Dr.உட்ரோ குரோல்
(மார்ச்-ஏப்ரல் 2017)

மருத்துவரின் மருந்து சீட்டுக்கு நாம் மாத்திரைகள் வாங்கிவரும்பொழுதோ அல்லது வேறு சில பொருட்களை வாங்கிவரும்பொழுதோ அதனால் ஏற்படும் பின்விளைவுகளை நாம் கவனிப்பது வழக்கம். எந்தவொரு செயலுக்கும் அதற்கு சமமான ஒரு செயல் உண்டு. இயேசுவின் கல்வாரி மரண நிகழ்வுடனும் அநேக பின்விளைவுகள் நேரிட்டன. அவைகள் அனைத்தும் லூக்கா 23ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியிலிருந்து நாம் தேவனுடைய தன்மைகளை அறிந்துகொள்ளலாம்.

1. இயற்கையின் மீது அதிகாரம்

“அப்பொழுது ஏறக்குறைய ஆறாம் மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று” (லூக்.23:44). யூதர்களின் நாளானது மாலை 6 மணி துவங்கி மறுநாள் மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. ஆனால் ரோமர்களோ தங்களது நாளை காலை 6 மணிக்கு துவக்குகின்றனர். எனவே ஆறாம் மணிவேளை என்பது நண்பகலாகும். அதாவது காலை 9 மணிக்கு அவர் சிலுவையில் அறையப்பட்டார். சுமார் 3 மணிநேரமாக அவர் இரத்தம் சிந்தியவராய் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தார். ஒரு குற்றவாளி மூன்று மணி நேரமாக ஒரு சித்திரவதையை அனுபவித்துக்கொண்டிருந்தால் அது எவ்வளவு கொடூரமானதாக இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்!

நமது நாட்டில் ஒரு குற்றவாளிக்குத் தரப்படும் தண்டனை மனிதத் தன்மையுடையதாய் இருக்கும். ஆனால் ரோமர்களோ அதனை பேரச்சமுடையதாய் இருக்க விரும்பினர். அதிக வேதனையுடனும் தாங்கமுடியாத துயரத்துடனும் பலமணி நேரமாய் அவர் சிலுவையில் தொங்கினார். இப்பொழுது நண்பகலாகிவிட்டது. ஆதவனும் உச்சிக்கு வந்துவிட்டது. பாலஸ்தீனாவில் வெயில் கடுமையாய் இருக்கும். திடீரென்று ஒருவரும் எதிர்பாராததும் யாரும் அறியாததும் அப்பொழுது நடந்தது. நண்பகல் 12 மணிக்கு சூரியன் இருளடைந்தது. நம்பமுடியாத ஒரு இருள் சூழ்ந்தது. அது சில நிமிடங்கள் மாத்திரம் கிரகண இருள் அல்ல; மாறாக பூமியெங்கும் மூன்றுமணி நேரம் அந்தகாரமாயிருந்தது. எருசலேமில் உள்ள மக்கள் யாவரும் இருளில் தடுமாறினர்.

இந்த இருள் எவ்வாறு உண்டானது என வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை. அதைப்பற்றி நாம் கவலைப்படவும் அவசியமில்லை. ஏனெனில் தேவனே இதன் பின்னணியில் செயல்பட்டார். சூரியன் அவருடைய படைப்பு; அவரே அனைத்தையும் படைத்தவர். “நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்” என்று நாம் சங்கீதம் 115:3 இல் வாசிக்கிறோம். தம்முடைய ஒரேபேறான குமாரன் சிலுவையில் மரிக்கும்பொழுது அவர் சூரியனை நண்பகலில் மூன்று மணிநேரம் இருளடையச் செய்ய நினைத்தார். அவ்வாறே அதனை செய்தும் முடித்தார்.

இப்பகுதியிலிருந்து தேவன் என்னையும் உங்களையும் எவ்வளவாய் நேசிக்கிறார் என்றும் அவ்வன்பை வெளிப்படுத்த தம்முடைய நேச குமாரனை சிலுவையில் மரிக்கவும் ஒப்புக் கொடுத்தார். அவரது மரணத்தின் விளைவாக நண்பகலில் அந்தகாரத்தையும் உண்டாக்கினார் என நான் அறிந்துகொண்டேன்.

2.ஒப்புரவாக்கும் செயல்

இதைவிட ஆச்சரியமான மற்றொரு நிகழ்வு “தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது” என்று வசனம் 45இல் காணப்படுகிறது. சூரியன் இருளடைந்தது என்பது இயற்கையுடன் தொடர்பானது எனில் திரைச்சீலை கிழிந்தது ஆன்மீகத் தொடர்புடையது. இதுவும் வெளிப்படையான ஒரு நிகழ்வேயாகும். ஏனெனில் இது எருசலேம் தேவாலயத்தின் திரைச்சீலையாகும்.

எருசலேம் தேவாலயம் மூன்று பகுதிகளாகக் கட்டப்பட்டிருந்தது. ஆலயத்தின் கிழக்குப்பக்கம் மிகப்பெரிய திறந்தவெளி இருந்தது. அது பொதுமக்கள் மன்றமாகும். அங்கே செல்ல அனைவருக்கும் அனுமதி உண்டு. புறமத மக்களும் யூதர்களும் அங்கே ஒன்று சேர முடிந்தது. அதையொட்டிய இடம் பரிசுத்த ஸ்தலம். அங்கே ஆசாரியர்கள் மாத்திரம் செல்லமுடியும். புறமதத்தினரோ இஸ்ரவேலில் வாழ்ந்த பொதுமக்களோ அங்கே பிரவேசிக்க முடியாது. அதற்கு அடுத்தபகுதி மகா பரிசுத்த ஸ்தலம். அதற்குள் ஆசாரியர்களும் நுழைய முடியாது. பிரதான ஆசாரியன் மாத்திரமே அங்கு செல்ல அனுமதி உண்டு. ஏன்?

பரிசுத்த ஸ்தலமானது உடன்படிக்கை வைக்கப்பட்டிருந்த இடம். அங்கே தேவன் இஸ்ரவேலரை சந்தித்த இடம்; பழைய ஏற்பாட்டு காலத்தில் இங்கிருந்துதான் தேவன் இஸ்ரவேல் மக்களுடன் பேசினார்.

ஆண்டுக்கு ஒருமுறை பாவநிவாரண நாளில் பிரதான ஆசாரியன் மாத்திரம் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து யூத மக்களுக்காக பலிகளைச் செலுத்துவார். இது மிக முக்கியமான இடமாதலால் பிறமக்கள் பிரவேசிக்க முடியாதவாறு ஒரு மூடுதிரை இருந்தது. இத்திரையே இரண்டாகக் கிழிந்தது என நாம் வாசிக்கிறோம். இது சாதாரணமான ஒரு செயல் அல்ல. நாம் பரலோக தேவனை அணுகமுடியும் என்பதைத் தெரிவிக்கவே இத்தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது என நாம் அறிய வேண்டும். மேலும் அது மேலிருந்து கீழாகக் கிழிந்தது என வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசாரியர்கள் அத்திரையைக் கிழித்திருந்தார்களெனில் அது கீழிருந்து மேலாக கிழிந்திருக்கும். ஆனால் அது மேலிருந்து கீழாகக் கிழிந்தது. எனவே இது தேவன் ஒருவரால் மாத்திரமே செய்திருக்கமுடியும் என நாம் உறுதியாகக் கூறலாம்.

மகா பரிசுத்த ஸ்தலம் என்றால் என்ன? மகா பரிசுத்த ஸ்தலத்தைப் பற்றி விவரங்கள், பயன்பாடுகள், திரைச்சீலையின் பயன், அது கிழிக்கப்பட்டதன் நோக்கம் இவை அனைத்தையும் எபிரேயர் 9 ஆம் அதிகாரத்தில் நாம் விரிவாகக் காணலாம். “முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது. எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்து விளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும். இரண்டாந்திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது. அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன;” (9:1-5).

எபிரேய மொழியிலிருந்து பழைய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டபொழுது, (இதை நாம் செப்துஜுவன்ட் என்று அழைக் கிறோம்) ‘உடன்படிக்கைப் பெட்டியின் மூடி’ (கிருபாசனம்) என்ற சொல்லை விவரிக்க ‘கிருபாதாரபலி’ என்ற சொல்லை பயன்படுத்தினர். அதாவது ‘பாவங்களை நிவிர்த்தி செய்யும் பலி’ என்று பொருள்படும். இது இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணமே நம்முடைய பாவநிவாரண பலியாகும். உடன்படிக்கை பெட்டியில் நாம் தேவனை சந்திக்கிறோம். அது இஸ்ரவேல் நாட்டிலோ அல்லது வேறு எங்குமோ மறைத்து வைக்கப்பட்டுள்ள பெட்டியல்ல. அது நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையே குறிக்கிறது.

“இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள். இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான். அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப் போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார். … கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டி சம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ் செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியை களறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!” (எபி.9:6-11).

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தேவாலயத்தின் திரைச்சீலை வழியாக மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியன் மாத்திரம் பிரவேசிப்பார். மற்ற அனைவரும் வெளியே இருப்பார்கள். ஆனால் இயேசுவின் மரணத்தின்பொழுது இத்திரை கிழிந்ததால் அனைவரும் தேவனுடைய பிரசன்னத்துக்குள் வந்துவிட்டனர். தேவனிடம் நம்மைச் சேரவிடாது நம்முடைய பாவங்கள் தடுக்கின்றன. நாமும் தேவனுடன் பேசுவதற்கு ஆயத்தமாயிருப்பதில்லை. நம்முடைய பாவங்களுக்கான ஈடு தொகையை இயேசு செலுத்தியிராவிட்டால் நீங்களும் நானும் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் நுழையமுடியாது. இயேசுவின் மரணத்தினால் நம் அனைவருக்கும் தேவனை அண்டிச்சேரும் வாசல் திறக்கப்பட்டது.

3. அனைவருக்கும் அருளப்பட்ட விலையேறப் பெற்ற பரிசு

லூக்கா 23ஆம் அதிகாரத்தில் இயேசு, “பிதாவே!” என்று தேவனை அழைத்து, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். பிதாவாகிய தேவன் தம்முடைய மகனை தியாகபலியாக திட்டமிட்டே பலியாக்கினார். ஏனெனில் அவர் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறவர்.

இயேசு எதேச்சையாக சிலுவையில் மரிக்கவில்லை. பெத்லகேமில் உருவான அவரது வாழ்க்கை நாசரேத்தில் செலவிடப்பட்டு இறுதியில் கல்வாரியில் முடிந்தது. அவர் தேவனாயிருந்தபொழுது அவருக்கு சரீரமும் இரத்தமும் இல்லாதிருந்தது. ஆனால் கன்னிமரியாளிடத்தில் பரிசுத்த ஆவியானவரால் ஜெனிப்பிக்கப்பட்டு பெத்லகேமிலே மன்னுருவானார். சிலுவையில் அவர் மயக்கமடைந்து கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டு, மீண்டும் தெளிவடையவில்லை. அவருடைய மரணம் மாயத்தோற்றமுடையதல்ல. “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச்சொல்லி, ஜீவனை விட்டார்” (லூக்.23:46) என்று வேதவசனம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஜீவனை விட்டாரெனில் அவர் மரித்தார் என்று நாம் அறுதியிட்டுக் கூறலாம். ஒரு மனிதனைப்போல அவர் மரித்தார். நீங்களும் நானும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள அவர் தம்மை தியாகபலியாக ஒப்புவித்தார். “அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும் போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:6-8).

இயேசுவின் சிலுவை மரணத்தை தேவன் தவிர்த்திருக்கலாம். சிலுவையிலிருந்து அவரை இறங்கச்செய்து அவரது வலியையும் கொடூர வேதனையையும் விலக்கியிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மனுக்குலத்தில் ஈடேற்றப்பட்ட மிக மோசமான மரணத்தை தமது குமாரன் சந்திக்க அந்த அன்பான தேவன் அனுமதித்தார். ஏன்? நீங்களும் நானும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள திட்டம் வைத்திருந்தார். அடுத்த முறை உங்கள் வீட்டில் ஒரு தீ விபத்தோ அல்லது உங்களது இளவயது மகன் காரை ஓட்டி விபத்துக்குள்ளாகும்பொழுதோ அல்லது எதிர்பாராத இழப்புகள் நேரிடும்போதோ “தேவன் எங்கே?” என்று வினா எழுப்பாதீர்கள். “நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்” (சங். 115:3) என்று வேதம் பதில் தருகிறது. “உனக்காக என் மகனை சிலுவையில் மரிக்க ஒப்புவித்தபொழுது எங்கிருந்தேனோ அங்கேதான் இருக்கிறேன்” என்று உடனடியான இயல்பான விடையைத் தருவார். ஏனெனில் நான் அனைத்தையும் என் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறேன். உனக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். அதை நீ உணரமாட்டாய் என்பதை நான் நன்கு அறிவேன். எனது பண்புநலன்களை நீ அறிந்துகொள்; என்னை நீ நம்பலாம்” என்கிறார்.

அன்பான ஒரு தேவன் தம்முடைய ஒரே குமாரனின் மரணத்தில் பிரியமாய் இருந்திருப்பாரா? அந்த தியாகத்தைச் செய்வதற்கு அவர் எவ்வளவாய் மனதில் வேதனைப்பட்டிருப்பார்! ஏன்? இயேசுவின் சிலுவை மரணத்தினாலே நாம் நித்திய ஜீவனை அடைவதற்காக அவர் அதனை அனுமதித்தார். இந்த அன்பான தேவனை நாம் நேசிக்க வேண்டாமா? அவரை நேசிக்க அவருடைய தன்மைகளை நாம் அறிந்து கொள்ளவேண்டும். இந்த தேவனை வெளிப்படுத்துவது அவருடைய வார்த்தையான பரிசுத்த வேதாகமமே. இதனை நாம் நேசித்து, வாசித்து தியானித்து ஆராய்ச்சி செய்து அவருக்குப் பிரியமான பிள்ளைகளாக வாழ தீர்மானிப்போமா!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை


உங்களுக்குத் தெரியுமா!

பிலாத்து ஒரு மேல் விலாசத்தை எழுதி சிலுவையின் மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது. அவர் சிரசுக்குமேல் வைத்த இந்த விலாசம்தான் நற்செய்தியை அறிவித்த முதல் கைப்பிரதி எனலாம். ஏனென்றால் இயேசு என்றால் இரட்சகர் என்று அர்த்தம். ராஜா என்பது ராஜ்ஜியம் உடையவர் என்பதைக்குறிக்கும்.