சீர்கெட்ட சமுதாயத்தில் சீஷனின் பொறுப்பு

சகோதரி சாந்தி பொன்னு
(ஜூலை-ஆகஸ்டு 2017)

சமுதாயம் சீர்கெட்டுவிட்டது. மனுஷருடைய ஒழுக்கம், நடத்தை, நல்வாழ்வு, நேர்மை எல்லாமே கெட்டுப்போனது. அக்கிரமத்தை அது அப்படித்தான் என்றும், கெட்டதைக் கேடில்லை என்றும் பாவத்தைப் பரவாயில்லை என்றும் நினைக்கின்ற, பேசுகின்ற, சாதிக்கின்ற அளவுக்கு மனிதனுடைய வாழ்வு இன்று சீரழிந்து கிடக்கிறது என்றால் அதை மறுப்பதற்கில்லை. இது இன்றைய நேற்றையப் பிரச்சனை அல்ல; ஏதேனிலே ஆரம்பித்தது இன்றும் தொடருகிறது என்றால் அது மிகையாகாது.

நோவாவின் காலம்:

“மனுஷனுடைய அக்கிரமம் பூமியில் பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதிற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; இது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது” ( ஆதி.6:5,6).

இது ஆதிகாலத்தில் நடந்தது. அன்றைக்கே கர்த்தர் இவ்வளவாய் மனஸ்தாபப்பட்டார். என்றால் இன்று அதிலும் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய கிறிஸ்துவைப் பாவ நிவாரணபலியாக ஒப்புக்கொடுத்துவிட்ட நிலையில், இன்று அவர் பூமியைப் பார்த்து எவ்வளவாய் மனமுடைவார் என்று கிறிஸ்தவர்கள் அல்ல, கிறிஸ்துவின் சீஷர்கள் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.

மனிதன் பாவத்தில் விழுந்தபோதும், தேவன் அவனை அழித்துப்போடாமல், ஏதேன் தோட்டத்துக்கு வெளியேதான் விட்டார். அதற்காக அவர்கள் பேரில் தாம் கொண்டிருந்த அநாதி திட்டத்திலிருந்து அவர் மனம்மாறவே இல்லை. இப்போது, “மனுஷர் பூமியின்மேல் பெருகத்துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது:…” (ஆதி.6:1) என்று வாசிக்கிறோம். மனுஷர் பெருக பாவமும் பெருகிற்று; அக்கிரமம் பெருகிற்று; நினைவுகளும் அவற்றின் தோற்றங்களும் பொல்லாததாக மாறிற்று. மனிதரோ தேவனோடுள்ள உறவைத் தேடுவதை விடுத்து, பாவத்தைத் தெரிந்துகொண்டதைத் தேவன் கண்டார், வேதனைப்பட்டார். ஒரு தகப்பனாக தம் பிள்ளைகளைக் குறித்து அவர் மனஸ்தாபப்பட்டார். நோவா காலத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், மனிதனுடைய பாவம் தேவனுடைய இருதயத்தை உடைத்து சுக்குநூறாக்கி விட்டிருந்தது.

ஆபிரகாமின் காலம்:

“சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்…” (ஆதி.18: 20) கர்த்தர் மனவேதனையடைந்தார். லோத்துவின் வீட்டுக்கு இரண்டு மனுஷர் வந்ததைக் கேள்விப்பட்ட அந்தப் பட்டணத்து வாலிபர் முதல் கிழவர் மட்டுமுள்ள அனைவரும் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, “அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா” (ஆதி.19:4-5) என்று கூக்குரலிட்டார்கள் என்றால் அவர்களின் ஒழுக்கம் நடத்தை அன்றைக்கே எவ்வளவாகச் சீர்கெட்டிருந்தது என்பதை நாம் உணரலாம். கர்த்தர் அந்தப் பட்டணங்கள் சுட்டெரிக்கப்பட விட்டுவிட்டார்.

யாக்கோபின் காலம்:

யாக்கோபின் மகள் தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டுப்போனது குடும்பத்தில் யாருக்கும் தெரிந்திருந்ததாக இல்லை. அவள் தேசத்துப் பெண்களைப் பார்க்கத்தான் புறப்பட்டுச் சென்றாள். ஆனால், அவள் எந்தப் பெண்ணையாவது கண்டாளோ இல்லையோ, அவளை ஒரு ஆண் கண்டான். அவன்தான் சீகேம். அவன் அவளைத் தன் இச்சைக்கு ஆளாக்கினான். விஷயம் தெரிந்தபோது தகப்பன் யாக்கோபோ, அண்ணன்மாரோ அவளை எதுவும் கேட்கவுமில்லை. அவளுக்கு ஆறுதல் கொடுக்கவுமில்லை. அவரவர் தங்கள் தங்கள் கோபத்தைக் காட்டிக்கொண்டார்கள். பெண்களுக்கு உரிமை உண்டோ இல்லையோ, ஒரு பெண்ணை மனுஷி என்று பாராமல் தங்கள் இச்சைக்கு உட்படுத்துகின்ற சமுதாயமா மனித சமுதாயம்? என்று எண்ணும்போது வெட்கமாயிருக்கிறது. இறுதியில் அந்த பட்டணமே இரத்தகளரியாகிற்று (ஆதி.34).

இன்றும் இந்தச் சீர்கேடு இருக்கிறது என்கிறதிலும், அதிகரித்திருக்கிறது என்கிறதிலும், மிக மோசமான விதத்தில் நடந்தேறுகிறது என்று நினைக்கும்போது மனித வர்க்கத்தின்மீதே வருத்தப்படாமல் என்னதான் செய்வது?

இஸ்ரவேலின் காலம்:

அடிமை வாழ்விலிருந்து மீட்கப்பட்டு, தேவனாகிய கர்த்தரிடத்திலிருந்து கற்பனைகளையும் நியாயப்பிரமாணங்களையும் பெற்றுக்கொண்டு, மோசே யோசுவா என்ற அற்புதமான தலைவர்களால் வழி நடத்தப்பட்ட இஸ்ரவேல் சந்ததியில் நடந்தது என்ன? களவு, பொய், விபச்சாரம், வேசித்தனம், கொலை, கொள்ளை என்றும், சண்டைகள் யுத்தங்கள் என்றும் எல்லாமே தொடர்ந்தது. நியாயாதிபதிகள் புத்தகம் 19 மற்றும் 20-ம் அதிகாரங்களைப் படித்துப் பாருங்கள். இவற்றுக்கும், இன்று நடைபெற்று வருகின்ற பல கேவலமான சம்பவங்களுக்கும் என்ன வேறுபாட்டை நாம் காணமுடியும்? இந்தச் சீர்கேடுகள் யாவும் தாவீது, சாலொமோன் என்று தொடர்ந்து ராஜாக்கள் யுகத்திலும் இடைவிடாமல் தொடர்ந்தது. ஒன்று மனுஷன் ஜனத்தொகையில் பெருகும்போது, அல்லது அவன் சுகமாய் ஜீவனம் பண்ணும்போது ஒழுக்கச்சீர்கேடும் வளர்ந்துகொண்டேதான் இருந்தது.

இன்றைய நாட்களில்:

மேற்கண்ட யாவும் அன்று நடந்தவை, இன்னும் அதிகமதிகம் உண்டு. ஆனால் இன்று அதா வது, நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணிய (ரோமர் 5:8) பின்னரும் இந்த ஒழுக்கச் சீர்கேடு இன்னும் அதிகமாகப் பெருகி வருவது துக்கத்துக்குரிய விஷயமல்லவா! பாவத்திற்கான விலைக்கிரயமாக, ஏக பலியாக இயேசு தம்மையே சிலுவையில் ஈந்து, மனுக்குலத்துக்கே பாவத்திலிருந்து மீட்பை அருளி விட்டார். இப்படியிருக்க கிறிஸ்துவுக்குள் புதிய மனுஷர் என்று விசுவாசித்து அதை அனுபவித்து வருகின்ற நாமும் சாத்தானின் வஞ்சக வலைக்குள் விழுவது தகுமா? என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவ சீஷனும் சிந்திக்கவேண்டும். இந்த ஒழுக்கச் சீர்கேட்டைக் குறித்துக் கொதித்தெழவேண்டிய நேரத்தில் நாம் குளிர்ந்துபோய் வாழுவது எப்படி?

அன்றாடம் குறைந்தது ஒரு கொடூர செயலை, அல்லது ஒரு பிள்ளையின் வாழ்வு சின்னாபின்னமாகிவிட்டது என்பது போன்ற செய்திகளைச் செவி மடுக்காத நாளே இல்லை எனலாம். முக்கியமாக விபசாரமும் கொலையும் சர்வ சாராணமாகிவிட்ட கொடுமையை என்ன சொல்ல! இப்படியாகப் பாவம் பெருகிவிட்ட இன்றைய சமுதாய அமைப்பிலே நாகரீகம் என்ற போர்வையில் மேல்நாட்டு நாகரீகங்களையும் மிஞ்சிவிட்ட காரியங்களையும் நன்மை என்று சொல்லி, நவீன தொழில் நுட்பங்களின் கோரப்பிடியில் சிக்கிச் சீரழிகின்ற கேடுகளையும், அறிவு பெருத்த நிலைமைகளையும், தடுமாறி நிற்கின்ற உறவு நிலைகளையும் திருட்டாய் மாறிவிட்ட திருமண பந்தங்களையும் இன்று இந்தச் சமூகத்தின் ஒழுக்க சீரழிவுக்குப் பட்டிமன்றம் வைத்து அனல் பறக்கப் பேசுவதற்கு நம்மில் பலர் தயாராய் இருக்கிறோம். ஆனால், பின்னர் நமக்கென்று வரும்போது இவற்றையே காரணங்களாகச் சுட்டிகாட்டியே தப்பிவிடுகிறோம்.

கிறிஸ்துவின் சீஷன்:

அடுத்தவன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்ப்பதற்கு முன்னர் நமது கண்களிலிருக்கிற உத்திரத்தை நீக்கிப்போடுவது நல்லதல்லவா? சமுதாயமும் முழுத்தேசமும் ஒழுக்கத்தில் தள்ளாடி நிற்கிறது என்றால் கிறிஸ்துவின் சீஷப்பிள்ளைகளாக அவர் பாதையில் நடக்க அழைக்கப்பட்ட நமது காரியம் என்ன? நமது பொறுப்பு என்ன? உலகத்தோடு ஒத்து, ஊதி, நாமும் இந்த வழியிலே விழுந்து போவோமா? அல்லது, இந்தச் சீர்கேடுகளை எதிர்த்துப் போராடுவோமா? அல்லது நமக்கு ஏன் வீண் வம்பு என்று விலகிப்போவோமா? ஆரம்ப கால சபைகளுக்குள்ளும் ஒழுக்கச் சீர்கேடுகள் இருக்கத்தான் செய்தன. பவுலடியார் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் சில வாக்கியங்கள் இதோ:

“அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்திலும் பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், பொல்லாதவைகளை யோசித் துப்பிணைக்கிறவர்களுமாய் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய்,  இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்”.

இதிலும் கொடுமை என்னவெனில், “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்” (ரோமர் 1:29,32).

இந்த ‘அவர்கள்’ யார்? ஒன்று, “சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷர்” (ரோமர் 1:18) இவர்கள் சத்தியத்தை அறிந்தும் அதைச் சத்தியமாக அறிவிக்கத் தவறுகிறவர்கள். அடுத்தது “தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்தரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானவர்கள்” (ரோமர் 1:21) இவர்களுடைய இருதயம் உணர்வற்றிருந்தது. அதே உணர்வற்ற தன்மை இன்று நம்மிடமும் காணப்படுவது சரியா? தேவனுடைய வார்த்தை எங்கே மறக்கப்படுகிறதோ, எங்கே புரட்டப்படுகிறதோ, எங்கே மறைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஒழுக்கச் சீர் கேடுகள் தலைநீட்டத்தான் செய்யும்.

இன்று இந்த சமுதாயத்துக்கு இயேசு காட்டிய வழி அல்ல; இயேசுவேண்டும். அவரைப் பிறருக்குக் காட்டவேண்டிய எங்களுக்கே வகை சொல்ல வேண்டியிருப்பது முதலாவது வெட்கத்துக்குரிய விஷயம். நாம் பல அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறோம், நல்லது. ஆனால் ஆண்டவர் எதற்காகப் பாடுபட்டாரோ, எதற்காகத் தமது இரத்தத்தை இந்தப் பாவ பூமியிலே சிந்தினாரோ, அந்த உன்னத செய்தியை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியத்தை இன்று கிறிஸ்தவர்கள் நாம் உணர்ந்திருக்கிறோமா? பல அலுவல்கள்,  எல்லாம் கிறிஸ்தவ அலுவல்கள். ஆனால், அவற்றின் நோக்கம் என்ன? எதற்காகச் செய்கிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது. ஒரே நொடியில் 300-க் கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அழித்துப் போட்டது; அவர்கள் மாண்டுபோனார்கள். இனி அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கத்தான் முடியுமா?

இயேசு காட்டிய வழி:

இவற்றைப் பார்த்தும் கேட்டும் அறிந்தும் நாம் மவுனமாயிருப்பது அநியாயம், வெறுமனே,  ‘ஐயோ பாவம்’ சொல்லி, ஒரு ஜெபம் செய்வதுடன் நமது பொறுப்பு முடிவடைய முடியாது. குற்றப்படுத்துவது மிக இலகு; அதேசமயம் குற்றத்தை உணர்த்தி சம்பந்தப்பட்டவர்களைத் தேவனிடம் வழிநடத்துவதே ஒரு கிறிஸ்தவனுக்கு அழகு. இயேசு அன்று அதைத்தான் செய்துகாட்டினார். விபசாரத்தில் கையும் மெய்யுமாய்க் கண்டுபிடித்தவளை இயேசுவின் முன்பாக நிறுத்தியபோது, ‘இவளுடன் விபச்சாரம் செய்தவன் எங்கே?’ என்று பல கேள்விகளைக் கேட்டு இயேசு தர்க்கம் செய்திருக்கலாம். ஆனால் தம்மில் குற்றம்பிடிக்கவென்று வந்தவர்களின் உள்நோக்கை அறிந்த இயேசுவோ அமைதலாகவே செயற்பட்டார். ‘உங்களில் பாவம் இல்லாதவன் முதலில் கல்லெறியட்டும்’ என்று சொல்லிவிட்டு, அவர் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றுகூடப் பார்க்கவில்லை. தலைகுனிந்து தரையில் எழுதினார். அன்று அந்தச் சம்பவத்தில் இயேசு, வந்த பரிசேயரின் குற்றத்தையும் அழகாக உணர்த்தி, தன் வாழ்வைச் சீரழித்தவளுடைய வாழ்விலும் ஒரு நம்பிக்கைக் கொடுத்து அனுப்பினார்.

சமாரியப் பெண்ணுடன் ஆண்டவர் இடைப்பட்ட விதம் அற்புதம், அவளைச் சுட்டிக்காட்டிக் குற்றப்படுத்தி, வேதனைப்படுத்தாமல், ஒரே கேள்வி, ‘உன் புருஷனை அழைத்து வா’ அத்துடன் அவளுடைய வாழ்விலே பெரிய மாற்றம் உண்டானது. எந்த ஊர் மக்களுக்குப் பயந்து, மற்றப் பெண்கள் வரமாட்டாத நேரம் பார்த்துக் தண்ணீர் மொண்டுகொள்ள வந்த இந்தப் பெண் இப்போ யாருக்கும் பயப்படாமல் ஊருக்குள் ஓடி, ‘என்னைப்பற்றி ஒருவர் சொன்னார்’ என்று தன்னையே வைத்துச் சாட்சிசொல்லி அறிவித்தாள் பாருங்கள். அங்கேதான் மனிதனுடைய சீர்கேட்டைக் கண்டு மனதுருகிய ஆண்டவருடைய அன்பு வெளித்தெரிகிறது.

இயேசுவின் சீஷனுடைய பொறுப்பு:

இன்றைய சமுதாய ஒழுக்க சீர்கேட்டை வரி சைப்படுத்தவேண்டிய அவசியமே இல்லை. திருச்சபையின் சீர்கேடுகளையும் வரிசைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. கர்த்தர் நம்மிடம், தமது பிள்ளைகளிடம் ஒரு எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார். அன்று மனுஷரின் பாவம் பெருகி. ஜலத்தினாலே தேவன் பூமியை நிர்மூலமாக்க நினைத்தபோது, அந்த சந்தர்ப்பத்திலும் கர்த்தர் ஒரு மனுஷனைக் கண்டாரல்லவா! அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான். பூமியில் வாழ்ந்த அத்தனை மனுஷரும் ஒழுக்கத்தைக் கெடுத்துப் போட்டிருக்க, அவன் தனியனாய் நின்று தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். அதன் பலன் அவனுடைய குடும்பமே காப்பாற்றப்பட்டது.

இன்று இத்தனையாய் ஒழுக்க சீரழிவுகளும், அக்கிரமங்களும் பாவமும் பெருகிவிட்டிருக்கின்ற இந்தக் காலப்பகுதியில், தேவன் நோவாவைப் போலல்ல, அவனிலும் உத்தமனாய், நடக்கையில் பரிசுத்தமுள்ள, தேவனுக்கு மாத்திரமே உண்மையுள்ள ஒருவனைக் கர்த்தர் காண்பாரோ? அவர் தம்முடைய ஒரேபேறான குமாரனையே பலியாக ஈந்து பாவத்தின் சங்கிலியை உடைத்தெறிந்து விடுதலை தந்தபின்னரும், இந்த விடுதலையை அனுபவிக்கிறவர்கள் தேவனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணலாமா?

முதலாவது இன்று தேவன் நம்மைத் தமது இருதயத்துக்கு ஏற்றவராகக் காணமுடியுமா? முடிந்தால் நம்மிடம்தான் பொறுப்புத்தருகிறார். ஒழுக்கத்தில் தவறிப்போகிறவர்களைச் சுட்டிக்காட்டி அவமானப்படுத்தாமல், அவர்களுடைய வாழ்வில் விழுந்திருக்கிற கீறல்களை நாம் கண்டுகொள்ள முயற்சிப்போமாக. அன்புக்கு ஏங்கி, ஆதரவுக்காக கெடுத்துப்போட்டவர்கள் அநேகர், அவர்கள்மேல் மனதுருக்கமுள்ள சீஷர்களைத்தான் தேவன் தேடுகிறார். நாம் அதற்குத் தகுதியானவர்களா?

சத்தியவசனம்