என் ஆண்டவரே! என் தேவனே!

டாக்டர் தியோடர் வில்லியம்ஸ்
(நவம்பர்-டிசம்பர் 2017)

“இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக்கா 2:11).


நற்செய்தி நூல்களிலே கிறிஸ்துமஸ் சம்பவங்கள் அநேகம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த சம்பவங்களிலே ஆண்டவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர்கள் ஆழமான பொருள் உள்ள பெயர்களாக இருக்கின்றன. கிறிஸ்துமஸ் நாயகராகிய அவரை நாம் தனிப்பட்ட முறையிலே அறிந்து கொள்ளவும் இன்னும் அதிகமாக அவரை நெருங்கிச் சேரவும் இதை தியானிப்பது பயனுள்ளவையாக இருக்கும்.

கிறிஸ்துமஸ் நாட்களிலே பலவிதமான கொண்டாட்டங்களிலும், ஆசரிப்புகளிலும் ஆண்டவரை நாம் ஒதுக்கிவிடக்கூடாது. கிறிஸ்துமஸின் நடுமையத்தில் இருப்பவர் அவர்தான். அவரே கிறிஸ்துமஸ் நாயகர்! ஆகையினாலே நம்முடைய கவனத்தை அவர்மேல் செலுத்தவேண்டும். அவரை நோக்கிப் பார்க்கவேண்டும். கிறிஸ்துமஸ் நாட்களில் மனிதனாக அவதரித்த இந்த தேவன் யார்? அவரைப்பற்றி திருமறை என்ன கூறுகின்றது? என்று நாம் அறியவேண்டும்.

இயேசு என்பது அவருடைய பெயர்; வார்த்தை என்பதும் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பெயராகும். இம்மானுவேல் என்பதும் அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர், இன்னும் அவர் சமாதானப் பிரபு என்று  அழைக்கப்பட்டார். இப்போது நாம் கவனிக்கப்போகிற பெயர் ‘ஆண்டவர்’ அல்லது ‘கர்த்தர்’ என்னும் பெயராகும். தமிழ் வேதாகமத்திலே இப்பெயரை சில இடங்களிலே ஆண்டவர் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். இன்னும் சில இடங்களிலே கர்த்தர் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். ஆண்டவர் என்றும் கர்த்தர் என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.

லூக்கா 1:43-ல் இந்த பெயரை முதலாவது பார்க்கிறோம். “என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது”என்று எலிசபெத் மரியாளை வாழ்த்துகிறாள். ‘என் ஆண்டவர்’ என்று அழைக்கிறார். ‘ஆண்டவர்’ என்பது அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர். மேலும் லூக்.1:76-ல் சகரியா அவருக்குக் கொடுத்த இந்தப் பெயரைப் பார்க்கிறோம். “நீயோ, பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கத்தரிசி என்னப்படுவாய்”; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம் பண்ணுவாய்” என்று அவர் கூறினார். கர்த்தர் என்று இங்கே அழைக்கப்படுகிறார். “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக்.2:11) என்று தேவ தூதன் கூறினார். இங்கும் ‘கர்த்தர்’ என்று அழைக்கப்படுகிறார். இப்படி ‘ஆண்டவர்’ என்றும், ‘கர்த்தர்’ என்றும் கூறும்பொழுது அவருக்கு மிகவும் உன்னதமாக உயர்ந்த இடத்தை இந்த பெயர் கொடுக்கிறது.

அருமையான சகோதர, சகோதரிகளே, கிறிஸ்துமஸ் நாட்களிலே கிறிஸ்துவுக்கு உன்னதமான இடத்தை நாம் கொடுக்கவேண்டும். மேய்ப்பர்களைப் பார்க்கிறோம். தேவதூதர்களைப் பார்க்கிறோம். சாஸ்திரிகளைப் பார்க்கிறோம். மரியாளைப் பார்க்கிறோம். யோசேப்பைப் பார்க்கிறோம், இன்னும் பலரை இந்த கிறிஸ்துமஸ் சம்பவங்களிலே நாம் காண்கிறோம். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லாருக்கும் மேலாக இயேசு ஆண்டவராக, கர்த்தராக, உயர்த்தப்பட்டவராக இருக்கிறார். அவரை நாம் தொழுதுகொள்ளுகிறோம். வணங்குகிறோம். அவருக்கே நம்முடைய கீழ்ப்படிதலும் அர்ப்பணமும் உரியது. இயேசு நம்முடைய கர்த்தராய் இருக்கிறார். இது கிறிஸ்தவத்தின் அடிப்படையான விசுவாசப்பிரமாணம் ஆகும். ஆரம்ப நாட்களிலே ஆதித்திருச் சபைகளிலே இயேசுவே ஆண்டவர், அல்லது இயேசுவே கர்த்தர் என்கிற விசுவாசப் பிரமாணத்தை அவர்கள் அடிக்கடி கூறிக்கொள்வார்கள். நாமும் நம்முடைய விசுவாசத்தின் நடுமையத்திலே இதை இறுத்திக்கொள்ளவேண்டும். இயேசுவை, நண்பர், நமக்கு உதவி செய்கிறவர், நம்முடைய ஆலோசகர் நம்முடைய தேவைகளைச் சந்திக்கிறவர் நமக்கு சுகமளிக்கிறவர் என்றெல்லாம் கருதினாலும் அவர் நம்முடைய ஆண்டவர், கர்த்தர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவருக்கு உன்னதமான இடத்தை நாம் கொடுக்கவேண்டும்.

அவருடைய கர்த்தத்துவத்தின் அடிப்படை என்ன? ராஜாதி ராஜாவாக கர்த்தாதி கர்த்தராக அவர் விளங்குகிறாரே, அவரை ஏன் கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று அழைக்கிறோம்? இதற்கு வேதம் தரும் பதில் என்னவென்று பார்ப்போம். அவர் தேவனானபடியினலே கர்த்தராயிருக்கிறார். தேவன் மனிதனானார்; வார்த்தை மாம்சமாயிற்று. ஆகையினாலே மாம்சத்தில் தோன்றுகிறவர் ஆண்டவராகத்தான் இருக்கவேண்டும். அவரை நாம் கடவுளாக தேவனாக ஏற்றுக்கொள்ளும்போது நிச்சயமாய் அவரை ஆண்டவராக ஏற்றுக் கொள்ளவேண்டும்.

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைப் பார்த்து சீஷர்களும் அவரை ஆண்டவராக ஏற்றுக்கொண்டார்கள். செசரியா பிலிப்பு பட்டணத்தில் இருக்கும் போது “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்” என்று இயேசு கேட்கும்பொழுது சீமோன் பேதுரு, “நீர் உன்னதமான தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று அறிக்கையிட்டார். “இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” (மத்.16:17) என்று ஆண்டவர் சொல்லுகிறார். அவ்விதம் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்ட காரியத்தை 16-ம் வசனத்திலே பார்க்கிறோம். “சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.” இந்த அறிக்கையிலே 2 காரியங்களைப் பார்க்கிறோம். ஒன்று ‘கிறிஸ்து’ என்பதாகும். கிறிஸ்து என்கிற பெயருக்கு பொருள், ‘அபிஷேகம் பண்ணப்பட்டவர்’, ’மேசியா’ அல்லது ‘ராஜா’ என்பது பொருளாகும். அவரை ராஜா என்று பேதுரு அழைத்தார். அதே சமயத்திலே நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்றும் கூறுகிறார். அதன் பொருள் தேவன் என்பதாகும். ஆம், அவர் தேவன், ஆண்டவர் ராஜாவாக இருக்கிறார்.

இதே அறிக்கையை தோமாவும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைப் பார்த்துச் சொல்லுகிறார்.  “பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார். தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றார்” (யோவான் 20:27,28). ஆம்! கிறிஸ்து தேவனானால், அவர் ஆண்டவராய் இருக்க வேண்டும். அவரை தேவனாகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்வோம்; அவர் பாதத்தில் விழுந்து அவரைப் பணிந்து கொள்ளுவோம்.

நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை தனிப்பட்ட முறையிலே, ஆழமானவிதத்திலே நீங்கள் அறிந்துகொள்ளவும், அவர் உங்களுக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கும்படியாக அவரை அனுபவிக்கவும் அவர் உங்களை வழி நடத்துவாராக!


நினைவுகூருங்கள்

இயற்கை நியதிகளுக்கும் அப்பாற்
செயற்படும் அற்புத தேவனே
இயேசுவை கன்னிப் பெண் மூலமாக
உலகுக்கு அனுப்பியுள்ளார்.

சத்தியவசனம்