ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

ஜூலை-ஆகஸ்டு 2017

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

நம்முடைய அன்பின் பிரயாசங்களை மறவாத ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்வருடத்தின் மத்தியில் கடந்துவர தேவன் நமக்குச் செய்த கிருபைகளுக்காக அவரை ஸ்தோத்திரிக்கிறோம். “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (மாற்கு 16:15) என்ற மாபெரும் கட்டளையை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வேதாகமத்திற்கு திரும்புக ஊழியமானது கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தேவனுடைய கிருபையால் தன்னுடைய தரிசனத்தை நிறைவேற்றி வருகிறது. அமெரிக்காவில் லிங்கன் நெப்ராஸ்காவில் இயங்கிவரும் எமது பன்னாட்டு ஊழியத்தின் தலைமை அலுவலக பணிகளையும், தற்போது தலைமை பொறுப்பில் இருக்கும் வேத பண்டிதர் ரான் மோரே அவர்களையும் உங்கள் ஜெபங்களில் நினைக்க அன்பாய் கேட்கிறோம். குறிப்பாக இவ்வூழியத்தில் நிலவியுள்ள நிதிப் பற்றாக்குறை சரியாகவும் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்யுங்கள்.

சத்தியவசன விசுவாசப் பங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காத அன்பர்கள் உடன் புதுப்பிக்க அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஆதரவாளர்கள் திட்டத்தில் இணைந்து இவ்வூழியத்தைத் தாங்க அன்பாய் அழைக்கிறோம். ஜூலை மாதத்திலிருந்து நம்பிக்கை டிவியில் ஞாயிறுதோறும் நண்பகல் 12.30 மணிக்கு புதிய நிகழ்ச்சி ஒன்றை தொடங்கியுள்ளோம்.

இவ்விதழில் நமது கிறிஸ்தவ வாழ்வில் இருக்கவேண்டிய ‘நேர்மை’யைக் குறித்த கட்டுரையை Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதியுள்ளார்கள். தேவன் நம் ஒவ்வொருவருக்கும் அளித்துள்ள உக்கிராணப் பொறுப்பை விளக்கி ‘பொறுப்பு மிக்க பணி’ என்ற தலைப்பில் சகோதரி பவானி மகேந்திரன் அவர்களும், தேவன் நமக்கு கொடுத்த பணிகளைக் கணக்கொப்புவிக்க வேண்டிய அந்த நியாயாசனத்திற்கு முன்பாக நடப்பவைகளை ‘நியாயாசனத்திற்கு ஆயத்தமாயிருக்கிறேன்’ என்ற தலைப்பில் பாஸ்டர் ஜாண் மேக் ஆர்தர் அவர்களும், சீர்கெட்ட சமுதாயத்தில் சீஷனின் பொறுப்பாக நமக்குள்ள தகுதிகளை உணர்த்தும் வண்ணம் சகோதரி சாந்திபொன்னு அவர்களும் சிறப்புக் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம் என்ற தலைப்பில் வெளிவருகின்ற தொடர் வேதபாடத்தில் ‘விசுவாசமென்னும் கேடகம்’ என்ற செய்தியை விளக்கி Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதியுள்ளார்கள். இச்செய்திகள் அனைத்தும் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்