Dr.தியோடர்.எச்.எஃப்
(செப்டம்பர்-அக்டோபர் 2011)

பொன் குத்துவிளக்கு

பரிசுத்த ஆவியின் ஏழு அம்சங்கள்

நான்காவதாக, இஸ்ரவேலரின் வரலாற்றில் இந்தக் குத்துவிளக்கு கொடுக்கப் பட்ட நேரம் மிகவும் முக்கியமானதாகும்.

இஸ்ரவேலர் வனாந்தரத்தில் இருந்தார்கள். இது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தை ஒப்பிடும்போது இருளும், அந்தகாரமும் நிறைந்த இடமாகும். கானான் தேசத்தில், ஒளிமிகுந்த தேசத்தில் இஸ்ரவேலர் இருக்கவேண்டும் என்பது தேவனுடைய திட்டம். இந்த அந்தகார உலகில் வாழும் நமக்குத் தேவையான எல்லாக் கிருபைகளையும் தருவதற்குக் கிறிஸ்து வல்லவர் என்பதை இது காட்டுகிறது. இந்த மாய உலகில் எங்கு நடப்பது என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அவ்வேளையில் கிறிஸ்து நமக்கு ஒளியைத் தந்து வழிகாட்டுவார். தமது வசனத்தின் மூலம் அவர் நம்மிடம் பேசுவார். நாம் எதைப் பார்க்க வேண்டுமோ, அதைப் பார்க்கச் செய்வார்.

வேதாகமம் விசுவாசிகளை ஒளியின் பிள்ளைகள் என்றும் அவிசுவாசிகளை அந்தகாரத்தின் பிள்ளைகள் என்றும் கூறுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசிகளிடம், சகோதரரே, இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப் போவதில்லை. சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக் கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே. நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறது போல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம். (1தெச.5:1-6)

அந்தகார லோகத்தில் விசுவாசிகளை தேவன் வழிநடத்துவது குறித்து சங்கீதம் 32:8 இவ்வாறு கூறுகிறது. நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

ஐந்தாவதாக, பொன்குத்துவிளக்கின் ஏழு கிளைகளும் ஏழு விளக்குகளைத் தாங்கிக் கொண்டிருப்பது, பரிசுத்த ஆவியானவருக்கு முன் அடையாளமாயிருக்கிறது. ஆசரிப்புக் கூடாரத்தினுள் இருக்கும் ஆவியானவர் கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார். இப்பொழுது ஒவ்வொரு விசுவாசியிடமும் ஆவியானவர் இருப்பதால், பவுல் கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு கூறினார். உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? (1கொரி.6:19) எனவே விசுவாசியின் சரீரம் பரிசுத்த ஆவியானவர் தங்கும் இடமாயிருக்கிறது. அவர் இயேசுகிறிஸ்துவை வெளிப்படுத்த அங்கே வாசம் செய்கிறார். இயேசு கிறிஸ்து, பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் (ஆவியானவர்) என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் (யோவா.16:15) என்றார். இன்று பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு விசுவாசியின் வாழ்விலும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

கிறிஸ்துவைக் குறித்து அதிகமான காரியங்களை நமக்குக் கற்பிப்பதுதான் ஆவியானவரின் வேலை. மகிமைப்படுத்தப்பட்ட தேவகுமாரன் இதைச் செய்கிறார். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் பரிபூரணத்தை நமக்கு வெளிப்படுத்தி, அவரை நம்வாழ்வில் ஜீவிக்கும் கிறிஸ்துவாக்க முயற்சிக்கிறார். இந்த ஊழியத்தின் மூலம் ஆவியானவர் ஆண்டவரை நாம் நேசித்து உறவாடச் செய்கிறார். இயேசுகிறிஸ்துவின் மேன்மையையும், மகத்துவத்தையும் நாம் கண்டு மகிழச்செய்ய பரிசுத்த ஆவியானவர் ஒருவரால் மட்டுமே முடியும்.

ஆறாவதாக, அந்தப் பொன்குத்துவிளக்கு சமுகத்தப்ப மேஜையின் எதிரில் வைக்கப்பட்டது. இதனால் அந்த மேஜையின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. ஆசாரியன் அந்த அப்பத்தை இருளில் அமர்ந்து சாப்பிட வேண்டியதில்லை. ஒரு விசுவாசி ஆவிக்குரிய அந்தகாரத்தில் இருந்துகொண்டு வேதாகமத்தை வாசிக்க வேண்டியதில்லை. பரிசுத்த ஆவியின் ஊழியம் கர்த்தருடைய வார்த்தையின்மேல் ஒளிவீசி, அதை வாசிப்பவர்கள் அதன் முழு விளக்கத்தையும், உட்கருத்தையும் அறிந்துகொள்ள உதவுவதே.

பரிசுத்த ஆவியானவரின் ஒளி கர்த்தருடைய வசனத்தின்மீது வீசும்போது, அது வாசிக்கிறவர்களுக்குத் தெளிவாகப் புரியும்படி அமைகிறது. எபி.4:12 இல் தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இரு புறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

கர்த்தருடைய வசனத்தின் மீது பரிசுத்த ஆவியானவர் ஒளி வீசிப் பிரகாசிப்பிப்பது இல்லையேல் அங்கு குழப்பமும், ஒழுங்கின்மையும் காணப்படும். பரிசுத்த ஆவியானவரின் கிரியையில்தான் ஒரு கிறிஸ்தவன் கிறிஸ்துவைத் தன் ஜீவ அப்பமாகக் கண்டுகொள்ள முடியும். விசுவாசி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, தன் ஜீவனத்துக்குத் தேவையான ஆசீர்வாதங்களனைத்தையும் பெற்றுக்கொள்ளவும், அவற்றில் செழித்து வளரவும் பரிசுத்த ஆவியானவரே காரணம்.

ஏழாவதாக, தங்கத்தினால் செய்யப்பட்ட, பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருக்கும் தூபபீடத்தின் மீது குத்துவிளக்கின் வெளிச்சம் வீசுவது மிகவும் முக்கியமானதாகும். இந்த வெளிச்சம் இல்லாமல், தூபபீடத்துக்கருகில் நின்று ஆசாரியன் ஊழியம் செய்ய இயலாது.

இந்தப் பொன் தூபபீடம் தேவனுக்கு ஆராதனை செய்வதைக் குறிக்கிறது. மேலும் ஜெபம், வேண்டுதல், விண்ணப்பம், மன்றாட்டு இவைகளும் தூபபீடத்தின் அருகில் செய்யப் படுகிறது. இங்கு பரிசுத்த ஆவியானவரின் சேவை மிகவும் தேவை. பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் ஒருவர் கர்த்தரைத் துதிக்கவோ, அவரிடம் விண்ணப்பம் செய்யவோ முடியாது.

புதிய ஏற்பாடு இவ்வாறு கூறுகிறது. அந்தப் படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார் (ரோமர் 8:26,27).

இந்நாளில் விசுவாசி நடத்தும் ஆவிக்குரிய போராட்டத்தில் அவன் பரிசுத்த ஆவியில் நிறைந்து ஜெபிக்கும்படி அவனுக்கு அறிவுரை கூறப்படுகிறது. எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன் பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள் (எபே.6:18) ஒருவர் ஜெபித்து, விண்ணப்பம் செய்யும்போது அவர் எதைக் கேட்கவேண்டும், எப்படிக் கேட்க வேண்டும் என்று ஆவியானவர் ஆலோசனை கூறுகிறார்.

நான் ஜெபிக்கும்போது பலமுறை இப்படிக் கூறியுள்ளேன் ஆண்டவரே, இதற்காக எப்படி ஜெபிக்க வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உம்முடைய சித்தம் செய்யப்பட வேண்டுமென்று விரும்புகிறேன். உம்முடைய சித்தம் பூரணமாக என்னில் நிறைவேறும்வரை, நான் திருப்தியடையவோ, சந்தோஷப்படவோ மாட்டேன். இப்படிப் பட்ட வேளைகளில் பரிசுத்த ஆவியானவர் நமக்காகப் பரிந்து பேசி பரமபிதாவிடம் நம் விண்ணப்பத்தை வைக்கிறார். நமக்கு எப்படி ஜெபிக்கவேண்டும் என்று தெரியாமல் இருந்தாலும்கூட பரிசுத்த ஆவியானவர் நம் தேவையை தேவனிடம் எடுத்துக்கூறி, நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கச் செய்து விடுகிறார்.