Dr.தியோடர் எச்.எஃப்.
(ஜனவரி-பிப்ரவரி 2018)

5. இரட்சணியமென்னும் தலைச்சீரா (எபேசி.6:14-17)

விசுவாசியின் சர்வாயுதவர்க்கத்தின் ஐந்தாம் பாகம் எபேசியர் 6:17 இல் கூறப்பட்டுள்ளது. “இரட்சணியமென்னும் தலைச்சீராவையும் … எடுத்துக்கொள்ளுங்கள்”.

தலைச்சீரா தலையைப் பாதுகாப்பதற்காக வைக்கப்படுவது. மனிதனுடைய சரீரத்தில் தலையே அறிவின் மையமாக இருந்து சரீரத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. தலையில் ஒரு காயம் ஏற்பட்டால் அது யாவும் ஆபத்தான ஒரு காரியம். ஏனெனில் தலை – மூளை சரியாக இயங்காவிட்டால், சரீரம் ஒழுங்காக வேலை செய்ய முடியாது.

இரட்சணியமென்னும் தலைச்சீரா என்பது இயேசுகிறிஸ்துவைக் குறிக்கிறது. அவரே சரீரத்தின் இப்பகுதிக்குப் பாதுகாவலராயிருக்கிறார். சங்கீதக்காரன் தாவீது கூறுகிறார்: “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்?” (சங்.27:1). இரட்சிப்பின் தலைச்சீராவை அணிந்து கொள்ளுதல் என்பது இயேசுகிறிஸ்துவை நம்முடைய இரட்சிப்பின் ஜீவனாக உணர்ந்து அறிந்து கொள்ளுதல். இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நமக்கு நித்திய ஜீவன் உண்டு. வேதாகமம் கூறுகிறது: “தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்” (1யோவான் 5:11,12).  இரட்சிப்பு என்பது ஏதோ தேவன் நமக்குத் தருகிற ஈவு அல்ல. ஆனால் அது இயேசுகிறிஸ்துவே. கிறிஸ்து நமக்கு தேவனால் தரப்பட்டிருக்கிறார். எனவே கிறிஸ்துவாகிய இரட்சிப்பு நமக்கு இருக்கிறது.

இரட்சிப்பு என்னும் பகுதியில் சாத்தான் நம்மைத் தாக்கும் முறை விசுவாசியைத் தன்னுடைய இரட்சிப்பையே சந்தேகப்படச் செய்தலாகும். எனினும் நாம் ஏற்கெனவே 1யோவான் 5:11,12 வசனங்களைப் பார்த்திருக்கிறோம். அதன்படி ஒருவனிடம் இயேசு கிறிஸ்து இருந்தால் அவனுக்கு  நித்திய ஜீவன் உண்டு என்று அறிந்திருக்கிறோம். சாத்தான் சிலரிடம் அவர் கள் நித்திய ஜீவனை இழந்து விடுவார்கள் என்று நம்பவைக்கிறான். ஆனால் கிறிஸ்து கூறுகிறார்:

“நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது” (யோவான் 10:28,29).

நமது சிந்தனை ஓட்டங்களின் மைய இடமாக நமது தலை இருப்பதனால், சாத்தான் நமது சிந்தனைகளக் கலைத்துவிட முயற்சிப்பான். தேவன் அவைகள் எப்படி இருக்கவேண்டுமென்று விரும்பினாரோ, அப்படி இல்லாமல் கவனத்தைச் சிதறச்செய்து சந்தேகங்களை மனதில் எழுப்பிவிடுவான். உதாரணமாக சாத்தான் நமது இரட்சிப்பைச் சந்தேகப்படச் செய்வான். நம்முடைய வாழ்க்கையின் எல்லாவற்றினுடைய அடித்தளத்தையே அசையச் செய்துவிடுவான். நம்முடைய ஆவிக்குரிய கிரியைகள் ஆட்டம் கண்டுவிடும். ஆனால் நமக்கு இரட்சிப்பு உண்டு என்று அறிந்து, அதைப் பூரணமாக நம்பி, தேவனுடைய இரட்சிக்கும் கிருபையைச் சார்ந்திருப்போமானால், நமக்கு ஆவிக்குரிய முதிர்ச்சியின் முறையான அடிப்படையை அடைந்திருப்போம்.

நம்முடைய இரட்சிப்புக்குரிய இயேசு கிறிஸ்துவைப் பூரணமாக நம்புவோமானால், அவரே நமது இரட்சிப்பின் தலைச்சீராவாய் இருப்பார். அப்பொழுது சாத்தானின் அஸ்திரங்கள் அவிந்து செயலற்றுப் போகும். நம்முடைய ஆவிக்குரிய முதிர்ச்சியின் எல்லா முயற்சிகளும் ஆண்டவருக்காக ஒரு ஆற்றல் வாய்ந்த வாழ்க்கையும் நம்மிடம் இருந்தால், கிறிஸ்துவில் நமது இரட்சிப்பு இருக்கிறது என்ற அறிவினைச் சார்ந்திருக்கும்.

இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கிறவன் பாதுகாப்பாய் இருப்பான் என்று வேதாகமம் கூறுகிறது. இயேசுகிறிஸ்துவின் மேல் பூரண விசுவாசம் கொள்ளுகிறவன் அவருடைய பாதுகாப்புக்குள் இருக்கிறான். கிறிஸ்துவைக்குறித்து எபிரேயர் 7:25 இல் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது. “மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்று முடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபி.7:25). விசுவாசிகளைக் குறித்து 1பேதுரு 1:5 சொல்லுகிறது: “கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது”.  கிறிஸ்துவைக் குறித்து 1யோவான் 2:2 கூறுகிறது: “நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்”. பாவங்களுக்குரிய பிராயச்சித்தத்தை இயேசு செலுத்திவிட்டபடியால், “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய், அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1:12).

ஒரு விசுவாசி பாவம் செய்யும்போது, அவன் தன்னுடைய இரட்சிப்பை இழந்துவிடுவதில்லை. ஆனால் அவன் தேவனோடுள்ள ஐக்கியத்தையும் உறவையும் இழந்துவிடுகிறான். ஆனால் அவன் அந்தப் பாவத்துக்காக மனம் வருந்தி, அதை தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டும்போது, தேவனோடுள்ள தன் இழந்த உறவைத் திரும்பவும் பெற்றுக்கொள்கிறான். வேதாகமம் கூறுகிறது: “அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்;  .. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1யோவான் 1:17,19).

வேதாகமம் கூறும் முக்கியமான அடிப்படைச் சத்தியங்கள் குறித்த சரியான புரிந்துகொள்ளுதல் இயேசு கல்வாரிச் சிலுவையில் செய்து நிறை வேற்றின காரியங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதில் அடங்கி இருக்கிறது. கிறிஸ்துவில் மட்டும் நம்முடைய இரட்சிப்பு பூரணமாயிருக்கிற தென்று வேதாகமத்திலிருந்து உணருதல், கீழ்க்கண்ட சத்தியங்களை நாம் பூரணமாக விசுவாசிப்பதில் அடங்கியிருக்கிறது.

• கிறிஸ்துவின் தெய்வீகம்
• கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு
• கிறிஸ்து பாவிகளுக்குப் பதிலாக மரணத்தை ஏற்றது.
• அவரது  அடக்கமும் உயிர்த்தெழுதலும்.

இந்த உண்மைகளில் எதையாவது நாம் மறுத்தால் நாம் கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தின் சாதனைத்திறனை மறுக்கிறவர்களாயிருப்போம். உதாரணமாக கிறிஸ்து ஒரு கன்னியிடம் பிறவாவிட்டால், அவரிடம் பாவ சுபாவம் இருந்திருக்கும். அப்பொழுது அவருடைய மரணம் மற்றவர்களை இரட்சிக்கத் திறனற்றதாயிருக்கும். “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” (எபேசி.2:8). இந்த இரட்சிப்பில் விசுவாசம் வைத்தால் மற்ற வேதாகமக் கொள்கைகளையும் இதைப்போல விசுவாசிப்பதை உறுதிப்படுத்தும். இந்தக் கொள்கைகளை விசவாசிக்காதவர்கள் “கிரியைகளினால் இரட்சிப்பு” என்பதைப் போதிப்பார்கள். “கிருபையினால் இரட்சிப்பைக் குறித்துப்” பேசமாட்டார்கள். அவர்கள் கிறிஸ்து மனுக்குலத்தின் பாவத்துக்குரிய முழுப்பிராயச்சித்தத்தையும் செலுத்திவிட்டார் என்பதை விசுவாசிக்கமாட்டார்கள்.

விசுவாசிகளின் இரட்சிப்பு குறித்த நம்பிக்கையின் மீதுதான் சாத்தான் தன் தாக்குதல்களை குறி வைக்கிறான். நம்முடைய இரட்சிப்பைக் குறித்து நம்மில் சந்தேகத்தை உருவாக்கி, நம்மைத் தவறுகளுக்கு நேராக வழிநடத்துவான். இதிலிருந்து இரட்சணிய மென்னும் தலைச்சீரா ஒவ்வொரு விசுவாசிக்கும் எவ்வளவு முக்கியம் என்று அறிகிறோம். இரட்சிப்புக்கு நாம் கிறிஸ்துவைமட்டும் சார்ந்திருக்க வேண்டும். அவரே நம்முடைய இரட்சிப்பை இறுதிவரை காக்க வல்லவராயிருக்கிறார்.

மொழியாக்கம்: G.வில்சன்