ஜாண் ஹஸ் பொஹிமியாவிலுள்ள ஹசினக் என்ற இடத்தில் 1369-ம் ஆண்டில் பிறந்தார். பிராகுவே பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற இவர் தன்னுடைய 33-ம் வயதில் அதே பல்கலை கழகத்தின் தலைவரானார். ஜாண் விக்ளிப்பின் போதனைகளையும் புத்தகங்களையும் படித்து அதினால் சத்தியத்தை அறிந்தார். 1400-ம் ஆண்டு  குருவானவராக அபிஷேகம் பண்ணப்பட்டார்.

இவருடைய ஜீவியத்தால் அநேகர் கவரப்பட்டனர். நல்ல பிரசங்கி என பலரால் பாராட்டப்பெற்றார். போப்பின் அதிகாரத்திலிருந்து விடுபட வேண்டுமென ஆணித்தரமாக பிரசங்கித்தார். ஹஸ் சீர்திருத்த பிரசங்கங்களை அதிகமாக போதித்தபடியால் போப்பின் அதிகாரத்திற்கு பகையாளியாக மாறினார். போப் இவரை சபையிலிருந்து வெளியே தள்ளினார். சுமார் இரண்டு வருடங்கள் இவர் சபையைவிட்டு வெளியே வந்தாலும் கடிதங்கள் மூலமாக தன்னுடைய கருத்துக்களைப் பரப்பி வந்தார்.

1414-ம் ஆண்டு போப் இவரை கான்ஸ்டனஸ் என்ற சபை மன்றத்தில் விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டதின்பேரில் அதற்கு சம்மதித்து வந்தார். அவருக்குப் பாதுகாப்பு கொடுக்கப்படும் என உறுதி கொடுக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. ஜாண் ஹஸ் தனது கருத்துக்களை ஆலோசனை சங்கத்தில் எடுத்துரைக்க இது சரியான தருணம் எனக் கருதி அழைப்பாணையை ஏற்றுக்கொண்டு ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகச் சென்றார். அழைப்பாணை தனக்கு வைத்த பொறி என்பதை அவர் அறியாமல் இருந்தார்.

ஜாண் ஹஸ் ஒரு வார்த்தை பேசுவதற்குக் கூட வாய்ப்பளிக்காமல் ஆலோசனை சங்கத்திலிருந்த அத்தனை குருவானவர்களும் உடன்பட்டு அவரை சிறையில் அடைத்தனர். அவர்மீது குற்றச்சாட்டுகளை வனைந்தனர். அவர்மேல் நடந்த விசாரணையின்போது ஒவ்வொரு முறையும் பெருங்கூட்டத்தினரை கூடிவரச்செய்து கூச்சல் எழுப்பி அவர் என்ன பேசுகிறார் என்பதை கேட்கவிடாமல் ஆக்கினர். அவர்மேல் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு சரியான விளக்கமளிக்கவில்லையென முடிவு செய்தனர். இப்படியே எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் செய்து முடித்தனர்.

இறுதியாக தான் பேசிய சீர்திருத்த கொள்கைகள் தவறு என்றும் அதனை மறுதலிக்கும்படியும் கேட்டனர். அதற்கு அவர் மறுத்தத்தோடு மிகுந்த கண்ணீரோடு, “நான் தேவனாகிய கர்த்தருடைய பார்வையிலிருக்கிறேன். நீங்கள் விரும்புகிறபடி என்னால் செய்யமுடியும். ஆனால் உங்களைத் திருப்திபடுத்த விரும்பினால் நான் எப்படி என் தேவனைச் சந்திப்பேன்? நான் போதித்த ஆயிரமாயிரமான மக்களை நான் எப்படி சந்திப்பேன்? அவர்கள் வேதாகமத்தை நிச்சயத்தோடும் உறுதியோடும் அறிந்திருக்கிறார்கள். அப்படியிருக்க நான் உங்களுக்கு இணங்கிச்சென்று மோசமான முன்மாதிரியை எப்படி உண்டாக்கமுடியும்? அவர்களுடைய இரட்சிப்புக்கு முன்பாக என்னுடைய சரீரம் ஒரு பொருட்டல்ல” என்று கூறினார்.

ஆலோசனை சங்கம் உத்தவிட்டபடி, குருவானவர் உடையை எல்லா அலங்காரத்துடனும்  அவருக்கு உடுத்துவிக்கப்பட்டது. பின்னர் போதகப்பணியிலிருந்து அவர் நீக்கப்படுகிறார் என்பதற்கு அடையாளமாக ஒவ்வொரு உடையாக அவரிலிருந்து நீக்கப்பட்டது. கடைசியாக அவரது உச்சந்தலையில் தலைமுடி சவரம் செய்யப்பட்டிருந்த ஒரு அடையாளம் மாத்திரமே மிஞ்சியிருந்தது. அவரை சிறுமைப்படுத்தும் வகையில் ஒரு கத்தரியைக் கொண்டுவரச் சொல்லி உச்சந்தலையில் சவரம் செய்யப்பட்ட பகுதியின் தோலை வெட்டி எடுக்கக் கட்டளையிட்டனர். கடைசியாக ஆலோசனை சங்கம் அவரை உயிரோடு எரித்துக் கொல்லப்படத் தீர்ப்பளித்தது.

காவலர்கள் அவரை வெளியே அழைத்துச் சென்றனர். தண்டனை நிறைவேற்றப்படும்படி நகரத்திற்கு வெளியே அவரைக்கொண்டு சென்றனர். ஒரு பெருங்கூட்டம் மக்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். குறிப்பிட்ட இடம் வந்தனர். ஜாண் ஹஸ் முழங்காற்படியிட்டு 31-ம், 51-ம் சங்கீதங்களின் அடிப்படையில் விண்ணப்பத்தை ஏறெடுத்தார். “உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர். வீண்மாயைகளைப் பற்றிக் கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்” (சங்.31:5,6).

முழங்காலில் நின்ற அவரை இழுத்து நிறுத்தி ஒரு கம்பத்தில் நனைந்த கயிற்றால் கட்டினார்கள். ஒரு இரும்புச் சங்கிலியால் கழுத்தைக் கம்பத்தில் இறுக்கிக் கட்டினார்கள். தண்டனை நிறைவேற்று பவர்களைப் பார்த்து புன்முறுவலோடு, “என்னுடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து என்னிமித்தமாக இதைவிடக் கடினமானச் சங்கிலியால் கட்டப்பட்டார். இந்தத் துருபிடித்த சங்கிலியால் கட்டப்படுவதற்கு நான் வெட்கப்படவில்லை” என்று கூறினார்.

அவருடைய கழுத்துவரை விறகு கட்டைகளை அடுக்கினார்கள். கடைசியாக அவரது உபதேசத்தை மறுதலித்து அறிக்கை செய்யத் தருணம் கொடுக்கப்பட்டது. “என்னுடைய உபதேசத்தில் எந்தத் தவறும் இல்லை. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் கூறப்பட்ட சத்தியத்தின்படியே பாவத்திலிருந்து மன்னிப்பையும், மனந்திரும்புதலையும் எல்லா மக்களுக்குப் போதித்தேன். அந்த சுவிசேஷத்தின் காரணமாக மனநிறைவோடும் மரணத்தை சந்திக்கும் தைரியத்தோடும் நிற்கிறேன். நான் என் உதடுகளால் போதித்தவற்றை இப்பொழுது என்னுடைய இரத்தத்தால் முத்திரையிடுகிறேன்” (What I taught with my lips I now seal with my blood).

அடுக்கப்பட்ட விறகுக்கட்டைகளுக்கு தீயிடப்பட்டது. “ஜீவனுள்ள தேவனின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவே, என்மீது கிருபையாயிரும்” (Jesus Christ the son of the living God! Have mercy on me) என்று துவங்கும் பாடலை விறகுக் கட்டைகள் எரியும் சத்தத்தையும் மீறி உரத்தச் சத்தமாகப் பாடினார். எங்கும் பெரும் அமைதி நிலவியது. தண்டனையை நிறைவேற்றியவர்கள் மாத்திரமல்ல, இக்கொடிய காட்சியைக் கண்ட அனைவர் மத்தியிலும் இனம் தெரியாத அச்சம் ஆட்கொண்டது.

“உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்” (ரோமர் 5:3,4).