Dr.தியோடர் வில்லியம்ஸ்
(நவம்பர்-டிசம்பர் 2011)

மற்றவர்கள் நம்மை ஒதுக்கிவைக்கும் பொழுது, அல்லது வேண்டுமென்றே நம்மை அடக்கி வைக்கும்பொழுது பாதுகாப்பற்ற ஒரு உணர்வுக்குள்ளாகிவிடுகிறோம் அல்லவா. அப்பொழுது பயம் நம்மை ஆட்கொள்ளுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும்கூட ஆண்டவர் நம்மைப் பார்த்து பயப்படாதிருங்கள் என்று தானே கூறுகிறார்.

லூக்கா 2ஆம் அதிகாரத்திலே உள்ள கிறிஸ்துமஸ் சம்பவத்திலே பயப்படாதிருங்கள் என்றுதான் கூறுகிறார் (லூக்.2:8). அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

இந்த மேய்ப்பர்கள் யார்? ஒருவேளை தேவாலயத்திலே பலிகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஆடுகளை அவர்கள் மேய்த்துக் கொண்டிருந்திருக்கலாம். ஏனென்றால் பெத்லகேமுக்கும் எருசலேமுக்கும் அவ்வளவு தூரம் இல்லை. அவர்கள் இந்த ஆடுகளைக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அதுமட்டுமல்ல, அன்றைய சமுதாயத்திலே மேய்ப்பர்கள் வரம்பில் வைக்கப்பட்டவர்கள். சாதாரண மக்களைவிட கீழானவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள். வழக்கு மன்றங்களிலே அவர்களுடைய வாக்கு செல்லாது. மத சம்பந்தமான கூட்டங்களிலே அவர்களுக்கு மதிப்பு கிடையாது. தேவாலயத்திற்கோ ஜெப ஆலயத்திற்கோ அவர்கள் வர முடியாது. அவர்கள் அசுத்தமானவர்கள், தீட்டுள்ளவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலே திடீரென்று அவர்களுக்கு இவ்விதமான ஒரு தரிசனம் கிடைக்குமானால், ஒரு அனுபவம் கிடைக்குமானால் அது அவர்களை கலக்கியிருக்கும் அல்லவா! அதிலே ஆச்சரியமில்லை.

அதுமட்டுமல்ல, 400 ஆண்டுகளாக கடவுளின் வெளிப்பாடு இல்லை, வெளிச்சம் இல்லை. கடவுள் தீர்க்கதரிசிகள் மூலமாக பேசுகிறதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையிலே சாதாரண மக்கள், ஒதுக்கப்பட்டவர்கள், தீட்டுப்பட்டவர்கள் அவர்களுக்கு இப்படிப்பட்டதொரு தரிசனம் கிடைத்திருக்குமானால் அது அவர்களை கலக்கிவிட்டது.

அருமையான சகோதரனே, சகோதரியே நம்முடைய வாழ்க்கையிலே இப்படித்தான் அநேக வேளைகளிலே நம்மைநாமே தள்ளி வைத்து விடுகிறோம். ஆனால் தேவன் நம்மைத் தள்ளிவைக்கமாட்டார். அவரிடத்தில் வருகிற யாரையும் அவர் தள்ளுவதில்லை என்று சொல்லியிருக்கிறார் அல்லவா. எனவே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உன்னை ஒருபோதும் தள்ளமாட்டார். அவருடைய திட்டத்திலே குப்பைக்கூடைகள் அவர் வைத்ததில்லை. உன்னைத் தூக்கி குப்பைக் கூடையிலே போட்டுவிடமாட்டார். நான் தகுதியற்றவன், தீட்டுப்பட்டவன் என்று அநேகமுறை நம்மைநாமே ஒதுக்கிவிடுகிறோம். நம்முடைய பெயரைக் கிறுக்கிப் போடுகிறோம். ஒருபொழுதும் அப்படி செய்யக் கூடாது. உங்கள் பெயரை நீங்கள் கிறுக்கிப் போடக்கூடாது. கர்த்தர் அவ்வாறு செய்ய மாட்டார். அவர் நம்மெல்லாருக்கும் ஆதரவு தந்து, அங்கீகரித்து நமக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்தித் தருகிறார். அவர் மீட்பர் அல்லவா! இதுதானே கிறிஸ்துமஸ் செய்தி!

இதை வாசித்துக் கொண்டிருக்கும் அருமையான தம்பி, தங்கையே, ஒருவேளை உன் வாழ்க்கையிலே ஏற்பட்ட ஒரு பெரிய தோல்வியினாலே அல்லது பாவத்தினாலே நீ உன்னையே ஒதுக்கி வைத்திருக்கிறாயா? நான் ஒன்றுக்கும் உதவமாட்டேன். ஆண்டவரும் என்னைத் தள்ளிவிடுவார். மனிதர் என்னை வெறுக்கிறார்கள். எனக்கு அவமானமாய் இருக்கிறது என்றெல்லாம் எண்ணி உன்னுடைய பெயரை நீ கிறுக்கிப் போட்டிருக்கிறாயா? தற்கொலை செய்யக்கூட நீ எண்ணியிருக்கலாம். இதோ கர்த்தர் உன்னோடு பேசுகிறார். நீ அவ்வாறு செய்யக்கூடாது, அவர் உன்னைத் தள்ளிவிடுவதில்லை. இந்த மேய்ப்பர்களைப் பாருங்கள். அவர்கள் சமுதாயத்திலே ஒதுக்கப்பட்டவர்கள். யாரும் அவர்களிடத்திலே வந்து இயேசு பிறந்திருக்கிறார் என்று சொல்லமாட்டார்கள். ஆண்டவரே அவர்களோடு பேசவில்லையானால், தேவன்தாமே அந்த செய்தியை அனுப்பியிருக்கவில்லையானால் அவர்களுக்கு அந்த செய்தி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் பிறந்திருப்பார், அவர் வாழ்ந்து அற்புதங்களைச் செய்து சிலுவையிலே மரித்து உயிர்த்தெழுந்திருந்திருப்பார். ஆனால் இந்த மேய்ப்பர்களோ கேள்விப்பட்டிருக்கவே மாட்டார்கள்.

ஏனென்றால் பக்தியுள்ளவர்களின் கூட்டம் இவர்களைத் தேடிச் செல்லாது. ஏன், தீர்க்கதரிசிகளும்கூட ஒருவேளை இவர்களைத் தேடிச் சென்றிருக்க மாட்டார்கள். ஆசாரியர்களோ அவர்கள் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையிலே தேவன் அவர்களுடைய வாழ்க்கையிலே குறுக்கிட்டார். ஆம், கர்த்தர் அவர்களிடத்தில் பயப்படாதிருங்கள் என்று சொல்லுகிறார்.

அருமையான சகோதரனே, சகோதரியே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உங்களையே ஒதுக்கி வைக்கக்கூடாது. நீங்கள் பயப்படக் கூடாது. உங்களுக்கு இந்த சூழ்நிலை ஏற்பட்டதற்குக் காரணம் என்ன? ஒருவேளை நம்முடைய பின்னணியினாலே அப்படியிருக்கலாம் அல்லவா!

சிலசமயம் நம்முடைய செயல்கள் நம்மை தீட்டுப்பட்டவர்களாக்கி நம்மை ஒதுக்கிவிடக் கூடும். பாவத்தில் விழுந்துவிட்டோம். எவ்வளவோ மக்கள் நம்மிடத்தில் மேலானதை எதிர்பார்த்தார்கள். ஆனால் நாம் பயங்கரமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டோம். ஆனால் கர்த்தர் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். மற்றவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலே, நாம் நம்மையே ஒதுக்கிவிட்டு நம்முடைய பெயரை கிறுக்கிவிட எண்ணுகிறோம். உலகம் நம்மை ஒதுக்கி வைத்திருக்கலாம். குடிகாரன் அல்லது சூதாட்டக்காரன் அல்லது போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டவன், விபசாரக்காரன், வேசித்தனம் உள்ளவன் என்றெல்லாம் மக்கள் நம்மை ஒதுக்கியிருக்கலாம். ஆனால் கர்த்தர் நம்மை ஒருபோதும் ஒதுக்கி வைக்கமாட்டார்.

என் அருமையான சகோதரனே சகோதரியே, அப்படிப்பட்ட ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், உள்ளத்தில் புண்பட்டவர்கள், தங்கள் வாழ்க்கையிலே அடிபட்டவர்கள் இவர்களுக்காகத்தானே இரட்சகர் வந்திருக்கிறார். தேவதூதன் சொன்ன செய்தி என்ன என்று பாருங்கள்: பயப்படாதிருங்கள்! இந்த நற்செய்தியை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன். மற்றவர்கள் இந்த நற்செய்தியை உங்களுக்குச் சொல்லமாட்டார்கள். எனவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன் என்று கூறுகிறார்.

அதுமட்டுமல்ல, லூக்கா2:11இல் இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் என்று கூறுகிறார். உங்களுக்கு என்ற அந்த சொல் நிச்சயமாக மேய்ப்பர்களின் உள்ளத்திலே ஆழமாய் சென்றிருக்கும். நமக்கு இந்த செய்தியாமே! நமக்கு இரட்சகர் வந்திருக்கிறாராமே! என்று அது அவர்களை எவ்வளவு உற்சாகப்படுத்தியிருக்கும் அல்லவா. பயப்படாதிருங்கள் என்று சொல்லி விட்டு அவர்களுக்கு அங்கீகரிப்பின் சொல்லைத் தருகிறார் தேவன்.

ஆம், மரியாளுக்கு தைரியத்தின் சொல், சகரியாவுக்கு நம்பிக்கையின் சொல், யோசேப்புக்கு நிச்சயத்தின் சொல், இந்த மேய்ப்பருக்கோ அங்கீகரிப்பின் சொல்; அது பயத்தை நீக்கும் சொல்!

மனிதர் நம்மைத் தள்ளிவைத்திருக்கும் நிலையிலே ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையிலே குறுக்கிடுகிறார். அவர் குறுக்கிடாவிட்டால் யாரும் நம்மைத் தொட்டிருக்கமாட்டார்கள். மற்றவர்களால் தீண்டப்படாதவர்கள் என்று எண்ணக்கூடிய நிலையிலே கர்த்தர் நம்மைத் தீண்டுகிறார், நம்மைத் தொடுகிறார், நம் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார், அவர் யாரையும் தள்ளிவிடமாட்டார். நம்மை ஏற்றுக்கொள்ளவும், சேர்த்துக் கொள்ளவும் அவர் நெருங்கி வருகிறார். அதுமட்டுமல்ல, மற்றவர்கள் பேச மாட்டார்கள், ஆனால் அவர் நம்மோடு பேசுகிறார். அவருடைய அக்கறையை நம்மிடத்தில் காட்டுகிறார். நம்மோடு உறவுகொள்ள நாடுகிறார்.

அந்த மேய்ப்பர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? உடனே அந்த சொல்லுக்குக் கீழ்ப்படிந்து பெத்லகேமுக்குச் சென்றார்கள். அங்கே போய் அந்தப் பிள்ளையைக் காண்பதற்காகச் சென்றார்கள். பிள்ளையைக் காண்பீர்கள் என்று தூதர் சொன்னார் இல்லையா? உடனே கீழ்ப்படிந்து அங்கு சென்றார்கள், பாலகன் இயேசுவைக் கண்டு பணிந்து கொண்டார்கள்.

தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள். … மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள். (லூக்கா 2:16,17,20)

மேய்ப்பர்கள் வாழ்விலே தங்கள் நோக்கத்தைக் கண்டுகொண்டார்கள். அதை நிறைவேற்றினார்கள். இதைத்தான் நமக்கும் அவர் செய்வார்.