கிறிஸ்து பிறப்புடன் காணப்பட்ட அபூர்வங்கள்!

திரு.எஸ்.பாபிங்டன்
(நவம்பர்-டிசம்பர் 2017)

காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார் (கலா.4:5).


கடந்த நித்தியத்திலே, எப்போதோ ஒரு நாள் தேவனாகிய பிதாவும், தேவனாகிய குமாரனும், தேவனாகிய பரிசுத்த ஆவியானவரும் மனிதனைச் சிருஷ்டிக்கச் சித்தம் கொண்டனர். அவர்களுடைய முன்னறிவின்படி ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமல் மனிதவர்க்கத்தைப் பாவத்தால் கறைப்படுத்துவார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். ஆகவே மனிதவர்க்கத்தை அழித்து விடாமல் அவர்களை இரட்சித்து திரித்துவ தேவனுடன் திரும்பவும் ஐக்கியம் கொள்ளும்படி, அவர்களைக் கழுவி சுத்திகரித்து மன்னித்து, இரட்சிப்பளிப்பதற்கு ஒரு திட்டம் வகுத்தார்கள். ஆனால் திரித்துவ தேவன், மனிதனை இரட்சிப்பதற்கு சாதனம் இரத்தம் என்று அவருடைய பூரண ஸ்தானத்தில் தெரிந்தெடுத்தார். இது மிகவும் முக்கியமானதும் வியப்புண்டாக்குவதுமான காரியம் (எபி.9:22) என்று அறிகிறோம். அந்த இரத்தம் பரிசுத்தமானதாயிருக்க வேண்டும். ஆனால், மனுஷனுடைய இரத்தம் அவன் பாவத்தில் விழுந்ததால் இரட்சிப்பதற்கு போதுமானதல்ல என்று கருதினார் தேவன். மிருகத்தினுடைய இரத்தமும் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது (எபி. 10:4).

நம் ஆத்துமா இரட்சிக்கப்படுவதற்கு தேவன் வகுத்திருக்கும் வழிகளை (Alenemy of the process) வேதாகமத்திலிருந்து ஒருவரும் விளங்க முடியாது. அதை நாம் புரிந்துகொள்ளவும் முடியாது. ஆனால் நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் இரத்தம் கொடிய பாவியையும் சுத்திகரிக்கக் கூடிய வல்லமையுள்ளது என்ற தேவ சத்தியத்தை ஏற்றுக்கொள்ளுகிறோம்.

கிறிஸ்துவினுடைய பிறப்பின் பின்னணி இவ்விதம் பரம இரகசியத்தில் பொதிந்திருக்கிறது. அவர் உலகத்தில் மனிதனாய்ப் பிறந்தபோது நடந்ததும் நிறைவேறினதுமான சில ஆபூர்வங்களைச் சிந்திப்பது நமக்கு உற்சாகத்தையும் வியப்பையும் அளிக்கும்.

காலம் நிறைவேறினபோது

கிறிஸ்துவின் பிறப்பு சிறிதும் முன்பின் இராமல் சரியான நேரத்தில் நிகழ்ந்தது. தேவன் காலந்தவறுகிறவர் அல்ல. ஒருவினாடிகூட அவர் பிந்தமாட்டார். அவர் கால அட்டவணை முற்றிலும் பூரணமானது. “காலம் நிறைவேறினபோது குமாரனை தேவன் அனுப்பினார்”. உலகம் உருவாக்கப்படுமுன்னரே இரட்சகர் தெரிந்து கொள்ளப்பட்டிருந்தார். மனிதன் பாவஞ்செய்து விழுந்துபோனது ஆண்டவருக்கு ஆச்சரியம் விளைவிக்கவில்லை. ஆனாலும் ஆண்டவர் இரட்சிப்பு என்ற அவருடைய மகத்தான சாதனையைப் புரிய காத்திருந்தார். மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட ராயனுக்காக காத்திருந்தார்! அவன்தான் அகுஸ்துராயன்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒருவேளை ரோமர்கள் உலக ஆதிக்கத்திற்காக போட்டியிட ஆரம்பிக்கு முன்னர், மீகா என்ற யூத தீர்க்கதரிசி திடுக்கிடச்செய்த முன்னறிவிப்பு ஒன்றைக் கொடுத்தார். “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது” (மீகா 5:2). ஆகவே, கலிலேயாவைச் சேர்ந்த ஒரு சிறு கிராமத்திலிருந்து ஒரு மனிதனும், அவன் திருமணம் புரிவதற்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு இளம் பெண்ணும், அவர்கள் இருப்பதைக்கூட அறியாத ஒரு ராயனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தெற்கில் 70-80மைல் தூரத்திலிருந்த பெத்லகேமிற்கு ஒரு கடினமான பிரயாணம் செய்தனர். நிறைமாத கர்ப்பவதியாயிருந்த பெண் பெத்லகேமை சேர்ந்தவுடன் ஒரு குமாரனைப் பெற்றாள்.

தேவன் அவருடைய திட்டத்தை இம்மிகூட மாற்றாமல் நிறைவேற்றிக்கொண்டிருந்தார். ஆம், “காலம் நிறைவேறினபோது” தன் குமாரனை அனுப்பினார். கிறிஸ்து ஏன் இதற்கு முன் பிறக்கவில்லை. அவருடைய திட்டத்தில் இதற்கு முன்னான நாட்களில் கிறிஸ்துவானவரின் பிறப்பிற்கும் அதன் விளைவான நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கும், சரியான வேளை வராமல் இதுவே சரியான நேரமாயிருந்ததுதான். சிறிய சிறிய நாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கலவரம் முடிந்து அப்பொழுது நன்கு அறியப்பட்ட உலகம் முழுவதிலும் ரோம அதிகாரம் பரவியிருந்தது. அதனால் சுவிசேஷத்தைப் பரப்பவிருந்த சீஷர்கள் எல்லா இடங்களுக்கும் பிரயாணம் செய்வதற்கு ஏதுவாக சமாதானமும் அமைதியும் நிலவியது. கிரேக்க பாஷை எல்லா நாடுகளிலும் தெரிந்திருந்தது. கடற்கொள்ளைக்காரரின் உபத்திரவங்கள் கடற்பிரயாணிகளை வருத்தவில்லை. அதிசயிக்கத்தக்கவிதமாக அந்த பூர்வீக நாட்களில் கட்டப்பட்ட ரோம நெடுஞ்சாலைகள் தூர தேசப்பிரயாணங்களை இலகுவாக்கியிருந்தன. இஸ்ரவேல் ஜனத்தின் மத்தியிலே மேசியா எந்த வேளையும் வரவிருக்கிறாார் என ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையும் எதிர்பார்க்குதலும் பலமாய் நிலவியது. ஆம், இது நிறைவேறுதலின் காலமாயிருந்தது.

கிறிஸ்து வருடங்களின் ஆண்டவர்; நேரத்தின் அதிபதி, ஆனாலும் அவர் உலகத்திலே மனிதனாய் வாழ்ந்தபோது கடிகாரத்தின் மீது கண்ணோட்டம் படைத்தவராயிருந்தார் என்று பார்க்கிறோம். அடிக்கடி வேளையைப்பற்றி குறிப்பிட்டார். ‘என் வேளை இன்னும் வரவில்லை’ (யோவான்2:4) “மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது” (யோவான்12:23). அந்தக் கடிகாரத்தின்படி ஒருவேளை தேவனுடைய மிகப் பெரிய அன்பளிப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வதற்கு நிறைவேறின காலம் இந்தக் கிறிஸ்துமஸ் நாட்களாய்த்தான் இருக்கலாம். இதை ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா?

கிறிஸ்துவின் பிறப்பு மிகப் பிரத்தியேகமானது

“ஸ்திரீயினிடத்திற் பிறந்தவர்” (கலா.4:5); மரியாளை சிருஷ்டித்தவரை, மரியாளே உருவாக்குகிறாள். என்ன ஆச்சரியம்! மனிதனுடைய புறத்திலிருந்து தாயற்ற ஒரு பெண்ணை எடுத்த தேவன் தகப்பனற்ற ஒரு மனிதனை ஒரு பெண்ணின் சரீரத்திலிருந்து எடுத்தார், என்று Mathew Henry மிக அர்த்தத்துடன் கூறியிருக்கிறார். எபிரெய தீர்க்கதரிசிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உரைத்த முன்னறிவிப்புக்களைக் கவனியுங்கள். “கர்த்தர் பூமியிலே ஒரு புதுமையைச் சிருஷ்டிப்பார், ஸ்திரீயானவள் புருஷனை சூழ்ந்துகொள்வாள்” (எரே.31:22). “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” (ஏசா.7:14). எபிரேய பாஷையிலே ‘ஒரு’ கன்னிகை (almah) என்று எழுதாமல் ‘குறிப்பிட்ட’ கன்னிகை (ha-almah) என்று எழுதியிருப்பதால் மரியாளே மற்ற எல்லாப் பெண்களிடமிருந்து வேறு பிரித்து வைக்கப்பட்டவளாய் முன்னறிவிக்கப்பட்டது என்று காண்கிறோம். இந்த இரக்கத்தின் அற்புதத்தை (Miracle of mercy) கவனியுங்கள்! மனிதனுடைய புத்திக்கு எட்டாத தேவன் ஒரு வட்டம் என்போமானால் அதன் மையம் எல்லா இடத்திலும் இருக்கிறது. வட்டத்தின் சுற்றுக்கோடோ கண்டே பிடிக்க முடியாதவாறு வரம்புவரையற்ற தேவன் ஒரு மாசற்ற கன்னியின் கர்ப்பத்தில் உருண்டையாய் சுருண்டு, 9 மாதங்கள் கூட்டிற்குள் இருப்பது போல் அடைபட்டிருந்தாரே! இந்தக் கருத்தரிப்பில் எண்ணுக்கடங்காத மகா மகாப் பெரியவர் மிக மிக நுண்ணியமானார். சொல்லுக்கடங்கா பரந்த விண்வெளியினை ஆளுபவர் தூசியின் ஒரு புள்ளிக்கு சமமாக சிறியவரானார்! என்ன விந்தை!

ஆகவே, ‘நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்’. மரியாள் மகாப் பெரிய ஆசீர்வாதத்தைக் காலம் நிறைவேறும் அளவு சுமந்தவளாய் இருந்து, அவரைப் பெற்றெடுக்கிறாள். அந்த முதல் கிறிஸ்துமஸ் இரவன்று, தன்னுடைய கரங்களில் தாலாட்டிய குழந்தையின் வல்லமையையும் ராஜரீகத்தையும் முழுவதுமாய் புரிந்துகொண்டிருந்திருப்பாளோ? என்று நான் வியக்கிறேன். அவள் அந்தச் சின்னஞ்சிறிய விரல்களையும் கைகளையும் வருடிக்கொஞ்சினபோது, அவைகள்தான் சமுத்திரங்களைக் குடைந்து எடுத்தவை, மலைகளை உயர்த்தியவை, நட்சத்திரங்களை ஆகாயத்தில் தொங்கவிட்டவை என்று உணர்ந்திருப்பாளோ, என்று வியக்கிறேன். பெற்றெடுத்த பாலனை முத்தமிட்டபோது, நித்திய தேவனின் மென்மையான கன்னங்களை முத்தமிடுகிறோம் என்று நினைத்திருப்பாளாகில் உணர்ச்சி பொங்கிவந்திருக்கும் அல்லவா! அந்த நட்சத்திரங்கள் ஜொலித்த இரவில் ஈன்றெடுத்த குழந்தைப் பாலகன் ஒருநாள் அவளையும் இரட்சிப்பார் என்று உணர்ந்திருப்பாளாகில் மனக்கிளர்ச்சி அவளை மயங்கச் செய்திருக்குமல்லவா?

ஆகவே மிக பிரத்தியேகமான முறையில் “நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்” (ஏசா. 9:6). தெய்வீகப் பிதாவானவர் அவரை (இயேசு பாலகனை) அனுப்பினதைக் காண்கிறோம். பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையே இருந்த பூரணமும் தவிர்க்க முடியாததுமான பந்தம் இந்த அற்புதமான கர்ப்பந்தரித்தலில் விளங்குகிறது.

“நாம் புத்திர சுவிகாரத்தையடைய”

கிறிஸ்துவின் பிறப்பு “நாம் புத்திர சுவீகாரத்தையடைய” என்றும் பரி.பவுல் கூறியிருக்கிறார் (கலா.4:5). அவர் மனித குமாரனாகப் பிறந்ததின் நோக்கம் நாம் தேவனுடைய புத்திரர்களாவதற்காகவேயாகும். கிறிஸ்துமஸ், கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் பண்டிகை மட்டுமல்ல, கிறிஸ்தவனுடைய மறுபிறப்பைக் கொண்டாடும் பண்டிகையும் ஆகும். “அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவா. 1:12). சரித்திரப்பிரசித்தி பெற்ற கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கமே நம்முடைய ஆவியில் மறுப்பிறப்படைவதுதான். “அப்பா பிதாவே, என்று கூப்பிடப் பண்ணுகிற புத்திரசுவீகாரத்தைப்” பெறுவதற்காகவே தேவன் தம்முடைய குமாரனை நமக்காக இவ்வுலகத்திற்கு அனுப்பினார். இது எப்படியாகும், என்று கேட்பீர்களானால் அலெக்ஸாண்டர் மெக்லாரன் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். “என் கண்களைத் திறப்பேனாகில் வெளிச்சம் உள்ளே வருகிறது; என் சுவாசப் பையை விரிவடையச் செய்வேனாகில், காற்று உள்ளே வருகிறது; என் இருதயத்தைத் திறப்பேனாகில் கிறிஸ்து உள்ளே வருகிறார்”.

புத்திர சுவீகாரத்தைப் பெறுவீர்கள்!

கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு இரட்சிப்பு அளிக்கவே, என்று மேலே குறிப்பிடப்பட்டது. யோசேப்பிடம் தேவதூதன் தோன்றினபோது, உன்னதத்திலிருந்து அனுப்பப்பட்ட அந்தத் தூதன் அறிக்கையிட்டதைக் கவனியுங்கள்; “அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத்.1:21). எவ்விதம் இரட்சித்தார்? பாவமற்ற அவர் நமக்காக பாவங்களை ஏற்று, மரித்து, பாவ நிவாரண பலியானார். கல்வாரிச் சிலுவையிலே நான் தொங்கியிருந்திருப்பேனாகில், பிதாவே என்னை மன்னியும் என்று ஜெபித்திருப்பேன். மரணம் சமீபத்திலிருந்தால் தேவனோடு ஒப்புரவாக விரும்பியிருப்பேன். ஆனால் இயேசுவானவர் தனக்காக ஜெபிக்க வேண்டியிருந்திருக்கவில்லை. ஒரு பாவமும் இல்லாதவராய் இருந்திருந்ததால் ஒரு மகத்தான இரட்சகர்” (Thomas Lindbers) ஆவார்.

“சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்தார்கள்”

“இயேசு பிறந்தபோது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்தார்கள்” என்று மத்.2:1-ல் வாசிக்கிறோம்.இது எவ்வளவு அபூர்வமான ஒரு சம்பவம் என்று கவனிப்போம். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? பாபிலோனிலிருந்து வந்திருக்கக்கூடும். பூர்வீக அரசர்கள் தாங்கள் அடிமைப்படுத்திய நாடுகளிலிருந்து ஞானிகளின் உதவியையும் ஆலோசனைகளையும் கேட்பது வழக்கம். ஏன் இந்த ஞானிகள் எருசலேமுக்கு வந்தார்கள்? “கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு” என்கிறார்கள். மற்ற ஞானிகள் பார்த்தார்களா, அல்லது அவ்வேறு ஞானிகள் அந்த நட்சத்திரம் தோன்றினதற்கு வேறு ஏதாவது பரிகாரம் செய்தார்களா, என்று கூறப்படவில்லை. ஆனால் அவர்கள் நட்சத்திரத்தில் பார்த்தது எதுவோ அது அவர்களை மிகவும் கொடியதும் ஆபத்துக்கள் நிறைந்ததுமான ஒரு பிரயாணத்தை ஆரம்பிக்கச் செய்தது உண்மை. இப்பிரயாணம் இரண்டு வருடங்கள் பிடித்திருக்கக்கூடும். ஏனெனில், ஏரோது இவ்வளவு காலம் பிடிக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டுதான், “இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலை செய்தான்” (மத்.2:16).

இந்த ஞானிகள் நட்சத்திரத்தில் என்னத்தைக் கண்டார்கள்? யூதர்களின் ராஜா பிறந்துவிட்டார். என்ற தகவலையா? மோசே, தானியேல், ஏசாயா எழுதிவைத்துப் போனவைகளை அவர்கள் வாசித்திருந்தார்களா? தேவ பயபக்தியுடைய இந்த வான சாஸ்திரிகளுக்கு தேவன் ஒரு மானிடக் குழந்தையாய் உலகத்திற்குள் தரிசனம் அளித்துள்ளார் என்று அந்த சாஸ்திரிகளுக்கு அந்த நட்சத்திரம் சொல்லியிருக்கக்கூடுமோ? அந்த நட்சத்திரம் அந்தக் குழந்தை யூதர்களுடைய இராஜாவென்றும், காத்திருந்த மேசியா அவர்தான் என்றும் கூறிற்றா? எப்படியெனினும் வனாந்திர பயணத்தின் கஷ்டங்களையும் கொள்ளைக்காரரின் பயங்களையும், “ஐயோ நாம் நட்சத்திரத்தைச் சரியாய் புரிந்துகொண்டோமா? இல்லையா?” என்று மனதை வாட்டினக் கேள்வியையும் அவர்கள் சகித்துக்கொண்டார்கள் என்று அறிகிறோம். இவர்கள் ஏதோ கண்ட ஒருதரிசனத்தைப் பின்பற்றிய அசட்டுத்தைரியம் கொண்டவர்களாயிருந்திருக்க முடியாது. அவர்கள் யோசனையற்ற துணிகரச் செயல்களைத் தேடி அலைபவர்கள் என்றும் சொல்வதற்கில்லை. அந்த சாஸ்திரிகள் ஞானம், முதிர்ச்சி, ஆழ்ந்த சிந்தனை கொண்ட மனிதர்கள்தான் என்று விளங்கிக்கொள்ளுகிறோம். இந்த ஞானிகள் எத்தனையோ பட்டம் பெற்ற இறையியல் நிபுணர்கள் ஆராய்ந்து கண்டுபிடிப்பதற்கு மேலாக சுவிசேஷத்தின் கருத்தை ஒரு நட்சத்திரத்தின் மூலம் விளங்கிக்கொண்டார்கள் என்று சொல்லலாம்.

மரியாளும் குழந்தையும் இருந்த வீட்டிற்கு வந்தவுடன், சாஸ்திரிகள் நடந்துகொண்ட விதத்தைக் கவனியுங்கள்; “சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்துகொண்டார்கள்” (மத்.2:11). அவர்களுடைய தாழ்மையும் பக்தியும் மிகவும் விசேஷித்தவையாயிருக்கிறது. இது ஒரு சாதாரண குழந்தை அல்ல என்று அறியும் அளவு புத்திகூர்மையுடையவர்களாய் இருந்தார்கள். அவர்கள் ஏரோதிடம் கூறியதுபோல அவரைப் பார்க்கும் முன்னேயே, அவர்கள் பார்க்கவிருந்த குழந்தை யூதர்களின் ராஜா என்று நம்பினார்கள். அவர்களை நிச்சயப்படுத்த ஒரு அற்புதமும் அவசியமில்லாதிருந்தது. அவர்களைப் பயமுறுத்திப் பணியவைக்க தெய்வத்தின் அடையாளங்களோ மகத்துவத்தின் அறிகுறிகளோ எதுவும் வெளியே காணப்படவில்லை. தன் தாயின் தொடர்ந்த கவனிப்பு தேவையாயிருந்த ஒரு பாலகனையே கண்டார்கள். ஆனாலும் அந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் ‘உலக இரட்சகரும் ராஜாவுமானவரைக் கண்டோம்’ என்று நம்பினார்கள். அவரைத் தொழுதுகொண்டு கனப்படுத்தியது மட்டுமல்ல, ஒரு இராஜாவிற்கு அளிப்பதற்கு தகுதியான காணிக்கைகளையும் படைத்தார்கள். அவைகள் அர்த்தமுள்ளவைகள். இயேசுவானவரின் ராஜரீகத்தின் அடையாளமாக பொன்னும், நமக்காகப் பிரதான ஆசாரியத்துவம் புரிகின்றதற்காக தூபவர்க்கத்தையும், நறுமணம் அளிப்பதும், சுகமளிப்பதும் பின்னொரு நாளில் அவருடைய அடக்கத்திற்கு உபயோகப்படவிருந்ததை அர்த்தப்படுத்தியதுமான வெள்ளைப்போளம் என்ற சுகந்தவர்க்கத்தையும் அவருக்குப் படைத்தார்கள்.

கடைசி செயலாக, ஏரோது ராஜா விருப்பப்படி நடவாமல் அந்த சாஸ்திரிகள் தேவனுடைய எச்சரிப்பிற்குக் கீழ்ப்படிந்து வேறுவழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பினார்கள். ஆம், ஞானிகள் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவார்கள். அவர்கள் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு புதிய சிருஷ்டிகளாவதால் விசுவாசத்தின் வழியில் கீழ்ப்படிதலின் வழியில், பரிசுத்தத்தின் வழியில் நடந்து, பரம வாசஸ்தலத்திற்கு செல்லும் பாதையில் தேவனுடைய பிள்ளைகளுடன் செல்லுவார்கள். அவர்களுடைய கூட்டத்தில் சேரமாட்டீர்களா?

கிறிஸ்துமஸ் பற்றி இயேசுவானவர்

கடைசியாக, நம் நாதர் இயேசுவானவர் தாமே தன் பிறப்பைப்பற்றிக் கூறியிருப்பதையும் ஒரு அபூர்வமாக கவனிக்க விரும்புகிறேன். லூக்கா, கிறிஸ்துவின் பிறப்பை இரண்டு ஸ்திரீகள் அதாவது மரியாள், எலிசபெத்தின், அனுபவத்தின் அடிப்படையில் எழுதியுள்ளார் எனலாம். மத்தேயு அதிகமாக யோசேப்பினுடைய அனுபவங்களை முக்கியப்படுத்தி எழுதியுள்ளார். யோவான் தேவனுடைய வார்த்தையின்மூலம் கிறிஸ்துமஸ் சம்பவங்களைக் கூறுகிறார். நித்திய வார்த்தை மாம்சமாக்கப்பட்டது என்ற அடிப்படையில் எழுதுகிறார். தேவன் தன்னுடைய அருமைக் குமாரனையே அனுப்பினார் என்றும் யோவான் எழுதுகிறார். ஆனால், இயேசுவானவர் தாமே லூக்கா 20-ம் அதிகாரத்தில் கிறிஸ்துமஸ் சம்பவங்களை விவரிக்கிறார் என்று சொல்லுவேன். ஒரு எஜமான் தூர தேசத்திலிருந்த தன் தோட்டத்தின் வருமானத்தில் சரியான பங்கைப்பெற விரும்பினான். குத்தகை எடுத்தவர்கள் அதைக்கொடுக்க மறுத்தது மட்டுமல்லாமல், கேட்டு வந்த அவனுடைய ஊழியக்காரர்களை மூன்றுமுறை கொடுமையாய் நடத்தி அடித்து வெறுமையாய் விரட்டிவிட்டார்கள். கடைசி முயற்சியாய்த் தன் சொந்தக் குமாரனையே தன்னுடைய பிரதிநிதியாக அனுப்பினார். “எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள்” (லூக்.20:13) என்று சொன்னான். இதுதான் நாம் கொண்டாடும் கிறிஸ்துமஸ்!

மறைந்துபோன கர்னல் ஜேம்ஸ் இர்வின் அவர்கள்தான் சந்திரன்மீது இறங்கி நடந்த இரண்டாவது மனிதர். அவர் சந்திரனில் இறங்கினபோது அவருக்கு எழுந்த சொல்லமுடியாத மனக் கிளர்ச்சியின் மத்தியில், “சந்திரனில் மனிதன் நடப்பதைப் பார்க்கிலும் மிகச்சிறந்த அற்புதம் இயேசுவானவர் பெத்லகேமில் பிறந்ததும் உலகத்தில் நடந்ததும்தான்!” என்றாராம். எத்தனை பெரிய உண்மை! ஆகவே கிறிஸ்துமஸ் தினம், நாள்காட்டியில் ஒரு நாளைமட்டும் குறிப்பிடுகிறது என்று நினைக்காதீர்கள்! அது நம் விசுவாசத்தின் நிலையை மனதிற்குக் கொண்டு வருகிறது. “நம் வாழ்நாட்கள் முழுவதும் அவரையே தினந்தோறும் அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்டு அனுபவிக்கும் நீண்ட கிறிஸ்துமஸ் தினமாயிருக்க நம் ஆண்டவர் விரும்புகிறார்”என்று ஒருவர் கூறியுள்ளார்.

Ken Calder என்பவர், “கிறிஸ்து பெத்லகேமிற்கு வந்தபோது ஒரு நட்சத்திர ஹோட்டலில் (One Star Hotel) தங்கியிருந்தார்” என்று எழுதியுள்ளார். ஆம், இன்றும் நம் ஆண்டவர் மாளிகைகள் அல்லது வசதியான இடங்களை மட்டும் தேடாமல் மிதமான இடத்துடன் திருப்தியடைய சித்தம் கொண்டுள்ளார். தாழ்மையாய் அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கும் எவரிடமும் வரக்காத்திருக்கிறார். நீங்கள் அவரை உங்கள் இதயத்திற்குள் வரவழைக்கமாட்டீர்களா? வருஷமுழுவதும் உங்களுக்குக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாய் இருக்குமே!

சத்தியவசனம்