விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்

Dr.தியோடர் எச்.எஃப்.
(ஜூலை-ஆகஸ்டு 2017)

5. விசுவாசமென்னும் கேடகம் (எபேசி.6:14-17)

ஒரு விசுவாசி அணியவேண்டிய சர்வாயுத வர்க்கத்தில் நான்காவது பகுதி “விசுவாசம் என்னும் கேடகம்”. வேதாகமம் கூறுகிறது: “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய் எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாகயும் நில்லுங்கள்” (எபேசி.6:16). “பொல்லாங்கன்” என்பது “பொல்லாதவனாகிய சாத்தானைக்” குறிக்கிறது. இந்த வசனத்தில் காணப்படும் “எல்லாம்” என்னும் இரண்டு சொற்றொடர்களைக் கவனியுங்கள்.

1. அக்கினியாஸ்திரங்களையெல்லாம்,

2. எல்லாவற்றுக்கும் மேலாக.

“எல்லாவற்றுக்கும் மேலாக” என்று குறிப்பிட்டிருப்பது ‘கேடகம்’ என்பது சர்வாயுதவர்க்கத்தின் பாகங்கள் எல்லாவற்றிலும் மேலானது என்பதைக் காட்டுகிறது. ‘கேடகம்’ என்பது சரீரம் முழுவதற்கும் பாதுகாப்பளிப்பது. விசுவாசியின் ஆவிக்குரிய கேடகம் அவனுடைய ஆளத்துவத்தின் ஒவ்வொரு பகுதியையும் பாதுகாக்கிறது. விசுவாசம் என்னும் கேடகம் என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. அவரே நமக்குப் பாதுகாப்பளிக்க தேவனால் அனுப்பப்பட்ட கேடகமாயிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் மீது நமக்கு உள்ள பூரணமான நம்பிக்கை காரணமாகத்தான் சாத்தானின் வஞ்சகமான தாக்குதல்களிலிருந்து நாம் காக்கப்படுகிறோம். ஆவிக்குரிய நமது போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவதற்கான அடிப்படை இயேசு கிறிஸ்துவின்மீது நமக்குள்ள விசுவாசமே. வேதாகமம் கூறுகிறது: “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?” (1யோவா.5:4,5). நாம் ஜெயங்கொள்ளுகிறவர்கள்; ஏனென்றால் நம்முடைய விசுவாசம் இயேசுகிறிஸ்துவில் இருக்கிறது. ஏனெனில் அவரே “விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிறார்” (எபி.12:1).

எபே.6:16-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் விசுவாசியின் ‘விசுவாசம் என்னும் கேடகத்துக்கு’ இணையான சுவையான ஒரு சம்பவம் பழைய ஏற்பாட்டில் இருக்கிறது. அக்காலத்தில் “ஆபிராம்” என்று அழைக்கப்பட்ட ஆபிரகாம் தன்னுடைய வேலைக்காரரும் ஊழியக்காரருமான 318 பேருடன் சென்று தன் உறவினனான லோத்துவை எதிர்த்துத் தாக்கிய நான்கு இராஜாக்கள், அவர்களுடைய சேனைகள் இவர்களை எதிர்த்துப்போரிட்டான். அந்த நான்கு இராஜாக்களையும் ஆபிரகாம் தோற்கடித்து லோத்துவைக் காப்பாற்றியது தேவனுடைய வல்லமையும், உதவியும் ஆபிரகாமைத் தகுதிப்படுத்தியதற்குக் காரணமாகும். ஆபிரகாமும் அவனுடைய ஊழியக்காரரும் அந்தப் போரில் வெற்றியடைந்தார்கள். அவர்கள் திரும்பி வரும்போது யுத்தத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை எடுத்துக்கொள்ளும்படி சோதோமின் இராஜா கூறினான். அதைக்கேட்ட ஆபிரகாம் உங்கள் கொள்ளைப்பொருளில் ஒரு காலணியின் வாரைக்கூட நான் எடுத்துக்கொள்ளமாட்டேன். நான் கொள்ளைப்பொருளாகக் கொடுத்ததனால்தான் ஆபிரகாம் ஐசுவரியவான் ஆனான் என்று கூறும்படி நான் இடம் கொடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டான் (ஆதி.14:23).

இந்த வெற்றிக்குப் பிறகு தோற்கடிக்கப்பட்ட இராஜாக்கள் தங்கள் படைகளுடன் மீண்டும் தாக்க வருவதற்கு வாய்ப்பிருந்தது. இது குறித்து ஆபிரகாமின் மனதில் ஒரு பயம் ஏற்பட்டது. எனவே ஆபிரகாமுக்குப் பாதுகாப்பு தேவைப்பட்டது. அப்பொழுது தேவன் ஆபிரகாமிடம் பேசி அவனைத் தைரியப்படுத்தினார். ஆதி.15:1-ல் “இந்தக் காரியங்கள் நடந்த பின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்”. இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது, தேவன் ஆபிரகாமிடம் “உன்னுடைய கேடகத்தை எடுத்துக்கொள்” என்று கூறவில்லை. ஆனால் “நான் உனக்குக் கேடகமகாயிருக்கிறேன்” என்றார். இதன்மூலம் தேவன் ஆபிரகாமுக்குப் பாதுகாவலனாக இருப்பதாக வாக்குறுதி அளித்தார். இதற்குக் காரணம் ஆபிரகாமுக்குத் தேவன் பேரில் உள்ள விசுவாசமே.

சங்கீதக்காரனாகிய தாவீது, “கர்த்தரே எனக்குக் கேடகம்” என்றான்.  “நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்” (சங்கீதம் 33:20). சங்.119:114-ல் இப்படிக் கூறப்பட்டுள்ளது. “என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்”. நீதி.30:5-ல் இப்படிப் பார்க்கிறோம். “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்”.

யோபு, “தேவன் என் அடைக்கலமானவர்” என்று கூறாவிட்டாலும், அவன் இந்த உண்மையைத் தன் அனுபவத்தில் கண்டு கொண்டான் என்பது தெளிவு. அவன் தன்னுடைய பொறுக்க முடியாத பாடுகள், வேதனைகள் மத்தியிலும் கூட அவனால் இப்படிக் கூறமுடிந்தது. “அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்”. யோபு தொடர்ந்து தேவனைக்குறித்து இப்படியும் கூறினான். “ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10).

“விசுவாசம் என்னும் கேடகம்” என்று கூறும்போது, ஒரு விசுவாசி தான் போகுமிடம் கொண்டுசெல்லும் ஒரு பொருள் அல்ல என்பதை நாம் நினைவிற்கொள்ளவேண்டும். சாத்தான் எப்போது, எந்தக் கோணத்திலிருந்து விசுவாசியின் மீது தாக்குதல் தொடுப்பான் என்று தெரியாதபடியால், ஒரு கேடகத்தை அணிந்துசெல்வது விசுவாசிக்குப் பயனற்றதாயிருக்கும். நாம் சற்றும் எதிர்பாராத நேரத்தில் சாத்தான் நம்மைத் தாக்குவான். அவனது தாக்குதல் நமது அறிவையும் திறமையையும் சார்ந்ததாக இருக்குமானால், நம்மால் அதை எதிர்கொண்டு நிலைத்து நிற்கமுடியாது. ஒரே நேரத்தில் எப்பக்கத்திலிருந்து சாத்தானுடைய தாக்குதல்கள் வந்தாலும், அனைத்தையும் ஒரே நேரத்தில் சந்தித்து நம்மைக் காக்கவல்ல விசுவாசக் கேடகமே மேலானது. ஒரு விசுவாசிக்கு இயேசுகிறிஸ்து இப்படித்தான் கேடகமாயிருந்து காக்கிறார். எபேசியர் நிருபம் முழுவதும் நாம் திரும்பதிரும்பக் காணும் சத்தியம் ‘நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம்’ என்பது. கொலோ. 3:3 இவ்வாறு கூறுகிறது. “ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது”. விசுவாசி கிறிஸ்துவின் பின்னால் மறைந்துகொண்டிருக்கவில்லை. கிறிஸ்துவின் அருகில் பக்கத்திலும் நின்று கொண்டிருக்கவில்லை. ஆனால் “கிறிஸ்துவுக்குள்” இருக்கிறான் (எபே.1:1).

பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் “கிறிஸ்துவுக்குள்” இருக்கவில்லை. சங்.139:5-ல் சங்கீதக்காரன் கூறுவதைப் பாருங்கள். “முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்” இது புதிய ஏற்பாட்டு விசுவாசிகளின் அனுபவமாகும்.

எபே.6:16-ன்படி விசுவாசி தன்னுடைய விசுவாசம் என்னும் கேடகத்தின்மூலம் சாத்தானுடைய எல்லா தாக்கும் அஸ்திரங்களையும் அவித்துப்போடவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.” இதில் “அக்கினியாஸ்திரங்களை” என்றுமட்டும் கூறவில்லை. அக்கினியாஸ்திரங்களையெல்லாம் என்று குறிப்பிட்டிருப்பதைக் கவனியுங்கள். இயேசுகிறிஸ்துவில் நமது விசுவாசத்தைச் செயல்படுத்தும்போது இதைச் செய்கிறோம்.

தேவன் தமக்குச் சொந்தமானவர்களுக்கு அரைகுறையான பாதுகாப்பை அளிப்பதில்லை. அவர் நமக்குச் செய்வேன் என்று சொன்னதை பூரணமாக விசுவாசிக்கும்போது, நமக்குப் பூரணமான பாதுகாப்பு கிடைக்கிறது.

இது ஒரு விசுவாசக் கேடகம் என்பதைக் கவனியுங்கள். தேவன் நமக்கு வாக்குத்தத்தம் செய்துள்ள நன்மைகளை விசுவாசத்தின் மூலம் நாம் பெற்று அனுபவிக்கும்போது, நாம் “விசுவாசக் கேடகத்தைப்” பயன்படுத்துகிறோம். உதாரணமாக ரோமர் 6:14 சொல்லுகிறது: “நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல், கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவம் செய்யலாமா? கூடாதே!”.

நாம் நம்முடைய விசுவாசம் அல்லது நம்பிக்கையை இந்தச் சத்தியத்திலும் ரோமர் 6-ம் அதிகாரத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் வேறு சத்தியங்களிலும் வைத்திருப்போமானால், நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பாவத்தின்மீது வெற்றிபெறுவோம்.  விசுவாசமே தேவனிடத்திலிருந்து நாம் பெறும் ஒரு ஈவு. அது கர்த்தருடைய வசனத்தின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. ரோமர் 10:17-ல் சொல்லப்பட்டிருக்கிறதைப் பாருங்கள்.

“ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்”. நாம் வேதாகமத்தை ஆழ்ந்து படித்தால் நாம் விசுவாசத்தில் ஓங்கி வளருவோம். ஏனெனில் வேதவசனங்கள் மூலம் தேவன் சொன்னவைகளையும் செய்தவைகளையும் அறிந்துகொள்ளுவோம்.

விசுவாசம் என்னும் கேடகத்தின் மூலம் பொல்லாங்கானாகிய சாத்தான் நம்மீது எய்யும் அக்கினியாஸ்திரங்கள் “எல்லாவற்றையும்” அவித்துப்போடவேண்டும். எபே.6:16 சார்லஸ் B.வில்லியம்ஸ் இந்த வசனத்தை இப்படி மொழி பெயர்த்திருக்கிறார். “விசுவாசம் தருகிற கேடகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதைக் கொண்டு பொல்லாங்கனாகிய சாத்தான் உங்கள்மீது எய்யும் தீப்பந்தங்களை நுனியில் கொண்ட அம்புகள் அத்தனையையும் அவித்துவிட முடியும்”. அவிக்கப்பட வேண்டிய தீப்பந்தங்களுடன் வரும் சில அம்புகளைப் பற்றிப் பார்ப்போம். சாத்தான் எய்யும் அம்புகள் என்பவை நம்மை வீழ்ச்சியடையச் செய்ய சாத்தான் அனுப்பும் சோதனை முயற்சிகளாகும். அவன் நம்முடைய வாழ்வின் பல்வேறு அம்சங்களைக் கையாளுவான். அவற்றின்மூலம் நம்மை விழச்செய்ய முயற்சிப்பான்.

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்