பொறுப்பு மிக்க பணி

பவானி மகேந்திரன்
(ஜூலை-ஆகஸ்டு 2017)

எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன். மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம் (1கொரி.4:1.2).

கிறிஸ்தவர்களாகிய நாம் எதை உக்கிராணத்துவம் என்கிறோம்? திருச்சபைகளில் நமக்குள்ள பதவிகளை மாத்திரமே உக்கிராணத்துவம் என்கிறோமா? அப்படி நாம் நினைப்போம் என்றால் அது தவறாகும். கிறிஸ்துவைத் தரித்துகொண்ட நாம் அனைவரும் நமது முழு வாழ்விலும் உக்கிராணக்காரர்களாக செயல்படவேண்டியது அவசியமாகும். அது சபையாக, குடும்பமாக, நாம் வேலை செய்யும் பணித்தளமாக, உறவினர்களின் வீடு, பள்ளி, நண்பர்களோடு உல்லாச பயணம் என எங்கு சென்றாலும் நமது உக்கிராணத்துவத்திலிருந்து தவறக்கூடாது. அப்படி தவறும்போது அது நமது சாட்சியுள்ள வாழ்க்கையை பாதிப்பது மட்டுமன்றி தேவனுடைய நாமமும் தூஷிக்கப்படுவதற்கு நாம் காரணர்களாகின்றோம்.

தேவன் நமது சரீரம், உணர்ச்சிகள் உறவுகள் ஆகியவற்றில் அதிக கரிசனை கொண்டுள்ளார். இவற்றினூடாக நம்மை சுற்றியுள்ளவர்களையும் தேவனுடைய ராஜ்யத்திற்கு நாம் ஆயத்தப்படுத்த வேண்டிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கின்றார். அநேக தடவைகளில் நமது சரீரம் நமக்கு தேவன் தந்த கொடை என்பதை நாம் மறந்துபோகின்றோம்.

வேதம் நமக்கு கூறுவது நமது சரீரம் தேவனுடைய ஆலயமே. இந்த ஆலயத்தை பராமரிப் பதில் நாம் எத்தனை பேர் அக்கறை கொள்கின்றோம். புகைத்தல், மதுபானம் அருந்துதல், சரீர இச்சைகளுக்கு இடங்கொடுத்து கொடையாகக் கிடைத்த சரீரத்தை கெடுத்துகொள்கின்றோம். இந்த சிறிய பொறுப்பைச் செய்வதில் தவறுகிறோம்.

அடுத்து நமது குடும்பங்களுக்கான நேரத்தைக் கொடுக்கின்றோமா? பெற்றார் பிள்ளைகளோடு செலவிடும் நேரத்தைப் பார்க்கிலும் பணம் சம்பாதிப்பதிலும், கணணியிலும், முகநூலிலும் நேரம் செலவிடுகிறோமா? வயது முதிர்ந்த பெற்றோரோடு பேசுவதற்கும் அவர்கள் கூறுவதைக் கேட்பதற்கும் நேரமளிக்கிறோமா? இவை யாவற்றையுமே தேவன் நம்மிடம் எதிர்பார்கின்றார். இவை யாவுமே நம்மிடம் தரப்பட்டுள்ள உக்கிராணத்துவ பொறுப்புக்களாம்.

உக்கிராணத்துவம்

இவ்விஷயமானது வேதாகமத்தில் ஆதியாகமத்திலேயே ஆரம்பமாகிறது. அதாவது அது இன்னொருவருடைய நிலத்தையோ பணத்தையோ சொத்தையோ நாம் பராமரிப்பதைப் பற்றியதாகும். ஆதி.1:1-ல் தேவன் சகலத்தையும் படைத்தார் எனவும், அவரே சகலவற்றுக்கும் சொந்தக்காரர் எனவும், அவருக்கு அனைத்தின் மீதும் உரிமை அதிகாரம் உண்டு எனவும் காண்கிறோம். ஆகவே வானம், மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள், சமுத்திரத்தில் உள்ளவைகள், பூமியின் கீழே உள்ளவைகள், மனிதன் என அனைத்தையும் படைத்து அவரே எல்லாவற்றையும் ஆளுகை செய்கின்றவராக இருக்கின்றார்.

உக்கிராணத்துவத்தின் முக்கியத்துவம்

உக்கிராணத்துவத்தைக் குறித்த வேதாகம வரைவிலக்கணமாக, மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலுள்ள உறவே உக்கிராணத்துவத்தை காண்பிக்கிறது. தேவனே அனைத்திற்கும் சொந்தக்காரர் (Owner) மனிதனோ வேலைக்காரன் (Labourer). இதை தான் பவுல் 1 கொரி.3:9-ல் “நாங்கள் தேவனுடைய உடன் வேலையாட்கள்” என குறிப்பிடுகிறார். ஆகவே கடவுளுடைய சொத்துக்கு பங்காளராகிய நாம் அதை எப்படி பராமரிக்கின்றோம் என்பது முக்கியத்துவம் வகிக்கின்றது. தலைமைத்துவம் வகித்தல், மற்றும் உக்கிராணத்துவ பொறுப்பு என்பது நமக்கு மனிதர்களால் கொடுக்கப்பட்ட ஒன்றல்ல. அதைத் தருபவர் தேவனே. ஆதி.1:28-ல் முதன்முதலாக “ஆண்டுகொள்ளுங்கள்” என்ற பொறுப்பு மனிதருக்கு தேவனால் கொடுக்கப்பட்டுள்ளது, ஆக அவரோடு சேர்ந்து வேலைசெய்வதற்கு நம்மை அவரே அழைத்திருக்கிறார்.

தேவன் தரும் உக்கிராணத்துவம்

உக்கிராணத்துவத்தால் தேவன் நம்மிடம் இருந்து ஒன்றையும் எடுப்பதில்லை. மாறாக, அவருடைய வேலைகளை நாம் செய்யக்கூடிய விதத்தில் வரங்களை, தாலந்துகளை திறமைகளை அவர் நமக்குத் தருகின்றார். அவர் இவற்றை நமக்குத் தந்துள்ளபடியினால் உக்கிராணத்துவத்தை நாம் அலட்சியம் செய்துவிட முடியாது. ஆகவேதான், நாம் எவ்வளவு படித்தவர்களாய் இருந்தாலும் எத்தனை பெலசாலிகளாய் இருந்தாலும் நமது சொந்த முயற்சியினால் உக்கிராணத்துவப் பணியில் ஈடுபடமுடியாது. உண்மையில் பிலிப்.4:13-ல் கூறுகின்றபடி, “அவருடைய பெலத்தினால் மாத்திரமே நம்மால் இதைச் செய்ய முடியும்.”

உக்கிராணத்துவத்தில் நமது முழுவாழ்வும் பங்குவகிக்கின்றது. நமது நேரம், பணம், உண்மைத்துவம், விசுவாசம், தசமபாகம், வரங்கள், திறமைகள், வாயின் வார்தைகள் என யாவும் உள்ளடங்குகின்றது. கடவுள் நம் ஒவ்வொருவரையும் வித்தியாசமான முறையில் உக்கிராணத்துவத்தை செய்ய அழைத்திருக்கிறார்.

ஆதி பெற்றோரிடம் பொறுப்பு

வேதாகமத்தில் அநேகருக்கு இந்த பொறுப்பை செய்ய தேவன் அழைத்துள்ளார். முதலாவதாக “ஆண்டுகொள்ளுங்கள்” என்று ஆதி பெற்றோருக்கு கொடுக்கப்பட்டது (ஆதி.1:28,29). ஆயினும் அந்த பொறுப்பினை முதல் மனிதன் சரிவர செய்யாமல் தவறினான். சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டு, “நீங்கள் தேவர்களைபோல் இருப்பீர்கள்” என்பதை நம்பி அவர்கள் கடவுளாக மாற ஆசைப்பட்டனர். இந்த விபரீத ஆசையினால் ஏதேன் தோட்டத்தில் தேவனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து ஆசீர்வாதங்களையும் இழக்க நேரிட்டது. கடவுள் கொடுத்திருந்த அழகிய தோட்டத்திலிருந்து பொறுப்பிலிருந்து துரத்திவிடப்பட்டார்கள்.

இன்று நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நமக்கு ஆண்டவர் தந்துள்ள பணியை நாம் செய்யாதபோது நாமும் ஆசீர்வாதங்களை இழந்துபோவது மட்டுமல்ல, அவருடைய மந்தையிலிருந்தும் துரத்திவிடப்படுவோம். ஆகவே, நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நோவாவிடம் பொறுப்பு

தேவன்  நோவாவிடமும் இத்தகைய பொறுப்பைக் கொடுப்பதைக் காண்கிறோம். ஆதி.9:2-ல் மறுபடியும் யாவையும் அவனிடத்தில் கையளிக்கின்றார். பொறுப்பாக கொடுக்கின்றார். இது கடவுள் மனிதனுக்கு கொடுத்த இரண்டாம் தருணம் எனவும் கூறலாம். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளுகின்ற விஷயமானது. மனிதனுக்கு இந்த முழு உலகத்தையும் பராமரிக்கும் பொறுப்பு தொடர்ந்தும் கொடுக்கப்படுகின்றது. அது கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம்; “பூமியும் அதின் நிறைவும் இந்த உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது” (சங்.24:1).

ஆபிராமிடம் பொறுப்பு

அடுத்து, தேவன் ஆபிராமை அழைத்து சில பொறுப்புகளை கொடுத்து அவரை ஆசீர்வதிக்கிறார். ஆபிரகாம் சரியான முறையில் கீழ்ப்படிகிறார். முதன் முதலாக தனக்கு கிடைத்த ஆசீர்வாதங்களிலிருந்து தசமபாகம் கொடுக்கின்றார் (ஆதி. 14:20). அத்துடன் தனது வீட்டிற்கு வந்த புதியவர்களை உபசரிக்கின்றார் (ஆதி.18). தேவனுடைய நோக்கத்தை மாத்திரமே நிறைவேற்றவேண்டும் என்ற வைராக்கியத்தோடு வாஞ்சையோடு அவர் செயற்படுவதைக் காண்கிறோம்.

இன்னும் பலரது வாழ்வில் பொறுப்பு

யோசேப்பு உண்மையும் உத்தமுமானவராக இருந்தமையினால், பார்வோனின் அரண்மனையிலுள்ள எல்லாம் அவருடைய கரத்தில் ஒப்புவிக்கப்பட்டது. ஆனால் அவர் தனக்கென்று மாத்திரம் அனுபவிக்காமல் நல்லதொரு உக்கிராணக்காரராக இருந்தார். இப்படி வேதாகமத்தில் ஒவ்வொரு தேவபிள்ளைகளிடமும் கொடுக்கப்பட்ட உக்கிராணத்துவத்தைப் பற்றித் தனித்தனியாக வேதாகமத்தில் நாம் படிக்கலாம். இன்று நம்முடைய தனிப்பட்ட வாழ்வையும் நமது ஆவிக்குரிய வாழ்வையும் ஆசீர்வதித்திருப்பவர் தேவனே என்பதை புரிந்துகொள்ள நாம் ஏன் திண்டாடுகிறோம்? அதை ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏன்? அவருடைய காரியங்களை யோசிப்பது ஏன்? அவருடைய வேலைகளைச் செய்ய ஏன் இன்று நமக்கு நேரமில்லை? சிந்திப்போம்.

அநேக கிறிஸ்தவர்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் தங்களை முற்று முழுவதுமாக ஆண்டவரிடம் அர்ப்பணித்திருப்பார்கள். ஆனால் பணம், வேலை, சொத்து என்று வரும்போது, அது நாம் உழைத்து சேர்த்தது என்ற எண்ணத்தோடு செயற்படுகின்றார்கள். அது தவறு. உண்மையில் உழைப்பதற்கான பெலத்தை நமக்குத் தருகிறவர் கடவுள். அதை செய்யக்கூடிய பெலத்தையும் அவரே தருகின்றார். அதில் பலனையும் அனுபவிக்க செய்கின்றார். நாம் அதற்கூடாக அவரை மகிமைப்படுத்த வேண்டும்.

தாலந்து உவமை

வேதாகமத்திலிருந்து உவமை ஒன்றை கவனிப்போம். மத்.25:14-19-ல் உள்ள இந்த உவமைக்கு நீங்கள் என்ன தலைப்பிடுவீர்கள்? நல்ல ஊழியக்காரன் என்றா? பிரயோஜனமற்ற ஊழியக்காரன் என்றா? இங்கே, எஜமான் தனது சொத்துக்களைப் பகிர்ந்துகொடுக்கிறார். அவர் தூரதேசம் சென்று திரும்பி வரும்போது தனக்காக பணியாளர்கள் தனது வேலைகளை செய்து முடித்திருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான முறையில் (5,2,1) தாலந்தைப் பகிர்ந்து கொடுக்கிறார்.

ஐந்து தாலந்தை வாங்கியவன் மேலும் ஐந்து தாலந்தை சம்பாதித்தான். இரண்டு தாலந்தை வாங்கியவன் மேலும் இரண்டை சம்பாதித்தான். ஆனால் ஒரு தாலந்தை வாங்கியவனோ, அதை கவனமாக புதைத்து வைத்தான். இதேமுறையில்தான் இன்றும் நம்மிடம் பொறுப்புக்களைத் தந்த நமது எஜமானாகிய ஆண்டவர் நீண்ட காலமாக இவ்விஷயத்தில் தலையிடாமலிருந்து வருகின்றார்.

ஒருநாள் இந்த எஜமான் வந்து தனக்குரிய காரியங்களை விசாரிப்பார். அவ்வாறே, ஒருநாள் நமது ஆண்டவரும் நம்மிடம் வந்து கணக்கு கேட்பார். அந்த நேரம் நமது பதில் என்னவாக இருக்கும்? நம்மைப் பார்த்து ஆண்டவர், “நல்லது” (Welldone) (மத்.25:23) என பாராட்டுவாரா? நீ இந்த சிறிய பொறுப்புகளில் உண்மையாயிருந்தாய் என கூறுவாரா? இந்த வேதாகம வார்த்தைகளைப் பார்க்கும்போது கொடுக்கப்படும் சிறிய பொறுப்புகளில் நாம் உண்மையாக நடந்துகொள்கிறோமா என்று ஆண்டவர் கவனிக்கிறார் என்பது தெளிவாகின்றது.

உண்மையாயிருந்தால்மட்டுமே அவர் பெரிய பொறுப்புக்களை நமக்கு தருவார். “நீ உண்மையுள்ளவன்(ள்) என்றெண்ணி பொறுப்புகளை உனக்குத் தருகிறார் (1 தீமோ. 1:12). உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படவேண்டும் அல்லவா! (1 கொரி.4:2) .

பொறுப்பை செய்யாவிட்டால்

உவமையின்படி, ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவன் ஒருவேளை சோம்பேறியாக இருந்திருக்கலாம். இது என்ன சிறிய பொறுப்புதானே என்றோ, நான் செய்யாவிட்டால் அதை மற்றவர்கள் செய்வார்கள் என்றோ, இந்த சிறிய தாலந்தை மறுபடியும் எஜமான் கேட்கமாட்டார் என்றோ அவன் யோசித்திருக்கலாம். அல்லது மற்றவர்களுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டதால் பொறாமையும் அடைந்திருக்கலாம். தனது பொறுப்பிலிருந்து தவறிய அவனுக்கு கிடைத்த தண்டனைகள் என்ன தெரியுமா? முதலில் அவனது உக்கிராணத்துவம் பறிக்கப்பட்டது. அத்துடன் புறம்பான இருளிலும் தள்ளப்பட்டான். அவ்வாறே பிரயோஜனமற்ற ஊழியக்காரன் என்ற பெயரும் பெற்றான் (மத்.25:30).

ஒரு தாலந்தை பெற்றுக்கொண்ட இவன் தனக்கு கொடுக்கப்பட்ட நல்ல தருணத்தை இழந்துபோனான். இன்று நாமும்கூட நமக்கு கொடுக்கப்படுகின்ற அநேக சந்தர்ப்பங்களை பலவித சாக்குபோக்குச் சொல்லி இழக்கின்றவர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

கணக்கொப்புவி

தேவனுடைய ராஜ்யத்திற்குரிய வேலைகளை, தரப்பட்டுள்ள பொறுப்புக்களை ஏனோதானோ என்றல்ல, எல்லாவற்றுக்கும் கணக்கு கொடுக்கவேண்டும் என்ற மனப்பான்மையோடு செய்வோம். ஏனெனில், நாம் தேவனுடைய ராஜ்ஜியத்திற்காக பணிசெய்யவே படைக்கப்பட்டுள்ளோம் (எபே.2:10). நமக்கென்று கொடுக்கப்பட்டுள்ள பணியை செய்துமுடிப்பதையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். அது சிறிய பணி அல்லது பெரிய பணி என்ற போட்டி மனப்பான்மை தேவையற்ற ஒன்றாகும்.

தாவீது ஒரு மேய்ப்பன். அவனுக்கு கொடுக்கப்பட்ட சிறிய மேய்த்தல் பணியை உண்மையோடு செய்தான் (1 சாமு.17:20). அவனது தகப்பன் யுத்தத்திற்குச் சென்ற சகோதரர்களைப் பார்த்துவிட்டு வரும்படி கூறியபோது, அவன் அதிகாலையில் எழுந்து தனது ஆடுகளை காவலாளிகள் பொறுப்பில் விட்டு செல்வதைக் காண்கிறோம். தனது சிறிய பொறுப்பில் உண்மையாயிருந்த தாவீதை கர்த்தர் உயர்த்தினார்.

ஏனெனில், நம் ஒவ்வொருவருடைய திறமைக்கேற்பவே அவர் வரங்களை அல்லது தாலந்துகளை தந்துள்ளார். அதைச் சிறப்பாக செய்து நிறைவேற்றும்போது நமது திறமைகளும் கூடும். பொறுப்புக்களும் கூடும். உண்மையில் நம்மை உயர்த்துபவர் கடவுள் மாத்திரமே.

இன்று பேருந்தில் நாம் டிக்கட் எடுத்து செல்வதுபோல வருவது வரட்டும் என நினைக்காமல், முழுபெலத்துடன் தேவ ராஜ்யத்திற்காக பிரயாசப்படவேண்டும். இல்லாவிட்டால், இயேசுவின் வருகையின்போது பொல்லாத ஊழியக்காரன் என்ற பெயர் எடுக்காமல் இருக்கவாவது வேலை செய்ய வேண்டும்.

பாவத்தினால் கறைபட்டு வீழ்ச்சியடைந்த உலகத்தில் வாழுகின்ற நாம், பணிசெய்வது அவ்வளவு இலகுவானதல்ல, பல தடைகள் வரக்கூடும். நாம் சிந்திக்கவேண்டியதெல்லாம், நாம் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவர்கள் என்பதை மட்டும்தான். அவரால் நமக்குத் தரப்பட்டுள்ளதே இந்தப் பணி. இது உலகத்திலுள்ளவர்கள் மூலம் தரப்படவில்லை. நாம் செய்யவேண்டிய பணியானது தேவன் நமக்கு தந்தது. இதற்கான கூலி இயேசுவின் வருகையின்போது நமக்கு நிச்சயம் கிடைக்கும் (கொலோ.3:23-24).

திருச்சபை பொறுப்பில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பதை தீத்து 1:7-9-ம் வசனம் தெளிவாக கூறுகின்றது. “கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும் தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபான பிரியமில்லாதவனும், அடியாதவனும் இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும் இச்சையடக்கமுள்ளவனும், ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்தி சொல்லவும், எதிர் பேசுகிறவர்களை கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்க வேண்டும்.”

இன்று நாம் எப்படி?

எனக்கு கொடுக்கப்பட்ட வரங்கள், திறமைகள், தாலந்துகள், ஆசீர்வாதங்கள், பொறுப்புகள் இவை யாவற்றையும் ஆண்டவருடைய மகிமைக்காக நான் பயன்படுத்துகிறேனா? எப்படி பயன்படுத்துகிறேன்? அதில் உண்மையுள்ளவனாக இருக்கிறேனா? என்னென்ன வரங்கள் என்னிடம் உள்ளன?

இன்று தேவன் என்னிடம் கொடுத்துள்ள பொறுப்புகளை அலட்சியம் செய்திருக்கின்றேனா? சாக்குபோக்கு கூறி தப்பிக்கின்றேனா? தவற விடுகின்றேனா? தேவன் தந்துள்ள பொறுப்புகளில் எதை நான் செய்யவில்லை? ஏன்? இந்த வருடத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட பணியை நான் உண்மையோடும் உத்தரவாதத்தோடும் செய்தேனா? கடந்த வருடத்தில் செய்தேனா? ஆம், என கூறுவீர்களாயின் அந்தப் பணியை கர்த்தர் ‘நல்லது’ (Welldone) என்று கூறுவாரா? உண்மையில் நான் ஒரு நல்ல ஊழியக்காரனா? பிரயோஜனமற்ற ஊழியக்காரனா? சிந்திப்போம். தீர்மானம் செய்வோம்.

மற்றவர்களைப் பிரியப்படுத்துவதற்காக நமது உக்கிராணத்துவத்தில் தவறியிருப்பின் இன்றே மனந்திரும்புவோம். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வளங்கள் எதுவாக இருப்பினும் அதில் உண்மையுள்ளவர்களாக இருப்போம். நாம் பொறுப்புடன் நடந்தால் இவ்வுலகம் நம்மைத் திரும்பிப் பார்க்கும் ஆண்டவரின் நாமம் மகிமைப்படும். “கொஞ்சத்தில் உண்மையாய் இருக்கும்போது நம்மை தேவன் அநேகத்தில் அதிகாரியாக வைப்பார்.”

தகுதியில்லாத நமக்கு  பணிகளை கொடுத்து தகுதிப்படுத்தும் கடவுளை நாம் மகிமைப்படுத்துவோமாக.

கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்கள் பணிகளில் இருப்பதாக!


உங்களுக்குத் தெரியுமா!

உயிரோடிருக்கும் கிறிஸ்துவுடன் ஒரு நேரடி அனுபவத்தைக் கொண்டவராகவும் அவருடைய இருதயமும் வாழ்வும் இரட்சகர் இயேசுகிறிஸ்துவினால் ஆளப்படுபவராகவும் இருப்பவரே ஒரு உண்மையான கிறிஸ்தவ சாட்சி!

சத்தியவசனம்