ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

நவம்பர்-டிசம்பர் 2017

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

பாலகனாக இவ்வுலகில் வந்துதித்த இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்வருடத்தின் கடைசி மாதத்திற்குள் வந்திருக்கிறோம். ஆபத்துகளும் பல்வேறு சோதனைகளும் நிறைந்த இவ்வருடத்தின் நாட்களைக் கடந்துவர தேவன் நமக்கும் நமது குடும்பத்திற்கும் இவ்வூழியத்திற்கும் உதவிசெய்திருக்கிறார். “கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்” (சங்.116:12,13) என்ற சங்கீதக்காரனின் ஜெபத்தைப்போல நாமும் கர்த்தருக்கே எல்லா மகிமையையும் செலுத்தி அவரைத் தொழுதுகொள்வோம்.

அக்டோபர் 14-ம் தேதி திருச்சியில் நடந்த சத்தியவசன விசுவாசப் பங்காளர் கூடுகை  ஆசீர்வாதமாய் நடைபெற தேவன் கிருபை செய்தார். விசுவாசப் பங்காளர்களைச் சந்தித்ததில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இவ்வருட சத்தியவசன கிறிஸ்துமஸ் கீத ஆராதனையை நாகர்கோவிலில் நடத்த திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் 9-ம் தேதி சனிக்கிழமை கேசரி தெருவில் உள்ள ஏதேன் ஹாலில் மாலை 6.45 மணிக்கு கீத ஆராதனை நடைபெறும். நாகர்கோவிலிலும் கன்னியாகுமரியிலும் உள்ள விசுவாசப்பங்காளர்கள் குடும்பமாக இக்கீத ஆராதனையில் பங்குபெற அன்பாய் அழைக்கிறோம்.

இவ்வருடம் முழுவதும் தங்கள் அன்பின் ஈகையாலும் ஜெபத்தாலும் சத்தியவசன ஊழியத்தைத் தாங்கிவந்த அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்கும் எங்களது மனமாாந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இந்த கிறிஸ்துமஸ் நாட்கள் உங்களுக்கு சந்தோஷமும் சமாதானமும் நிறைந்த நாட்களாய் இருப்பதாக. புதிய வருடத்தையும் கர்த்தர் வாக்குத்தத்தங்களாலும் புதிய ஆசீர்வாதங்களாலும் நிறைத்து வழிநடத்த நாங்களும் ஜெபிக்கிறோம்.

இவ்விதழில் காலம் நிறைவேறினபொழுது தம்முடைய குமாரனை அனுப்பின நற்செய்தியை ‘கிறிஸ்து பிறப்புடன் காணப்பட்ட அபூர்வங்கள்’ என்ற தலைப்பில் திரு.பாபிங்டன் அவர்களும்,  நமக்காக பிறந்த ஆண்டவர், நமக்கு ஆண்டவராகவும் தேவனாகவும் இருக்கிறார் என்பதை விளக்கி Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்களும், ‘சீர்கெட்ட உலகுக்கு சீர்மிகு நற்செய்தி’ என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் ஆண்டவரின் இரட்சணியத்தைக் குறித்தும், அவருடைய நாமம் ‘அதிசயமானவர்’ என்பதை விவரித்து Prof.எடிசன் அவர்களும் எழுதியுள்ளார்கள். தீர்க்கதரிசன வாக்கியங்களில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி வேத ஆராய்ச்சியாளர் திரு.வசந்தகுமார் அவர்களும் புதிய வருடத்திற்குள் பிரவேசிக்க இருக்கும் நமக்கு ‘புதியவருடத்தில் ஒரு புரட்சி செய்வோமா’ என்ற தலைப்பில் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் சிறந்த ஆலோசனைகளையும் எழுதியிருக்கிறார்கள். இக்கட்டுரைகள் யாவும் தங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க  ஜெபிக்கிறோம்.

சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நேயர்களுக்கும், பங்காளர்களுக்கும், ஆதர வாளர்களுக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாகவும் ஊழியர்கள் சார்பாகவும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் 2018- ம் வருட புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்