நேர்மை!

Dr.உட்ரோ குரோல்
(ஜூலை-ஆகஸ்டு 2017)

சமீபத்தில் ரீடர்ஸ் டைஜிஸ்ட் பத்திரிக்கை நடத் திய ஆய்வு ஒன்றினை வாசித்தேன். அவர்கள் 2624 மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியிருந்தனர். அதில் அவர்கள் கண்டறிந்த செய்திகள். தாங்கள் நலமுடன் இருந்தாலும் தங்களுடைய பணிக்கு உடல் நலமின்மை என்ற காரணத்தைக் காட்டி விடுமுறை எடுத்ததுண்டு என்று 63 விழுக்காடு மக்கள் தெரிவித்திருந்தனர். தங்களது அலுவலகத்திலிருந்து தங்களுடைய சொந்த உபயோகத்துக்கென்று சில சிறிய பொருட்களை எடுத்துச் செல்வது உண்டு என்று 63 விழுக்காடு மக்கள் ஒப்புக்கொண்டிருந்தனர். வேலைவாய்ப்புக்கென தவறான தகவல்களை தெரிவித்திருந்ததாக 18 விழுக்காடு மக்கள் கூறியிருந்தனர். இவர்கள் வேலைக்கு விண்ணப்பித்ததில் பொய் கூறியிருந்தனர். ஒரு அங்காடியின் காசாளர் கூடுதலாக பணத்தை தவறுதலாகத் தங்களிடம் கொடுத்துவிட்டால் அதை அவரிடம் திருப்பிக்கொடுக்கவோ மற்றவர்களிடம் சொல்லவோ மாட்டோம் என்று 50 விழுக்காடு மக்கள் ஒத்துக்கொண்டிருந்தனர். 28 விழுக்காடு மக்கள் தங்களுடைய வாழ்க்கைத் துணையிடம் தங்களுக்கு வேறொரு நபருடன் உறவு இருப்பதை மறைத்திருப்பதையும் அறிக்கையிட்டிருந்தனர்.

இக்காலத்தில் மக்களிடம் நேர்மையைக் காண்பது அரிதாக உள்ளது. ஏனெனில் நாம் வாழும் சமுதாயம் நேர்மையற்ற வாழ்வு நடத்துவதையே எதிர்பார்க்கிறது. சிலவேளைகளில் அதனை ஊக்குவிக்கவும் செய்கிறது. ஆனால், தேவன் நேர்மையற்றதை ஊக்குவிப்பவரல்ல. தேவனைப் பிரியப்படுத்திய, வாழ்க்கை என்னும் நதியைக் கடப்பதற்கு உதவும் ஒரு பெரிய கல் நேர்மையாக இருத்தலாகும். இந்த இதழில் அநேக காரியங்களை உங்களுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன்.

முதலாவது தேவன் நமது நேர்மையில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறார்.

நீங்களும் நானும் நேர்மையாளராக இருக்கும்பொழுது தேவன் மகிழ்ச்சியடைகிறார்.  கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம் (நீதி.11:1). “அதாவது நீங்கள் ஒரு கடையின் உரிமையாளர் என வைத்துக்கொள்வோம். உங்களுடைய வாடிக்கையாளர்களை தவறான எடைகளைக் கொண்டு நீங்கள் ஏமாற்றினால் தேவன் அதில் பிரியப்படமாட்டார். நேர்மையான எடைக்கற்கள் தேவனுக்குப் பிரியம்; இவ்விதமான நேர்மையற்ற செயல்கள் தேவனுக்கு அருவருப்பானது. “பொய் உதடுகள் கர்த்தருக்கு அரு வருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்” (நீதி.12:22).

இங்கு இரண்டு காரியங்களை காண்கிறோம். பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் வெறுக்கிறார். ஆனால் நீங்கள் உண்மை பேசும்பொழுது அவர் மகிழ்கிறார். “சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்” (நீதி. 16:11). மற்றவர்களிடம் நாம் நடந்துகொள்ளும் விதத்தையே இவ்வசனமும் விளக்குகிறது. வாழ்க்கைப் பயணத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டிய முக்கியமான ஒன்று: தேவன் நமது நேர்மையில் பிரியப்படுகிறார்.

நேர்மையாய் நடப்பது எளிதான ஒரு காரியம் அல்ல. அநேக வேளைகளில் நாம் உண்மையைக் கூறவோ அதை மறைக்கவோ அல்லது பொய்யுரைக்கவோ அல்லது நமக்குத் தெரிந்த அரை குறை உண்மைகளைக் கூறவோ பிறர் எதிர்பார்க்கின்றனர்.

இரண்டாவதாக நேர்மையாய் நடப்பவர்களுக்கு தேவன் அநேக வாக்குறுதிகளை அளிக்கிறார்.

இவைகள் வேதாகமத்தின் அநேக வசனங்களில் காணப்படுகின்றன. “சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம் பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்திய ஜுவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள். நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப்பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ, அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும் அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாகக் கிடைக் கும். உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்” (ஏசா.33:14-17).

இச்செய்யுள் பகுதி நீதிநெறியில் நடப்பவர்களுக்கும், நேர்மையானவற்றைப் பேசுபவர்களுக்கும் கிடைக்கும் ஆசீர்வாதங்களைக் கூறுகிறது. இதற்கு முந்தைய வசனங்களானது நீதிநெறியில் நடத்தல், கொடுமை செய்து பெற்ற வருவாயை வெறுத்தல், கையூட்டு வாங்காதிருத்தல் ஆகியவற்றின் அவசியத்தை விளக்குகின்றன. அரசரை மகிமை பொருந்தியவராய் காணுதல்! உயர்ந்த இடங் களில் வாசம்பண்ணுதல் என்பது உயர்வைக் குறிக்கிறது. அடைக்கலம் என்பது கன்மலையைப் போன்ற உறுதியான இடத்தையும் பாதுகாப்பையும் குறிக்கும். வாழ்க்கைப் பயணத்தில் உங்கள் துணைவருடனும், அயலகத்தாருடனும் வணிக பங்குதாரருடனும் ஆலய குருவானவர்கள் மூப்பர்கள், மற்ற ஊழியக்காரர்கள் ஆகியோரிடமும் உண்மை பேசவேண்டும். அன்போடு யாவருடனும் உண்மையைப் பேசுங்கள்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலமான மருத்துவர் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் உரைத்தது: “சமுதாய வாழ்வில் பொய் கூறுவது ஒரு முக்கியமான பகுதியாகும். இதைச் செய்யாத குழந்தைகள் வளர்ச்சி பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். குழந்தைகள் பொய்யுரைக்காவிட்டால் பொய்களை விரும்பும் இவ்வுலகில் அவர்களால் அனுசரித்துச் செல்லமுடியாது” இக்கூற்று உங்களுக்கும் அதிர்ச்சியை அளிக்கிறதல்லவா? ஆனால், இதுதான் உலக நடப்பு.

இவ்வுலகம் பொய்களின் பிதாவுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நீங்களும் நானும் வேறுபட்டவர்கள். நாம் சோதிகளின் பிதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளோம். சத்திய ஒளியானது இருளில் பிரவேசிக்கும் பொழுது அது இருளாகிய பொய்களை அகற்றிவிடும். தேவன் உங்களுடைய நேர்மையை மதிக்கிறார். அதற்கு நீங்கள் அதிக விலைகொடுத்தாலும் தேவன் அதையும் மதிக்கிறார். அவர் நேர்மையில் பிரியப்படுகிறவர்; நேர்மையான மக்களுக்கு சிறந்த வாக்குறுதியையும் தந்துள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு வாக்கெடுப்பு ஒன்றில் 56 விழுக்காடு மக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நேர்மையைக் கற்றுக்கொடுப்பதாகத் தெரிவித்தனர். அப்படியெனில் 44 விழுக்காடு மக்கள் அவ்வாறு செய்யவில்லை என்றல்லவா அர்த்தம்! வேதபுத்தகத்தை பாடத் திட்டத்திலிருந்து அந்நாடு அகற்றிவிட்டதால் நேர்மை போன்ற நன் மதிப்புகள் அழிந்துவிட்டன. ஆனால், தேவன் நேர்மையை மதிக்கிறார்.

புதிய ஏற்பாட்டு சபை நிறுவப்படும்பொழுது, “நான் நேர்மையை மதிப்பது மட்டுமல்ல; அவர்களுக்கு வாக்குறுதிகள் கொடுப்பது மட்டுமல்ல, நேர்மையை கிறிஸ்தவர்களின் ஓர் அம்சமாக முத்திரையிட்டுள்ளேன்” என்று ஆண்டவர் உரைக்கிறார். உங்கள் அயலகத்தாரிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டும் ஒரு பண்பு இந்த நேர்மையாகும். அவர்கள் உங்களிடம் நேர்மையாக நடக்கவில்லை எனினும் நீங்கள் ஒரு கிறிஸ்தவராய் இருப்பதால் நேர்மையாக இருக்கவேண்டும்.

கிறிஸ்தவ விசுவாசத்தின் ஓர் அம்சம் நேர்மையாகும். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் ஏன் பிரியமாயிருக்கிறார் என்பதை அப். பவுல் கொரிந்து சபை விசுவாசிகளுக்கு விளக்கும்பொழுது அவர் இரு மனிதர்களைப் பற்றி விவரிக்கிறார். அதில் ஒருவர் தீத்து. அவருடனே சென்ற மற்றொருவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை; ஆனால், அவர் நற்செய்தி ஊழியத்தில் எல்லா சபைகளிலும் புகழ்ச்சி பெற்ற சகோதரர் என்று குறிப்பிடுகிறார். அவர்கள் இருவரும் மக்கெதோனியா சபையிலிருந்து எருசலேம் சபைக்கு தர்மப் பணத்தை எடுத்துச் சென்றனர். “கர்த்தருக்கு முன்பாக மாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்” என்று 2 கொரி.8:21-ல் அப்.பவுல் தெரிவிக்கிறார்.

நீங்களும் நானும் ஒரு சபையாக, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் விசுவாசிகளாக வாழும்போது எல்லா மனிதர்களுக்கு முன்பாகவும் நேர்மையானவற்றைச் செய்யவேண்டும். தேவனுக்கு முன்பாக நேர்மையாக நடக்கிறோம் என்பதை நாம் அறிவோம். ஆனால், இவ்வுலகமும் அதனை அறியவேண்டும். நேர்மையானவர் என்று பெயரெடுக்க சில காலம் ஆகும். ஆனால், அதனை அழித்துப்போட அதிக நேரம் ஆகாது.

மூன்றாவதாக நேர்மையை ஒரு கிறிஸ்தவனின் அம்சமாக தேவன் முத்திரையிடுகிறார்.

“பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர் செய்கிற மாம்ச இச்சைகளை விட்டுவிலகி, புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங் களுக்குப் புத்திசொல்லுகிறேன்” (1 பேதுரு 2:11-12) என்று அப்போஸ்தலர் பேதுருவும் தமது நிருபத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நம்முடைய வாழ்க்கையைப் பற்றி எவரேனும் தவறாகக் கூறும்பொழுது பிறர் அதனை நம்பாமல் இருப்பதே நம்முடைய நேர்மையான வாழ்வுக்கும், நாம் ஒரு கிறிஸ்தவன் என்பதற்கும் அடையாளம். நம்மைப் பற்றி அவர்கள் கூறுவதை மற்றவர்கள் ஆமோதித்து, “ஆம்; கிறிஸ்தவளாகிய அவளை நான் நன்கறிவேன். அவள் ஒரு பைத்தியம். வேதாகம வகுப்புக்குச் செல்வாள். என்னிடத்தில் பொய்யே சொன்னதில்லை” என்று அனைவரும் சொல்லுவதே கிறிஸ்தவ விசுவாசத்தின் அம்சமாகும். தேவன் நம்மை நேர்மையானவர்களாக இருக்க விரும்புகிறார். அவர்களுக்கு அவர் பலனளிக்கிறார்.

எபிரேய நிருபத்தின் ஆசிரியர் “எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச் சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்” (எபி.13:18) என்று கேட்கிறார். அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த ஆபிரகாம் லிங்கன் நேர்மைக்குப் புகழ்பெற்ற ஓர் அரசியல்வாதியாவார். அவரை ‘நேர்மை அபி’ என்று அழைப்பார்கள். தமது 24-வது வயதில் அவர் இல்லினாஸ் மாகாணத்தில் நியூசலெம் என்ற இடத்தில் அஞ்சல் அதிகாரியாக பணியாற்றினார். அப்பொழுது அவருடைய வருமானம் ஆண்டுக்கு 555.70 ஆகும். அந்த அஞ்சலகம் 1836-ம் ஆண்டு மூடப்பட்டது.

பல வாரங்கள் கழித்து ஓர் அரசு அதிகாரி அங்கே வந்தார். தனது கணக்கின்படி அந்த அலுவலகத்திலிருந்து அரசுக்கு 17.00 டாலர் திரும்பக் கட்டவேண்டும் என்று லிங்கனிடம் கூறினார். உடனடியாக லிங்கன் ஒரு இரும்புப் பெட்டிக்கு அருகே சென்றார். அதைத் திறந்து அதிலிருந்து சிவப்புக்கயிறினால் கட்டப்பட்டிருந்த ஒரு பையை வெளியே எடுத்து அந்த அதிகாரியிடம் கொடுத்தார். அவர் அதனைத் திறந்தபொழுது அதில் 17.00 டாலர் இருந்தது. லிங்கன் எவ்வளவு நேர்மையானவர்!

உங்களுக்கு ரூபாய் 20 தரவேண்டிய இடத்தில் கூடுதலாக பணம் தந்திருந்தால் உங்களுடைய மனசாட்சி அதனை உறுத்துமா? சிறிய உலகக் காரியங்களிலும் உண்மையாயிருப்பதே ஒரு கிறிஸ்தவனின் அம்சம். நான் எட்டு வயது சிறுவனாயிருந்தபொழுது என்னுடைய தாயாருக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையுடன் ஓர் அன்பளிப்பு அளிக்க எண்ணினேன். என்னிடத்திலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மருந்துக் கடைக்குக் சென்றேன். அங்கு ஒரு காலன் வாசனை திரவியத்தை வாங்கினேன். அது நறுமணம் உடையதாயும் எல்லா பூச்சிகளையும் விரட்டக்கூடியதாகவும் இருந்தது. என்னிடத்திலிருந்த பணத்தை அங்கிருந்த அலுவலரிடம் கொடுத் தேன். 7 சென்ட் பணம் கூடுதலாகத் தேவைப்பட்டது. இச்சிறுவன் தனது தாயாருக்கென்று இதை வாங்குகிறானே என்று எண்ணி “பரவாயில்லை, 7 சென்ட் கிடைக்கும்பொழுது எனக்குத் தந்தால் போதும்” என்று கூறினார்கள்.

நாங்கள் ஊருக்கு வெளியே வசித்து வந்தபடியினால் இரண்டு வாரம் கழித்து அக்கடைக்குச் சென்றேன். அப்பெண்மணியே அங்கிருந்தார்கள். அவர்களிடம் அந்த 7 சென்ட் பணத்தைக் கொடுத்தேன். “இது எதற்கு?” என்று அவர்கள் கேட்டார்கள். “என்னுடைய தாயாருக்கென்று வாசனை திரவியம் வாங்கினபொழுது நான் தரவேண்டிய பாக்கி பணம்” என்றேன். உடனடியாக அப்பெண்மணிக்கு அந்நிகழ்வு நினைவு வந்தது.

நாம் கிறிஸ்தவர்களாய் இருப்பதால் மற்றவர்கள் நம்மைக் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று என்னுடைய பெற்றோர் கூறுவார்கள். ஆம், அது உண்மைதான். நம்முடைய ஆண்டவர் மாத்திரமல்ல, மற்றவர்களும் நம்மை கவனிக்கிறார்கள். அந்த வாசனை திரவியத்தைவிட என்னிடத்தில் காணப்பட்ட உண்மையை என் தாயார் பாராட்டினார்கள். வாசனை திரவியத்தைவிட நேர்மை உயர்வானது.

நம்முடைய பிள்ளைகளுக்கும் நாம் நேர்மையைக் கற்றுத்தரவேண்டும். அவர்கள் பொய் சொல்லும்பொழுதோ நேர்மையற்று நடக்கும் பொழுதோ நாம் அவர்களை அன்புடன் கண்டித்து திருத்த வேண்டும். சில தவறான காரியங்கள் உலகத்தின் வழிகளில் சரியாகத் தோன்றலாம். ஆனால் தேவனுடைய பார்வையில் அது தவறே. மற்றவர்கள் “அது, தவறுதான், ஆனால் நான் அதைச் செய்யவேண்டும்; என்னுடைய மேலதிகாரியின் கட்டளை; அது என்னுடைய பணியின் ஓர் அங்கம்” என்று சொன்னாலும் நாம் அதற்கு மாறுபட்டவர்களாய் இருக்கவேண்டும்.

நம்முடைய நடத்தை (Character) வேறுபட்டு காணப்படல் (Contrast) பின்விளைவுகள் (Consequences) ஆகியவற்றின் மூலம் நமது பணியிலும் நாம் கிறிஸ்தவர்கள் என்பதை வெளிப்படுத்தவேண்டும்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்