அதிசயமானவர்!

பேராசிரியர் எடிசன்
(நவம்பர்-டிசம்பர் 2017)

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும் (ஏசா.9:6).


இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் சத்தியவசனம் நேயர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்!

கிறிஸ்துமஸ் காலங்களில் நாம் இயேசுவின் பிறப்பை தியானிக்கிறோம். பழைய ஏற்பாட்டிலே ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திலே ஒரு அருமையான வசனம் உண்டு:

“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர்” (ஏசா. 9:6). இந்த வசனமானது ஏசாயா தீர்க்கதரிசியினால் இயேசு பிறப்பதற்கு கிட்டத்தட்ட 700 வருஷங்களுக்கு முன்பதாகவே இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்க தரிசனமாகும்.

தேவனுடைய குமாரனாக கொடுக்கப்பட்டவர், மனுஷகுமாரனாக வளர்ந்தபடியினால் அவரை நாம் ‘குமாரன்’ என்று அழைக்கும்பொழுது அந்த ‘குமாரன்’ என்ற வார்த்தைக்குள்ளாகவே அவருடைய தேவத்துவமும் அடங்கியிருக்கிறது. அவரது பூரண மனிதத்தன்மையும் அந்த குமாரன் என்கிற வார்த்தைக்குள்ளாக அடங்கி இருக்கிறது.

இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெறும் பொழுதும், மறுரூப மலையிலும் பிதாவானவர் சொன்னார்: “இவர் என்னுடைய நேச குமாரன்” என்று. அவர் இரண்டுமுறை வானத்திலிருந்து இந்த வார்த்தையை தொனிக்கப்பண்ணினார். இந்த குமாரன் ஏன் அதிசயமானவர்? அவருக்கு ஏன் இந்த அதிசயமானவர் என்கிற நாமம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அவர் அதிசயமானவைகளை செய்தபடியினால் அப்படி அழைக்கப்படுகிறாரா? அப்படியென்றால் தீர்க்கதரிசி அவர் பிறப்பதற்கு முன்னமே அவர் நாமம் அதிசயமானவர் என்று சொல்லி இருக்கிறாரே, அதனுடைய அர்த்தம் என்ன? நாம் கொஞ்சம் யோசித்து பார்த்தால் அவருடைய பிறப்பு ஒரு அதிசயமான ஒன்றாகும்! அந்த பாலகனுடைய பூலோக வாழ்க்கை ஒரு அதிசயமாகும்!

மரியாள் என்னும் கன்னிகையினிடத்தில் காபிரியேல் வந்து, ‘கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்; ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்’ (லூக்.1:28) என்றான். “உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவகுமாரன் என்னப்படும்’ என்றும் சொன்னான். அவளுக்கு ஒரே பயம்! நான் இப்பொழுது தான் புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறேன்; எப்படி நான் கர்ப்பவதியாக முடியும்? ஒரு கன்னி கர்ப்பவதி ஆவது என்பது இயலாத காரியம். அப்பொழுது அவன் சொன்னான்: ‘பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்’ என்று. ஆகவே தேவாதி தேவன் பாவமாம்சத்தில் உள்ள ஒரு பெண்ணின் கர்ப்பத்தினுள் தன்னை அடக்கி ‘காலம் நிறைவேறின பொழுது’ சாதாரண ஒரு மனித குழந்தையைப் போலவே அவரும் பிறப்பார் என்றால் அது அதிசயம்தானே! வானங்களைப் படைத்தவர்; வானாதிவானங்களும் கொள்ளாதவர் அவர்; ஒரு ஏழைத்தாயின் கர்ப்பத்தினுள் தன்னை அடைத்து ஒரு சாதாரண குழந்தை பிறப்பதுபோல் அவரும் பிறப்பார் என்றால் அவருடைய பிறப்பு அதிசயம்தானே!

அவர் பிறப்பில் இன்னொரு அதிசயம் என்ன? தேவன் மனிதனானார்; வார்த்தை மாம்சமானது; ‘அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்;’ (யோவா.1:14). அது தேவனுக்கு ஒப்பான மகிமையாக இருந்தது. அதுதான் அதிசயம்! அத்தனை மகத்துவம் உள்ள தேவன் தன்னை வெறுமையாக்கி மனித சாயலாய் அடிமையின் ரூபமெடுத்து ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்தது அதிசயம். அதனால்தான் அவருடைய நாமம் அதிசயம்! அவர் அதிசயமான விதத்தில் பிறந்ததினால் அவர் தேவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை மறுபடியும் இணைக்க முடிந்தது. அவர் பூமியிலே வாழ்ந்த காலத்தில் அவர் முழு பூரண மனிதனாக இருந்தாலும் அவருக்குள் தேவத்து வத்தின் பரிபூரணமெல்லாம் இருந்தபடியால் அவர் இரு தன்மையும் உடையவராக இருந்தார். இது ஒரு அதிசயம்!

ஆகவேதான் அவருடைய நாமத்தை அதிசயம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பாவம் நிறைந்த உலகில் இயேசுகிறிஸ்து மனிதனாக பிறந்தார். ஆனால் பாவம் இல்லாதவராக, பாவம் செய்யாதவராகவே அவர் வாழ்ந்தார். வேதபாரகரையும் பரிசேயரையும் ஜனங்களையும் பார்த்து, அவர் ஒருநாளில் கேட்டார்: ‘என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் சொல்லக்கூடும்?’ என்று. ஒருவராலும் முடியவில்லை. அத்தகைய பரிசுத்த வாழ்க்கை அவர் வாழ்ந்தார். எனவே இது அதிசயம்தான்!

சகோதரனே, இன்றைக்கு நீங்கள் இயேசு கிறிஸ்வை எப்படி அறிந்துகொள்ளப்போகிறீர்கள். அவர் அதிசயமானவர். நீங்கள் நினைக்கிறபடிதான் அவர் நடப்பார், செயல்படுவார் என்று நீங்கள் சொல்லமுடியாது. நாம் எண்ணுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மேலாக கிரியை செய்யவல்லவராகிய அவர் செயல்படும்விதமே அதிசயம்தான். சீஷர்கள் நடுக்கடலிலே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இயேசுவோ கடலின்மேல் நடந்து அவர்கள் இடத்தில் வருகிறார். இதுவும் அதிசயமான ஒரு காரியம்! நீங்களும் ஏதோ ஒரு பிரச்சனையினால் குழம்பி கவிழ்ந்துபோவோம், அழிழ்ந்து போவோம் என்று நீங்கள் கதறிக் கொண்டிருப்பீர்கள் என்றால், அந்த பிரச்சனையை ஆண்டவராகிய இயேசு தீர்ப்பது ஒரு அதிசயமான வழியில்தான் இருக்கும். அவர் அந்த பிரச்சனையின் மேலாகவே நடந்து, அந்த பிரச்சனையை தனது கால்களுக்கு கீழாக வைத்து உங்களுக்கு ஒரு விடுதலையை தருவார்.

இயற்கைக்கு அப்பாற்பட்டதையே நாம் அதிசயம் என்கிறோம். யோவான் 9-ம் அதிகாரத்தில் இயேசு ஒரு குருடனின் கண்களைத் திறந்தார். வசனம் 32-ல் கண் திறக்கப்பட்டவனே சொன்னது:  குருடனின் கண்களை யாராவது திறந்தார்கள் என்று இதுவரையில் நாம் கேள்விப்பட்டிருப்போமா என்று. அப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்த அவர் ஒரு அதிசயமானவர் என்று அவன் சொன்னான். இன்றைக்கும் உங்களுடைய வாழ்க்கையிலும் அவர் அதிசயங்களை செய்ய விரும்புகிறார்.

இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையிலோ அல்லது அவருடைய செயல்களிலோ அவர் செய்த அற்புதங்களிலோ எது மிகவும் பெரிய அதிசயம் என்ற கேள்வியை உங்களிடத்தில் கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்லுவீர்கள். லாசருவை எழுப்பினதுதான் பெரிய அதிசயம் என்பீர்களோ? அல்லது அவர் உயிர்த்தெழுந்தது அதிசயம் என்பீர்களோ? அந்த கல்லறை இன்றைக்கும் காலியாக இருப்பது அதிசயம் என்பீர்களோ? இயேசுவின் அதிசயம் காலியான கல்லறையோடு நின்று விடவில்லை.

ஒரு பாவியை பரிசுத்தனாக மாற்றுகிற அந்த ஒரு செயல்பாடுதான் இயேசுவின் அதிசயங்களிலே பெரியது. அதனால் தான் அவர் அதிசயமானவர்! சிலுவையிலே அவர் சிந்தின இரத்தத்தினாலே பாவத்தைவென்று, தன்னை நோக்கி விசுவாசத்தோடு கூப்பிடுகிற ஒவ்வொருவரது பாவகறைகளையும் நீக்கி தேவனுக்கு முன்பாக அவர்களைப் பரிசுத்தராக நிறுத்துகிறாரே அதுதான் உலகத்திலேயே பெரிய அதிசயம்!

இன்றைக்கு நீங்கள் உங்களுக்கு ஒரு பெரிய அதிசயம் நிகழவேண்டுமென்று கேட்டால் நீங்கள் உங்கள் இருதயத்துக்குள்ளாக கொஞ்சம் எட்டிப் பாருங்கள். எத்தனை கேவலமான எண்ணங்களை அங்கே வைத்திருக்கிறீர்கள். எத்தனை இழிவான இச்சையின் காரியங்களை உங்களுக்குள் அடக்கி வைத்திருக்கிறீர்கள். எத்தனை பொருளாசைகள் நமக்குள் இருக்கிறது. இவைகளை வைத்துக்கொண்டு தேவபக்தியில்லாமல் இருக்கிறோமே. இவைகள் நமக்குள் இருப்பதினால்தான் நாம் இயேசுவை நேசிக்கமுடியாமல் இருக்கிறோம். அவருடைய வேதத்தை வாசிக்க முடியாமல் ஆசையில்லாமல் இருக்கிறோம்.

இப்படிப்பட்ட உங்களை அவர் தம்முடைய இரத்தத்தால் கழுவுகிறார். என் இருதயம் அசிங்கமாய் இருக்கிறது, என் வாழ்க்கை வெளியே தெரிஞ்சா அவ்வளவுதான்; நான் தற்கொலை தான் செய்யனும், அவ்வளவு மோசமானவன், எனக்கு ஒரு மறுவாழ்வு வேண்டும், எனக்கு ஒரு புதுவாழ்வு வேண்டும் என்று உண்மையாய் உணர்ந்து இயேசுவை நோக்கி: இயேசுவே, என் பாவங்களை மன்னியும், என்னை கழுவும், என்னை ஒரு புதுசிருஷ்டியாய் மாற்றும் என்று நீங்கள் கேட்பீர்களென்றால், உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்.

அவரை நோக்கி கூப்பிட்டால் போதும்; உண் மையாய் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாய் இருக்கிறார். உள்ளத்தில் உண்மை இருக்கணும். சும்மா போலித்தனமாய் நான் போய் ஆண்டவரே, பாவத்தை மன்னியும் என்று சொல்லி பரலோகத்துக்கு போகணும் என்ற ஆசையிலே அப்படிக் கேட்கக்கூடாது. என்னுடைய பாவம் எனக்கு அருவருப்பாய் காணப்படணும். நான் முழுமனதுடன் அதை வெறுக்கணும். அதை வெறுத்து இனிமேல் இந்த வழியில் நடக்கமாட்டேன் என்று தீர்மானம்பண்ணி புதுமனிதனாக மாறினால் மட்டுமே இயேசு அந்த அதிசயத்தை செய்வார். அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்கு புதுவாழ்வு தருவார்.

நீங்கள் பெற்ற உங்கள் பிள்ளையின் மனதில் இருக்கிற பிடிவாதத்தை மாற்ற முடிகிறதா? முடியாது. உங்களுக்குள்ளே இருக்கிற கோபத்தை மாற்ற முடிகிறதா? முடியவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஒரு மனிதனுடைய தீய குணங்களை எப்படி முழுவதும் மாற்றுகிறது; ரொம்ப மோசமா இருந்தவன்கூட எப்படி இயேசுவுக்கு பிரியமானவனாக மாறுகிறான். கொள்ளைக்காரனான ஜெம்புலிங்கத்தையும் மனந்திரும்ப வைக்க ஒரு காருண்ய அம்மையாரை அவர் பயன்படுத்துவாரென்றால், அதுதானே அதிசயம்! எத்தனையோ பொல்லாத மனிதர்கள் தங்கள் பொல்லாத வழிகளைவிட்டு திரும்பி தேவனிடத்தில் மன்னிப்புக்கேட்டு பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். அதுதான் அதிசயம்!

நான் மனந்திரும்பும்போது என்ன நடக்கிறது நரகத்திற்கு பாத்திரனாக இருக்கிற என்னை தேவன் உளையான சேற்றிலிருந்து தூக்கியெடுத்து, நாற்றமெல்லாம் நீங்க தம்முடைய இரத்தத்தால் கழுவி சுத்தப்படுத்தி, வழுவாதபடி என் கால்களை கன்மலையின்மேல் நிறுத்துகிறார். இதுதான் அதிசயம். நிறுத்த முடியாதபடி உள்ள குடி, புகை பிடித்தல், சூதாட்ட எண்ணம், விபச்சார ஆசை இவை எல்லாவற்றையும் இயேசுவினிடத்தில் அறிக்கை செய்யும்பொழுது இயேசு உங்களை முற்றிலும் மாற்றுகிறார். பழையவைகள் எல்லாம் ஒழிந்தன, எல்லாம் புதிதாயின. இதுதான் அவர் செய்கிற அதிசயங்களிலே மிகப் பெரியது. அதனால்தான் அவரை அதிசயமானவர் என்று சொல்லுகிறோம்.

அதுமட்டுமா, நாம் தேவனுடைய பிள்ளையாகும்போது இயேசுவின் சகோதரர் ஆகிறோம். நாம் தேவனுடைய பிள்ளையாகும்போது பரலோகத்தின் எல்லா காரியங்களுக்கும் சுதந்திரவாளியாகிறோம். பரலோகத்தின் எல்லா சமாதானம் சந்தோஷம் நித்திய வாழ்வு பரிசுத்தவான்களின் ஐக்கியம் அனைத்தும் கிடைக்கிறது. இதைத்தான் அதிசயம் என்கிறோம். சகோதரனே, இயேசு உங்கள் வாழ்க்கையில் அதிசயமானவராய் செயல்பட்டு இருக்கிறாரா?

சபிக்கப்பட்டு நரகத்திற்கு பாத்திரமான பாவியை பரலோகத்தின் சுதந்திரவாளியாய் மாற்றுகிறபடியால்தான் அவர் அதிசயமானவர்!

சத்தியவசனம்