Dr.உட்ரோ குரோல்
(செப்டம்பர்-அக்டோபர் 2017)

பரலோகத்துக்கு நேரான பந்தய ஓட்டத்தில் மூன்று வகையான கிறிஸ்தவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

• சில கிறிஸ்தவர்கள் தங்களைப் போன்று பந்தய ஓட்டத்தில் கலந்துகொள்ளாத மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். அவர்களைக் குறித்து இவர்களுக்கு அக்கறையும், கரிசனையும் இல்லை. அவர்களைக் குறித்த பாரமும் இவர்களிடம் இல்லை.

• இரண்டாவது வகைக் கிறிஸ்தவர்கள் தங்களோடு பந்தய ஓட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களைக் குறித்த கரிசனை உள்ளவர்கள். இவர்களிடம் ஜீவ அப்பமும், ஜீவ தண்ணீரும் உண்டு. இதை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலாய் இருக்கிறார்கள்.

பரலோகத்துக்கு நேரான பந்தய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் கிறிஸ்தவர்களில், கலந்து கொள்ளாதவர்கள் மீது கரிசனை கொள்ளுகிறவர்கள், இழந்து போனவர்கள் மீது இரக்கம் கொள் ளும் மனநிலையைப் பெற்றிருக்கிறார்கள்.

• மூன்றாவது வகைக் கிறிஸ்தவர்கள் பரலோகத்தை நோக்கி ஓடும் பந்தய ஓட்டத்தில் ஓடுவார்கள். ஓட்டத்தில் கலந்துகொள்ளாத மற்றவர்களைக் குறித்து அதிகக் கவலையும், கரிசனையும், பாரமும் கொள்ளுவார்கள். இப்படி இவர்கள் கொள்ளும் கரிசனையும் பாரமும் மனிதர்களுடைய பாராட்டை மட்டுமல்ல, தேவனுடைய பாராட்டையும் பெற்றுத் தரும்.

இழந்துபோனவர்கள்மீது கரிசனையும், கவலையும் பாரமும் கொள்ளாதவர்கள் தேவனுடைய இருதயத்துக்குப் பிரியமானவர்கள் அல்ல. அவர்களுடைய அழைப்பையும் விண்ணப்பத்தையும் தேவன் கேட்கவும் மாட்டார்.

பரலோகத்துக்கு நேரான ஓட்ட பந்தயத்தில் கலந்துகொள்ளுகிறவர்கள் கொஞ்சம்கூடப் பாரம் சுமக்க மனதில்லாமல், தங்களுடைய தேவைகளைப்பற்றி மட்டும் சிந்தித்துக் கொண்டிருப்பார்களானால், சாத்தானோடுள்ள போராட்டங்களில் தோல்வியைச் சந்திப்பார்கள். குறைவான பாரம் சுமப்பது ஒரு ஆபத்தான காரியம். நாம் வழியில் நின்று, அதைச் சரிசெய்து கொள்ளவேண்டும் என்னும் அளவுக்கு அது பாரமானதல்ல. சில கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தின் இறுதிவரை, சிறிய பாரத்தையே சுமந்து செல்லத் தங்களை அர்ப்பணித்துள்ளார்கள்.

பரலோகத்துக்கு நேரான பந்தய ஓட்டத்தில் ஓடிக்கொண்டே, கலந்துகொள்ளாதவர்களைக் குறித்தும் ஆழ்ந்த கவலை கொள்ளுகிற கிறிஸ்தவர்கள் “இழந்துபோனவர்கள் மீது இரக்கம் கொள்ளுகிறவர்களாய்” இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் கொண்டிருக்கும் பாரத்தின்படி தேவையில் இருப்போருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்னும் மனநிலை உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

தம்மைச் சுற்றி இருந்தவர்கள்மீது இயேசு இரக்கம் காட்டியது குறித்து எண்ணற்ற உதாரணங்கள் புதிய ஏற்பாட்டில் நற்செய்தி நூல்களில் உள்ளன.

• மத்.20:34: இரண்டு குருடர்கள் இரக்கம் பெற்றார்கள்.

• மாற்கு 1:41: குஷ்டரோகி சுகமாக்கப்பட்டான்.

• மாற்கு 5:19: அசுத்த ஆவி பிடித்த மனிதன் விடுதலை பெற்றான்.

• மாற்கு 6:34: பசியோடிருந்த 5000 பேருக்கும் அதிகமானோருக்கு உணவளித்தார்.

• மாற்கு 8:2: பசியோடிருந்த 4000 பேருக்கு உணவளித்தார்.

• மாற்கு 9:22: ஊமையும் செவிடுமான ஆவி சிறுவனிடமிருந்து துரத்தப்பட்டது.

• லூக்.7:13: நாயீன் ஊர் விதவையின் மகனை உயிரோடெழுப்பி, தாயின் கண்ணீரைத் துடைத்தார்.

மனிதர்களின் மாம்சப்பிரகாரமான தேவை களை இயேசு இரக்கம் பாராட்டி, பூர்த்திச் செய்ததை இந்தச் சம்பவங்கள் நமக்கு  விளக்குகின்றன.

ஆனால், இயேசுவின் மாபெரும் பாரமும், மாபெரும் இரக்கமும் அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளின் மீதுதான் இருந்தது.

ஒலிவ மலையிலிருந்து இயேசு எருசலேமுக்கு நேராகச் சென்றபொழுது, “அவர் சமீபமாய் வந்த போது, (எருசலேம்) நகரத்தைப் பார்த்து அதற்காகக் கண்ணீர்விட்டு அழுதார்” (லூக்.19:41) இயேசு எருசலேமிலிருந்த யூதர்களின் குருட்டாட்டத்தைக் கண்டு வேதனைப்பட்டார். இப்படி இரக்கம் கொள்ளும் மனநிலைதான், இழந்துபோனவர்கள்மீது நம்மைப் பாரம் கொள்ள வைக்கிறது.

இயேசு தமது சீஷர்களிடம் சொன்ன ஒரு காரியம்  நம் அனைவருக்கும் தெரியும். “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்” (மத்.9: 37). இயேசு இந்த வார்த்தைகளைக் கூறும்படி அவரைத் தூண்டியது என்ன என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதற்கு முந்தின வசனத்தைப் பாருங்கள். (மத்.9:36): “அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்து போனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி” என வாசிக்கிறோம். மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்த இந்தத் திரளான மக்களைக் கண்டபோது இயேசு அவர்கள்மேல் இரக்கம்கொண்டு “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்” என்று கூறினார்.

திரளான மக்கள் கூட்டமாகிய, பாவிகளான நம்மீது தேவன் கொண்ட இரக்கம்தான், அவரை நம்மீது பாரம்கொள்ள வைத்தது. இந்த உண்மை நாம் எல்லாரும் அறிந்த, பிரசித்திப்பெற்ற ஒர் வசனத்தில் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது:

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16).

இரட்சிக்கப்படாதவர்கள் மீது அவர் கொண்ட பாரத்தின் பலனாகத்தான் “இரட்சிப்பின் திட்டம்” உருவாயிற்று. தேவனுக்கு இவ்வுலகின் மீதிருந்த அன்பு இதன்மூலம் வெளிப்பட்டது.

அதிகமான இரக்கம், அதிகமான பாரத்தைத் தருகிறது. அதிகமான பாரத்தை நம்மால் சுமந்து கொள்ளமுடியாது. அது கவனிக்கப்படவேண்டும். இழந்துபோனவர்களுக்காக ஒரு கிறிஸ்தவன் கொள்ளும் இரக்க மனப்பான்மை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அதேயளவு அதிகமாக அவர்கள்மீது பாரமும் இருக்கும். இப்படிப்பட்ட பாரத்தைச் சுமந்துகொண்டே நாம் வாழமுடியாது. அதன் மீது நாம் கிரியைச்செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம் அப்போஸ்தலர் 17-ம் அதிகாரத்தில் உள்ளது. பவுல் தெசலோனிக்கேயாவில் உள்ள ஒரு ஜெப ஆலயத்தில் அதிக காலம் பிரசங்கம் செய்திருந்தார். இறுதியில் அவர் அங்கிருந்து வெளியே தள்ளப்பட்டார். அந்த நகரமே கொந்தளித்தது. பவுலும், சீலாவும் அங்கிருந்து பெரோயாவுக்கு உயிர்தப்ப ஓடவேண்டியதாயிருந்தது. இரவோடிரவாக ஓடினார்கள். மனம் தளராமல் பவுல் பெரோயாவில் உள்ள ஜெப ஆலயத்திலும் பிரசங்கம் பண்ணத் தொடங்கினார். இதைக் கேள்விப்பட்ட தெசலோனிக்கேயாவிலுள்ள சில யூதர்கள் பெரோயாவுக்கு வந்து அங்கேயும் பவுலுக்கு எதிராகக் கலகத்தை மூட்டிவிட்டார்கள்.

எனவே சீலாவும், தீமோத்தேயுவும் பெரோயாவிலேயே தங்கியிருந்தார்கள். பவுலை அங்கிருந்து தெற்கே உள்ள அத்தேனே பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்.

இழந்துபோனவர்கள் மீது உண்மையான பாரம் இல்லாமல் ஊழியத்தில் ஒன்றும் சாதிக்க முடியாது. தேவனுடைய உண்மையான, உத்தம ஊழியனாயிருக்க இது ஒரு முக்கியமான அம்சம் ஆகும். கொஞ்சக் காலத்துக்குள் பவுல் இரண்டு ஆபத்தான சூழ்நிலைகளைச் சந்தித்தார். அத்தேனே பட்டணத்தில் ‘அறியப்படாத தேவனுக்கு’ என்று மக்கள் வழிபட்டுவந்த தேவன் இயேசுவே என்று போதித்தார்.

அப்.17:16-ல் “அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப்பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து” என்று வாசிக்கிறோம். இதைக் கண்ட பவுலால் சும்மா இருக்கமுடியுமா? பொறுத்துக்கொள்ள முடியுமா? இது இயேசு கிறிஸ்து இல்லாத நகரமாயிருக்கிறது. முற்றிலும் விக்கிரக ஆராதனைக்கு அடிமைப்பட்டிருந்தது. அவர் ஆவியில் கலங்கினார். அவரால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் சத்தியத்தை அறிவிக்காமல் இருக்க முடியாது.

இதுதான் இரக்கம்கொள்ளும் ஆவி. பவுலினிடத்தில் அத்தேனே பட்டணத்தார்மீது ஒரு பாரம் உண்டாயிற்று. இந்தப் பாரமும் கவலையும் பவுலைத் தன்னுடைய வீட்டில், அறையின் சொகுசையும் வசதியையும் விட்டுவிட்டு ஜெப ஆலயத்தில் யூதர்களைச் சந்தித்து அவர்களுடன் வாக்குவாதம் பண்ணச்செய்தது. அங்கிருந்து யூதர்களால் வெளியே தள்ளப்பட்டார். அப்பொழுது சந்தை வெளிகளில் சந்தித்த ஆட்களுடன் பவுல்  சம்பாஷித்தார்.

அறிவிலும் புத்திகூர்மையிலும் சிறந்தவர்களான அத்தேனே பட்டணத்தார் தேவனைப் பற்றிய கருத்தில்மட்டும் இவ்வளவு பின்தங்கி இருந்ததைக் கண்டு பவுல் மிகவும் கவலைப்பட்டார். அவருடைய இருதயம் கலக்கமடைந்தது. இழந்தவர்களுக்காக அவர் கொள்ளும் பாரத்தையும், இரக்கத்தையும் இது காட்டிற்று.

ஸ்காட்லாந்து தேசத்தில் டண்டீ என்ற இடத்தில் இருந்த தேவ ஊழியர் இராபர்ட் முர்ரே மெக்கெய்ன் இந்த உலகத்தில் இருந்த மிகச் சிறந்த தேவ ஊழியர்களில் ஒருவர். அவர் தன் இருதயத்தையே வெளிப்படுத்தி நற்செய்தியை அறிவித்து வந்தார். தேவன் அவரை 29 வயதிலேயே எடுத்துக்கொண்டார்.

ஒருதடவை ஒரு ஊழியக்காரர் ஸ்காட்லாந்தில், டண்டீயில் மெக்கெய்ன் போதகரின் சபை யைப் பார்க்க வந்தார். அவர் ஆலயத்தினுள் நுழைந்து மேடையில் பிரசங்க பீடத்தின் முன் நின்றார். ஆலயம் வெறுமையாயிருந்தது. பின் பக்கத்தில் ஆலயத்தின் உதவியாளர் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவர் இந்தப் புதிய போதகரைக் கண்டதும் அவரிடம் வந்து, “நீங்கள் போதகர் மெக்கெய்ன் அவர்களைப்போலப் பிரசங்கம் செய்ய விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். வந்தவர் “ஆம்” என்றார். அப்பொழுது வயதானவரும், அனுபவசாலியுமான அந்த சபை உதவியாளர் “அப்படியானால் என்னுடன் வாருங்கள்” என்று அழைத்தார்.

மெக்கெய்ன் போதகர் உட்கார்ந்து படிக்கும் அறைக்கு அழைத்துச்சென்றார். அது அவர் விட்டுச் சென்ற அதே நிலையில் இருந்தது. அந்த உதவியாளர் அந்தப் புதியவரிடம், “அந்த ஆசனத்தில் அமருங்கள்” என்று கட்டளையிட்டார். போதகர் அந்த ஆசனத்தைச் சுற்றிவந்து அதில் அமர்ந்தார். “உங்கள் கைகளின் முழங்கைகளை முன்னால் உள்ள டெஸ்கில் ஊன்றுங்கள்” என்றார். போதகர் அப்படியே செய்தார். “உங்கள் கைகளைக் குவித்து உங்கள் முகத்தை இருகைக்களுக்குள்ளும் பதியுங்கள்” என்றார். விருந்தாளி அப்படியே செய்தார்.

“இப்பொழுது உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடட்டும். உருக்கமாக ஜெபியுங்கள். போதகர் மெக்கெய்ன் செய்வது இதுவே” என்றார்.

இழந்துபோனவர்கள் மீது உண்மையான பாரம் இல்லாமல், ஊழியத்தில் ஒன்றும் சாதிக்க முடியாது. தேவனுடைய உண்மையான உத்தம ஊழியனாயிருக்க, இது ஒரு முக்கியமான அம்சம் ஆகும்.

“கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்து கொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்” (சங்.126:5,6).

மொழியாக்கம்: G.வில்சன்