீற்றத்தை கலைத்துப் போட்டு நாம் களிகூருவதற்கான காரணத்தை நமக்கு வழங்கும்.

முன்னதாக, நமக்கு இழைக்கப்பட்ட அநீதியினிமித்தம் நாம் அடைந்த கோபத்தை மேற்கொள்வதற்கு பிரதானமானது, தேவன் நம்மை நேசிக்க விடுவதாகும் என கூறியிருந்தேன். ஆனால் சிலவேளைகளிலே, அவரது அன்புக்கு உரியவர்களாய் இருப்பதற்கு, நமது காயங்கள் முதலிலே குணப்பட்டிருக்க வேண்டியது அவசியமானதாக இருக்கலாம்.

புதைந்திருக்கும் நமது காயங்களை மேலே கொண்டுவந்து குணமாகும்படியாகத் தேவனுடைய கிருபை அதன்மீது பிரயோகிக்கப்படுவதற்கு யாராவது ஒருவருடைய உதவியோ, ஆலோசனையோ தேவைப்படலாம். தேவனுட னான தங்களது நடையைப்பற்றி அக்கறை யுள்ளவர்கள் அவர்களது மனச்சீற்றத்தை மேற் கொள்வதற்கும், அவர்களது மனக்காயம் குணப்படுவதற்கும் ஆர்வமாய் மற்றவர்களுடைய உதவியை நாடுவார்கள்.

நம்மிலே அநேகருக்கு ஆட்தன்மையில் பலவீனங்கள் உண்டு. அது நம்மைச் சாத்தானின் தாக்குதல்களுக்குக் குறிப்பாக நம்மை ஊறுபடத் தக்கவர்களாக ஆக்குவதாயுள்ளது. அவற்றுக்கு நாம் விசேஷ கரிசனை கொடுத்து, அவற்றை மேற்கொள்வதற்கு நம்மாலான சகல உதவிகளையும் பெற்றுக்கொள்ளவேண்டும். மனச்சீற்றம் பல கிறிஸ்தவர்களுக்கு அப்படி யானதொரு பகுதியாகும்.

உள்ளத்தில் தேங்கியிருக்கும் கோபம் உங்களது களிப்பை எடுத்துப்போட்டு நீங்கள் பிறரைக் காயப்படுத்தும்படியாக விட்டுவிட வேண்டாம்!

தேவனிலே நம்பிக்கை கொண்டு, அவரது அன்பு மக்கள் உங்களுக்கு எதிராகச் செய்த கெட்ட காரியங்களினிமித்தம் உங்களது உள்ளத்தில் ஏற்பட்டிருக்கும் மனச்சீற்றத்தை விரட்டிப்போட இடங்கொடுங்கள்.

சத்தியவசனம்